No icon

தவக்காலம் நான்காம் ஞாயிறு (10-03-2024)

2குறி 36: 14-16,19-23, எபே 2: 4-10, யோவான் 3: 14-21

திருப்பலி முன்னுரை

இன்று நாம் தவக்காலத்தின் நான்காவது ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். பாலைவனத்திலே இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகப் பேசுகிறார்கள். அப்போது ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பி இஸ்ரயேல் மக்களைத் தண்டிக்கிறார். தங்கள் தவறை உணர்ந்த மக்கள், பாம்புகளை அகற்றி விடும்படி மோசேவிடம் மன்றாடுகிறார்கள். அப்போது ஆண்டவரின் அறிவுரைப்படி மோசே ஒரு வெண்கலப் பாம்பை உருவாக்கி, அதை உயர்த்திப் பிடிக்க, அதைக் கண்ட யாவரும் நலம் அடைகிறார்கள். ‘என்னைத் தவிர உங்களுக்கு வேறு தெய்வங்கள் கிடையாதுஎன்று கூறிய கடவுள், எதற்காக வெண்கலப் பாம்பை உருவாக்கி உயர்த்திப் பிடிக்கச் சொல்கிறார் என்ற கேள்வி நமக்குள் எழலாம். பாம்பினால் தீண்டப்பட்ட மக்கள் இங்கு உயர்த்தப்பட்ட வெண்கலப் பாம்பைக் கண்டு வழிபடவில்லை; மாறாக, உயர்த்தப்பட்ட அந்தப் பாம்பைக் கண்டதும், ஆண்டவருக்கு எதிராக நாம் பாவம் செய்ததாலே இந்தப் பாம்பு நம்மைத் தீண்டியது என்று மனம் வருந்தித் திருந்துகிறார்கள். அதுபோல, ஆண்டவர் இயேசு சிலுவையில் உயர்த்தப்பட்டபோது, அங்கிருந்த இஸ்ரயேல் மக்கள்எங்கள் பாவங்களாலே நீர் சிலுவையில் உயர்த்தப்பட்டீர்என்று மாரடித்துப் புலம்பி அழுதார்கள். இன்று ஒவ்வொரு முறையும் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் நம் ஆண்டவரை நாம் காணும்போதெல்லாம், நாமும் மனம் வருந்தித் திருந்த வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய் இந்தத் தவக்கால ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

பிற இனத்து மன்னனாக இருந்தாலும், ஆண்டவரின் விருப்பப்படி வாழ்ந்து ஆட்சி செய்த பாரசீக மன்னன் சைரசை, எருசலேமில் திருக்கோவில் எழுப்புமாறு ஆண்டவர் தூண்டினார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் அனைவரும் கடவுளின் கைவேலைப்பாடுகள். நற்செயல்கள் புரிய வேண்டுமென்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்வோம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

எம்மைக் கரம்பிடித்து வழிநடத்துபவரே! பல்வேறு சவால்கள் மத்தியிலே பயணம் செய்து கொண்டிருக்கும் உமது திரு அவை, உம்மையும், உம் மக்களையும் இணைக்கின்ற அன்புப் பாலங்களாகத் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

நன்மைகள் புரியும் நல்ல தந்தையே! வருகிற தேர்தலிலே எங்களை ஓட்டுகளாகப் பார்க்காமல், மக்களாக மதித்து உமது இறையரசின் விழுமியங்களை முன்னிலைப்படுத்தும் தலைவர்களை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் அனைவரையும் அன்பு செய்பவரே! எங்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்காக உம்மை இகழ்ந்து பேசாமல், உம்மை எப்போதும் ஆராதிக்கக் கூடிய மக்களாக நாங்கள் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அனைத்துலகோரின் கடவுளே! நீர் படைத்திருக்கும் பெண் சமுதாயத்தின் மாண்புகள் மதிக்கப்படவும், நீரே இவர்களுக்கு அரணும், கோட்டையுமாய் இருந்து காத்து வழிநடத்திடவும்  வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment