No icon

பொதுக்காலம் 26 ஆம் ஞாயிறு (01-10-2023)

எசே 18: 25-28, பிலி 2: 1-11, மத் 21: 28-32

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 26 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். தந்தை கடவுளின் விருப்பப்படி ஒருவர் நடக்கிறபோது, அவர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர் அல்லாதவராக இருந்தாலும், இறையாட்சியில் இடம்பெறுவார். தந்தை கடவுளின் விருப்பப்படி நடவாத போது அவர் கத்தோலிக்கக் கிறிஸ்தவராக இருந்தாலும், இறையாட்சிக்குப் புறம்பே தள்ளப்படுவார். திராட்சைத் தோட்டத்திற்குப் போக விருப்பமில்லை என்று சொன்ன மூத்த மகன், தனது தந்தை விரும்பியவாறு தோட்டத்திற்குச் செல்கிறான். ‘நான் போகிறேன்என்று சொன்ன இளைய மகனோ தோட்டத்திற்குப் போகாது விட்டுவிடுகிறான். ‘போக விருப்பமில்லைஎன்று சொன்ன மூத்த மகன், தன் தந்தை விரும்பியவாறு தன்னை மாற்றிக்கொள்கிறான். ‘போகிறேன்என்று சொன்ன இளைய மகனோ தன் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக நடக்கிறான். அதுபோல இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளாமல், தங்களுக்கு ஏற்றவாறு கடவுளை மாற்ற நினைத்தார்கள். மாறாக, வரிதண்டுவோரும், விலை மகளிரும் தொடக்கத்தில் ஆண்டவரின் விருப்பத்திற்கு எதிராக வாழ்ந்தாலும், ஆண்டவரைச் சந்தித்த பிறகு, அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறு தங்களது வாழ்வை மாற்றிக்கொண்டார்கள். ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொண்டு, அவரது விருப்பப்படி வாழ்கிறபோது, நாமும் அவரது ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வோம் என்ற எண்ணத்தோடு இந்த ஞாயிறு கடன் திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

நீதியையும், நேர்மையையும் கடைபிடிப்போர் தம் உயிரைக் காத்துக் கொள்வர். ஆனால், நேரிய வழியில் நடவாமல் தவறு இழைப்போர், ஆண்டவரின் தண்டனையைப் பெற்றுக் கொள்வர் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் தந்தையின் திருவுளம் அறிந்து, அடிமையின் வடிவை ஏற்று, சிலுவைச் சாவுக்குத் தம்மைக் கையளித்தார். எனவே, நமது நாவுகள் அவரைப் புகழட்டும் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

* எங்கள் வானகக் தந்தையே! உமது திருவுளம் அறிந்து, உமது விருப்பத்தை நிறைவேற்றிய உம் திருமகனைப் போல, உம் திரு அவையின் திருப்பணியாளர்கள் உமது விருப்பத்திற்கு ஏற்றவாறு இறைப்பணியாற்றிட வேண்டுமென்று இறைவா  உம்மை மன்றாடுகிறோம்.

* எங்கள் அரணும், கோட்டையுமானவரே! எம் நாட்டை ஆள்வோர் தங்களின் சுய விருப்பங்களுக்காக அல்ல; மாறாக, தங்களைத் தேர்ந்தெடுத்த நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நல்லாட்சி புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

* அற்புதங்களின் ஆண்டவரே! உமது விருப்பப்படி குடும்பங்களாய் இணைந்து வாழும் நாங்கள்உமது திருவுளத்தை அறிந்து, அதன்படி நல்ல கிறிஸ்தவக் குடும்பங்களாய்த் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

* நலம் தரும் ஆண்டவரே! இந்தப் புதிய மாதத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இம்மாதத்திலே நாங்கள் செய்யப்போகும் ஒவ்வொரு செயல்களையும் நீர் ஆசீர்வதித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment