No icon

ஞாயிறு – 02.07.2023   

பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு ( 2அர 4:8-11, 14-16 உரோ 6: 3-4, 8-11, மத் 10: 37-42)

திருப்பலி முன்னுரை:   

இன்று நாம் பொதுக் காலத்தின் 13வது ஞாயிறு திருவழிபாட்டினைச் சிறப்பிக்கின்றோம். கடவுள் மனிதன் மீது கொண்ட அன்பினால் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப் பினார். ஏனெனில், ‘கடவுள் அன்பாய் இருக்கிறார்’ என்று நாம் திருவிவிலியத்தில் வாசிக்கிறோம். ஆனால், இன்றைய நற்செய்தியில் நம்  ஆண்டவர் இயேசு கிறிஸ்து, “என்னைவிட தன் தாய்-தந்தையிடமோ, சகோதர-சகோதரிகளிடமோ, கணவன்- மனைவியிடமோ அதிக அன்பு கொண்டிருப்போர் என்னுடையோர் அல்லர்” என்று கூறுகிறார்.

அன்பே உருவான இறைவன் எதற்காக இப்படிக் கூறுகிறார்? காரணம், அன்புதான்! ‘உன்மீது கொண்ட அன்பினால், என் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினேன். உன்மீது கொண்ட அன்பினால் என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற நான் என் உயிரைத் தந்தேன். உன்மீது கொண்ட அன்பினால் அவர்களிடமிருந்து பிரிந்து  தூய ஆவியாக இறங்கி வந்தேன். ஆனால், இப்போது அந்த அன்பை உதறித் தள்ளிவிட்டு, பொருள்களின் மீது, செல்வத்தின் மீது, பதவியின் மீது, உனக்குப் பிடித்த மனிதர்களின் மீது மிகுந்த அன்புகொள்கிறாயே?’ என்ற வினாவின் மூலம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார். இன்று நாம் கடவுளிடம் பலவற்றைக் கேட்கிறோம்; அதைப் பெற்றுக் கொண்ட பிறகு அவரை மறந்து விடுகிறோம். அனைத்தையும் தருகிற கடவுள் நம்மிடம் கேட்பது நமது அன்பை மட்டுமே. நம்மையே அவரிடம் தந்திட, அன்பை முழுமையாய் அவருடன் பகிர்ந்திட வரம் வேண்டி  இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:

செல்வந்தர்களாக இருந்தும், இறைவாக்கினர் என்பதற்காக தனக்குச் செய்ய நினைத்த உதவிக்காக இறைவாக்கினர் எலிசா, ஆண்டவரின் ஆசீர்வாதத்தை அக்குடும்பத்திற்குப் பெற்றுத் தருகிறார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

ஆண்டவர் இயேசுவின் சாவில் இணைக்கப்பட்டிருந்த நாம், அவரது உயிர்ப்பிலும் இணைக்கப்பட்டிருக்கிறோம். அவர் கடவுளுக்காக வாழ்ந்தது போல, நாமும் கடவுளுக்காகவே வாழ்வோம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்:

1. எங்கள் அன்புத் தந்தையே! உமது திரு அவையை வழி நடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் எல்லா நிலைகளிலும் உமக்குச் சான்று பகரக்கூடிய வாழ்வை வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் விண்ணகத் தந்தையே!  நாட்டை ஆளும் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை, பதவியை ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தவும், அவர்களின் தேவைகளை அறிந்து, நிவர்த்தி செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.

3. எங்கள் பரம்பொருளே! எங்கள் குடும்பங்களில், பங்கில் நாங்கள் சந்திக்கும் நபர்களை அவர்களின் நிறை-குறைகளோடு ஏற்றுக்கொண்டு, ஒருவரையொருவர் மதிக்கக் கூடியவர்களாக நாங்கள் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எல்லாம் வல்லவரே! திருமணத்திற்காகக் காத்திருப்போருக்கு விரைவில் திருமணம் நடை பெறவும், திருமணம் முடிந்து பிள்ளைச் செல்வத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நீர் பிள்ளைச் செல்வங்களைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் வானகத் தந்தையே! நீர் தந்திருக்கிற இப்புதிய மாதத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்புதிய மாதத்தில் நாங்கள் செய்யவிருக்கும் அனைத்துச் செயல்களிலும் உமது வல்லமையைக் கண்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment