கிறிஸ்து பிறப்புப் பெருவிழா (இரவு திருப்பலி) (25-12-2023)
எசா 9: 2-4,6-7 தீத் 2: 11-14, லூக் 2: 1-14
திருப்பலி முன்னுரை
இன்று நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்புப் பெருவிழாவினைக் கொண்டாடுகின்றோம், அன்பின் விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். சுருங்கக் கூறினால், அன்பு இம்மண்ணுலகில் வடிவம் பெற்ற நாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம். ஆதாம், ஏவாள் செய்த பாவத்தினால் தந்தை கடவுளின் அன்பில் இருந்தும், அருளில் இருந்தும் பிரிக்கப்பட்டிருந்த நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினால் மீண்டும் அந்த அன்பில், அருளில் இணைக்கப்படுகின்றோம். நம்மீது கொண்ட அன்பிற்காகவே கடவுள் மனித உடல் ஏற்று, மேலிருந்துக் கீழ் இறங்கி வந்து நம்மோடு வாழ்ந்தார் என்றால், நம்மீது அவர் எத்துணை அளவு அன்பு கொண்டிருந்தார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மீது கொண்ட அன்பிற்காகவே இப்பெரிய காரியத்தைச் செய்த இறைவனின் அன்பில் இருந்து நாம் பிரிந்து இருப்பது சரியா? ‘ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்’ என்று கூறிய நமது அன்பு இறைவனின் கட்டளையை மீறி நடப்பது சரியா? இதோ, இந்தக் கிறிஸ்துமஸ் பெருவிழாவிலே, ஆண்டவரின் பிறப்பு விழாவிலே ஓர் உறுதி கொள்வோம்; நாம் இதுவரை வெறுத்த சக மனிதரை இன்றிலிருந்து அன்பு செய்வோம் என்று உறுதி கொள்வோம். இதுவே இந்தக் கிறிஸ்துப் பிறப்பு விழாவில் இறைவனுக்கு நாம் தரும் பரிசு என்று உணர்ந்தவர்களாய், இப்பெருவிழா திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
அடிமை வாழ்வில் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்கள், வாக்களிக்கப்பட்ட மெசியா பிறந்திருக்கிறார் என்ற செய்தியை அறிந்தவுடன் அகமகிழ்ந்து ஆர்ப்பரித்தார்கள் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நம் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் அருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைக் கொண்டு நற்செயல்கள் செய்து, அவரது மாட்சிமிகு வருகையில் அவரை அகமகிழ்வோடு சந்திப்போம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவி மடுப்போம்.
மன்றாட்டுகள்
● எங்கள் விண்ணகத் தந்தையே! உம் திரு மகனின் பிறப்பு விழாவிலே ஆர்ப்பரித்து அக மகிழும் உமது திரு அவை, அவர் கொண்டு வந்த அன்பினைத் தமது செயல்பாட்டால் இவ்வுலகில் விதைத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● எங்களை வழிநடத்துபவரே! உமது திருமகனின் பிறப்பு விழாவினால் மகிழ்ந்திருக்கும் இவ்வுலகம், இனி வரும் காலங்களில் வன்முறையினைத் தவிர்த்து அமைதி வழியில் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● அமைதியின் ஆண்டவரே! உம் திருமகனை எங்களுக்காக இவ்வுலகில் பிறக்கச் செய்தீர். அமைதியின் அரசராம் அவர் பிறந்த புண்ணிய பூமி வன்முறையின் இடமாக இருக்கும் நிலை மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
● பரிவுள்ள தந்தையே! உம் திருமகனின் பிறப்புப் பெருவிழாவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் எம் பங்குத் தந்தையையும், எங்களையும் நிறைவாக ஆசீர்வதித்து, இன்றுபோல என்றும் நாங்கள் ஒருமனதாய் மகிழ்ந்திருக்க வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
Comment