No icon

‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா அவர்களின்

உயர்மறைமாவட்ட அளவிலான விசாரணையின் ஆவண அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட இறுதி விழா வத்திக்கான் திருப்பேராயத்திடம் ஒப்படைப்பு

தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா அவர்களை புனிதர் நிலைக்கு உயர்த்தும் முறையின் வரலாறு

இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா அவர்கள் மீது அதிகரித்து வரும் பக்தி

அன்னை ஞானம்மா என்பது ஓர் உணர்வு! ஓர் ஆற்றல்! ஒரு புனிதம்! ஓர் உன்னதம்!

அன்னை ஞானம்மா அவர்கள் இம்மண்ணுலகில் வாழ்ந்தபோதே, தன் வாழ்க்கை முழுவதையும் நம் ஆண்டவருக்கும் நம் திரு அவைக்கும் உண்மையான ஊழியம் புரிய வேண்டும் என்ற உத்வேகத்துடன் மாசற்ற, இறைவனுக்குகந்த புண்ணிய வாழ்க்கை வாழ்ந்தார். அவர்தம் விசுவாசமும், இறைப்பற்றும், அன்பும் - மற்றவருக்காக குறிப்பாக தேவையில் உள்ளவர்களுக்காக, ஆண்டவர் திருமுன் மண்டியிட்டு பரிந்துரைத்து மன்றாடும் பண்பும் அவர்தம் புண்ணிய வாழ்வுக்குச் சான்றுப் பகரும். அன்னை ஞானம்மா அவர்களின் நினைவை வரலாறு தன் நினைவலைகளுக்குள் காலங்காலமாக புதைத்து போற்றி பாதுகாத்து வருகிறது என்பதே உண்மை. அன்னை ஞானம்மா அவர்கள் நிறுவிய துறவறச் சபைகள் மட்டுமின்றி, நம் இந்தியத் - தமிழகத் - திரு அவையின் விசுவாசிகள், திருநிலையினர், இறைமக்கள் என்று அனைவருமே அன்னை ஞானம்மா அவர்களின் நினைவைப் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

அன்னை ஞானம்மா அவர்களைப் பற்றிய உணர்வே, ஆற்றல் வாய்ந்தது; நம் எல்லாருடைய மனதையும் தன்பால் கவர்ந்திழுக்கும் திறன் வாய்ந்தது. திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரியில் உள்ள அவர்தம் கல்லறையை சாரை சாரையாய் மக்கள் சென்று தரிசிப்பதும், அவர்தம் கல்லறையில் அமர்ந்து செபிப்பதும் தியானிப்பதும், அவர்தம் பரிந்துரையை நாடுவதும், அவருடைய பரிந்துரையால் பெற்ற வரங்களுக்கெல்லாம் நன்றி சொல்வதும் அன்றாடம் ஒரு சாட்சியமாக உள்ளது. அன்னை ஞானம்மா, தம்மை நாடித் தேடி வருவோர் அனைவரையும் தாயன்போடு அள்ளி அரவணைத்து அவர்களின் இதயங்களை எப்போதும் கொள்ளைக்கொள்வார். நம் அனைவரின் ஒற்றை விருப்பமே அன்னை ஞானம்மா. ஆண்டவரின் திருப்பீடத்திற்கு தகுதி உயர்த்தப்பட்டு, இறைவனுக்கு மேன்மேலும் மகிமை சேர்க்க வேண்டும்; அவர்தம் மக்களுடைய விசுவாசத்தைக் குன்றாமல் வளரச் செய்ய வேண்டும் என்பதுதான். அந்த வகையில், அதற்கான நாளும் நேரமும் படிப்படியாக கனிந்து வந்தது. ஆம். அன்னை தாட்டிபத்ரி ஞானம்மாவை அருளாளர்-புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான பூர்வாங்க திருப்பணிகள் மிகப்பெரிய உத்வேகத்துடன் தொடங்கப்பட்டன. இதுவே, நம் அன்னை ஞானம்மாவை அகில உலகத் திரு அவை அளவில் கொண்டு சேர்த்திடுவதற்கு நாம் பெற்ற பேறாகும்.

அன்னை லீமா ரொசாரியோ அவர்கள் இரு துறவறச் சபையினர் சார்பாக மேற்கொண்ட முயற்சி

அன்னை ஞானம்மாவை, மண்ணுலகில் அவர்தம் வீரத்துவம் நிறைந்த புண்ணிய வாழ்வுக்காகவும் அவருக்கு வழங்கப்பட்ட சூழமைவில் எவ்வித தயக்கமுமின்றி இறைவன்தம் கருவியாக விளங்கி, இறையாட்சியை ஏற்படுத்துவதற்காக அவர்மேற்கொண்ட சாட்சிய வாழ்வுக்காகவும் இறைவனின் திருப்பீடத்தில் இடம்பெறும் தகுதி உயர்த்துவதற்கான தேவையை 2011 ஆம் ஆண்டு, மாதவரம் புனித அன்னாள் துறவறச் சபை உணர்ந்தது. செப்டம்பர் 30, 2011 அன்று கூட்டப்பட்ட பொதுக்குழுவில் இது குறித்து ஆழமாக விவாதித்து, சென்னை - மயிலை உயர் மறைமாவட்டப் பேராயரை இது குறித்து அணுகுவதற்கு முடிவுச் செய்யப்பட்டது. அதே சமயம், பிரங்கிபுரம் புனித அன்னாள் சபையினரையும் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இறை ஊழியரான அன்னை ஞானம்மா

அன்னை ஞானம்மா அவர்களின் புனிதர் நிலைக்கு தகுதி உயர்த்துவதற்கான விண்ணப்பதாரராக சபையின் தலைவி அன்னை லீமா ரொசாரியோ அவர்கள், புனிதர் நிலைக்கு தகுதி உயர்த்தும் திருப்பேராயத்திலிருந்து ‘தடையில்லா ஆணை’ பெறுவதற்காக, அதற்குரிய ஆவணங்களை சென்னை - மயிலை உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களிடம் செப்டம்பர் 21, 2013 ஆம் ஆண்டு சமர்ப்பித்தார். திருப்பீடமும் விண்ணப்பதாரரின் இம்முயற்சிக்கு ஆதரவாக, தடையில்லா ஆணையை பேராயர் வழியாக வழங்கி ஊக்குவித்தது.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை மிகுந்த கவனத்துடன் ஆய்வுக்குட்படுத்தி, வத்திக்கானில் இது தொடர்பான திருப்பேராயங்களைக் கலந்தாலோசித்து, திருப்பீடத்தின் தலைவரான நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை தாட்டிபத்ரி ஞானம்மாவை ஜனவரி 21, 2014 அன்று இறை ஊழியராக’ அறிவித்தார். கத்தோலிக்கத் திரு அவையின் வரலாற்றில், பொதுநிலையினர் ஒருவர், துறவறச் சபைகளை நிறுவினார் என்பதே அரிதிலும் அரிதான நிகழ்வாகும். இதுவே அன்னை ஞானம்மாவின் தனிச்சிறப்பு. ஆகையால், சென்னை – மயிலை உயர்மறைமாவட்டமும் ‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மாவை புனிதர் நிலைக்கு தகுதி உயர்த்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை பேரார்வத்துடன் தொடங்கி வைத்தது.

மார்ச் 21, 2014 என்பது மாதவரம் புனித அன்னாள் சபையின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நாள். ஆம். கீழச்சேரியில் உள்ள பள்ளி வளாகத்தில், மாதவரம் புனித அன்னாள் துறவறச் சபையைச் சேர்ந்த அருள்சகோதரிகள் ஐநூறு பேரும், பிரங்கிபுரம் புனித அன்னாள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரிகள் நூறுபேரும் ஏனைய துறவறச் சபைகளைச் சேர்ந்த அருள்சகோதரிகள், குருக்கள் என்று 150 பேரும், அருகிலுள்ள இறைமக்கள் என்று பத்தாயிரம் பேரும் ஒன்று கூடி, மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில் அன்னை தாட்டிபத்ரி ஞானம்மா இறை ஊழியராக தகுதி உயர்த்தப்பட்டதற்கு நன்றிக் கொண்டாட்டத்தை திருப்பலியுடன் ஒப்புக்கொடுத்து கொண்டாடினர். பேராயர் அவர்கள் புனிதர் திருப்பணிகளின் நிலைக்கான திருப்பட்ட நடவடிக்கைகளுக்கான வத்திக்கான் திருப்பேராயத்தின் சம்மத அறிக்கையை இலத்தீனில் வாசித்து, உயர்மறைமாவட்ட அளவிலான அருளாளர் மற்றும் புனிதர் நிலை திருப்பணிகளுக்கான தொடக்க விழாவை வெகு விமரிசையாக தொடங்கி வைத்தார்.

ஆவணத் தயாரிப்புகளின் கால அட்டவணை

ஜனவரி 21, 2014 அன்று புனிதர்பட்ட திருப்பணிக்கான வத்திக்கான் திருப்பேராயம் பேராயருக்கு தடையில்லா ஆணையை அனுப்பியது. ஆயர்நிலை பதிலாளர் (Episcopal delegate), நீதி நெறி ஊக்குவிப்பாளர் (Promoter of Justice), ஆவணப் பதிவாளர் (Notary) ஆகியோரை நியமித்து, உயர்மறைமாவட்ட அளவிலான விசாரணை ஆணையத்தை அமைத்து பேராயர் அவர்கள் ஆணை பிறப்பித்தார். அதேபோன்று ‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா அவர்களின் வாழ்வு மற்றும் மறைப்பணி குறித்து ஆராய்ந்திடவும் போதுமான ஆவணங்களைச் சேகரிப்பதற்காகவும், வரலாற்றுப் பணிக்குழுவும் ஏற்படுத்தப்பட்டது. ‘இறை ஊழியர்’ ஞானம்மா இன்னையா அவர்களின் எழுத்துகளை ஆராய்ந்திட இறையியல் பணிக்குழுவினரும் ஏற்படுத்தப்பட்டனர்.

ஆகஸ்ட் 27, 2014 அன்று, உயர்மறைமாவட்ட அளவிலான விசாரணைத் தொடக்க விழா நடைபெற்றது. இரு துறவறச் சபைகளின் அருள்சகோதரிகளும் அருள்பணியாளர்களும் பொதுநிலையினரும் திரளான எண்ணிக்கையில் இவ்விழாவில் பங்கேற்றனர்.

வரலாற்றுப் பணிக்குழுவினர் தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள பங்குகளைச் சந்தித்து, ‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா அவர்களை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள், அவரது புண்ணிய வாழ்வால் தூண்டுதல் பெற்றவர்கள் என்று அனைவருடைய பெயர்கள், முகவரிகளைச் சேகரித்து பேராயரிடம் சமர்ப்பித்தனர்.

ஆயர் பதிலாளர் மற்றும் நீதிநெறி ஊக்குவிப்பாளர் ஆகிய இருவரும் இணைந்து, ‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையாவைப் பற்றிய வினாத்தொகுப்பு தயாரித்து, அவரை அறிந்த சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். ‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையாவின் வீரத்துவம் நிறைந்த புண்ணியங்களையும் புண்ணிய வாழ்வின் சிறப்பை மையப்படுத்தியும் அவர்கள் இந்தக் கேள்விகளைத் தயாரித்திருந்தனர். ஆங்கிலத்திலும் தமிழிலும் தயாரிக்கப்பட்டிருந்த இந்த வினாத்தொகுப்பை பேராயரின் ஒப்புதல் பெற்று, விசாரணை நடைபெற்று, நிறைவுற்றது. இது குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு, பேராயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறை ஊழியர்’ ஞானம்மா இன்னையாவின் அருளாளர்-புனிதர் நிலைக்கான மறைமாவட்ட அளவிலான திருப்பணிகளின் இறுதி விழா

இறையருளால், ‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையாவின் வீரத்துவம் நிறைந்த புண்ணிய வாழ்வு குறித்து மறைமாவட்ட அளவிலான விசாரணை அறிக்கையின் இறுதி விழா ஜூலை மாதம் 22 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை சாந்தோம் புனித தோமா உயர்மறைமாவட்டப் பேராலயத்தில் நடைபெற்றது. மாதவரம் புனித அன்னாள் அருள்சகோதரிகள், பிரங்கிபுரம் புனித அன்னாள் அருள்சகோதரிகள், திரளான எண்ணிக்கையிலான குருக்கள், இறைமக்கள் பங்கேற்க, மேதகு பேராயர் அவர்களுடைய தலைமையில் வெகு ஆடம்பரமாக தூய ஆவியாரின் வருகைக்கான பாடலுடன் தொடங்கியது. மாதவரம் புனித அன்னாள் சபைத் தலைமையன்னை அருள்சகோதரி கிளாரா வசந்தி மற்றும் பிரங்கிபுரம் அன்னாள் சபைத் தலைமையன்னை அருள்சகோதரி அந்தோணம்மா இருவரும் விவிலிய வாசகத்தோடு தொடக்கச் செபத்தைச் செபித்தனர். அதனைத் தொடர்ந்து, வேண்டுகையாளர் அருள்பணி. சார்லஸ் குமார் ‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா அவர்களின் அருளாளர் - புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான திருப்பணிகள் குறித்த வரலாறை சுருக்கமாக விளக்கினார். அதனைத்தொடர்ந்து, வரலாற்றுப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான அருள்முனைவர் லியோனார்டு நேவிஸ் பெர்னாண்டோ சே. ‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையாவின் ஆன்மீக பலம், எளிமை, தாழ்ச்சி, பக்தி, கடின உழைப்பு, விடாமுயற்சி, திருநிலையினர் மீதான அன்பு, மரியாதை, ஆழமான விசுவாசம், பெண்கள் முன்னேற்றத்திற்கான பங்களிப்பு என்று அவர்தம் வீரத்துவம் நிறைந்த அருள்வாழ்வைப் பற்றி விளக்கினார்.

விண்ணப்பதாரரான அன்னை அருள்சகோதரி லீமா அவர்கள் ‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா அவர்களின் புண்ணிய வாழ்வின் மேன்மை குறித்து சென்னை - மயிலை முன்னாள் பேராயர் மேதகு அருளப்பா, பெங்களூரு முன்னாள் பேராயர் மேதகு தாமஸ் பொத்தக்காமூரி, நம் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அருள்சகோதரி. ரூத் எகார், அமெரிக்காவைச் சேர்ந்த பெர்னாண்டோ நெக்ரோ ஆகியோரின் சாட்சியத்தையும் மேற்கோள்காட்டியும், அவர் நிறுவிய துறவறச் சபைகளின் விசுவாச செயல்பாடுகள், மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் ஆற்றும் பணிகளின் அடிப்படையிலும் அவர் விளக்கினார். வத்திக்கான் திருப்பேராயம் காட்டிய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பணிக்குழுவின் உறுப்பினர்கள் சீரிய முறையில் செயல்பட்டனர். ஆவணக் காப்பகங்கள், நூலகங்கள், பங்குகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், இறை ஊழியரோடு தொடர்புடைய நபர்கள், அவர்களுடனான நேர்காணல்கள், ஆவணங்கள், எழுதிய எழுத்துகள் என அனைத்தையும் அறத்துடன் ஆராய்ந்து, தேவையான இடங்களில் ஒலி-ஒளிப் பதிவுச்செய்து அனைத்தையும் நெறிப்படுத்தினர். அவர்களுடைய அர்ப்பணத்திற்கும் கடின உழைப்பிற்கும் ஈடுபாட்டிற்கும் மனமார்ந்த நன்றி.

அதனைத் தொடர்ந்து, ஆயர்நிலை பதிலாளர் அருள்பணி. அந்தோனிராஜ் அவர்களின் அழைப்பின்பேரில் முதலில் மேதகு பேராயர் அவர்களும் அதனைத்தொடர்ந்து, ஏனைய பணிக்குழு உறுப்பினர்களும் உறுதிமொழி மேற்கொண்டனர். ஆவணப் பதிவாளர் அருள்பணி. ஜோ பாலசாமி அவர்கள் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து கடமைகளையும் நிறைவேற்றினர் என்று சான்றளித்தார். மேதகு பேராயர் ஆயர்நிலை பதிலாளரையும் வரலாற்றுப் பணிக்குழுத் தலைவரையும் இறையியல் பணிக்குழு தலைவரையும் உரிய ஆவணங்களை தம்மிடம் ஒப்படைக்கும்படி வேண்டினார். ஆயர்நிலை பதிலாளர் ஒப்படைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் பரிசோதித்து திரு அவையின் பரிந்துரைக்கேற்ப உள்ளன என்று சான்றளித்தார்.

நீதி நெறி ஊக்குவிப்பாளர் அருள்பணி. சி.எம்.ஜோசப் பேராயரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி ஒப்புதல் தந்தார். ஆவணப் பதிவாளர் அருள்பணி. ஜோ பாலசாமி அவர்கள் இந்த இறுதி விசாரணை அறிக்கை, ஆயர்நிலை பதிலாளர், நீதிநெறி ஊக்குவிப்பாளர், வேண்டுகையாளர், துணை வேண்டுகையாளர், பதிவாளர் ஆகியோருடைய கையொப்பம் பெற்றுள்ளது என்று உறுதி அளித்தார். அனைத்து ஆவணங்களும் வேண்டுகையாளரால் அதற்குரிய பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட, பேராயர் அவர்கள் அப்பெட்டிக்கு சீல் வைத்து பாதுகாத்தார். மூல ஆவணங்களை மறைமாவட்ட ஆவணக்காப்பகத்தில் வைக்கும்படியும் நகலெடுக்கப்பட்ட ஆவணங்களையும் பொது ஆவணங்களையும் புது தில்லியிலுள்ள திருத்தந்தையின் பிரதிநிதியிடம் ஒப்படைக்கும்படி ஆயர்நிலை பதிலாளர் அருள்பணி. அந்தோனி ராஜ் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

இத்துடன் ‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா அவர்களின் அருளாளர் / புனிதர் நிலைக்கான மறைமாவட்ட அளவிலான விசாரணையின் இறுதி விழா சிறப்பாக நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் ஆடம்பரத் திருப்பலியைத் தொடர்ந்தார். இறுதியில் மாதவரம் புனித அன்னாள் துறவறச் சபையின் தலைமையன்னை அருள்சகோதரி கிளாரா வசந்தி அவர்களும், பிரங்கிபுரம் புனித அன்னாள் சபையின் தலைமையன்னை அருள்சகோதரி அந்தோணம்மா அவர்களும் நம் பேராயர் மற்றும் அனைவருக்கும் நன்றி நவின்றனர்.

நாமும் ‘இறை ஊழியரான’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா விரைவில் அருளாளர் / புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட தொடர்ந்து இறைவேண்டலில் நிலைத்திருப்போம். ‘இறை ஊழியர்’ தம் வாழ்வின் விழுமியங்களும் வீரத்துவம் நிறைந்த புண்ணிய வாழ்வும் நம்மைத் தூண்டி, நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கும் கிறிஸ்துவுக்கும் நாமும் சான்று பகர வழிகாட்டுவதாக. எம்  சபைகளின் நிறுவனர் ‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா அவர்களின் புனிதர் நிலைக்கான இத்திருப்பணியை நாங்கள் தொடங்கிய நாள் முதல் இன்று வரை இறைவனின் பராமரிப்பையும் அருளையும் நிரம்ப பெற்றிருக்கிறோம். தொடர்ந்து ‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையாவின் பரிந்துரையை நாடி வேண்டிய அருள்வரங்களைப் பெற்று இன்புற்று வாழ்வோம். அவர்களின் புனித வாழ்வைத் தொடர்வோம்.

Comment