No icon

பொதுக்காலம் 16 - ஆம் ஞாயிறு (21-07-2024)

எரேமியா 23:1-6; எபேசியர் 2:13-18; மாற்கு 6:30-34

திருப்பலி முன்னுரை

அன்பையும், பண்பையும், பரிவையும் கொண்டு வாழ ஆற்றல் தரும் தெய்வீகத் திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். பொதுக்காலத்தின் 16-ஆம் ஞாயிறு திருவழிபாட்டு வாசகங்கள் ஒற்றுமையையும், பரிவையும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. “மனித வாழ்க்கையின் நோக்கம் சேவை செய்வதும், இரக்கத்தையும், மற்றவர்களுக்கு உதவுவதற்கான விருப்பத்தையும் காட்டுவதாகும்" என்கிறார் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற ஆல்பர்ட். பரிவு என்பது இறைவனின் முகமாக இருக்கிறது. இயேசுவின் நற்செய்தி வாழ்வில், பல துன்பப்படும் மக்களுக்குப் பரிவு காட்டினார்; குறிப்பாக, தம்மை நாடி வரும் மக்கள் மீது பரிவு கொண்டு அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். பாலைவனத்தில் பசியோடு இருந்த மக்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்கு உணவளித்தார். தீய ஆவியால் ஆட்கொண்ட நபர் மீது பரிவு கொண்டு, தீய ஆவியை ஓட்டினார். நயீன் ஊர்க் கைம்பெண் மீது பரிவு கொண்டு இறந்த அவரின் மகனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். இவ்வாறு பரிவு என்பது அவருடைய இயல்பாக இருந்தது. “பரிவு என்பது நம்முடைய வலியைக் கடந்து, அடுத்தவர்களின் வலியை உணர்வதுதான்என்கிறார் அமெரிக்கக் கல்வியாளர் யாஸ்மின். துன்பம் என்பது நம்முடைய வாழ்வின் அங்கம். நம்முடைய துன்பத்தைப் பெரிதாகக் கருதினால் அடுத்தவர்களின் துன்பத்தைப் போக்க நமக்கு வழி பிறக்காது. எனவே, துன்பத்தில் இருப்பவர்களின் துணையாகவும், பரிவு காட்டும் பண்பான வாழ்வை வாழ அருள் தரவும் வேண்டுமென்று இந்தத் தெய்வீகத் திருப்பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் எரேமியா மென்மையான மனத்தைக் கொண்டாலும், இறைவாக்கு உரைக்கும் போது கடுமையான இயல்பைக் கொண்டிருப்பார். இன்றைய முதல் வாசகத்தின் முதல் பகுதி கடுமையான எச்சரிக்கும் வார்த்தைகளால் அமைந்துள்ளது. “மந்தையை மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடுஎன்று அமைந்திருக்கும். இரண்டாவது பகுதியில்நீதியுள்ள தளிர் தோன்றும், நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டுவேன்என்ற ஆறுதலான, நம்பிக்கைத் தரும் செய்தி அமைந்திருக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திரு அவை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதை எபேசியர் திருமுகம் சிறப்பாக எடுத்துரைக்கிறது. புனித பவுல் வாழ்ந்த யூதர்களிலும், பிற இனத்து மக்களிலும் பிரிவுகள் இருந்தன. அதனை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் பவுல். இயேசுவின் இரத்தத்தின் முலம் அனைவரும் அவரோடு இணைக்கப்பட்டிருக்கின்றோம். சிலுவையின் துன்பத்தின் வழியாக ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். இரு இனத்தவரும் தந்தையை அணுகப் பேறுபெற்றிருக்கிறோம் என்று ஒற்றுமையான வாழ்வுக்கு அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. இறைவா! உலக மக்கள் அனைவருக்கும் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கும் நற்செய்தியாளர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் தங்களின் வாழ்வாலும், வார்த்தையாலும் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குத் தேவையான ஆற்றலையும், அறிவையும் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. இருளைப் போக்கி ஒளியைத் தரும் எம் இறைவா! தங்களின் அன்றாடத் தேவைக்காக, கடனை வாங்கி, திருப்பித் தர முடியாமல் துன்புறும் மக்களுக்காக மன்றாடுகிறோம். அவர்களுக்கு உழைக்கும் மனத்தையும், சேமிக்கும் பண்பையும் வளர்த்து, கடன் பிரச்சினையில்லாமல் நிம்மதியாக வாழ வரம் வேண்டி ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

3. பரிவைக் காட்டும் பண்பான ஆண்டவரே! அன்றாடம் தங்கள் குடும்பத்தின் தேவைக்காக பாடுபட்டு உழைக்கும் நபர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்களுக்கு உழைக்க நல்ல ஆரோக்கியமான மனநிலையும், உடல் நிலையும் தந்து, ஓய்வின்றி உழைக்கும் அவர்களுக்கு நல்ல ஓய்வைத் தந்து, இன்னும் உற்சாகமாக உழைக்க அருள் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. தாயும் தந்தையுமான இறைவா! குடும்பங்களில் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளோடு சண்டையிட்டுப் பிரிந்திருக்கும் நபர்களுக்காக மன்றாடுகிறோம். இயேசுவின் இரத்தத்தின் மூலம், பிரிந்தவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். அதுபோல, பிரிந்திருக்கும் உடன் பிறப்புகள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வழிசெய்ய வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment