No icon

ஞாயிறு தோழன்-05.02.2023

ஆண்டின் பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு எசா 58: 7-10, 1 கொரி 2: 1-5, மத் 5: 13-16

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக் காலத்தின் ஐந்தாவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்று நம் அனைவரையும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு உப்பாக, ஒளியாக வாழ அழைப்பு விடுக்கின்றார். அன்பு, அமைதி, கனிவு, இரக்கம், நீதி, உண்மை போன்ற விழுமியங்களை கடைப்பிடிக்க வேண்டிய கிறிஸ்தவர்களாகிய நாம், இவற்றுக்கு எதிராக செல்கின்ற போது, பிற சகோதரர்கள் நம்மை பார்த்து கேட்கும் கேள்விநீங்க ஒரு கிறிஸ்தவர், நீங்களே இப்படி செய்யலாமா?” என்பதுதான். எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் செய்கிற ஒவ்வொரு செயலும் நம்மோடு அல்ல; மாறாக, நமது ஆண்டவர் கிறிஸ்துவோடு, நமது இறைத்தந்தையோடு தொடர்புடையவை. இதைத்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியிலே, உங்களது நற்செயல்களை கண்டு உங்கள் விண்ணகத்தந்தையை பிறர் போற்றி புகழ்வார்களாக என்று கூறுகிறார். எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம், நமக்காக அல்ல; பிறருக்காக, இவ்வுலகிற்காக உப்பாக, ஒளியாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். எவ்வாறு உணவில் சேர்க்கப்படும் சாரமற்ற உப்பு அந்த உணவிற்கே அவப்பெயரை சேர்க்கின்றதோ, அதுபோல நாம் செய்யும் தீய செயல்கள் நமக்கு அல்ல; மாறாக, நமது இறைத்தந்தைக்கும், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிற்கும் அவப்பெயரை சேர்க்கின்றன. உங்கள் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள். உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள் என்று, நாம் திருவிவிலியத்தில் வாசிப்பதுபோல, நமது செயல்கள், வார்த்தைகள், வாழ்க்கைமுறைகள் நமது இறைதந்தையை போற்றி புகழக்கூடியதாக இவ்வுலகில் அமைய வேண்டுமென்று இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

பசித்தோருக்கு உணவளிக்கின்ற போது, தங்குவதற்கு இடம் இல்லாருக்கு இடம் தருகின்றபோது, வறியோரின் தேவையை நிறைவு செய்கின்ற போது, நாம் இவ்வுலகிற்கு ஒளியாக இருப்போம் என்று கூறும் இம்முதலாம் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று பறைசாற்றப்பட்ட நற்செய்தியை அறிந்து அதில் நம்பிக்கைகொள்ள, நமக்கு தேவை மனித ஞானமல்ல; மாறாக, கடவுள் தரும் வல்லமையே என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. அனைத்துலகோரின் கடவுளே! உமது திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும் இவ்வுலகிற்கு உப்பாக, ஒளியாக இருந்து சாட்சிய வாழ்வு வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அரணும் கோட்டையுமானவரே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள், தங்கள் கொள்கைகளாலும், செயல்களாலும், திட்டங்களாலும் எம் நாட்டிற்கும் மக்களுக்கும் நட்பேறு பெற்று தருபவர்களாக ஆட்சி புரிந்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கனிவுள்ள தந்தையே! நாங்கள் வாழ்கின்ற இடங்களில் எங்கள் வார்த்தைகளால், வாழ்க்கையால் பிறருக்கு வாழ்வளிக்க கூடிய உப்பாக, ஒளியாக வாழ்ந்திடும் கிறிஸ்தவர்களாக நாங்கள் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆவியானவரை பொழிபவரே! தங்களுடைய தேர்வுகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் எம் மாணவ, மாணவிகளை நிறைவாக ஆசீர்வதித்து, உமது ஆவியாரின் கொடைகளை அவர்கள்மீது பொழிந்து அவர்களை வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. வரங்களைத் தருபவரே! தகுந்த பராமரிப்பின்றி, அடிப்படைத் தேவைகளின்றி தவிக்கும் மக்கள் மீது நீர் உமது கருணை கண்களை திருப்பி, அவர்களுக்கு தேவையானவற்றை அளிக்கும் நல்லுள்ளங்களை நீர் தூண்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment