மூவொரு கடவுள் பெருவிழா
இச 4:32-34,39-40, உரோ 8: 14-17, மத் 28: 16-20
திருப்பலி முன்னுரை
இன்று நாம் மூவொரு கடவுளின் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கிறோம். ‘கிறிஸ்து தந்தை கடவுளால் உண்டாக்கப்பட்டவர்; எனவே அவர் தந்தை கடவுளுக்கு இணையானவர் அல்லர்; மேலும், அவர் முழுமையான கடவுள் தன்மையும் கொண்டவர் அல்லர்’ என்றெழுந்த தப்பறைக் கொள்கையை வேரறுக்க உண்டானதுதான் இந்த மூவொரு கடவுளின் பெருவிழா! தொடக்கக் காலங்களில் இவ்விழா பரவலாகக் கொண்டாடப்படவில்லை என்றாலும், 14-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை 22-ஆம் யோவான், மேற்கத்திய கத்தோலிக்கத் திரு அவை முழுவதும் இவ்விழாவினை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். அதன்படி ஒவ்வொரு வருடமும் தூய ஆவியார் பெருவிழாவிற்குப் பிறகு, மூவொரு கடவுள் பெருவிழாவானது கொண்டாடப்படுகிறது. கடவுள் ஒருவர்தாம்; ஆனால், அவர் ஆள்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவியார் என மூவராக இருக்கிறார். இவ்வாறு மூவராக இருந்தாலும், இம்மூவரும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே இறைத்தன்மையைக் கொண்டிருப்பதால் ‘மூவொரு கடவுள்’ என்றழைக்கிறோம். தந்தை கடவுள் படைத்துப் பராமரிப்பவராகவும், இறைமகன் இயேசு பாவங்களிலிருந்து மீட்கும் மீட்பராகவும், தூய ஆவியார் அனைத்தையும் அர்ச்சித்துப் புனிதப்படுத்துபவராகவும் செயல்படுகிறார். இம்மூவொரு கடவுளைப் பெற்றிருக்கும் நாம் மொழி, இன பாகுபாடுகளைக் களைந்து, ஒரே கடவுளின், ஒரே திரு அவையின், ஒரே பங்கின் இறைமக்களாக வாழ்வோம் என்ற எண்ணத்தோடு இப்பெருவிழா திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
விண்ணுலகிலும், மண்ணுலகிலும் இவரே ஆண்டவர்; இவரைப் போன்ற கடவுள் வேறொருவரும் இல்லை. அடிமை நிலையில் இருந்த நம்மை அவரது மக்களாக மாற்றிக்கொண்டார். எனவே, அவரது கட்டளைகளைக் கடைப் பிடிப்போம் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நாம் அனைவரும் கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறோம். இதனால் கடவுளின் மக்களாக மாறி, அவரை ‘அப்பா தந்தையே’ என்றழைத்து, ஆண்டவர் இயேசுவின் பங்காளிகளாகும் உரிமையைப் பெறுகிறோம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
• விண்ணையும், மண்ணையும் படைத்தவரே! மூவொரு கடவுளாகிய உமது விழாவினைக் கொண்டாடும் உமது திரு அவையும், திருப்பணியாளர்களும் உம்மைப் போலவே ஒற்றுமையோடு செயல்பட்டு, உமது மக்களை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
• ஞானமே உருவானவரே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் பதவிகளையும், பட்டங்களையும், செல்வங்களையும் எதிர்பார்த்து ஆளாமல், உம்மிடமிருந்து விலைமதிக்க முடியாத ஞானத்தைப் பெற்று நல்லாட்சி புரிய வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
• எல்லாம் வல்லவரே! எங்கள் பங்குத் தந்தையையும், பங்கு மக்களையும், குடும்பங்களையும் ஆசிர்வதித்து, எங்களுக்காக நீர் வகுத்திருக்கிற திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு நாங்கள் வாழ்ந்திட தூய ஆவியார் துணைபுரிய வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
• இரக்கமுள்ளவரே! இந்த மாயை உலகில், எங்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு, உம்மை விட்டு விலகி விடாமல், உம்மையே பற்றிக் கொண்டிருக்க, எங்கள் நம்பிக்கையை நீர் ஆழப்படுத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
Comment