No icon

பொதுக்காலத்தின் 15-ஆம் ஞாயிறு (14-07-2024)

ஆமோஸ் 7:12-15; எபேசியர் 1:3-14; மாற்கு 6:7-13

திருப்பலி முன்னுரை

பொதுக்காலத்தின் 15-ஆம் ஞாயிறு திருவழிபாட்டிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம். உலக மக்களோடு இணைந்து, உலக இளைஞர் திறன் தினத்தைக் கொண்டாடுகின்றோம். ‘உலக இளைஞர் திறன் தினம்என்பது ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட நாள் ஆகும். இந்தத் தினம் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களை வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் ஆகியவற்றிற்கான அத்தியாவசியத் திறன்களுடன் சித்தப்படுத்துவதன் முக்கியத்துவத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ‘ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி; உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சிஎன்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் வரிகளுக்கு ஏற்ப இளைஞர்கள் உடலிலும், உள்ளத்திலும் வளர்ச்சி காண வேண்டும். திறமையற்ற ஆளுமை தேவையற்றதாகப் பார்க்கப்படுக்கின்றது. இன்றைய நற்செய்தியிலும் இறைவார்த்தையை மக்களுக்கு அறிவிக்கப் பொருள்கள் முக்கியமா? அல்லது இறைப் பராமரிப்பு முக்கியமா? என்ற கேள்விக்கு, இறைப் பராமரிப்பே முக்கியம் என்பதை நற்செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார். செயற்கை நுண்ணறிவுத் திறனின் வளர்ச்சியால் தொழில்நுட்பத் திறன் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. முடிவு எடுக்கும் மனிதனின் திறன் குறைக்கப்படுகிறது. நாம் என்ன வாங்க வேண்டும்? என்ன பார்க்க வேண்டும்? என்பதை அலைபேசியின் செயலி (App) முடிவெடுக்கிறது. இறைவன் நமக்குக் கொடுத்துள்ள திறனை வைத்து, நற்செய்தியைப் பறைசாற்ற நம்மைக் கடவுள் அழைக்கிறார். இத்தகைய வரம் வேண்டி இந்தத் திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

தென் அரசில் பிறந்தவராயினும் வட அரசில் மிக முக்கியமான இறைவாக்குப் பணியை ஆற்றியவர் இறைவாக்கினர் ஆமோஸ். ‘ஒரு நாடு அந்நியரின் கைகளில் அகப்பட்டால் மனைவிகள் விலைமகளாக இருப்பார்கள்; புதல்வர்-புதல்வியர் வாளால் வீழ்த்தப்படுவார்கள்; நிலம் பங்கு போடப்படும்; இஸ்ரயேல் அடிமையாக இருப்பார்கள்என்று ஆமோஸ் இறைவாக்குரைத்தார். அதனைக் குருவாகிய அமட்சியா ஏற்கவில்லை. இறைவாக்கினருக்கு எதிராகப் பேசிய பேச்சு முதல் வாசகமாக அமைந்துள்ளது. எனவே, வாசகத்திற்குச் செவிமடுப்போம்.                

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில் கிறிஸ்துவும், திரு அவையும், அதோடு மீட்பின் திட்டத்தில் இவர்களின் பங்கு முக்கியம் என்பனவற்றைப் பவுல் தெளிவுபடுத்துகிறார். கடவுள் ஏன் திரு அவையைத் தேர்ந்தெடுத்தார் என்பது சொல்லப்படுகிறது. திரு அவை தூயதாகவும், மாசற்றதாகவும் தம்முன் விளங்கவே, கடவுள் திரு அவையைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.     எப்படி இஸ்ரயேல் மக்கள் கடவுளால் வெகு காலத்திற்கு முன்பே தெரிவு செய்யப்பட்டார்களோ அதனைப் போலவே, கிறிஸ்தவர்களின் தெரிவும் நடைபெற்றிருக்கிறது என்பதைப் பதிவு செய்யும் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. தந்தையாம் இறைவா! உம் மகனாகிய இயேசுவை இளம் வயதில் இறைப்பணியாற்றிட அருள்புரிந்தீரே, எம் சமூகத்தில் வாழும் இளைஞர்கள் தங்கள் திறன்களை வளர்த்து, இறையாட்சியை வளர்க்கக் கூடிய ஆற்றலைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. அழகான உலகைத் தந்த இறைவா! இயற்கையில் இறைவன் இருக்கின்றார் என்று இயற்கையைப் பாதுகாக்கும் குழுக்களுக்காக மன்றாடுகின்றோம். இயற்கையைப் பாதுகாக்க அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

3. நன்மையான தெய்வமே இறைவா! மருத்துவ மனையில் இருக்கும் நோயாளிகளைப் பராமரிக்கும் நபர்களுக்காக மன்றாடுகின்றோம். தன்னலம் துறந்து, அடுத்தவர்கள் நலம்பெற வேண்டும் என்று உழைக்கும் அம்மக்களுக்கு ஆரோக்கியமான மனநிலையையும், உடல்நலனையும் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. தாயும்-தந்தையுமான இறைவா! எம் பங்கு மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழவும்தங்களிடம் உள்ளதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள தேவையான மனநிலையைத் தர வேண்டுமென்றும் இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment