பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு (24-9-2023)
எசா 55: 6-9, பிலி 1:20-24, 27, மத் 20:1-16
திருப்பலி முன்னுரை
இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் 25 ஆம் ஞாயிறு திருவழிபாட்டினைச் சிறப்பிக்கின்றோம். நம் ஆண்டவர் வேலைக்கான கூலி தருபவர் அல்லர்; மாறாக, நமது தேவைக்கான கூலியைத் தருபவர் என்பதை இன்றைய நாளின் வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. விடியற்காலையில் வேலைக்குச் சென்றவர்களுக்கும், மாலை ஐந்து மணிக்கு வேலைக்குச் சென்றவர்களுக்கும் ஒரே கூலியானது தரப்படுகின்றது. கடைசியில் வந்தோருக்கு ஒரு தெனாரியம் கூலியாக வழங்கப்பட்டதைக் கண்டதும், முதலில் வந்தவர்கள் தங்களுக்கு இதை விட அதிகமாகக் கிடைக்கும் என்று எண்ணியது தவறு. ஏனெனில், வேலைக்கு வருவதற்கு முன்பாகவே நிலக்கிழாரிடம் ‘ஒரு நாளுக்கு ஒரு தெனாரியம் கூலி’ என ஒத்துக்கொண்டுதான் அவர்கள் வேலைக்கு வருகிறார்கள். எனவே, அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலி நியாயமானதே. அதே நேரத்தில், இறுதியில் வந்தவருக்கு ஒரு தெனாரியம் கூலியாகக் கொடுப்பது என்பது நிலக்கிழாரின் விருப்பம். ஏனெனில், மாலையாகியும் வேலையில்லாமல் இருக்கும் இவர்கள் இரவு எப்படி உண்பார்கள் எனும் இரக்கத்தின் அடிப்படையிலே அந்த நிலக்கிழார் அவர்களுக்கு அந்த ஒரு தெனாரியத்தைத் தருகிறார். இங்கே வேலைக்கு ஏற்ற கூலி அல்ல; மாறாக, தேவைக்கேற்ற கூலிதான் வழங்கப்படுகிறது. இதைத்தான் நம் ஆண்டவர் இன்றைய முதல் வாசகத்தில் ‘என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல; உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல’ என்று கூறுகிறார். எனவே, தேவையில் இருப்பவருக்கு இரக்கம், அன்பு, பரிவு காட்டவும், மன்னிப்பு வழங்கவும் ஆண்டவர் தமது வழிமுறைகளை நமக்குக் கற்றுத் தருகிறார் என்பதை உணர்ந்தவர்களாய் இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் உயர்ந்து நிற்பதுபோல, ஆண்டவரின் எண்ணங்களும், வழிமுறைகளும், மனிதரின் எண்ணங்கள் மற்றும் வழி முறைகளில் இருந்து மிக உயர்ந்து நிற்கின்றன என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நாம் வாழ்ந்தாலும், இறந்தாலும், அது ஆண்டவருக்காகவே இருக்க வேண்டும். நமது உடலால் இறப்பிலும், வாழ்விலும் அவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்றுரைக்கும் பவுலடியாரின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
* எங்கள் அன்பு தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் உம் திருப்பணியாளர்கள் தேவையில் இருக்கும் மக்களுக்காக, விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
* அதிசயங்கள் புரிபவரே! நீர் உம் மக்களை ஆள்வதற்காகத் தேர்ந்துகொண்ட தலைவர்கள், மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கேற்ப நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து, நல்லாட்சி புரிந்திட வேண் டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
* எல்லாம் வல்லவரே! நீர் தந்திருக்கிற இந்த வாழ்க்கைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள் வாழ்விலும், சாவிலும் உம்மைப் பெருமைப்படுத்தக் கூடிய வாய்ப்பை நீர் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கிறோம்.
* உண்மையின் தேவனே! எங்கள் பங்கிலும், குடும்பத்திலும் எங்கள் குழந்தைகளும், இளையோரும் உமது வார்த்தையின் மீது ஆர்வம் கொண்டு, திருவிவிலியத்தை அனுதினமும் வாசிக்கக்கூடிய மக்களாக மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment