ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு சாஞா 9:13-18, பில1: 9-10,12-17, லூக் 14:25-33
திருப்பலி முன்னுரை
இன்று நாம் பொதுக்காலத்தின் 23 ஆம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்கின்றோம். உன் தாயையும், தந்தையும் மதித்து நட, உங்கள் சகோதர சகோதரிகளையும், எதிரிகளையும் அன்பு செய்யுங்கள் என்று சொன்ன இறைவன், இன்றைய நாளின் நற்செய்தியிலே தன் தாய்-தந்தை, சகோதர-சகோதரிகளை, ஏன் தன் உயிரைக்கூட என்னைவிட மேலாக கருதினால் அவர் என் சீடராய் இருக்க முடியாது என்று கூறுகிறார்.
ஆண்டவர் இயேசு நமக்கு சொல்ல வரும் செய்தி என்ன? பெற்றோரை, உடன் பிறப்புகளை அன்பு செய்யுங்கள் என்று சொல்லுகிறாரா? அல்லது அவர்களை விட்டு விடுங்கள் என்று சொல்லுகிறாரா? உண்மையிலேயே ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அனைவரையும் அன்பு செய்யுங்கள் என்று சொல்லுகிறார். நீங்கள் அனைவரையும் அன்பு செய்வதிலிருந்து, நீங்கள் என் சீடர்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளட்டும் என்று சொல்லுகிறார். அப்படியிருக்க ஆண்டவர் இன்று கூறும் செய்தியின் பொருள் என்னவென்று பார்க்கும்போது, நாம் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம், யாருக்கு முதன்மை தருகிறோம் என்பதையே இங்கே நமக்கு தெளிவுபடுத்த விரும்புகிறார்.
நாம் ஆண்டவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறபோது, அவர்பொருட்டு அனைத்தையும் விட்டுவிடுகிறபோது, அவர் பொருட்டு அனைவரையும் அன்பு செய்கிறபோது, நமது சிலுவைகளை நாமே சுமக்கின்றபோது, அவருடைய சீடர்களாக நாம் இருக்கிறோம் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறார். ஆண்டவரின் சீடராய் மாறுவதற்கு நாம் தகுதியுள்ளவர்களாக இருக்கிறோமா என்று சிந்தித்தவர்களாய், பக்தியோடு இத்திருப்பலியில் பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
எவர் ஒருவர் ஞானத்தையும், தூய ஆவியையும் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறாரோ, அவரால் மட்டுமே கடவுளின் திட்டத்தை, அவரின் திருவுளத்தை அறிந்துகொள்ள முடியும் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
மனிதராக பிறந்த எவரும், ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொண்டவரும் அடிமை இல்லை. அனைவரும் சமமானவர்களே என்று ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வோம் எனக் கூறும், இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. எல்லாம் வல்லவரே! உமக்காக உமது பணிக்காக, அனைத்தையும் விட்டுவிட்டு, உம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் உம் திரு அவையின் திருப்பணியாளர்கள், உமது திட்டத்திற்கு ஏற்ப, உமது மந்தைகளை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்களை வழி நடத்துபவரே! இந்நாட்டை ஆளும் தலைவர்கள் செல்வத்தின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் மக்களை அடிமைகளாய் நடத்தாமல், அனைவரையும் சமமாய் நடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்களைக் காப்பவரே! எங்கள் ஒவ்வொருவருக்கும் நீர் முக்கியத்துவம் தருகிறீர் என்பதை உணர்ந்து, எங்கள் வாழ்விலே உமக்கு முதன்மையான இடத்தை அளிக்கக்கூடிய மக்களாக நாங்கள் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. வரங்களை பொழிபவரே! நீர் எங்களுக்காக வகுத்திருக்கிற திட்டங்களை, உமது தூய ஆவியின் உதவியாலும், ஞானத்தாலும் நாங்கள் அறிந்து, அதன்படி எங்கள் வாழ்வை அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் பரம்பொருளே! கடந்த மாதத்தில் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் தந்திருக்கிற இந்த புதிய மாதத்தில் உமது அருட்கரம் எங்களை ஆசீர்வதித்து, வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment