பொதுக்காலம் 23 ஆம் ஞாயிறு (10.09.2023)
எசே 33:7-9, உரோ 13:8-10, மத் 18:15-20
திருப்பலி முன்னுரை
இன்று நாம் பொதுக்காலத்தின் 23 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் அனைவரையும் ஒருமனப்பட்டு இருக்க அழைப்பு விடுக்கிறார். அவரது பெயரால் நாம் ஒன்றுகூடுகிறபோது, அவர் நம் நடுவே இருப்பார் எனும் வாக்குறுதியை நமக்குத் தருகிறார். இந்த வாக்குறுதியை ஆண்டவர் இயேசு கிறிஸ்து நிறைவேற்றுவாரா என்றால், கண்டிப்பாக நிறைவேற்றுவார்! ஏனென்றால், இருவர் அல்லது மூவர் மனமொத்திருக்க வேண்டுமென்றால் அவர்களிடையே எந்த மனக்கசப்போ, மன வருத்தமோ, பகைமையோ இருக்கக் கூடாது. குரோதமும், பகைமை உள்ளமும் கொண்டவர்கள் ஒன்றித்திருக்க முடியாது. மாறாக, எந்தெந்த உள்ளங்களில் அன்பு இருக்கிறதோ, இரக்கம் இருக்கிறதோ, பரிவு இருக்கிறதோ அந்த உள்ளங்கள் வேறுபாடு பார்க்காமல், பாகுபாடு பார்க்காமல் ஒன்று சேர முடியும். அன்பினால் நாம் அனைவரும் மனமொத்திருக்கும் வேளை, அன்பே கடவுளான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அந்த அன்பின் வடிவிலே நம் மத்தியில் இருக்கிறார். இதோ இந்த ஞாயிறு திருப்பலியில் கூடியிருக்கும் நாம் அனைவரும் மனமொத்து ஒன்றுகூடி இருக்கின்றோமா? என்று சிந்திப்போம். ஆண்டவரின் பெயரால் கூடியுள்ள நம் நடுவே ஆண் டவர் எழுந்தருள வேண்டுமென்று இந்த ஞாயிறு கடன் திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.
முதல் வாசகம் முன்னுரை
இறைவாக்கினரான எசேக்கியேல், மக்கள் தவறு செய்கிறபோது ‘அது தவறு’ என்று அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இல்லையெனில் அதற்கான தண்டனையை எசேக்கியேல் பெறுவார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம் முன்னுரை
‘கொலை செய்யாதே’, ‘களவு செய்யாதே’ போன்ற சட்டங்கள் எல்லாம், ‘ஒருவருக்கொருவர் அன்பு கூறுங்கள்’ என்னும் சட்டத்தில் அடங்கியுள்ளன என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
தொடக்கமும், முடிவுமானவரே! உமது திரு அவையை வழிநடத்தும் உமது திருப்பணியாளர்கள், உம்மால் அழைக்கப்பட்டவர்கள், உமது பெயரால் ஒன்று கூடுபவர்கள் என்பதை உணர்ந்து, தங்களுக்குள் இருக்கும் பாகுபாடுகளைக் களைந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
தாயும், தந்தையுமானவரே! நாட்டை ஆளும் தலைவர்கள் கொடுமையான சட்டங்களினால் மக்களை வாட்டி வதைக்காமல், அன்பு எனும் உமது சட்டத்தைக் கொண்டு நல்லாட்சி புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
வாழ்வும், வழியுமானவரே! எங்கள் குடும்பங்களிலும், சமுதாயத்திலும் தவறுகள் நடக்கிறபோது அதைச் சுட்டிக்காட்டி, தட்டிக் கேட்கும் கிறிஸ்தவர்களாக நாங்கள் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஞானத்தை வழங்குபவரே! கல்விச் செல்வத்தை வழங்கும் ஆசிரியப் பெருமக்களுக்காக வேண்டுகின்றோம். மாணவர்களைத் தங்கள் குழந்தைகளாகப் பாவித்து நல்வழிப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அரணும், கோட்டையுமானவரே! எமது மாணவச் சமுதாயம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிந்து, தாங்கள் வாழும் சமுதாயத்தின், நாட்டின் எதிர்காலத் தூண்களாக உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment