No icon

ஞாயிறு தோழன்

ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு சாஞா 11:22-12:2, 2தெச 1:11-2:2, லூக் 19:1-10

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுகாலத்தின் 31 ஆவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகம் சக்கேயுவின் மனமாற்றத்தை பற்றி நமக்கு எடுத்துரைக்கிறது. ‘சக்கேயு’ என்ற பெயருக்கு தூய்மை, சுத்தம் என்று பொருள். ஆனால், அன்றைய யூத சமுதாயம் சக்கேயுவை அசுத்தமானவராக, தீமையானவராக பார்த்தது. ஆனால், ஆண்டவர் இயேசுவுடனான சந்திப்பு அவரை சுத்தமானவராக, தூய்மையானவராக இவ்வுலகத்திற்கு தந்தது. குட்டையாக இருந்ததால் சக்கேயு மரத்தின்மீது ஏறினார். அதேநேரத்தில் குற்ற உணர்ச்சியோடு இருந்ததாலும், அவர் மரத்தின் மீது ஏறினார். சக்கேயு ஒரு வரி வசூலிப்பவர், பாவி என்று அந்தச் சமுதாயம் அவரை ஒதுக்கி வைத்திருந்தது. எனவே, கூட்டத்தோடு கூட்டமாய் சேர்ந்து ஆண்டவர் இயேசுவைக் காண்பதற்கு அவருக்குத் துணிவு இல்லை. எனவே, மரத்தின் மீது ஏறி அமர்ந்து, ஆண்டவர் இயேசுவைக் காண விரும்புகிறார். மரத்தை நோக்கி வந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சக்கேயு என்று பெயர் சொல்லி அழைத்து, அரவணைத்து, அவரோடு உணவருந்துகிறார். இச்செயலே சக்கேயுவின் மனமாற்றத்திற்கு வழி கோலியது. அதுவரை மக்கள் அவரை ஒதுக்கி வைத்திருந்தார்கள். அவரை அரவணைக்கவில்லை, அவரது தவறைச் சுட்டிக் காட்டவில்லை. ஆனால், ஆண்டவர் இயேசுவுடனான சந்திப்பு, அரவணைப்பு, அசுத்தமாய் கருதப்பட்ட சக்கேயுவை சுத்தமாக மாற்றியது. தீமையாய் கருதப்பட்ட சக்கேயுவை தூய்மையாய் மாற்றியது. இன்று சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களை, ஒடுக்கப்பட்டவர்களை நாம் அரவணைக்கின்றோமா? அவர்களுக்கு ஆறுதல் தருகின்றோமா? அவர்களோடு ஒருசில நொடிகள் நாம் செலவிடுகின்றோமா? என்று, சுய ஆய்வு செய்திட இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் எல்லாம் வல்லவராய் இருப்பதாலே, நம் அனைவரும் மீதும் இரக்கத்தை பொழிகிறார். நாம் மனம் திரும்பவேண்டும் என்பதற்காக, நமது பாவங்களைக் கண்டும் காணாமல் இருக்கிறார். அனைத்தையும் அன்பு செய்கிறார் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

உங்கள் ஒவ்வொருவருக்காக நாங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம். இறைவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் அழைப்புக்கு ஏற்றவாறு உங்களை நீங்கள் தகுதியாக்கிக் கொள்ளுங்கள் உங்கள் நல்லெண்ணங்களை யெல்லாம் ஆண்டவர் நிறைவேற்றுவார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. எங்களைப் படைத்தவரே! உமது திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் துறவறத்தார் பொதுநிலையினர் அனைவரும், உம் திருமகன் இயேசு கிறிஸ்துவைபோல தொலைந்துபோன ஆடுகளைத் தேடி, மீட்டு, மந்தையில் சேர்த்து, உம்மை நோக்கி வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நலிந்தோரை வலிமையாக்குபவரே! தனது 50 ஆவது பொன்விழா ஆண்டை நிறைவுசெய்யும் ஆசிய ஆயர் பேரவைக்காக மன்றாடுகிறோம். தொடர்ந்து இவர்கள் தங்களின் மக்களுக்காகவும், மக்களின் மீட்பு வாழ்விற்காகவும் பணிபுரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றும் வாழ்பவரே! நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள், தாங்களும் மனிதர்கள் என்பதை உணர்ந்திடவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வரிச் சுமைகளை குறைத்து, நல்லாட்சி புரிந்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கமுள்ள தந்தையே! நாங்கள் வாழும் இடங்களில், எவரையும் ஒதுக்காமல், ஒடுக்காமல், அனைவரையும் அன்பு செய்து, அரவணைத்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நலன்களை புரிபவரே! அக்டோபர் இறுதியிலே இருக்கும் நாங்கள், இம்மாதம் முழுவதும் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம். வருகிற புதிய மாதத்தில் உமது அருட்கரம் எங்களை ஆசீர்வதித்து, வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment