No icon

ஞாயிறு – 18.06.2023

பொதுக்காலம் 11 ஆம் ஞாயிறு (விப 19:2-6, உரோ 5:6-11, மத் 9:36-10:8)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 11 ஆம் ஞாயிறு திருவழிபாடுகளை சிறப்பிக்கின்றோம். அறுவடையோ மிகுதி, வேலையாட்களோ குறைவு. எனவே, தேவையான வேலையாட்களை தரும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் என்று கூறி, ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் திருத்தூதர்களை நற்செய்தி பறைசாற்ற அனுப்பி வைக்கிறார். வழிதவறிப் போயிருக்கும் இஸ்ரயேல் மக்களிடமே முதலில் செல்லுங்கள், பிற இனமக்களிடம் செல்ல வேண்டாம் என்ற கட்டளையைத் தந்து, அவர்களை வழியனுப்புகிறார். நான் அனைவரையும் மீட்பதற்காகவே வந்தேன் என்றுரைத்த ஆண்டவர் இயேசு, இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள் என்று கூறுவதற்கு காரணம் என்ன? உன் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை பார்க்காமல், உன் சகோதரர் சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை கூர்ந்து கவனிப்பது ஏன்? என்னும் ஆண்டவர் இயேசுவினுடைய வார்த்தைகளை இங்கே நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலில் தான் சார்ந்துள்ள இனத்தின் குறைபாடுகளை, தவறுகளைச் சரிசெய்து விட்டு, பிறகு மற்றவரின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதைத்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, இங்கே நமக்கு கற்பிக்க விரும்புகிறார். நாம் பிறரது குற்றங்களைச் சுட்டிக்காட்ட முற்படும்போது அவர்கள் நம்மை பார்த்து கேட்கும் கேள்வி நீ என்ன யோக்கியனா?. இந்நிலை தமது திருத்தூதர்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே முதலில் இஸ்ரயேல் மக்களை ஒழுங்குப்படுத்த அனுப்பி வைக்கிறார். முதலில் நமது தவறுகளை, நாம் வாழும் இடத்தின் குறைகளைச் சரிசெய்து விட்டு, அடுத்தவரின் குறைகளைச் சுட்டிக்காட்ட முற்படுவோம் எனும் வரம் வேண்டி இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

நீங்கள் எனக்கு செவிசாய்த்து, என் உடன் படிக்கையை கடைப்பிடித்தால், இவ்வுலகிலுள்ள மற்றெல்லா மக்களையும் விட, இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் எனக்கு தனி சொத்தாக இருப்பீர்கள் என்று கூறும் இறைவனின் குரலை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நல்லவர் ஒருவருக்காக உயிரை தருவது என்பதே அரிதான காரியமாய் இருக்க, பாவிகளான நமக்காக ஆண்டவர் இயேசு தம் உயிரையே கொடுத்து, நம்மை கடவுளுக்கு ஏற்புடையவராக மாற்றியிருக்கிறார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. கனிவுள்ள தந்தையே! உமது பணிகளை தொடர்ந்து செய்திட நீர் தேர்ந்து கொண்ட உம் திருஅவையின் திருப்பணியாளர்கள், தங்களது அழைப்பில் நிலைத்திருந்து முழு அர்ப்பணத்தோடு உமது மந்தைகளை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அற்புதங்கள் புரிபவரே! எங்களுக்காக பலியான உமது திருமகனை போல, எங்களை வழிநடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற தலைவர்கள், தூய்மையான உள்ளத்தோடு பணியாற்ற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இரக்கமுள்ள தந்தையே! அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு என்பதை உணர்ந்த நாங்கள், எங்கள் பிள்ளைகளை, எங்கள் பங்கு இளையோரை உமது பணிக்காக அர்ப்பணிக்கும் வண்ணம் அவர்களை வளர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நலம் பல புரிபவரே! பாலை நிலத்திலே அன்று இஸ்ரயேல் மக்களை உமது சிறகுகளின் நிழலில் நீர் வழிநடத்தியது போல, இந்த நவீன உலகிலே பசி, பட்டினி, வேலையின்மையால் துன்புறும் மக்களை நீர் வழி நடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்களை மன்னிப்பவரே! அடுத்தவரை திருத்துவதில் வேகத்தை காட்டும் நாங்கள், எங்களது தவறுகளை முதலில் திருத்திக் கொண்டு பிறருக்கு எடுத்துக்காட்டாய்  வாழும் விவேகத்தை வளர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment