No icon

குறுந்தொடர்

வீரமாமுனிவரின் சிற்றிலக்கியங்களில் ‘மரியா’

‘தமிழ்’ என்ற சொல்லுக்கு ‘இலக்கியம்’ என்ற பொருள் வழங்கிவருகிறது. ‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்றும் ‘நல்லத் தமிழ்’ என்றும் கூறும் போது, இலக்கியம் என்ற பொருள் கொள்கிறோம். அதிகம் சொல்வானேன்?

‘முத்தமிழ்’ என்றால் படைப்பு இலக்கியமான இயலையும், பாடல் இலக்கியமான இசையையும், ஆடல் இலக்கியமான நாடகத்தையும் உணர்த்துகிறது. அதோடு தமிழ் என்று சொல்லும் போது, தனியான அந்தச் சொல், தமிழிலக்கியத்தையே குறிப்பதாக அமைந்திருக்கிறது. ‘சங்கத்தமிழ்’ என்றால் ‘சங்க இலக்கியம்’ என்றே பொருள் அல்லவா!

இந்த மரபை ஒட்டியே திருமூலரும்,

‘என்னைநன் றாக இறைவன் படைத்தனன்

தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே’

என்று பாடுகிறார்.

இலக்கியம் அழியாத்தன்மை பெற்றவை. மக்கள் உள்ளவரை, பேசும் மொழி உள்ளவரை நிலைத்து நின்று மக்கள் வாழ்க்கையை நெறிபடுத்தி, நன்மை, தீமைகளை பகுத்துரை செய்து வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவை இலக்கியங்களே.

 பழங்கால மக்களின் வாழ்க்கைமுறையை படம் பிடித்துக் காட்டும் ‘ஆடி’ (கண்ணாடி) இலக்கியம். அக்கால மக்களின் உணர்வுகளையும், ஒழுக்கத்தையும், பண்பாடுகளையும் நாம் வியக்கும் வண்ணமாக எடுத்து ஓதுவது இலக்கியம்.

அக்காலக் கற்பனை வளம், சொல் அமைப்பு, யாப்பு, அணிகளின் சிறப்பு அமைந்து நலம்படக் கற்பவர் மனதைக் கவர்ந்து இன்பக்கடலில் திளைக்கச் செய்வது இலக்கியம்.

தமிழ் மண்ணில் நற்செய்தி பரப்ப வந்த அடியார்கள் அன்னை மரியாவை தமிழால் அணிசெய்து அழகூட்டினர். அப்படிச் செய்தவர்களில் ஒருவர் தான், இயேசு சபை குரு தன்னையே தமிழில் அழைத்துக்கொண்ட தைரியநாதர் என தமிழ் அறிஞர்களால் அன்போடு அழைக்கப்பட்ட வீரமாமுனிவர்.

அவரின் சிற்றிலக்கியங்களில் மரியாவை எப்படி நம் கண்முன் வைக்கின்றார் என்று தெளிவோம்.

சிற்றிலக்கியங்களது வரலாறு (பிரபந்தங்கள்)

தமிழ்ப் பெருங்காப்பியங்கள் ஐந்து, சிறுகாப்பியங்கள் ஐந்து. தமிழ் அறிஞர்கள் காப்பியங்களுக்கு உரை எழுதியுள்ளனர். இதன்மூலம் தமிழுக்கு அழகு சேர்த்தனர். பதவுரை, கருத்துரை, விளக்கவுரை, விரிவுரை, ஒப்புரை எனப் பலவற்றால் வளப்படுத்தினர். காப்பியப் படைப்புக் காலம் தமிழின் பொற்காலம் எனலாம்.

1310 முதல் 1750 வரை தமிழர்கள் அல்லாத மன்னர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தனர். 14 ஆம் நூற்றாண்டில், முஸ்லீம் மன்னர்கள் ஊடுருவி, தங்களது அரசை நிறுவினர். மதுரையில் விஜயநகர மன்னராட்சி நடைபெற்றது.

16 ஆம் நூற்றாண்டு வரையில் நாயக்க மன்னர்கள் ஆண்டனர். தெலுங்கு மொழி அப்போது முதன்மையிடம் பெற்றது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்கர் ஆட்சி முடிவு பெற்றது. தமிழகத்தை மராட்டிய மன்னர்கள் ஆண்டனர்.

காப்பிய இலக்கியம் படைத்தவர்கள் காலத்தில் அறிஞர்கள் பலர் இலக்கண நூல்களை ஆக்கினர். சமணர்கள் கொல்லாமை, எவ்வுயிர்க்கும் இன்னா செய்யாமையை அறமாக அறிவுறுத்தினர். ‘அன்பே சிவம்’ என்று அனைத்துயிர்களையும் அன்பால் அரவணைக்குமாறு சைவ சமயம் திகழ்ந்தது.

தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கிய வனப்புகள் எட்டு. அவற்றுள் “விருந்து” ஒருவகை. புதிய இலக்கியங்களைப் புதிய யாப்பிலக்கண வடிவத்தில் படைத்தலை அது குறித்தது.

கி.பி. 11 முதல் 1750 வரை நாயக்கர் ஆட்சிக் காலம்வரை பரணி, உலா, கலம்பகம், அம்மானை முதலிய சிற்றிலக்கியங்கள் படைக்கப்பெற்ற சிற்றிலக்கிய காலம் என்பர். செம்மையாகக் கட்டப்பெற்றது என்னும் பொருளில் புலவர் பெருமக்கள் “பிரபந்தம்” என்றே முதலில் பெயர் சூட்டினர்.

கி.பி. 12 இல் முதன் முதல் சிற்றிலக்கியம் என்பதற்கு இலக்கணம் வகுத்த நூல் ‘பன்னிரு பாட்டிய’லாகும்.

வைணவ சமய ஆழ்வார்களது பாசுரங்கள் நாலாயிரத் “திவ்வியப் பிரபந்தம்” எனப் பெயர் பெற்றன. சிவனடியார்கள் பாடிய 11 இலக்கியப் பாமாலையைத் தொகுத்தவை “பிரபந்த மாலை” எனப்பெயர் பெற்றன. சிற்றிலக்கியங்கள் 96 என்று கூறும் மரபு ஏற்பட்டது.

திவ்வியப் பிரபந்த உரைகள் மணியும் பவளமும் கலந்ததுபோல் எண்ணற்ற வடசொற்களைக் கலந்து எழுதிய ‘மணிப்பிரவாள நடை’ என்கிற உரை விளக்கப் போக்கும் இருந்தது.

சிற்றிலக்கிய வடிவ அடிப்படையில் கி.பி. 5 இல் ‘அந்தாதி’, கி.பி. 8 இல் கோவை, கி.பி. 9 இல் ‘சதகம்’, கி.பி. 12 இல் ‘பரணி’, ‘பிள்ளைத்தமிழ்’, கி.பி.14 இல் ‘தூது’ முதலிய சிற்றிலக்கியங்களது வகைகள் வளர்ச்சி பெற்றன. வடிவ அடிப்படையிலும், எண்ணிக்கை அடிப்படையிலும் இவை பெயர் சூட்டப் பெற்றன.

“பிரபந்தங்கள்” என்னும் சொல்விளக்கம் பற்றி ஆராய்வதில் இவ்வாய்வாளர் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். குறிப்பிட்ட பொருளைப் பற்றித் கருத்தாடல், தொடர்புபடுத்திய வருணனை, ஆக்க அமைவு, வெவ்வேறான கலவைகளது கதை எடுத்துரைத்தல் எனப் பல பொருள்கள் உண்டு. எனினும், தமிழ் இலக்கிய உலகில் பிரபந்தங்கள் 96 என்பன எவையென்று ஆராய்ந்து, கண்டுபிடித்து தமிழின் முதல் அகராதியியல் ஆக்கம் செய்த பெஸ்கி அடிகளார் (வீரமாமுனிவர்) தாம் அவற்றின் முழுப்பட்டியல் விவரங்களையும் பதிவு செய்த முதல்வர்.

சிற்றிலக்கியப் பாடல்களது இலக்கண இயல்புகளை வகுத்தது. “பாட்டியல்” பனுவல். அது முப்பத்தாறு வகை மைச் சிற்றிலக்கிய  வகைகளது இலக்கணம் வகுத்தது பெஸ்கி அடிகளார். மேலும், 36 சிற்றிலக்கிய வடிவங்களது பெயர்களையும் ஆராய்ந்து, தொகுத்து, 96 என்றும் எண்ணிக்கையை கி.பி. 18 இல் முதலில் வரிசைப்படுத்தினார். ஆனால், அவரே ஐந்திலக்கண விதிகளாக எழுதிய

தொன்னூல் “ஐந்திலக்கணம் என்னும் விளக்கம்” குறிப்பிடும் எண்ணிக்கைத் தொகையிலிருந்து வேறுபடுகிறது.

கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் சிற்றிலக்கியப் புதிய செல் நெறிகள் சில உண்டு (Trends). அவை பள்ளு, குறவஞ்சி போன்ற ஆக்கப் படைப்புகள். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, விருந்து என்னும் புதுவகைச் சிற்றிலக்கியங்கள் பிள்ளைத் தமிழ், உலா, கோவை, கலம்பகம், குறவஞ்சி, அந்தாதி, ஆற்றுப்படை, தூது முதலியன. இவ்வாறான பாட்டிலக்கிய வகைமைகளில் கவிஞர்கள் பலரும் சிற்றிலக்கியங்கள் படைத்தனர்.

கலம்பகம்’  ஒரு சிற்றிலக்கிய வகை

ஒரு தெய்வத்தையோ அல்லது மன்னனையோ பாட்டுடைத் தலைவராக முன்னிறுத்திப் பாடுவது, அதற்குப் பலவகை யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தி, உருவாக்குவது என்பதே கலம்பக இலக்கணம். பல வண்ண மலர்களைக் கோர்த்து, மாலையாகக் கட்டுவதே மாலையாகிறது. பதினெட்டு வேறு கலம்பக உறுப்புக்களால் பின்னப்பட்ட பல்வேறு சூழ்நிலைகளைச் சித்திரிப்பதே கலம்பகம்.

‘கலம்’ என்றால் பன்னிரெண்டு, ‘பகம்’ என்றால் பாதி.  அதாவது ஆறு 12+6=18.

இவற்றின் மொத்தப் பாடல் எண்ணிக்கையை வரையறுப்பதில் பாட்டியல் பனுவல்கள் வேறுபடுகின்றன.

14 உறுப்புக்களுடையது கலம்பகம் எனப் பன்னிரு பாட்டியல்

18 உறுப்புக்களுடையது கலம்பகம் என்கிறது சிதம்பரப் பாட்டியல்

வெண்பா பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல், பிரபந்த தீபிகை ஆகிய சிற்றிலக்கியத்துக்கான இலக்கண நூல்கள்.

பெரும்பாணாற்றுப்படை என்னும் பத்துப்பாட்டுச் சங்க நூலுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், “பல்பூ மிடைந்த படலைக் கண்ணி” என வரும் சொற்றொடருக்கு, “பல பூக்கள் நெருங்கி கலம்பகமாகின்றன” என்று, விளக்கவுரையில் குறிப்பிடுகிறார்.

கலம்பக இலக்கியம் ஐந்து வகைப் பாக்களால் பாடப்பெறும். அவை தோல், வகுப்பு, அகம், புறம், வேறுபடும் தொடை ஆகியன. அணிகள், உவமை, உருவகம் ஆகியவற்றை உள்ளடக்கத்தின் இடங்களது தேவைக்கேற்ப கையாண்டு அழகு படுத்துவர்.

பாட்டியல் இலக்கணத்தின்படி பாட்டுடைத் தலைவர் யார்? என்பதைப் பொறுத்து எண்ணிக்கைகள் புலவரால் தீர்மானிக்கப்படவேண்டும். அறிஞர், அரசர்க்குத் தனியே 90, அமைச்சர்க்கு 70, வணிகர்க்கு 50, வேளாளர்க்கு 30 எனத் தரவரிசைப்படி பாடப்பெறும். உ.வே. சாமிநாதர் கருத்துப்படி அறிஞர்க்கு 90, அரசர்க்கு 70, வணிகர்க்கு 50, வேளாளர்க்கு 30 எனப் பாட வேண்டும் என்றார். நவநீதப் பாட்டியலின்படி அமைச்சர்க்கு 60, வணிகர்க்கு 60 என எண்ணிக்கை அமைத்தல் வேண்டும்.

வெண்பா பாட்டியல் கலம்பக உறுப்புகள் 18 பிரிவுகள் இடம்பெற வேண்டும் என்கிறது. அவை வருமாறு:

1. புயம்-புயவகுப்பு: கலம்பகத் தலைவரது தோள் வலிமையைப் புகழ்வது.

2. அம்மானை : மூன்று பெண்கள் அமர்ந்து பாட்டுடைத்தலைவர் சிறப்பை விவாதிப்பது.

3. ஊசல் : ஊஞ்சல் ஆடும் விளையாட்டுப் பாடல் இயேசுவை ஊஞ்சலாட அழைப்புவிடுப்பது.

4. தவம் : கடுந்தவப் பயனை, அன்னையை நாடினால் எளிதில் பெறலாம்.

5.காலம்: அன்னை திருவடிகளுக்குப் பணிவிடைசெய்ய ஏற்ற காலம் இளவேனில்.

6. இடைச்சி : பாலில் தண்ணீர் கலந்தால் திருக்காவலூரில் கலப்படம் வெளிப்படும்.

7. மறம் : அன்னை மரியா பெண்மான் வயிற்றில் சிங்க இயேசுவை கருத்தாங்கினவள் இருக்கும் இடம் திருக்காவலூர், மறவர் வாழிடம்.

8. கைக்கிளை : ஒருதலைக் காமநோயுற்றவன் திருக்காவலூர் வந்து நோய் நீங்குதல்.

9. வண்டு : அடைக்கல அன்னை பூங்கொடியில் மலர்ந்த மலர்த்தேன் உண்ணும் வண்டுகள்.

10. குறம் : தலைவிக்கு அன்னை அருள் கிட்டும் என்று குறத்தி குறி கூறுகிறாள்.

11. இரங்கல் : வினைக்கடலில் துன்புறும் ஆன்மாவாகிய தலைவி ஆசை இருள் கடக்கும் துறை காவலூர்.

12. தழை : அன்னை மரியா பொன்தழை ஆடையாகக் கதிரவனை அணிந்தவள்.

13.சமூக உல்லாசம் : மக்களது மனக்களிப்பு - காவலூர் விழாக் கொண்டாட்ட மகிழ்ச்சி வருணனை.

14. சித்து : இரசவாதச் சித்து வேலைக் காரணம் திருக்காவலூர் தாய் மரியே.

15. சம்பிரதம் : அன்னை அருளால் ஈயத்தைப் பொன்னாக்குவேன்.

16. தென்றல் : பாவத் தீ வெப்பம் தணியத் தென்றலே வீசு என வேண்டல்.

17. மதங்கி : வாளேந்திய மகளிர் ஆட்டம் ஆடவரை மயக்கும் மதங்கி ஆட்டம் இங்கில்லை.

18. தூது : இயேசுவைக் கன்னிமை கெடாமல் பெற்றுத் தருமாறு கபிரியேல் தூதரைத் தூது அனுப்புதல்.

19. வலைச்சி : மீன் விற்க வரும் மீனவப் பெண் கயல்விழியால் காதல் வலைவீசக் கூடியவர் எனக் காவலூர் இளைஞன் திருத்துதல்.

20. மடக்கு : சொற்களாகிய சீர்கள் பொருள் வேறுபட்டு மாறிவருதல், காவல் அகத்தாள், தேவமுகத்தாள், கடவுள் உயிர்த்தாள், மடவுள் உயிர்த்தாள் போல...

21. பாண் : பாணினியை அழைத்து அன்னை மகன் இயேசுவின் அருஞ்செயல்களைப் பாட அறிவுறுத்தல்.

முனைவர் கு.வெ. பாலசுப்ரமணியன் 114 கலம்பகங்கள் தமிழில் வந்துள்ளதைப் பட்டியலிட்டுள்ளார்.

இவற்றுள் கிறித்துவக் கதம்பங்கள் ஐந்து. இடத்தின் ஊரின் பெயரால் உள்ளவை மூன்று. பாட்டுடைத் தலைவர் பெயரால் உள்ளவை இரண்டு.

இவற்றில் பெஸ்கி அடிகளார் எழுதிய திருக்காவலூர்க் கலம்பகமே முதல் நூலாகிறது.

பிச்சியார், கொற்றியார், இடைச்சி, வலைச்சி, தென்றல் ஆகிய உறுப்புகள் பேரின்ப - அறநெறி மயமாக்க ஆக்கமாக முனிவரது இலக்கியப் படைப்புத்திறனை மரியா - இயேசு புகழ்பாடப் பயன்படுத்தியுள்ளார்.

தமிழின் ஐந்து வேறு கிறித்துவக் கலம்பகங்கள் வருமாறு:

1 எம்மானுவேல் கலம்பகம் - ஆசிரியர்: ஜேக்கப் பீட்டர் (1863), 42 பக்கங்கள்

2. திருபெண்ணூர்க் கலம்பகம் - புனித ஜோசப் திருபெண்ணூர்க் கலம்பகம் : ஆசிரியர் ஜெகராவு முதலியார்.

3. திருக்காவலூர்க் கலம்பகம் - ஆசிரியர் அருள்பணி. பெஸ்கி.

அப்பாவு ஞானாதிக்கம் 1843 இல் எழுதியது. 1856 பாண்டிச்சேரியில் பதிப்பிக்கப் பெற்றது. தஞ்சாவூர் அருளப்பன் இதற்குப் பதவுரையும், பொழிப்புரையும் எழுதினார். அடிக்குறிப்புகளுடன் தத்துவ போதினி பத்திரிகை சென்னைப் பட்டணத்தில் 1872 இல் பதிப்பிக்கப் பெற்றது. குடந்தை (கும்பகோணம்) சிறுமலர் உயர்நிலைப்பள்ளி வேத நாயகர் இலக்கிய மன்றம் சார்பாக ம. ஆரோக்கியசாமி, அ. திரவியம், புலவர் பி. மரிய தாசு ஆகியோர் மூலத்துடன் விரிவுரை எழுதி செப்டம்பர் 1975 இல் முதற்பதிப்பை வெளியிட்டனர்.

 திருக்காவலூர்க் கலம்பகம் மூலமும் எளிய மொழிநடை உரையும் எழுதித் திருச்சிராப்பள்ளி தமிழ் இலக்கியக் கழகப் பதிப்பகப் பேராசிரியர் ரம்போலா மாஸ்கரேனஸ் 9.11.1975 இல் வெளியிட்டார்.

சுகிகரம் என்பவர் தமது இளம் முனைவர் ((M.Phil) பட்டத்துக்காகத் திருக்காவலூர்க் கலம்பகத் திறனாய்வு நூலை வெளியிட்டுள்ளார். இவ்வாய்வின் முன்னோக்கிய நகர்வுக்கு அந்நூல் உதவியது.

நசரைக் கலம்பகம்

நசரேத்து இயேசுதான் இந்தக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர். இதனை எழுதியவர் சுவாமிநாத பிள்ளை. இந்நூல் 1868 இல், சென்னையில் பதிப்பிக்கப்பட்டது. இதன் மறுபதிப்பு 1885, 1925 ஆகிய ஆண்டுகளில் யாகப்ப பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. திருக்காவலூர்க் கலம்பகத்துக்குப் பெஸ்கி அடிகளார் தாமே ஓர் உரை எழுதினார். இந்த உரைப்பதிவு செண்பகனூர் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்திலுள்ள ஓலைச்சுவடிகள் பழமையான நூல்கள் காப்பகத்தில் வைக்கப் பெற்றுள்ளது.

சமூக உல்லாசம் என்கிற புதிய கலம்பக உறுப்பை உருவாக்கி, தமது கலம்பக நூலில் பெஸ்கி அடிகள் சேர்த்துள்ளார். இவ்வுறுப்பு 27ஆவது பாடலாக இடம் பெற்றுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் கிறித்துவக் இலக்கியத் துறையில் இளம் முனைவர் பட்டத்துக்காக செல்வி. சாந்தி இது பற்றி ஆராய்ந்துள்ளார்.

வீரமாமுனிவர் கலம்பகம்

புலவர் சுந்தர மூர்த்தி இதனை ஆக்கினார். திருச்சிராப்பள்ளி தமிழ் இலக்கியக் கழகம் இதனைப் பதிப்பித்துள்ளது. அதில் 26 பிரிவுகளை வீரமாமுனிவரது தூய - புனித வாழ்வு 100 பாடல்களால் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் பாட்டுடைத்தலைவர் ஒரு சந்நியாசி அல்ல; துறவி. சமயப் பணியாளர். இந்நூலில் அகப்பொருள் சார்ந்த உள்ளடக்கப் பாடல் இடம் பெறவில்லை.

பெஸ்கி அடிகள் ஒரு கலம்பகம் மட்டுமே பாடியுள்ளார். இதன் பாட்டுடைத் தலைவி பிற கலம்பகங்கள் அனைத்தும் பாட்டுடைத் தலைவர்களது உலகியல் சாதனைகளை விளக்குகின்றன. ஆனால், இந்தக் கலம்பகமோ விண்ணகம் சேரும் வழிகளைப் பாடுகின்றது. பெண்கள் மீது காமுறுவது பற்றிச் பேசாமல், கடவுள் மகன் இயேசுவின் தாய் மரியா பற்றிப் புகழ்கின்றது திருக்காவலூர்க் கலம்பகம்.

திருக்காவலூர்க் கலம்பகத்தில், சிறப்புச் சூழ்நிலையைச் “சமூக உல்லாசம்” என்னும் புதிய உறுப்பினால் பெஸ்கி பாடினார். அன்னை ஆலயத்தில் தங்கியிருப்பதால் பக்தர்கள் விழா எடுத்து, தேர் இழுத்து, ஆனந்தத்தில் திளைக்கின்றனர். பிற கலம்பகங்களில் தலைவன் ஊர்வலம் வரும் காட்சியை ஏழு பருவப் பெண்டீர் கண்டு காமுறுவர். ஆனால், விண்ணக அரசி மரியா பிறை நிலா வடிவத்தேரில் அமர்ந்து ஊர்வலம் வருகிறாள். அவளது முகத்தில் மகிழ்ச்சியின் மலர்ச்சி நிறைவாகிறது. விழா நாளில் இவ்வாறான நேர்முக வருணனைகளை ஊர்வல வேளையில் எல்லாரும் செவிமடுப்பர்.

தெய்வத்தாயான மரியா வணக்கம் இங்கு நிறுவப் பெற்றுள்ளது. மரியா மீதான புகழ்ச்சிகளும், அவளுடைய அருமை மகன் இயேசுகிறித்துவின் வியக்கத்தக்க சாதனைகளும், உலகிற்கெல்லாம் மீட்பைக் கொண்டுவர இன்னுயிரைக் கொடுத்த செயற்கரிய செயலும் கிறித்துவத்தின் கோட்பாடுகளாகப் பாடல்களில் இடம் பெறுகின்றன.

தமிழ்க் கலம்பக இலக்கியத்துக்குப் பெஸ்கி அடிகளார் அருளிய தமிழ்க்கொடை “சமூக உல்லாசம்” என்னும் கலம்பக உறுப்பு. இது தேர் ஊர்வலத்தின் போது, எடுத்துரைத்தலாக இடம் பெறும். இயேசுவின் தாயாகவும், பிறை நிலவைப் பாதணியாகவும் அணிந்து, அன்னை ஊர்வலம் வருவாள். மக்களது மகிழ்ச்சித் திளைப்பு வருணிக்கப் பெறுகிறது. கொடிகளை அசைத்தும், விளக்குகளை ஏந்தி, வெளிச்சம் பாய்ச்சியும், ஆறுதல் மொழிகளைப் பக்தர்கள் செவியில் நிரப்பியும், இசைக்கருவி வாசிக்கும் கலைஞர்கள் வாசித்தும், ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சி உல்லாசமாகிவிடும்.

மாற்றுத்திறனாளிகளும், ஊர்வலத்தில் பங்கேற்கும் எளியோர், மனத்தாழ்ச்சியுடையோர், நோயாளிகள், ஊர்வலத்தில் பங்கேற்று வேண்டுதல் செய்யும்போதே,  இயேசுவிடம் அன்னை மூலம் பரிந்துரைக்கப் பெற்று,  நடக்க முடியாதவர் நடைபோடுவர். கைகள் இல்லாதோர் இயக்கும் ஆற்றல் அடைவர். மகப்பேறு இல்லாதோர் குழந்தைப் பாக்கியம் பெறுவர். தஞ்சையை ஆண்ட கொடுங்கோல் மன்னனது கொடுங்கோன்மையால் நலிவுறாமல் திருக்காவலூர் அன்னை மரியா பாதுகாக்கிறாள்.

பெஸ்கி அடிகளாரது சமூக உல்லாச நோக்கமே மக்களிடையே பாரம்பரியப் பழக்க வழக்கமாகக் பின்பற்றப்பட்ட சாதி - வர்க்க வேறுபாடுகளையும் - பாகுபாடுகளையும் ஒழித்து, இயேசுவிலும், அன்னை மரியாவின் கீழ் அரவணைப்பிலும், ஒன்றிணைந்த ஐக்கியத்தை அகத்திலும், புறத்திலும் நிலை நிறுத்த வேண்டும் என்கிற நோக்கமே. அன்னை மரியாவை நல்லிணக்கத்தின் நற்றாயாக அடையாளப்படுத்துகிறார்.

ஆதலால், அனைவரும் அன்னை மரியா அரவணைப்பில் ஒன்று சேர நன்னாளாக - பொன்னாளாக இயேசு உயிர்த்தபின் வரும் மூன்றாவது ஞாயிறைக் குறித்து, ஒன்று சேர வருமாறு அழைப்பு விடுத்தார். இன்று வரை இந்த மரபு விட்டுவிடாமல் கடைப்பிடித்து வருவதையும், அதற்கு உறுதுணையாக இந்நூலாசிரியர் காமநாயக்கன் பட்டியில் திருத்தல உதவிப் பங்கு குருவாகப் பணியாற்றிய போது, நிகழ்த்திய அனுபவத்தையும் இங்குக் குறிப்பிடுவது, ஆன்மீக அனுபவமாகிறது. அன்னை மரியா அருளால், கைகளற்றவரும், மகப்பேறு இல்லாதவரும், அன்னையின் அருளாசி பெற்று, குறை நீங்கப் பெற்று, வேண்டியதை வேண்டியவாறு பெற்றனர். தம் மகனிடம் குறுக்கீடு செய்து, பரிந்து பேசி, வல்ல செயல்கள் நிகழ வழி செய்கிறாள் தாய் மரி. தன் பக்தர்களது நியாயமான வேண்டுதல்களைக் கேட்டு, அவர்களது விருப்பங்களை நிறைவு செய்கிறாள்.(தொடரும்)

Comment