தந்தை ஸ்டான் சுவாமியின் மீது
இந்திய அரசே மேற்கொண்ட பயங்கரவாதம்
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 20 Dec, 2022
கும்பகோணம் மறைமாவட்டம், புள்ளம்பாடி அருகிலுள்ள விரகாலூர் பங்கைச் சேர்ந்தவரும் சேசு சபை பணியாளருமான ஜார்க்கண்ட் பழங்குடி மக்களின் விடுதலை வீரர் 83 வயது அருள்பணி. ஸ்டான் சுவாமி அவர்கள், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இராஞ்சியிலுள்ள பகாய்ச்சா என்னுமிடத்தில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி இரவு என்.ஐ.ஏ எனப்படும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார். அப்போதே இவர் பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக சமூக செயற்பாட்டாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் குற்றஞ்சாட்டினர். அப்போது 83 வயதான அருள்பணியாளர் ஸ்டான் சுவாமிகள் ‘பார்க்கின்சன்’ என்ற உடல் நடுக்க நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பலமுறை ஜாமீனுக்கு மனு செய்யப்பட்டும் விடுதலை மறுக்கப்பட்டது. கை நடுக்கம் காரணமாக அவரால் உணவு உட்கொள்ள முடியாத நிலையில், உணவைச் சாப்பிட ஒரு ஸ்பூனும் தண்ணீர் பருக உறிஞ்சு டம்ளர் (sipper) வேண்டுமென்று சிறை நிர்வாகத்திடம் முறையிட்டபோது, சிறை நிர்வாகம் மனிதாபிமானமே இல்லாமல் மறுத்தது. இது குறித்து நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவரின் ஜாமீன் மனு விசாரணையில் இருந்தபோதே விசாரணைக் கைதியாகவே ஜூலை 05, 2021 அன்று மருத்துவமனையில் மரணமடைந்தார்.
BK16 - வழக்கின் பின்னணி
2018 ஆம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலம், பீமா கோரேகானில் போர் வெற்றி நினைவுச் சின்னத்திற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையைத் தூண்டியதாக கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே உட்பட பலர் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலருக்கு மட்டுமே ஜாமீன் கிடைத்திருக்கிறது. மற்றவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். கௌதம் நாவ்லகா என்பவர் இன்னும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அதே வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை ஸ்டான் சுவாமிக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டை ஸ்டான் சுவாமி உறுதியாக மறுத்தார். என்.ஐ.ஏ உறுதியாக, ஸ்டான் சுவாமியின் கணினியில் இருந்த ஆவணங்களின் அடிப்படையிலேயே அவர் மீது குற்றஞ்சாட்டுவதாக அடித்து கூறியது. ஆனால், ஸ்டான் சுவாமிகளின் ஆதரவாளர்களோ, அவருடைய கணினி ஹேக் செய்யப்பட்டு அதில் போலியான ஆவணங்கள் திணிக்கப்பட்டன என்று கூறினர். தந்தை ஸ்டான் சுவாமி மட்டுமின்றி, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள ரோனா வில்சன் மற்றும் சுரேந்திர காட்லிங் ஆகியோரின் கணினிகளிலும் டிஜிட்டல் சாட்சியங்கள் திணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஹேக்கர் உள்ளீடு செய்த போலி ஆவணங்கள்
சைபர் செக்யூரிட்டி நிறுவனமான சென்ட்டினல் ஒன் (Sentinel One) என்ற நிறுவனமும் இதற்கு முன்பாக, தாக்குதல் தொடுப்பவர்கள் முழுக்க முழுக்க இந்திய அரசின் நலனுக்காகவே மிகவும் நுணுக்கமாக செயல்படுவதாக கூறியது. அமெரிக்காவில் உள்ள அர்சனல் (Arsena) தடயவியல் நிறுவனம் மிகவும் தெளிவாக, இது ஹேக்கரே, தந்தை ஸ்டான் சுவாமியின் கணினியில் வெளிப்புற ஆதாரங்களை உள்ளீடு செய்ததற்கு பொறுப்பாவர் என்று கூறுகிறது. அவர்களது முதன்மையான நோக்கமே கண்காணிப்பதும் குற்றவாளியாக்கும்பொருட்டு ஆவணத்தை விடுவிப்பதும்தான். ஆவண அமைப்புமுறை பரிமாற்றத்தில் விட்டுச்சென்ற தடயங்களை அடிப்படையாகக் கொண்டும், தரவுகளை நிலைநிறுத்திய விதத்தைக் கொண்டும் தாக்குதல் தொடுத்தவரை கையும் களவுமாக மீண்டும் ஒருமுறை பிடித்துள்ளது.
ஜூன் 2022 அன்று வையர் பத்திரிகை புனே போலீசாருக்கும் தாக்குதல் தொடுத்தவருக்கும் இடையிலான சாட்சியத்தை சென்டினல் ஒன் கண்டுபிடித்துள்ளதாக கூறியது. புனே போலீசார் தந்தை ஸ்டான் சுவாமியின்மீது திடீர்சோதனை நடத்துவார்கள் என்பதை தாக்குதல் தொடுப்பவர்கள் முன்கூட்டியே அறிந்து செயல்பட்டுள்ளனர் என்பதையும் இந்தத் தடயவியல் ஆய்வு நிரூபிக்கிறது. ஜூன் 11, 2019 அன்று இரவு தாக்குபவர்கள் தம் நடவடிக்கைகளுக்கான சாட்சியத்தை அழிக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. அடுத்த நாளே ஜூன் மாதம் 12 ஆம் தேதி புனே போலீசார் ஸ்டான் சுவாமிகளின் கணினியை தங்கள் கட்டுப்பாட்டில் கைப்பற்றி எடுத்துக்கொண்டனர்.
ஹேக்கர்கள் RAT (Remote Access Trojan) என்பதைப் பயன்படுத்தி முதல்முறையாக தந்தை ஸ்டான் சுவாமிகளின் கணினியை அக்டோபர் 19, 2014 அன்று தாக்குதலுக்குள்ளாக்கினர். RAT என்பது ஒருவர் தொலைவிலிருந்து ஒருவருடைய கணினியை கண்காணிக்கவும் ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு ஃபைல்களை மாற்றவும் அனுமதிக்கும். தந்தை ஸ்டான் சுவாமியைப் பொறுத்தவரை, அவர் டைப் அடித்த ஒவ்வொன்றும் கீ லாக்கிங் முறையைப் பயன்படுத்தி பதிவுச் செய்யப்பட்டது. அவர் தட்டச்சு செய்த அனைத்து கடவுச் சொல்களையும் ஹேக்கர்கள் படித்தறிந்தனர். அவர்தம் அனைத்து ஆவணங்களையும் ஈமெயில்களையும் அவர்கள் படித்தனர். ஸ்டான் சுவாமியின் கணினியிலிருந்த 24000 ஃபைல்களையும் அவர்கள் கண்காணித்தனர். கண்காணிப்பதோடு மட்டுமின்றி, ஜூலை 2017 முதல் ஜூன் 2019 வரை இரண்டுமுறை முகாமிட்டு ஸ்டான் சுவாமியின் ஹார்டு டிஸ்க்கில் டிஜிட்டல் ஃபைல்களை உள்ளீடு செய்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஃபைல்களை அவர்தம் ஹார்டு டிஸ்க்கில் உருவாக்கினர்; மாவோயிஸ்ட்டுகளின் கிளர்ச்சிக்கும் தந்தை ஸ்டான் சுவாமிக்கும் இடையே தொடர்பிருப்பதுபோல சித்தரிப்பதற்கான ஆவணங்களையும் உள்ளீடு செய்தனர். தந்தை ஸ்டான் சுவாமிகள் மீது திடீர்சோதனை நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அதாவது ஜூன் 05, 2019 அன்று கடைசியாக ஹேக்கர்கள் அவரைக் குற்றவாளியாக்கும்பொருட்டு ஓர் ஆவணத்தை உள்ளீடு செய்தனர். தந்தை ஸ்டான் சுவாமி ஜூலை 15 முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை ஐந்து முறை, ஒவ்வொருமுறையும் பதினைந்து மணிநேரத்திற்கும் மேலாக என்.ஐ.ஏவால் விசாரிக்கப்பட்டார். இந்த ஆவணங்களின் அடிப்படையில்தான் பீமா கோரேகான் வழக்கில் தந்தை ஸ்டான் சுவாமி முதல்முறையாக 2020, அக்டோபர் 08 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அர்சனல் கன்சல்ட்டிங் - ன் தடயவியல் அறிக்கை
அவரது மரணத்திற்குப் பிறகு, ஸ்டான் சுவாமி பயன்படுத்திய கணினியை அவருடைய வழக்கறிஞர்கள் மும்பை நீதிமன்றத்தின் அனுமதியுடன் அமெரிக்காவிலுள்ள அர்செனல் கன்சல்ட்டிங் என்ற தடயவியல் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்தக் கணினியை ஆய்வு செய்த இந்நிறுவனம் தற்போது தனது இறுதி அறிக்கையை ஆதாரப்பூர்வமாக அளித்திருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த அர்சனல் கன்சல்ட்டிங் என்ற தடயவியல் நிறுவனம் துருக்கி ஓடா டிவி வழக்கிலும் போஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்பு வழக்கிலும் உண்மையைத் துலக்கி உலகிற்குச் சொன்னது. இது உலக அளவில் டிஜிட்டல் தடயவியல் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இதன் தலைவர் மார்க் ஸ்பென்சர், ‘தந்தை ஸ்டான் சுவாமி மற்றும் அவரோடு கைது செய்யப்பட்டுள்ளவர்களின் சிலரை குற்றவாளியாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆவணத்திணிப்பு உண்மையில் நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மாவோயிஸ்ட் கடிதங்கள் என்று குறிப்பிடப்படும் கடிதங்கள் உட்பட 44 ஆவணங்கள் தந்தை ஸ்டான் சுவாமியின் கணினியில் இருந்ததாக என்.ஐ.ஏ தரப்பு கூறியது. ஆனால், அந்த ஆவணங்கள் ஸ்டான் சுவாமியின் கணினியில் ஹேக்கர்களால் திணிக்கப்பட்டதாக அர்சனல் கன்சல்ட்டிங் அறிக்கை அளித்துள்ளது. மேலும் அந்த ஆவணங்கள் ஸ்டான் சுவாமிக்குத் தெரியாமல் ஹேக்கர்களால் அவரின் கணினியில் திணிக்கப்பட்டிருப்பதையும் அர்சனல் தடயவியல் நிறுவனம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறது. மேலும் அந்த ஆவணங்களை ஒருமுறைகூட தந்தை ஸ்டான் சுவாமி திறந்து பார்க்கவில்லை என்பதையும் அர்சனல் தடயவியல் நிறுவனம் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை பற்றிய விவரங்கள் அமெரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் உடனடியாக வெளியானது.
நிரபராதியா தந்தை ஸ்டான் சுவாமி?
பிரிட்டிஷ் பாராளுமன்றம், அமெரிக்க வெளியுறவுத் துறை, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் தந்தை ஸ்டான் சுவாமியின் மரணத்தைக் கண்டித்து குரல் கொடுத்தன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு இந்திய மனித உரிமை வரலாற்றில் இது கறையாகவே நிலைக்கும் என்று கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்க காங்கிரஸ் ஜூலை 05, 2022 அன்று அவர்தம் மரணத்தின் முதலாமாண்டில் அவரது வாழ்வையும் சேவையையும் பாராட்டி தீர்மானமே நிறைவேற்றியது.
தந்தை ஸ்டான் சுவாமியைப் போல இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று வாதிட்டு வருகிறார்கள். இது முழுக்க முழுக்க அரசே மேற்கொண்டுள்ள பயங்கரவாதம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தன் குடிமகன்கள் மீதே களங்கம் கற்பித்து, ஹேக்கர்களைக் கொண்டு போலி ஆவணங்களைத் திருட்டுத்தனமாக கணினிகளில் உட்புகுத்தி, சிலரை சிறையில் அடைத்தும், சிலரைக் கொன்றும் அரசு கொலைவெறித் தாண்டவம் ஆடுகிறது. அர்பன் நக்சலைட்டு என்று முத்திரையிட்டு, அம்பேத்கர் பேரனையே பிணையின்றி, விசாரணைக் கைதியாக சிறை வைப்பவர்கள்தான் பயங்கரவாதிகள். அமெரிக்க தடயவியல் நிறுவனமான அர்சனல் மோடி தலைமையிலான அரசை அம்மணமாக்கியுள்ளது. 56 இஞ்ச் மார்பில் ஈட்டியைச் சொருகியுள்ளது. பொறுத்திருப்போம். நிச்சயம் விசாரணைக் கைதியாக இறந்த தந்தை ஸ்டான் சுவாமி, ஒருபோதும் குற்றவாளியாக நீடிக்கமாட்டார். ‘நிரபராதி’ என்று ஒருநாள் நிரூபிக்கப்படுவார். அப்போது பாசிச காவி பயங்கரவாதத்தின் முகத்திரை கிழியும். திரு அவையால் இவர் ஒருநாள் புனிதராகக் கூட அறிவிக்கப்படலாம். காத்திருப்போம்.
Comment