(ஆண்டின் பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு திருப்பலிக்கான செபங்களையும் வாசகங்களையும் பயன்படுத்தவும்)
உலக மறைத்தூதுப் பணி ஞாயிறு ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு - அக்டோபர் 23, 2022 சீஞா 35:12-14,16-18, 2 திமொ 4:6-8,16-18, லூக்18:9-14
- Author அருள்பணி. P. ஜான் பால் --
- Friday, 21 Oct, 2022
திருப்பலி முன்னுரை
பொதுக்காலத்தின் 30 ஆம் ஞாயிறான இன்று, ‘நீங்கள் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்’ (திப 1:8) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக மறைத்தூதுப் பணி தினத்தைக் கொண்டாடி சிறப்பிக்கிறோம். இவ்வாண்டின் மறைபரப்பு ஞாயிறானது நான்கு ஜூபிலி விழாக்களின் தொகுப்பாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு. ஆம்! நம்பிக்கை பரப்புதல் திருப்பேராயம் (Congregation de Propaganda Fide) தொடங்கப்பட்டதன் 400வது ஆண்டு ஜூபிலி விழா! நம்பிக்கை பரப்புதல் கழகத்தின் (Society of the Propagation of the Faith) இருநூறாம் ஆண்டு ஜூபிலி விழா! திருத்தூதர் புனித பேதுரு கழகம் (Society of Saint Peter the Apostle) மற்றும் மாசற்ற குழந்தைகளுக்கான கழகம் (Society of the Holy Childhood) ஆகியவை “திருத்தந்தையின்” அங்கீகாரம் பெற்றதன் நூற்றாண்டு விழா! மேலும் நம்பிக்கை பரப்புதல் கழகத்தை நிறுவிய பவுலின் மேரி ஜெரிகாட் என்பவர் மே 22 ஆம் தேதி அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டதன் கொண்டாட்டம் என்று ஐம்பெரும் விழாக்களைச் சிறப்பித்து இந்த மறைத்தூதுப் பணி தினத்தைக் கொண்டாடுகிறோம்.
‘நீங்கள் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்’ (திப 1:8) என்ற இந்த இறைவார்த்தைக்கு ஏற்ப, நாம் ஒவ்வொருவரும் நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கின் வழியாக, மறைத்தூதுப் பணியாளர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். திரு அவை என்பது மறைத்தூதுப் பணி ஆர்வமிக்கதாக தொடக்க முதல் இன்று வரை இருந்து வருகிறது. திரு அவையின் உறுப்பினர்களாகிய நாம், தனித்து அல்ல; மாறாக, சமூகமாக மேற்கொள்ள அழைக்கப்படுகிறோம். இருவர் இருவராக ஆண்டவர் இயேசு இன்றும் நம்மை அனுப்புகிறார். இந்திய பொதுநிலையினரின் முதல் புனிதரான புனித தேவசகாயம், புனிதராக தகுதி உயர்த்தப்பட்ட இவ்வாண்டில், அவரது அடிச்சுவட்டில் ஒவ்வொருவரும் நற்செய்திக்கும் உண்மைக்கும் திரு அவைக்கும் சான்று பகர்ந்து உலகிற்கு ஒளியாக, சாரமுள்ள உப்பாக விளங்க அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவுக்கு சான்று பகர்வதும், மறு கிறிஸ்துவாக வாழ்வதும் கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட அன்பை பிறருடன் பகிர்ந்துகொள்வதும் திரு அவையை
மூவாயிரமாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உதவும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்துகிறார். தொடக்கக் கால கிறிஸ்தவர்களிடமிருந்த அதே மனநிலை, அதே தைரியம், சான்று பகரும் குணம், பற்றார்வமிக்க செயல்பாடு அனைத்தும் நமதாக வேண்டும். ஆண்டவரே, என்னை அனுப்பும் என்று ஆண்டவருக்காகப் புறப்பட்டுச் செல்லும் மனநிலை நம்மிடம் ஏற்பட வேண்டும். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நாம் அனைவரும், திருத்தூதுப் பணியின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து ஆழப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும். எல்லாருமே நற்செய்தியின் தூதுவர்களாக, மறைத்தூதுவர்களாக அனுப்பப்படுகிறோம். எண்ணிக்கை நூல் 11: 29 அறிவுறுத்துவதுபோல நாம் இறைவாக்கினராகும்படி அழைக்கப்படுகிறோம். ஆகையால் இன்றைய நாளில் நம் பொறுப்பையும் கடமையையும் நன்கு உணர்ந்து, தாராளமாக நிதி பங்களிப்பு செய்வதோடு மட்டுமின்றி, அருள்வாழ்விலும் மேன்மேலும் வளர மறைத்தூதுப் பணி ஞாயிறு திருப்பலியில் மன்றாடுவோம். பொதுநிலையினப் புனிதர்களாக புனித தேவசகாயமும் அருளாளர் பவுலின் ஜெரிகாட்டும் நமக்காகப் பரிந்து பேசுவார்களாக. உலக ஆயர் மாமன்றத்தின் கூட்டியக்கத் திரு அவையில் நாமும் ஒருங்கிணைந்து பயணிப்போமாக.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்
குரு: ‘தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்’ (திப 1:8) என்று உயிர்த்த ஆண்டவரின் அழைப்பை ஏற்று நாம் கொண்டாடும் உலக மறைத்தூதுப் பணி தினத்தில், திருமுழுக்குப் பெற்றுள்ள நாம் அனைவரும், உலகின் கடையெல்லை வரைக்கும் நம் ஆண்டவருக்கு சாட்சிகளாக இருக்க நம் மன்றாட்டுகளை எடுத்துரைப்போம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
திரு அவைக்காக...
அன்புத் தந்தையே இறைவா! உமது மறைத்தூதுப் பணியாளராக அனுப்பப்பட்ட உம் ஒரே திருமகன் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக, அகில உலகத் திரு அவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், எம் உயர்/மறைமாவட்ட ஆயர் மேதகு.. (பெயர்), ஏனைய ஆயர்கள், மறைப்பணியாளர்கள், துறவியர் அனைவரும் தங்களின் இறையழைத்தலின் மேன்மையை உணர்ந்து, குன்றாத மறைத்தூதுப் பணியார்வத்துடன், திரு அவை வளம் பெறவும், வளர்ச்சிப் பெறவும், உழைக்கவும், உமது பேரன்பின் நம்பிக்கைக்குரிய சாட்சிகளாக கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் வழிநடக்கவும் எம்மை வழிநடத்தவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மரித்த மறைத்தூதுப் பணியாளர்களுக்காக...
இறைவாக்கினர்களை ஏற்படுத்திய இறைவா! எம் தாய்த்திருநாட்டிற்கு தொலை தூர நாடுகளிலிருந்து வந்து, எம் மொழிகளைக் கற்று, பண்பாட்டை உள்வாங்கி, உம் தூதர்களாக பணியாற்றி, கிறிஸ்தவ மறையைப் பரப்பி, இன்னுயிர் ஈந்த அயலக மறைத்தூதுப் பணியாளர்களுக்காக உமக்கு நன்றி சொல்கின்றோம். உமது விண்ணரசிற்கு வந்திருக்கும் உம் மறைபரப்பு பணியாளர்களின் ஆன்மாக்களை தயவுடன் ஏற்று, இவர்கள்தம் ஆன்மாக்கள், உமது திருமகன் இயேசு கிறிஸ்துவை முகமுகமாக தரிசித்து, உம்மில் இளைப்பாறவும், அவர்கள் எங்களுக்காக பரிந்து பேசவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பணியாற்றும் மறைத்தூதுப் பணியாளர்களுக்காக ...
இருக்கின்றவராக எம்மோடு என்றும் வாழ்பவரே இறைவா! உலகின் கடையெல்லை வரைக்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்று உம் திருமகன் இயேசுவின் அழைப்பை ஏற்று, அனைத்தையும் துறந்து, மறைத்தூதுப் பணியில் பேரார்வம் கொண்டு, தங்களின் சொந்த நாட்டையும் மண்ணையும் விட்டுவிட்டு, அயல்நாடுகளில் மறைத்தூதுப் பணியாற்றும் மறைத்தூதுப் பணியாளர்கள் அனைவருக்கும் உடல் மற்றும் ஆன்ம நலத்தைக் கொடுத்து, அவர்கள் அனைவரும் குன்றாத ஆர்வத்துடன் நற்செய்தி அறிவிப்புப் பணியை மேற்கொள்ளவும் இறைமக்களின் வாழ்வில் ஒளியேற்றவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பொதுநிலையினருக்காக...
எகிப்தில் மக்களின் துன்பங்கள் கண்டு மனமிரங்கிய இறைவா! எம் இந்தியப் பொதுநிலையினரின் முதல் புனிதராக விளங்கும் புனித தேவசகாயம், நற்செய்தி அறிவிப்பு திருப்பேராயத்தின் நிறுவனரும் பொதுநிலையினருமான அருளாளர் பவுலின் ஜெரிகாட் ஆகியோரின் அடிச்சுவட்டில் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள் என்பதை உணர்ந்து, கிறிஸ்துவின் உயிருள்ள ஆலயமாக கட்டியெழுப்பப்பட்டு, கிறிஸ்துவின் சாட்சிகளாக எம் சொல்லாலும் செயலாலும் சிந்தனையாலும் சான்று பகரவும், இறைவாக்கினராக செயலாற்றவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
புலம்பெயர்ந்தவர்களுக்காக...
இரக்கமுள்ள தந்தையே இறைவா! போர், வன்முறை, வறுமை, வேலைவாய்ப்பின்மை, மதவாதிகளின் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயரும் மக்கள், ஏதிலிகள் அனைவருக்கும் நீர் தாமே அடைக்கலமாகவும் ஆறுதலாகவும் இருந்து, அவர்கள் நல்ல நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை புலம்பெயரும் நாடுகளில் கண்டடையவும், உலகில் போர், வன்முறை, வகுப்புவாதம், மதவாதம் உள்ளிட்ட தீமைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, சமத்துவமும் சகோதரத்துவமும் மனிதநேயமும் வளர்ந்திட வரமருள இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: நமது தனிப்பட்ட தேவைகளுக்காக மௌனமாக மன்றாடுவோம்!
மன்றாடுவோமாக
குரு: எல்லாம் வல்ல தந்தையே இறைவா, ஆண்டவரின் மக்களாகிய அனைவருமே இறைவாக்கினராகும்படி (எண் 11:29) எம் அனைவரையும் திருமுழுக்கு வழியாகவும் ஏனைய அருளடையாளங்கள் வழியாகவும் ஏற்படுத்தியிருக்கிறீர். நாங்கள் அனைவரும் உம் திருமகன் இயேசு கிறிஸ்துவால் அனுப்பப்பட்டவர்களாக திருத்தூதர்களாக விளங்குகிறோம். ஒவ்வொரு திருப்பலிக்குப் பிறகும் நீர் எங்களை மறைத்தூதுப் பணியாளர்களாக அனுப்பிவைக்கிறீர். இவற்றையெல்லம் உணர்ந்து, நாங்கள் சிறந்த மறைத்தூதுப் பணியாளர்களாக விளங்க வரமருள எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மறைத்தூதுப் பணிக்கான செபம் (திருவிருந்துக்குப் பிறகு)
விண்ணகத் தந்தையே இறைவா! உம் ஒரே திருமகன் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, ‘நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்’ என அவர்தம் சீடர்களைப் பணித்தார். எமது திருமுழுக்கின் வழியாக நாங்கள் அனைவரும் திரு அவையின் இந்த மறைத்தூதுப் பணியைப் பகிர்ந்துகொள்கிறோம் என்பதை எமக்கு நினைவுப்படுத்துகின்றீர்.
மிகுந்த தைரியத்துடனும் பேரார்வத்துடனும் நற்செய்திக்குச் சான்று பகர்ந்திடும்பொருட்டு, தூய ஆவியின் அருள்கொடைகளால் எம்மை வளப்படுத்தியருளும். இதன்மூலம், திரு அவையிடம் ஒப்படைக்கப்பட்டு இன்னும் முழுமைப் பெறாமல் உள்ள மறைத்தூதுப் பணியானது, புதிய மற்றும் பயன்தரும் வழிமுறைகளைக் கண்டு, இவ்வுலகிற்கு வாழ்வையும் ஒளியையும் கொணர்வதாக.
உலகில் உள்ள அனைத்து மக்களும் இயேசு கிறிஸ்துவின் மீட்பளிக்கும் அன்பையும் இரக்கத்தையும் அனுபவிப்பதை சாத்தியமாக்க எமக்கு உதவுவீராக. தூய ஆவியாரின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற எம் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
Comment