(இரண்டாம் ஆண்டு) எசா 50: 4-7; பிலி 2: 6-11; மாற்கு 14: 1-15:47
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு (24-03-2024)
திருப்பலி முன்னுரை
இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இந்த வாரத்தைப் ‘புனித வாரம்’ என்று அழைக்கின்றோம். ஏனெனில், ஆண்டவர் இயேசு இறைத்தந்தையின் விருப்பப்படி, மீட்புத் திட்டத்தைச் சிலுவையில் தம்மைப் பலியாகக் கையளிப்பதன் வழியாக நிறைவேற்றுகிறார். ஆதாமின் வழியாக இவ்வுலகில் நுழைந்த சாவை எதிர்கொள்ளவும், தமக்கு எதிராக யூதத் தலைவர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் வகுத்திருக்கும் நயவஞ்சகத்தை எதிர்கொள்ளவும், தம்முடன் இருக்கும் யூதாசின் நம்பிக்கைத் துரோகத்தை எதிர்கொள்ளவும், யூத மக்களின் நன்றி கெட்டத்தனத்தை எதிர்கொள்ளவும், உரோமை வீரர்கள் தமக்கு ஏற்படுத்தப் போகும் அவமானங்களை எதிர்கொள்ளவும் ஆண்டவர் இயேசு, மக்கள் ஆர்ப்பரிக்கக் கோவேறு கழுதை மேல் கம்பீரமாய் எருசலேமிற்குள் நுழைகிறார். ஆண்டவரோடு இந்தப் பவனியில் பங்கு கொண்ட பலர், அவரது சிலுவைப் பயணத்தில் அவரை விட்டு ஓடிப் போயினர். இதோ இன்று இந்தக் குருத்து ஞாயிறு பவனியில் பங்கு கொள்ளும் நாம், அந்த மக்களைப் போலவே இயேசுவைத் தனியாக விட்டு விட்டு ஓடப் போகின்றோமா? அல்லது இறுதி வரை அவரோடு தொடர்ந்து பயணிக்கப் போகின்றோமா? என்று சிந்தித்தவர்களாய் இந்த ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவருக்காக வாழும்போது, அதன் பொருட்டு எத்தனை இன்னல்கள், அவமானங்கள், இழிநிலைகள் வந்தாலும் நாம் கவலைப்படக் கூடாது. ஏனெனில், ஆண்டவர் நமக்குத் துணையாய் இருக்கிறார் என்று கூறும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
தந்தை கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற, தமது கடவுள் நிலையில் இருந்து இறங்கி, அடிமை நிலையை நமக்காக ஆண்டவர் இயேசு ஏற்றார் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
● வாழ்வை வழங்கும் வள்ளலே! உமது திரு அவையின் திருப்பணியாளர்கள், உம் திருமகன் இயேசுவைப் போல உமக்காக மரணத்தைக் கூட எதிர்த்து நிற்கும் பணியாளர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● வரம் கோடி தருபவரே! மொழி, மதம், இனம் இவற்றை முன்னிறுத்தி மக்களை ஆளும் தலைவர்களை அல்ல; மாறாக, அன்பு, நீதி, சமாதானத்தின் வழி ஆட்சி புரியும் தலைவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● கருணைக் கடவுளே! உம் திருமகன் இயேசுவின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு வழிபாட்டில் இருக்கும் நாங்கள், அவரைப் போலவே உமக்காக எதையும் தியாகம் செய்யக்கூடிய மக்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● அன்பால் இவ்வுலகை ஆள்பவரே! புனித வாரத்தைத் தொடங்கி இருக்கும் நாங்கள், இவ்வாரத்திலே இன்னும் அதிகமாய் உம் திருமகன் இயேசுவின் பாடுகளைத் தியானித்து உமதருளைப் பெற்றிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
Comment