தலைமைப் பணி
திரு அவைக்காக இறுதிவரை செபித்த திருத்தந்தை
- Author குடந்தை ஞானி --
- Friday, 06 Jan, 2023
முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் தம் இறுதி ஆண்டுகளில் அமைந்த மனநிலையுடன் தனிமையும் அமைதியும் நிறைந்த வாழ்க்கை வாழவே முற்பட்டார். திருத்தந்தையின் தனிச் செயலராக பேராயர் ஜார்ஜ் கன்ஸ்வைன் அவர்கள் ‘தலைமைப்பணியிலிருந்து ராஜிநாமா செய்த பிறகு, பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், தான் ஒரு முதுபெரும் துறவி’ என்பதை நன்கு புரிந்திருந்தார் என்று குறிப்பிடுகிறார்.
பிப் 28, 2013க்குப் பிறகு, இவரே, எல்லாவற்றிற்கும் மேலாக, தாய்திரு அவைக்காகவும் அவர்தம் வழித்தோன்றலான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகவும் கிறிஸ்துவால் நிறுவப்பட்ட பேதுருவின்பணிக்காகவும் செபிக்க கடமைப்பட்டிருப்பதை உணர்ந்து தம்மை அர்ப்பணித்துக்கொண்டார்.என்று செப்டம்பர் 2018 அன்று உரோமையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்டார்.
திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோதுகூட அவர்தன் உடல்நலத்தைக் குறித்து கவலைப்பட்டார். ஆம் 78 ஆம் வயதில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1730 ஆம் ஆண்டு 12 ஆம் கிளமெண்ட் அவர்களுக்குப் பிறகு, மிகவும் வயதான நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை இவரே. அவர்தம் தலைமைப் பணித்துவம் மிக குறுகியதாக இருக்கும் என்பதை திருத்தந்தை அவர்களே யூகித்தார். உடல் மற்றும் மனவலிமை குறைவதையும் தொடர்ந்து அதிகரித்து வரும் தம் பணிச்சுமையின் காரணமாக தனது கடமைகளை போதுமான அளவு செய்ய இயலாத நிலையையும் உணர்ந்தே விருப்ப ஓய்வுப் பெற்றார். ஓய்வுக்குப் பிறகும் முதுபெரும் துறவியாக தாம் தலைமையேற்று வழிநடத்திய திரு அவைக்காக, கிறிஸ்துவின் மணமகளுக்காகச் செபித்தார். இறுதி மூச்சு வரை செபித்தார்.
Comment