ஞாயிறு – 02.04.2023
ஆண்டவரின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு - எசா 50:4-7, பிலி 2:6-11, மத் 26:14-27,66
- Author அருள்பணி. P. ஜான் பால் --
- Thursday, 30 Mar, 2023
திருப்பலி முன்னுரை
இன்று நாம், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய பாடுகளின் குருத்து ஞாயிறின் திருவழிபாட்டில் பங்கேற்க ஒன்று கூடியுள்ளோம். ஒரு மனிதனின் கீழ்ப்படியாமையால் இவ்வுலகில் நுழைந்த பாவத்தையும், சாவையும் தனது பாடுகளாலும், சிலுவை மரணத்தாலும் வெற்றி கொண்டிட வெற்றி அரசராய், ஆண்டவர் இயேசு கிறிஸ்து கம்பீரமாய் கழுதையின் மீது அமர்ந்து, எருசலேம் புனித நகருக்குள் நுழைகிறார். அப்போது அவரை வரவேற்க தெருக்களின் இரு மருங்கிலும் கூடியிருந்த மக்கள் தாவீது மகனுக்கு ஓசன்னா! என்று ஆர்ப்பரித்து பாடுகின்றனர். வழக்கமாக போரில் வெற்றி பெற்ற மன்னன், தன் நாட்டிற்குத் திரும்பி வரும்போது, மக்கள் எக்காலங்கள் முழங்கி, மலர்களைத் தூவி, ஆரவாரம் செய்து வரவேற்பது வழக்கம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் இதே நம்பிக்கை அடையாளத்தை தன் மக்களுக்கு தருகிறார். இதோ நான் எனது பாடுகளாலும், மரணத்தாலும் உங்களுடைய பாவங்களையும், மரணத்தையும் வென்றெடுப்பேன். எனவே, மகிழ்ந்து ஆர்ப்பரியுங்கள் என்று தன் மக்களுக்கு நம்பிக்கையை தருவதற்காகவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து கழுதையின் மீது ஊர்வலமாக தனது நகரத்தை நோக்கி திரும்பிவருகிறார். இந்த வெற்றி, வாள்களாலும், ஈட்டியாலும், அம்புகளாலும் வரும் வெற்றி அல்ல; மாறாக, தனது பாடுகளாலும், மரணத்தாலும் வரும் வெற்றி. இந்த வெற்றி பிறரின் இரத்தத்தினால் வரும் வெற்றி அல்ல; மாறாக, உலகின் செம்மறியான தனது இரத்தத்தால் வரும் வெற்றி என்பதை இக்குருத்து ஞாயிறு வழியாக இறைவன் நமக்கும் உணர்த்துகிறார் என்பதை மனதில் நிறுத்தியவர்களாய் ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு திருவழிபாட்டில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவரின் ஊழியர் எத்தகைய துன்பத்திற்குள்ளானாலும், சாவும் அளவிற்கு மரண வலியை பெற்றாலும், ஆண்டவராகிய கடவுள் ஒரு போதும் அவரை கை விடமாட்டார், அவரை அவமானத்திற்கு உள்ளாக்க மாட்டார் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கடவுள் நிலையில் இருந்த அவர், நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்கும் பொருட்டு, தம்மையே வெறுமையாக்கி, அடிமையாக்கி, சிலுவை சாவை ஏற்றார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. எங்கள் அன்பு தந்தையே! உமது திருமகனின் பாடுகளின் குருத்து ஞாயிறை சிறப்பிக்கும் திருஅவை உமது திருமகனை போல ஒடுக்கப்படுகிற, நசுக்கப்படுகிற, ஏழை, எளிய மக்களின் சார்பாக நின்று போராட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்களைக் காப்பவரே! நாடுகளை ஆள நீர் தந்திருக்கும் நாட்டுத் தலைவர்கள், தங்கள் சுயநலத்திற்காக அல்லாமல், உமது திருமகனை போல பிறருக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கக்கூடியவர்களாக மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கருணைக் கடவுளே! உமது திருமகனின் பாடுகளின் குருத்து ஞாயிறில், அவர் எங்களுக்காய் சிந்திய இரத்தத்தை அவமதிப்பிற்கு உள்ளாகாமல், அதற்கான பலனை நாங்கள் பெற்று, பகிர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கமுள்ள தந்தையே! எத்தகைய துன்பங்கள் நேர்ந்தாலும், மரணத்தைச் சந்திக்க கூடிய வலிகள் வந்தாலும், உம்மை புகழ்ந்து, உமது துதி பாடக்கூடிய மக்களாக நாங்கள் வாழ வேண்டுமென்று இறைவாஉன்மை மன்றாடுகிறோம்.
5. நம்பிக்கையை தருபவரே! இன்றும் உமது திருமகன் மீது நம்பிக்கை கொள்ளாமல் வாழ்ந்து வரும் மக்கள், அவரது பாடுகள், இறப்பு இவற்றை காண்கின்ற போது, தங்கள் நிலை அறிந்து, மனம் மாறிடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment