No icon

ஞாயிறு தோழன்

கிறிஸ்து பிறப்பு பெருவிழா (பகல் திருப்பலி) எசா 52:7-10, எபி 1:1-6, யோவா 1:1-18

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவினை கொண்டாடி மகிழ்கிறோம். வானோர் இன்னிசைப்பாட, மண்ணுலகோர் அக்களிப்பில் ஆர்ப்பரிக்க, இறைமகன் நமக்காக  மனுமகனாக பிறந்திருக்கிறார். ஒரு வார்த்தையினால் இவ்வுலகை உண்டாக்கிய இறைவன், அதே வார்த்தையினால் பாவ வாழ்வில் இருந்த இம்மனுக்குலத்தை மீட்டிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல், வார்த்தையான தனது திருமகனை நம்மிடையே மனுமகனாக வாழ அனுப்பி வைத்திருக்கிறார். ஆலயங்களை அலங்கரிப்பது, குடில்கள் தயாரிப்பது, புத்தாடைகள் உடுத்துவது, கேக்குகளை வெட்டுவது என்னும் நிகழ்வுகளோடு இக்கொண்டாட்டம் நின்று போய்விட்டால், நம் ஆண்டவரின் மிகப்பெரிய மீட்பு வரலாற்று நிகழ்வை நாம் பொய்யாக்குகிறோம். எனவே, கொண்டாட்டங்களையெல்லாம் கடந்து, தமது பிறப்பினால் அவர் உலகத்துக்கு கொண்டு வந்திருக்கிற அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, நீதி, இரக்கம் போன்ற இறையாட்சியின் விழுமியங்களை ஒருவருக்கொருவரோடு பகிர்ந்து கொள்வதில் தான் இறைவனின் பிறப்பு பெருவிழாவின் அர்த்தம் நிரம்பியிருக்கிறது. குறைந்தபட்சம் இன்றாவது நம் வீட்டில், நம் பங்கில், நம் ஊரில் நாம் யாருடனாவது பகை கொண்டிருந்தால், அவர்களை மன்னித்து, நமது அன்பை வெளிப்படுத்தி, இக்கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம். தீராத பகைகள் எல்லாம் ஆண்டவர் இயேசு பிறந்திருக்கிற இந்நன்நாளில் தீர்ந்து போகட்டும். எங்களுக்காக பிறந்திருக்கிற ஆண்டவரே உமது பிறப்பு பெருவிழாவை நாங்கள் அர்த்தமுள்ளதாக மாற்றுவோம் என, உறுதி பூண்டவர்களாய் இப்பெருவிழா திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வை உறுதிப்படுத்தவும், நலம் தரும் செய்தியை உரைக்கவும், ஆண்டவரின் விடுதலையைப் பறைசாற்றவும் வருவோரின் பாதம் எத்துணை அழகானது என்றுரைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக தம் மக்களிடம் பேசிய கடவுள், நாம் வாழும் இவ்விறுதி  நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். இவரே எல்லாவற்றிக்கும் உரிமையாளர், இவரே அனைத்திற்கும் தலைப்பேறு என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் விண்ணக தந்தையே! உம் திருமகனின் பிறப்பு பெருவிழாவிலே அக்களித்து மகிழும் உமது திரு அவையும், அதன் திருப்பணியாளர்களும் உம் திருமகன் இயேசு கிறிஸ்து கொண்டுவந்த, இறையாட்சியின் விழுமியங்களை இவ்வுலகில் விதைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் அன்பு தந்தையே! நாட்டை ஆளுகின்ற தலைவர்கள், அன்பே வடிவமாக நீர் உலகிற்கு அளித்த உம் திருமகன் இயேசு கிறிஸ்துவின் அன்பினை கொண்டு, ஆட்சிபுரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் வானக தந்தையே! அமைதியை அருள உம் திருமகனை இவ்வுலகில் பிறக்கச் செய்தீர். அவர் பிறந்த புனித பூமி இன்று போர்கள், வன்முறைகள் சூழ்ந்த இடமாக இருக்கும் நிலைமாறி, உமது அன்பு மீண்டும் அங்கு மலர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் பரம்பொருளே! உமது திருமகனின் பிறப்பு பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் எம் பங்கு தந்தையையும், பங்கு மக்களையும் நிறைவாக ஆசீர்வதியும். இப்பிறப்பு பெருவிழாவிலே ஒன்றித்திருக்கும் நாங்கள், இன்றுபோல் என்றும் ஒருமனப்பட்டு வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்களை அரவணைப்பவரே! உம் திருமகனின் பிறப்பு பெருவிழாவை கொண்டாட இயலாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபரையும் ஆசீர்வதித்து, இவ்விழாவின் மகிழ்ச்சி அவர்கள் உள்ளங்களில் தங்கிட, நீர் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment