No icon

கொல்லம்  - மூதாக்கரை

புனித தேவசகாயத்தின் புதிய திருத்தலம்

நமது இந்திய மண்ணின் மறைசாட்சியும், புனிதருமான புனித தேவசகாயம் பிறப்பால் குமரி மண்ணுக்கும், வாழ்வால் பணியால் பண்டைய திருவிதாங்கூர் (சமஸ்தான) நாட்டிற்கும், மறைசாட்சியத்தால் இந்தியத் துணைக்கண்டத்திற்கும், புனிதர் நிலையால் உலகிற்கும் உரியவர் ஆகிறார். அவரது வாழ்வின் பரப்பு எல்லைகளையும் நீள அகலங்களையும் ஆய்வு செய்து, புதிய பரிமாணங்களை வெளிக்கொணர்வது என்பது நமக்கு ஏற்புடைய ஒன்றாகும். அது புனிதரின் புகழைப் பரப்பிட உதவிகரமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பதினாறாம் நூற்றாண்டில் குமரி மண்ணின் கடலோரத்தில் வாழ்ந்த பூர்வீக மீனவ மக்களின் வரலாற்றை ஆய்வு செய்தால், அக்கால கட்டத்தில்தான் அவர்களின் வாழ்வில் கிறிஸ்தவத்தின் சாயல் தொடங்கி, துலக்கமாக ஒளி வீசத் தொடங்கியதைக் காணமுடியும். கோட்டாறு மறைமாவட்டத்தின் பாதுகாவலர் புனித சவேரியாரின் திருக்கரத்தால் இம்மக்கள் திருமுழுக்கு பெற்றவர்கள்.

இன்றைய கன்னியாகுமரி மாவட்டப்பகுதிகள், அன்றைய திருவிதாங்கூர் நாட்டின் ஆட்சிப் பகுதியாகவும், ஆட்சி செலுத்துகிற பகுதியாகவும் விளங்கியது. குறிப்பாக, அரசின் தலைநகரமாகத் திருவிதாங்கோடு இருந்தது.

புது குடியேற்றம்

இங்குள்ள கடலோரம் வாழ் தமிழ் பேசும் மீனவ மக்கள் தங்கள் பிழைப்பிற்காகவும், தொழில் செய்து முன்னேறவும், திருவிதாங்கூர் நாட்டின் மீன்வளம் நிறைந்த, இயற்கைத் துறைமுகப் பகுதியான கொல்லத்தை (Quilon) அடுத்த ஒரு பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். அவ்விடமே இப்போது மூதாக்கரை என்னும் பெயர் பெற்ற கடலோரத் திருத்தலமாக விளங்குகிறது.

இப்பகுதியில் குடியேறிய தமிழ் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்த காரணத்தால், தம் வழிபாட்டிற்காக தற்காலிக ஆலயம் ஒன்றை அமைத்து, தமிழ் மொழியில் வழிபட்டு வந்தனர். கி.பி. 1610 இல் திரு அவையின் தலைவரான புனித பேதுருவின் பெயரால் ஆலயம் ஒன்று அமைத்தனர். இது தொடக்கத்தில் கொச்சி வாராப்புழை மறைமாவட்டத்திலுள்ள ஒரு கிளைப்பங்காக இருந்து, பின்னாளில் தனிப்பங்காக மாறியது. இங்கு அண்மைக் காலம் வரையில் தமிழ் வழியில் ஒரு பள்ளி செயல்பட்டு வந்தது. தற்போது மலையாளமே பயிற்று மொழியாக உள்ளது.

இன்று கொல்லம் மறைமாவட்டத்தின் கீழ் அமைந்துள்ள மூதாக்கரைப் புனித பேதுரு ஆலயப் பங்கு, குழந்தை இயேசு திருத்தலமாகவும் விளங்குகிறது. இங்கு மலையாளத்தில் திருப்பலியும், ஏனைய செபமாலை, நவநாள், திருமணி ஆராதனை மற்றும் செபங்களைத் தமிழ் வழியிலும் மக்கள் செய்து வருகின்றனர்.

அன்னை தெரேசா

1970 களில் மூதாக்கரை ஆலயத்தில் உள்ள குழந்தைகளுக்கு தங்கசேரியிலுள்ள அன்னை தெரேசா சபையைச் சேர்ந்தMissionary of the Sisters of Charity அருள்சகோதரிகள் மறைக்கல்வி கற்றுக் கொடுத்து வந்தார்கள். 1972 ஆம் ஆண்டு, நடைபெற்ற மாதாசபை (Sodality) தொடக்க விழாவுக்கு புனிதரான அன்னை தெரேசா அவர்கள் மூதாக்கரைக்கு வருகை புரிந்து சிறப்பித்தார்கள். 1998 ஆம் ஆண்டு பழைய கோயிலுக்கு அருகாமையில் புத்தாலயம் ஒன்று கட்டப்பட்டு, அர்ச்சிக்கப்பட்டு, இன்று எழிலோடு காட்சி தருகிறது.

ஆயர் கிளமென்ட் ஜோஸப் கொலாசோ லெய்சோ சே.. (1745-1771)

இவர் மத்திய போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள புனித நூனோ அல்வாரிஸ் பெரைரா பிறந்த திருத்தல கிராமமான, செர்னாசே தோ போஞ்சார்திம் கிராமத்தில் 1704 ஆம் ஆண்டு, டிசம்பர் 17 ஆம் நாள் பிறந்தார். இவர் துறவற இயேசு சபையில் சேர்ந்து 31.07.1736 அன்று குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். இயேசு சபைக் குருவான இவர் பணிபுரிய இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.

குருவாகப் பணி செய்துவந்த நிலையில் 08.03.1745 அன்று, கொச்சி மறைமாவட்ட ஆயராக நியமனம் பெற்றார். அப்போதைய கொச்சி மறைமாவட்டம் என்பது மலபார் தொடங்கி, மேற்குக் கடற்கரை பகுதி முழுவதும் உள்ளடக்கி, தொடர்ந்து கிழக்குக் கடற்கரையில் சில பகுதிகள் உட்பட இலங்கை வரை அமைந்திருந்தது. பின்னர் அது வளர்ந்து வளர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றிலும் பரந்து விரிந்து சென்றதாக அறிய வருகிறோம்.

இந்நிலையில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியார் கொச்சியைக் கைப்பற்றி தமது ஆட்சியை நிறுவினர். அவர்கள் இயேசு சபைக் குருக்களை தமது பகுதியில் வாழவோ பணி செய்யவோ அனுமதிக்கவில்லை. எனவே, ஆயர் கிளமென்ட் ஜோசப் தமது பணித்தளத்தை மாற்றி, கொல்லத்திற்கும், திருவனந்தபுரத்துக்கும் இடைப்பட்ட ஆற்றின்கல்லின் அருகிலுள்ள, கடலோரப் பகுதியான அஞ்சுதெங்கில் தங்கி இருந்து, தனது ஆயருக்குரிய மேய்ப்புப் பணியைத் தொடர்ந்தார். அஞ்சு தெங்கு தொடங்கி கொல்லம் மூதாக்கரை வரை உள்ள பகுதி அவரது பயண இடமாகத் திகழ்ந்தது.

அஞ்சு தெங்கில் வாழ்ந்த ஆயர் கிளமென்ட் ஜோசப் அவர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கையும், மிகுந்த அர்ப்பணமும், ஏழைகள்பால் கரிசனையும், பணி ஆர்வமும், அயரா உழைப்புக்குச் சொந்தக்காரருமாய் இருந்தார். ஆயர் தனது பணி நிறைவுக்குப் பின்னரும் மூதாக்கரையில் தான் தங்கி இருந்தார். அப்போது, ஏழை எளிய மக்களோடு நெருக்கமான உறவு கொண்டு வாழ்ந்தார். எளிய மனம் கொண்ட அவர், ஏழை மக்களின் மீது அதிக அன்பு காட்டியதோடு, அவர்களின் முன்னேற்றத்தில் கரிசனையும் காட்டினார்.

அவருக்குக் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியுமாம். அதனால் அரைகுறை தமிழில் மக்களோடு மக்களாகக் கலந்து உரையாடி, மகிழ்வாராம். அவர் மக்களோடு ஒன்று சேர்ந்து செபிக்கும் பழக்கமும் உள்ளவராம்.

இறுதியாக, 31.01.1771 அன்று மேதகு ஆயர் அவர்கள் தனது 67 ஆவது வயதில் இறைபதம் சேர்ந்தார். மக்களின் அன்புக்குரியவராக வாழ்ந்த அவர், தம் மக்களின் கண்ணீரில் பிரியா விடைபெற்று, மூதாக்கரை ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவருடைய கல்லறை இன்றும் அவ்வாலயத்திற்கு அழகு சேர்க்கிறது.

புனித தேவசகாயத்தின் மறைசாட்சிய மரணம்

முதல் இந்திய மறைசாட்சியான புனித தேவசகாயம், தனது கிறிஸ்தவ நம்பிக்கை வாழ்வுக்காக, மூன்று ஆண்டுகள் அளவாக கடினமான துயர்மிகு பாடுகளைத் தொடர்ந்து அனுபவித்து வந்த நிலையில், 1752 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 14 ஆம் நாள் நடுநிசி வேளையில், ஆரல்வாய் மொழியிலுள்ள காற்றாடி மலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு, இயேசுவைப்போல, ஐம்பெரும் காயங்களைத் தன்னுடலில் தாங்கியவராய், மறைசாட்சியாக, வீர மரணம் அடைந்தார்.

இதை அறிந்த கொச்சி ஆயர் மேதகு கிளமென்ட் ஜோசப் அவர்கள் அஞ்சு தெங்கு ஆலயத்தில் நன்றித் திருப்பலி நிறைவேற்றி, நமக்கு ஒருமறைசாட்சி கிடைத்துள்ளார்என அறிக்கையிட்டு, உணர்வுப்பூர்வமாக மறையுரை ஆற்றி, “தெதேயும்என்ற நன்றிக் கீதமும் பாடினார். தொடர்ந்து தனது ஆளுகைக்கு உட்பட்ட ஆலயங்கள் அனைத்திலும் ஆலய மணிகளை ஒலிக்கச் செய்து, நன்றிக் கீதம் பாடும்படி ஆணையிட்டார்.

1756 ஆம் ஆண்டு, நவம்பர் 15 அன்று ஆயர் அவர்கள்  திருத்தந்தை 14 ஆம் பெனடிக்டை சந்தித்து, தனது மறைமாவட்டத்தின் ஐந்தாண்டு அறிக்கையை (Quinquennial report) சமர்ப்பித்தார். அதில் தேவசகாயத்தின் மறைசாட்சிய மரணம் பற்றிய வரலாற்றை மிகத் துல்லியமாக எழுதி இருந்தார்.

உரோமை இரகசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாப்பாக இருந்த இந்த ஆவணத்தை, கோட்டாறு மறைமாவட்ட வேண்டுகையாளர் அருள் தந்தை E. ஜான் குழந்தை அவர்கள் 28.10.2005 அன்று கண்டு எடுத்தார். ஆயரின் இந்த அறிக்கையே மறைசாட்சி தேவசகாயம் புனிதர் நிலை அடைய உதவிய மிக முக்கியமான முதன்மை வரலாற்று ஆவணம் ஆகும். மறைசாட்சி தேவ சகாயம் புனிதர் நிலையடைய துணைநின்ற முதல் காரணமானவர் மேதகு ஆயர் கிளமென்ட் ஜோசப் அவர்கள் என்றால் மிகை அல்ல.

கல்லறை கட்டமைத்த திருத்தலம்

           எளிய புறநகர் கடலோர மீன்பிடித் துறைமுக கிராமமான கொல்லம் மூதாக்கரை புனித பேதுரு ஆலயப் பங்கில், ஆயர் கிளமென்ட் ஜோசப் அவர்களின் கல்லறை இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. 04.06.2022 அன்று கொச்சி மறைமாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் (PRO) அருள்தந்தை ஜான் சேவியர் அவர்கள் முன்னிலையில், கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு பால் ஆன்றனி முல்லசேரி அவர்கள், மறைசாட்சி புனித தேவசகாயத்தின் திருவுருவம் தாங்கிய திருப்பீடத்தை அர்ச்சித்து, திருப்பலி பீடத்தில் மறைசாட்சியின் திருப்பண்டத்தையும் (relics) நிறுவி, திருநிலைப்படுத்தினார்கள். அதனால் இன்று கொல்லம் மூதாக்கரை புனித தேவசகாயத்தின் திருத்தலமாகவும் திகழ்கிறது.

Comment