தித்திக்குதே...
- Author ஆன்றிஸா, கன்னியாகுமரி --
- Friday, 19 Jul, 2024
மஞ்சள் கலந்த மாலை நேரம். தோட்டத்தில் நின்ற வாழைக் குலைகளை வியப்போடு பார்த்து நின்றாள் அமலி. அனைத்தும் செவ்வாழைக் குலைகள். காய்கள் அரை விளைச்சலில் செழிப்புடன் கம்பீரமாகக் காட்சி அளித்தன. வரிசையாக வாழைகளை நட்டு, இடையில் வாய்க்கால் வெட்டி அப்பா போவாஸ் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். மண்ணைப் பண்படுத்தி, ஏற்ற நேரத்தில் உரமிட்டு, நோய் வராமல் மருந்திட்டு, குழந்தையைக் கவனிப்பதுபோல் வாழைகளைக் கவனித்து வந்தார்.
வீட்டைத் தவிர 60 சென்ட் வாழைத் தோட்டம் அவர்கள் சொத்து. வேலை செய்து சேர்த்த பணத்தில் இந்த நிலத்தை வாங்கி, சொந்தமாக வாழை நடுவதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். நேரம் கிடைக்கும்போது வெளி வேலைகளுக்கும் சென்று கடன்படாமல் குடும்பத்தை நகர்த்திக் கொண்டிருந்தார்.
இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் அப்பாவின் செல்லம் அமலி. தங்கை ராணி அம்மாவின் செல்லம்.
“அமலியம்மா, வானம் கறுத்து இருண்டு வருது. வீட்டுக்குப் போவோம்” என்று அவசரப்படுத்தினார் அப்பா. இருவரும் வேகமாக வீட்டிற்குச் சென்றனர். இரவு செபம் முடிந்த பின்பு, சாப்பிட்டு அனைவரும் தூங்கினர். அமலி மட்டும் அன்றைய பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தாள். வெளியே ‘பளீ’ரென மின்னல் கீற்றுகள் தெறித்து, இடி இடித்தது. ‘சட சட’வென மழை கொட்டும் சத்தத்துடன் ‘ஓ’வென சூறைக்காற்றும் வீசத் தொடங்கியது. அமலிக்கு வாழை மரங்கள் கண்முன் தோன்ற, உடனே போவாஸ் எழுந்து விட்டார்.
“அமலியம்மா, நம்ம வாழைத் தோட்டம் அழிஞ்சு போச்சு!” அழும் குரலில் பதறினார். அதற்குள் அவள் அம்மாவும், தங்கையும் எழும்பினர்.
“அப்பா, ஒன்றும் ஆகாது. தைரியமாயிருங்கள்” என உள்ளூரப் பயத்தை மறைத்துக் கொண்டு தந்தையைத் தேற்றினாள் அமலி.
பொழுது புலர்வதற்குள் போவாசும், அமலியும் வாழைத் தோட்டத்திற்கு ஓடினர். வாழை மரங்கள் அனைத்தும் முறிந்து கிடந்தன.
“அமலியம்மா, பேங்குல கடன் வாங்கி செலவு செஞ்ச பணம் எல்லாம் வீணாபோச்சு!”
அவர் கண்களில் நீர் வடிந்தது.
“அப்பா, இன்பமும்-துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கைன்னு அடிக்கடி சொல்லுவீங்களே! எழுந்திருங்க, வீட்டுக்குப் போலாம்.”
தந்தையின் கரத்தைப் பிடித்து அழைத்துச் சென்றாள் அமலி.
அன்று விடுமுறை எடுத்து, தந்தைக்கு ஆறுதல் கூற, அம்மாவும் அழுது கொண்டே சமையல் செய்தாள். போவாசை எவ்வளவு சமாதானப்படுத்தியும் சாப்பிட மறுத்தார். அந்த இறுக்கமான சூழ்நிலையில் துவண்டு கிடந்த தந்தையிடம், “அப்பா, உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார். நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார் (திபா 34:18). இந்த இறைவார்த்தைகளை நம்புங்க. ஆண்டவர் ரொம்ப நல்லவர். நம்மள கைவிட மாட்டார்” என்று தந்தையைச் சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தாள் அமலி.
அம்மாவின் கையில் கிடந்த ஒரே தங்க வளையலை அடகுவைத்து பயிர்க் கடன் வட்டியைக் கட்டி, மீதி பணத்தில் மீண்டும் வாழைப்பயிர் செய்வதில் மும்முரமானார் போவாஸ்.
மாதங்கள் 11 கழித்து...
வாழைத் தோட்டத்திற்கு வந்த அமலியால் நம்ப முடியவில்லை. அனைத்துச் செவ்வாழைக் காய்களும் சிவந்து, முழு விளைச்சலில் அவளின் கண்களைக் கவர்ந்தன.
“அமலியம்மா, நாளை வாழைக்குலைகளை வெட்டி, உழவர் சந்தையில் விற்க வேண்டும்.”
அப்பாவின் முகத்தில் புன்முறுவலின் ரேகைகள் தென்பட்டன. அமலி வானத்தைப் பார்த்து மனத்தால் கடவுளுக்கு நன்றி கூறினாள்.
சந்தையில் வாழைக்குலைகள் எதிர்பார்த்ததை விட அதிக இலாபத்தைத் தர, பயிர்க் கடனை அடைத்து, மனைவியின் தங்க வளையலை மீட்டார். பயிர் வைக்க கடன் கேட்ட பக்கத்து வீட்டு விவசாயிக்குப் பணம் கொடுத்து உதவினார். மீதிப் பணத்தை வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டு வைத்தார். பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும், இரு மகள்களையும் ‘பல்சுவையகத்திற்கு’ அழைத்துச் சென்று இனிப்புகளை வாங்கினார்.
ஞாயிற்றுக்கிழமை குடும்பமாகத் திருப்பலிக்குச் சென்று கடவுளுக்கு நன்றி செலுத்தி, முழுமையான நேர்த்தியான வாழைக்குலைகளை காணிக்கை ஆக்கினார் போவாஸ்.
அமலி சொன்ன இறைவார்த்தை நிறைவேறியதில் பெருமிதம் கொண்டார் போவாஸ்.
திருப்பலி முடிந்து வீடு திரும்பியதும் காலையில் உணவு சாப்பிட்ட கையோடு இனிப்புகளைச் சாப்பிடத் தொடங்கினார்.
தந்தையின் முகத்தில் கண்ட மகிழ்ச்சி அந்த இனிப்பைவிட தித்தித்தது அமலிக்கு!
Comment