No icon

பொதுக்காலம் 18 ஆம் ஞாயிறு (06.08.2023)

ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா - தானி 7: 9-10,13-14 2பேதுரு 1: 16-19 மத் 17: 1-9

திருப்பலி முன்னுரை:

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் 18வது ஞாயிறு திருவழிபாட்டைக் கொண்டாடுகிறோம். இன்று நமது தாயாம் திரு அவையோடு இணைந்து நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தோற்ற மாற்ற விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். எதற்காக ஆண்டவர் தமது தோற்றத்தில் மாற்றம் அடைகிறார்? இது எதைக் குறிக்கிறது? இந்தத் தோற்ற மாற்றம், இறுதியிலே சிலுவையிலே அவர் அடையப்போகிற அந்தத் தோற்ற மாற்றத்தை முன் குறிக்கிறது. ஆண்டவர் இயேசு உருமாறியது உருக்குலைந்து போகவே. முழு கடவுளாகவும், முழு மனிதராகவும் வந்தவர், இந்நிகழ்விலே முழு கடவுளாகத் தோற்றமளிக்கிறார். சிலுவையிலே செம்மறியாக அனைவரின் பாவங்களைத் தமது இரத்தத்தால் அவர் கழுவி தூய்மையாக்கப் போகிறார் என்பதன் அடையாளமே இந்த வெண்ணிற தோற்ற மாற்றம். இறைவாக்கினர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்ட எலியாவும், திருச் சட்டங்களின் தந்தையாகக் கருதப்பட்ட மோசேவும் ஆண் டவர் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருப்பதற்கான விளக்கம், அதுவரை முன்மொழியப்பட்ட அனைத்துத் திருச்சட்டங்களும், இறைவாக்குகளும் ஆண்டவர் இயேசுவில் முழுமைப் பெறப்போகின்றன என்பதையே சுட்டிக் காட்டுகின்றன. அதுபோலவே ஆண்டவர் இயேசு, தாம் சிலுவையில் அடைந்த தோற்ற மாற்றத்தால் இவ்வுலகிற்கு மீட்பைப் பெற்றுத் தந்தார். இன்று நாமும் தோற்ற மாற்றம் பெற வேண்டுமென நம் ஆண்டவர்  விரும்புகிறார். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது நிற மாற்றமல்ல; மாறாக, உள்ள மாற்றமே என்பதை உணர்ந்தவர்களாய், இத்திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை:

வானங்களின்மீது மானிட மகன் ஆட்சி செய்ய வருகிறபோது, ஆரவாரமும், அக்களிப்பும் தோன்றும். ஒருவர் விடாது அனைவருமே அவரை அக்களிப்போடு வழிபடுவார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது, இவ்வுலகில் என்ன நிகழும் என்பது சூழ்ச்சியாகப் புனையப்பட்ட கதைகள் அல்ல; மாறாக, திருத்தூதர்களே தங்கள் காதுகளால் கேட்டறிந்த ஆதாரப்பூர்வமான உண்மை என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்:

எங்கள் அன்புத் தந்தையே! உமது திரு அவை இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு பெற்ற தோற்ற மாற்றத்திற்காக நன்றி! தற்போது எமது திருத்தந்தை முனைப்போடு கையெடுத்திருக்கும் கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான செயல்கள் வெற்றியடைய வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் அரணும், கோட்டையுமானவரே! எம் நாடுகளை ஆளும் தலைவர்கள், தங்களை அதிகாரிகளாக, தலைவர்களாகக் காட்டிக் கொள்வதை விடுத்து, மக்களின் பணியாளர்களாகத் தங்கள் உள்ளத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் அருமை நேசரே! எங்கள் இல்லங்களிலும், பணிபுரியும் இடங்களிலும், பிறர் மதிக்கின்ற, நேசிக்கின்ற, நற்பண்புகளைக் கொண்ட நல்ல மனிதர்களாக நாங்கள் மாறிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

ஆவியைப் பொழிபவரே! கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே ஒடுக்கப்பட்டு, தாக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு அமைதியின்றி வாழும் உம் மக்களின் நிலை மாறிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

என்றும் வாழ்பவரே! உணவின்றி, உடையின்றி, அன்பு செய்யும் உள்ளங்கள் இன்றி பல இடங்களில், இல்லங்களில், முகாம்களில் வாடும் உள்ளங்களுக்கு நீர் நல்வழி காட்டிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

Comment