No icon

ஞாயிறு தோழன்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு எசா 66:18-21, எபி 12:5-7, 11-13, லூக் 13:22-30

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக் காலத்தின் 21 வது ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் "ஆண்டவரே! நிலைவாழ்வு பெறுவோர் சிலர் மட்டும் தானா?" என்ற கேள்வியை யூதர் ஒருவர் ஆண்டவர் இயேசுவின் முன் வைக்கிறார். அதற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து: உங்களின் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் இறைவாக்கினர்கள் விண்ணரசில் வீற்றிருப்பதையும், நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் காண்பீர்கள் என்று பதிலளிக்கிறார். எதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறுகிறார் என்று பார்க்கின்றபோது, யூதர்கள் மட்டுமே மீட்பை பெற முடியும், யூதர்கள் மட்டுமே இறை ஆட்சிக்குள் நுழைய முடியும், யூதர்கள் மட்டுமே உண்மை தெய்வத்தின் மக்களாக இருக்க முடியும் என்ற சிந்தனையோடு வாழ்ந்தவர்கள் இந்த யூதர்கள். எனவேதான் அவர், சிலர் மட்டும்தான் மீட்பு பெற முடியுமா? என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் கேட்கிறார். இவர்களை பொறுத்தவரை யூதர் அல்லாதோர் அனைவருமே பாவிகள். கடவுளால் ஆசீர்வதிக்கப்படாதவர்கள். இறையாட்சிக்குள் நுழைய தகுதி அற்றவர்கள். ஆனால், இந்த சிந்தனையை ஆண்டவர் இயேசு கிறிஸ்து மாற்றுகிறார். இறைவன் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். எவர் ஒருவர் கடவுளின் விருப்பப்படி எதிரிகளையும் அன்பு செய்தல், துரோகிகளையும் மன்னித்தல், தீயவர்களுக்கும் நன்மை செய்தல் எனும் இடுக்கமான வாழ்வை வாழ்கிறார்களோ, அவர்கள் அனைவருமே இறை ஆட்சிக்குள் நுழைய முடியும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு உங்களின் முன்னோர்கள். நீங்கள் அவர்கள் வழி வந்தவர்கள் என்பதால், நீங்கள் விண்ணரசுக்குள் நுழைய முடியாது. மாறாகதூய ஒழுக்கமான வாழ்வை வாழ்கின்றபோது நீங்கள் நிலைவாழ்வை பெற முடியும் என்று கூறும் இறைவனின் அறிவுரைகளை சிந்தித்தவர்களாய், அவரின் ஆசீர்வாதத்தை பெற இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

இஸ்ரயேல் மக்களாகிய நாங்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்று அம்மக்கள் நினைத்திருந்த நேரத்தில், பிற இன மக்களையும் எருசலேமுக்கு அழைத்து வந்து அவர்களையும் குருக்களாக மாற்றுவேன் என்றுரைக்கும் இறைவனின் குரலை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இறைவன் நம்மை கண்டிப்பதும். தண்டிப்பதும் நாம் துன்பப்பட வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, நாம் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காகவே. எனவே, நமக்கு வரும் துன்பங்களை ஏற்றுக்கொள்வோம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. அனைத்துலகோரின் கடவுளே! இம்மண்ணில் பயணம் செய்யும் உமது திரு அவையின் எல்லா மக்களையும் உமது மந்தையாக இணைத்து, உம்மை நோக்கி அழைத்து வந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அரசருக்கெல்லாம் அரசரே! நாடுகளை ஆளும் தலைவர்கள், செல்வந்தர், ஏழை என மக்களை பிரித்தாளாமல், அனைவரையும் ஒரே தேசத்தின் மக்களாக நினைத்து, நல்லாட்சி புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வாழ்வு வழங்குபவரே! பல்வேறு இயற்கை சீற்றங்களால் தங்கள் உடைமைகளை, வாழ்வை இழந்து தவிக்கும் மக்களுக்கு, நீர் நல்வழி காட்டி பாதுகாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வரங்களை பொழிபவரே! படித்து முடித்துவிட்டு தங்களின் கல்விக்கு ஏற்றவாறு, வேலையில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் இளையோருக்கு, நீர் நல்லதொரு மூலதனத்தை தந்து அவர்களை காத்திட வேண்டுமென்று உம்மை இறைவா மன்றாடுகிறோம்.

5. இயற்கையில் உறைபவரே! விஞ்ஞான வளர்ச்சியால் இவ்வுலகமே மாசு படிந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து, மக்கள்  தங்களின் தேவைக்கேற்றவாறு வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment