No icon

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு (03-03-2024)

விப 20:1-17 , 1கொரி 1:22-25, யோவா 2:13-25

ஞாயிறு திருப்பலி முன்னுரை

இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். கடவுளை வழிபட ஓர் ஆலயம் வேண்டும் என்ற எண்ணத்தோடு கட்டப்பட்ட எருசலேம் தேவாலயமானது, பின் நாள்களில் வியாபாரத்தலமாய் மாறியது. கடவுளின் கூடாரமாய் இருந்த ஆலயம் கள்வர்களின் கூடாரமாய் மாறியது. படைத்தவனுக்காகக் கட்டப்பட்ட ஆலயம் பணம் சம்பாதிக்கும் இடமாய் மாறியது. இவற்றையெல்லாம் கண்ட இயேசு அங்கிருந்தோரை வெளியே துரத்துகிறார். ஆண்டவரின் இல்லத்தில் இருந்து, ஆண்டவரே மக்களை வெளியே துரத்துகிறார். யாரை வெளியே துரத்துகிறார்? கடவுளைக் காண வந்தவர்களை அல்ல; மாறாக, காசைக் கடவுளாக மாற்ற முயன்றவர்களை ஆண்டவர் ஆலயத்தை விட்டு வெளியே துரத்துகிறார். கடவுளின் வார்த்தைக்குப் பதிலாக, அலகையின் வார்த்தையைக் கேட்ட ஆதாமும்-ஏவாளும், ஆண்டவரின் பிரசன்னத்தில் இருந்து வெளியே துரத்தப்பட்டார்கள். இன்று நாம் ஆலயத்திற்கு எதற்காக வருகின்றோம்? ஆண்டவரைக் காண, அவரை ஆராதிக்க வருகின்றோமா? அல்லது ஆண்டவருக்குரிய இடத்திலே மற்ற உலகக் காரியங்களை வைத்து வழிபட வருகின்றோமா? என்று சிந்தித்தவர்களாய் இத்தவக்காலத் திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை: ஆண்டவர் ஏழாம் நாளைப் புனிதப்படுத்தி, ஓய்வு நாளாக நமக்காகத் தந்திருக்கிறார். எனவே, அந்த ஓய்வு நாளை ஆண்டவருக்காக நாம் அர்ப்பணிக்க வேண்டும் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: சிலுவையை ஓர் அவமானத்தின் சின்னமாக, அவமதிப்பின் சின்னமாகப் பலரும் கருதினார்கள். ஆனால், அந்தச் சிலுவை வழியாகவே ஆண்டவர் இவ்வுலகிற்கு மீட்பைப் பெற்றுத் தந்தார் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

நிலை வாழ்வளிப்பவரே!  திரு அவை என்பது, இல்லறமும், துறவறமும் இணைந்திருக்கும் ஓர் ஆலயம் என்பதை உணர்ந்து, உம் திருப்பணியாளர்களும், உம் மக்களும் உமது விருப்பத்திற்கு ஏற்றவாறு வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அருள் வாழ்வை அளிப்பவரே! நீர் படைத்துப் புனிதப்படுத்தித் தந்திருக்கும் இவ்வுலகையும், அதன் இயற்கை மற்றும் கனிம வளங்களையும் உமது மக்கள் பொறுப்போடு பயன்படுத்துபவர்களாக மாற வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்களுக்காக என்றும் காத்திருப்பவரே! உம்மைக் காண்பதற்காக ஆலயத்திற்கு வரும் நாங்கள், உமக்கான நேரத்தை முழுமையாக உமக்கே தந்திடும் இறைச் சமூகமாய் உருப்பெற வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

புது வாழ்வளிப்பவரே!  தூய ஆவியின் ஆலயமாகிய எங்கள் உடலையும், உள்ளத்தையும் இத்தவக்காலத்திலே உண்மையான தவச்செயல்களால் புனித ஆலயங்களாக வடிவமைத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment