No icon

பொதுக்காலம் 27 ஆம் ஞாயிறு  (08-10-2023)

(எசா 5: 1-7; பிலி 4: 6-9; மத் 21: 33-43)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 27 ஆம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இறைவன் இவ்வுலகைப் படைக்க ஐந்து நாள்கள் எடுத்துக்கொள்கிறார். முதல் ஐந்து நாள்கள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற ஓர் இடமாக இவ்வுலகைப் படைத்த பிறகே, ஆறாம் நாள் மனிதனை உருவாக்கி, அவனை நம்பி, அவனிடம் இவ்வுலகைக் கொடுக்கிறார். ஆனால், மனிதன் அவரது நம்பிக்கைக்கு எதிராகச் சென்றபோது, அவனைப் புறம்பே தள்ளுகிறார். இதையே இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உவமையின் வாயிலாக விளக்குகிறார். தலைவர் ஒருவர் திராட்சை தோட்டம் அமைத்துக் குத்தகைக்கு விடுகிறார். வெளியூர் சென்று திரும்பி வந்து குத்தகைப் பணம் கேட்டுப் பணியாள்களையும், இறுதியாகத் தம் மகனையும் அனுப்புகிறார். குத்தகைக்காரர்கள் அனைவரையும் கொன்று போடுகிறார்கள். இறுதியாகத் தலைவர் வந்து குத்தகைக்காரர்களைக் கொன்றொழிக்கிறார். பாலும், தேனும் பொழியும் நாட்டை இறைவன் தேர்ந்துகொள்ளப்பட்ட இனமாகிய இஸ்ரயேல் மக்களுக்குத் தருகிறார். பாவத்தில் வீழ்ந்த அவர்களை ஒழுங்குபடுத்த அனுப்பப்பட்ட இறைவாக்கினர்களை அவர்கள் கொன்று போடுகிறார்கள். இறுதியாக, தம் ஒரே நம்பிக்கைக்குரிய மகனை அனுப்பி வைக்கிறார். அந்த மகனையும் ஏற்றுக்கொள்ளாமல் கொன்று போடுகிறார்கள். ஆனால், பிற இனத்து மக்களாகக் கருதப்பட்டோர் அந்த மகனை நம்பி ஏற்றுக்கொண்டு, இறையாட்சியில் அமர்கிறார்கள். நாமும் இறைவனில் நம்பிக்கை கொண்டு, அவரது நம்பிக்கைக்குரியவர்களாக வாழ்ந்திட இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

நல்ல கனி தரும் திராட்சைத் தோட்டமாக ஆண்டவர் இஸ்ரயேல் மக்களை உருவாக்கினார். ஆனால், அவர்களோ தீய கனியாகிய இரத்தப் பழிகளை விளைவித்து, ஆண்டவரின் தண்டனையைப் பெற்றார்கள் என்று கூறும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவருக்கு உகந்தது எதுவோ, ஆண்டவர் விரும்புவது எதுவோ, ஆண்டவர் பாராட்டுவது எதுவோ அவற்றை நாம் செய்கிறபோது, எதைப் பற்றியும் நாம் கவலை கொள்ள வேண்டாம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

* எங்கள் விண்ணகத் தந்தையே! உம் திரு அவையை வழி நடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர், தாங்கள் கடவுளின் பதிலாளர்கள் என்பதை மனதில் நிறுத்தி, பணியாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

* கரம் பிடித்து வழிநடத்துபவரே! நாட்டை ஆளும் தலைவர்கள், தாங்கள் முதலாளிகள் அல்ல; மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொண்டு, நல்லாட்சி புரிந்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

* அனைத்தையும் படைத்தவரே! நீர் தந்திருக்கிற இந்த உலகிலே நாங்கள் அனைவரும் வாடகைவாசிகள் என்பதைக் கருத்தில் கொண்டு, இயற்கை வளங்களைச் சீராகப் பயன்படுத்திக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

* வரங்கள் பல பொழிபவரே! எங்கள் குடும்பங்களில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் இணைந்து அனுதினமும் செபமாலை செபிக்கும் பழக்கத்தை வளர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment