அருள்சகோதரி முனைவர் இரா. பாத்திமாமேரி சில்வியா, கல்லூரி நூலகர்
ஜெயராஜ் செல்லத்துரை நூலகம்
“ஒரு நல்ல புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்குச் சமம்” என்பதற்கு ஏற்ப, தன்னை தலைகுனிந்து படிக்கும் அனைவரையும் தலை நிமிர்ந்து நடக்கவைக்கும் புத்தகங்களின் கோவிலாய், அறிவுச் சுரங்கமாய் ஜெ.அ. கல்லூரி வளாகத்தில் திகழ்வது, ‘ஜெயராஜ் செல்லத்துரை நூலகமாகும்’.
இந்நூலகமானது 1971 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 20,303 சதுரஅடி பரப்பளவு கொண்ட இரண்டு கட்டிடங்களில் அமைதியான சூழலிலும், காற்று மற்றும் ஒளியூட்டமிக்க வகையிலும், புத்தகங்கள் இருக்கும் இடங்களின் அருகாமையிலேயேஅமர்ந்து படிப்பதற்குத் தகுந்தாற்போல் இருக்கை வசதிகளுடனும் இந்நூலகம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் ஆண்டுதோறும் புத்தகங்கள், செய்தி ஏடுகள், பத்திரிகைகள், குறுந்தகடுகள், ஆய்வேடுகள், வலைதள புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வாங்கப்பட்டு, சுமார் 150 பொது அறிவு மற்றும் துறைசார் பத்திரிகைகள் துறைவாரியாக அடுக்கி வைக்கப்பட்டு, படித்துப் பயன் பெறுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்நூலகமானது “வாசிப்பின் வழி நடந்திட” என்ற பொது நோக்கத்துடனும், துறைசார் அறிவை மேம்படுத்துதல், உலகளாவிய பொதுஅறிவை விரிவுபடுத்துதல், அன்றாட தகவல்கள், நிகழ்வுகளை அறியச் செய்தல், வேலைவாய்ப்பிற்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவற்கான வழிகாட்டியாக செயல்படுதல், தகவல் தொடர்புசார் திறன்களை வளர்ப்பதற்கு உதவும் தகவல்களை அளித்தல், ஆளுமைப் பண்புகளை மேம்படுவதற்கு உதவும் தகவல்களை சேகரித்து வழங்குதல் போன்ற சிறப்பு நோக்கங்களுடனும் செயல்பட்டு வருகிறது.
இணைய வசதியுடன் குடிநீர், கழிவறை வசதிகளும், நகல் எடுக்கும் இயந்திரமும் இந்நூலகத்தில் உள்ளன. மேலும், நூலகம் முழுவதும் கண்காணிப்பு ஒளிப்படக் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்நூலகத்தில் 51,517 புத்தகங்களும், 151 பத்திரிகைகளும், 505 குறுந்தகடுகளும், 238 ஆய்வேடுகளும், 31,35,000 வலைத்தள புத்தகங்களும் 6000 வலைத்தள பத்திரிகைகளும் உள்ளன.
நூலகத்தைப் பற்றிய புத்தாக்கப் பயிற்சி, புதிதாக வாங்கிய புத்தகங்களின் கண்காட்சி மற்றும் புத்தக விற்பனையாளர்களின் கண்காட்சியும், ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் ஆய்வேடுகள், பருவத்தேர்வுகளின் வினாத்தாள்களின் தொகுப்பும் மாணவியரின் பயன்பாட்டிற்காக வைக்கப் பட்டுள்ளன. நூலக அறிவியல் சான்றிதழ் படிப்பானது மாணவிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
மேலும், கல்லூரியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 100 மாணவிகள் தங்கள் பாடப் புத்தகங்களைத் துறைத்தலைவர் மற்றும் கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் ஆறு மாதத்திற்குப் பயன்படுத்தும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
Comment