No icon

திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்

ஆசியத் திரு அவைகளுக்கு ஆதரவளித்தவர்- கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்

முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் இறப்பு, உலகளாவியத் திரு அவைக்கு, குறிப்பாக ஆசியத் திரு அவைகளுக்கு மிகப்பெரிய இழப்பு, ஏனெனில் இவர் அத்திரு அவைகளுக்கு பெரிய அளவில் ஆதரவளித்தவர் என்று, மும்பை பேராயரான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

டிசம்பர் 31, சனிக்கிழமை காலையில் தனது 95 வது வயதில் மறைந்த முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள் பற்றி ஆசியச் செய்திகளிடம் கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இத்திருத்தந்தை, இந்தியாவை அன்புகூர்ந்தார், இந்தியா மீது சிறப்பான கவனம் செலுத்தினார் மற்றும், இந்தியாவோடு தொடர்பில் இருந்தார் என்றும், இவரது மறைவு இந்தியத் திரு அவைக்கு மிகப்பெரிய இழப்பு என்று கூறியுள்ளார்.

திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களே, என்னைக் கர்தினாலாகவும் மும்பை பேராயராகவும் நியமித்தவர் என்றும், நான் நோயுற்றிருந்தபோது என்னோடு தொடர்பில் இருந்தார் மற்றும், எனக்காகச் செபிப்பதாகத் தொடர்ந்து செய்திகளை அனுப்பிக்கொண்டே இருந்தார் என்றும், நான் அவருக்கு மிக நெருக்கமானவனாக இருந்தேன் என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை நிறைவுறச் செய்ததுபோன்று, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் விதைத்தவை மற்றும், அவரது எண்ணங்களை முழுமைபெறச்செய்தவர் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இறையியலின் வளர்ச்சிக்குப் பெரியஅளவில் பங்களித்தவர் என, இத்திருத்தந்தையை வரலாறு மிக மிக நன்றாகப் பாராட்டும் எனவும், கிறிஸ்துவின் வாழ்வு குறித்த இத்திருத்தந்தையின் நூல்கள் மிகவும் உள்தூண்டுதல் தருபவை எனவும் உரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இத்திருத்தந்தை பேசியுள்ள பல்வேறு தலைப்புகள் குறித்தும், இவர் திருவிவிலியத்தை மிக ஆழமாகப் புரிந்துகொண்டுள்ளது குறித்தும் நான் வியப்படைந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்திருத்தந்தை இறையியல் வல்லுநராக இருந்தாலும் திருவழிபாடு குறித்த இவரின் நூல்களும் மிகவும் மதிப்புமிக்கவை என்று கூறியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஒரு தலைவரை நான் இழந்திருப்பதாக நினைக்கின்றேன் என்றும், அவரது உடல்நலம் காரணமாக அண்மைக் காலங்களில் அவரை நான் சந்திக்க இயலவில்லை என்றும் கூறியுள்ளார்.

Comment