ஞாயிறு – 29.01.2023
ஆண்டின் பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு செப் 2:3, 3:12-13, 1கொரி 1:26-31, மத் 5:1-12
- Author அருள்பணி. P. ஜான் பால் --
- Saturday, 28 Jan, 2023
திருப்பலி முன்னுரை
இன்று நாம் பொதுக் காலத்தின் நான்காவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இறைவனுக்காக, அவரது நற்செய்திக்காக, அவரது பணிக்காக நாம் இகழப்பட்டு, துன்பப்படும் போதெல்லாம் மகிழ்வு கொள்ள வேண்டும். ஏனெனில், நாம் பேறுபெற்றவர்கள் என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு அறிவுறுத்துகிறார். அன்றைய யூத சமுதாயத்தின் வழக்குப்படி செல்வந்தர்களே பேறுபெற்றவர்கள், உண்டுகளித்தவர்களே பேறுபெற்றவர்கள், நில புலன்கள், கால்நடைகள், அதிகம் கொண்டவர்களே பேறுபெற்றவர்கள், மக்கட்செல்வம் அதிகம் பெற்றவர்களே பேறுபெற்றவர்கள், பிறரை மகிழ்விக்க அநீதியை நீதியாக வழங்கியவர்களே பேறுபெற்றவர்கள், அதிகாரத்தில் இருந்தவர்களே பேறுபெற்றவர்கள். இவ்வாறு, இவர்கள் எண்ணிக்கொண்டிருந்த தருணத்தில் ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த சிந்தனையை புரட்டிப் போடுகிறார். செல்வந்தர்கள் அல்ல; ஏழைகளே பேறு பெற்றவர்கள், உண்டுகளித்தோர் அல்ல; துன்பப்படுவோரே பேறுபெற்றவர்கள், மக்கட்செல்வம் அதிகம் கொண்டவர்கள் அல்ல; மாறாக, அமைதியை ஏற்படுத்துவோர் கடவுளுக்கே மக்களாகும் பேறுபெற்றவர்கள். நிலபுலன்கள், கால்நடைகள் அதிகம் கொண்டவர்கள் அல்ல; கனிவுடையோர் நாட்டையே உரிமை சொத்தாக்கி கொள்ளும் பேறுபெற்றவர்கள். இவ்வாறு, உண்மைக்காக, நீதிக்காக, அமைதிக்காக, இறைவனுக்காக, இகழப்பட்டு, துன்பப்பட்டு, ஓரங்கட்டப்படும் ஒவ்வொருவருமே பேறுபெற்றவர்கள் என்று ஆண்டவர் ஆசிகூறுகிறார். நாங்களே பேறுபெற்றவர்கள் என்று மார்தட்டிக்கொண்டவர்கள் வெட்கி தலைகுனியும் வண்ணம், ஓரங்கட்டப்பட்டோரை உயர்த்தி பிடிக்கிறார். இன்று நாம் எந்நிலையில் இருக்கிறோம்? ஆண்டவரால் உயர்த்தி பிடிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறோமா அல்லது அவரால் இகழ்ந்து தள்ளப்படக்கூடிய நிலையில் இருக்கிறோமா என்று சிந்தித்தவர்களாய் இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவரின் கட்டளையை கடைப்பிடிக்கிறபோது, நேர்மையாய் வாழ்கிறபோது, மனத் தாழ்மையோடு நடக்கின்றபோது இறுதிநாளில் ஆண்டவரின் அழிவுக்கு ஆளாகாமல் அவரின் ஆசியை பெறுவோம் என்றுரைக்கும் இம்முதலாம் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
ஞானிகளுக்கு கற்பிக்க ஆண்டவர் மடமையை தேர்ந்தெடுத்தார். வலியோருக்கு கற்பிக்க ஆண்டவர் வலுவற்றவற்றை தேர்ந்தெடுத்தார். எனவே, பெருமை பாராட்ட விரும்புவோர் ஆண்டவரை குறித்து மட்டுமே பெருமை பாராட்டட்டும் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. எங்கள் அன்பு தந்தையே! உமது திரு அவையும், திருப்பணியாளர்களும், உயர் குடிகளோடும் செல்வந்தர்களோடும் நட்பு பாராட்டாமல், உம்திருமகனைப் போல, ஏழை, எளிய மக்களின் மீட்புக்காக பணியாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்களை காப்பவரே! எம் நாட்டுத் தலைவர்களையும், மக்களையும் நிறைவாக ஆசீர்வதியும். மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் நடத்தப்படும் போர்களும் வன்முறைகளும் முடிவுற்று அமைதி நிலவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. இரக்கமுள்ள தந்தையே! எங்கள் பங்கு தந்தையையும், பங்கு மக்களையும் ஆசீர்வதியும். எங்கள் பங்கின் முயற்சிக்காக எங்கள் பங்கு தந்தை எடுக்கிற ஒவ்வொரு செயல்களிலும் நாங்கள் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. கனிவுள்ள தந்தையே! எங்கள் குடும்பங்களை உம் திரு பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். எங்கள் குடும்பத்தின் நோய்-நொடிகள், கவலை-கண்ணீர்கள், கடன் தொல்லைகள் அனைத்திற்கும் நீர் மட்டுமே விடிவுதர முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டு வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் விண்ணக தந்தையே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அநீதிகளை கண்டு அஞ்சி ஓடாமல், உமது இறையாட்சிக்காக, உமது திருமகன் கொண்டு வந்த சமத்துவத்திற்காக துணிந்து போராடக் கூடியவர்களாக நாங்கள் மாறிட வேண்டுமென்று இறைவா மன்றாடுகிறோம்.
Comment