No icon

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற

முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் இறுதிச்சடங்கு

சனவரி 5 ஆம் தேதி வியாழக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை  16 ஆம் பெனடிக்ட் அவர்களின் இறுதிச்சடங்குத் திருப்பலியானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் அறுபதுக்கும் மேற்பட்ட கர்தினால்கள், நானூறு ஆயர்கள், நாலாயிரம் அருள்பணியாளர்கள், அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும் 600 க்கும் மேற்பட்ட பத்திரிக்கை மற்றும் தகவல் தொடர்பு பணியாளர்களின் பங்கேற்போடு சிறப்பாக, அதே சமயம் எளிமையாக நடைபெற்றது. 320 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1802 ஆம் ஆண்டு திருத்தந்தை 7ஆம் பயஸ் அவர்களால், அவருக்கு முன்னாள் இருந்த திருத்தந்தை 6 ஆம் பயஸ் அவர்களுக்காக இறுதிச்சடங்குத் திருப்பலி வத்திக்கானில் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2022 ஆம் ஆண்டுதான் ஒரு திருத்தந்தை, மறைந்த திருத்தந்தையின் இறுதிச்சடங்குத் திருப்பலியை நிறைவேற்றுவது இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது. உலக கத்தோலிக்க தலைவர்கள், இத்தாலிய மற்றும் ஜெர்மன் அரசுத்தலைவர்கள் பலர் இவ்விறுதிச் சடங்குத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.

வெண்பனி மேகம் வத்திக்கான் நகரத்தை சூழ்ந்து நிறைந்திருந்தது, விண்ணகத்தூதர்கள் அணியும் மண்ணக மக்களோடு இணைந்து திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வந்தது போன்ற சூழலை உருவாக்கியது. உள்ளூர் நேரம் காலை 8.45 மணியளவில் சைப்ரஸ் மரத்தாலான பெட்டியில் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் உடல் எடுத்து வரப்பட்டது. கூடியிருந்த மக்கள் அனைவரும் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற செபமாலை செபித்து, இறுதி அஞ்சலிப் பாடல்கள் பாடினர். இலத்தீன் மற்றும் இத்தாலிய மொழியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புக்கொடுத்த திருப்பலியில் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே உடன் இருந்து வழி நடத்தினார். முதல் வாசகம் இலத்தீனிலும், இரண்டாம் வாசகம் ஆங்கிலத்திலும், நற்செய்தி வாசகம் இத்தாலியத்திலும் வாசிக்கப்பட்ட திருப்பலியில் திருத்தந்தை மறையுரை வழங்கினார்.

திருத்தந்தையின் மறையுரை சுருக்கம்

தந்தையே உமது கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்று (லூக் 23:46) இயேசு சிலுவையில் சொன்ன அவரது கடைசி மூச்சின் வார்த்தைகளான இவைகள் தனது வாழ்நாள் வரை அவர் செய்த அனைத்தையும் இறைத்தந்தையை நினைத்து அவர் வாழ்ந்ததை சுருக்கமாக எடுத்துரைக்கின்றன. இறைத்தந்தையின் கைகள் இடைவிடாத தன்னம்பிக்கை, மன்னிப்பு, இரக்கம், குணப்படுத்துதல், கருணை, ஆறுதல், ஆசீர்வாதம் போன்றவற்றை வழங்கும் கரங்கள். இத்தகைய கைகளில் தன்னை ஒப்படைத்ததுதான் இயேசு தன் உடன்சகோதர சகோதரிகளின் கைகளில் தன்னை ஒப்படைக்க வழிவகுத்தது.

தனிநபர்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும், அவர்களது தனிப்பட்ட வாழ்விற்கான வழிகளையும் திறந்த தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப இயேசுவும் தன்னை வடிவமைக்க அனுமதித்தார். அனைத்துத் துன்பங்களையும், தனது தோளில் சுமந்தார். அவர் நம்மீது கொண்ட அன்பிற்காகத் தம் கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்புகளைத் திருத்தூதர் தோமாவிடம் காட்டியதைப் போல இன்று நம்மிடமும் காட்டுகின்றார் என் கைகளைப் பார் என்று (யோவா 20:27). ஆணிகளால் துளையிடப்பட்டு உண்டான அக்கைகளின் காயங்கள், கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பை அடையாளம் கண்டு, அதில் நம்பிக்கை கொள்ள நம்மை தொடர்ந்து அழைக்கின்றன.

மேன்மையான பக்தி இதயம்

"தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்" என்பதே இறைவன் அமைதியாய் நமக்குள் தூண்டும் அழைப்பும் வாழ்க்கைத் திட்டமும் ஆகும். ஒரு குயவனைப் போலவும், இயேசுவின் இதயத்தைப் போலவும் அவர் பணியாற்றும் ஒவ்வொருவரின் இதயத்தையும் வடிவமைக்க விரும்புகின்றார். கடவுளுக்கும் கடவுளின் மக்களுக்கும் பணியாற்றுவதற்கான சேவை மனம், கடவுளின் மிகச்சிறந்த பரிசிற்கான நன்றியுணர்விலிருந்து பிறக்கின்றது.

மறைந்த திருத்தந்தை பெனடிக்ட் தன் மறையுரைகளில் வலியுறுத்தியது போல, ‘நீங்கள் எனக்குச் சொந்தமானவர்கள், நீங்கள் என் பாதுகாப்பில் இருக்கின்றீர்கள், என் கைகளில் என் இதயத்தில் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள், என் கையில் இரு. உன்னுடையதை எனக்குக் கொடுஎன்று இறைவன் நமக்கு தெரிவிக்கின்றார். இத்தகைய இதயமே தம்முடைய சீடர்களின் பலவீனமான கைகளுக்குத் தம்மை ஒப்படைப்பதற்குத் தயாராக இருக்கும் இணக்கத்தையும் நெருக்கத்தையும் இயேசுவினிடத்தில் வெளிப்படுத்தியது. அதனால்தான் அவர் தன் உடலை அவர்களுக்கு அளித்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். எனது நினைவாக இவ்வாறுச் செய்யுங்கள்" என்றுக் கையளிக்கின்றார். (லூக் 22:19).

ஜெப பக்தி

ஒவ்வொரு தலைவரும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு செபம், மௌனமாக வடிவமைக்கப்பட்டுக் கடவுள் மேல் கொண்ட நம்பிக்கையுள்ள கீழ்ப்படிதலினால் தன் மந்தையை வழி நடத்த உதவுகின்றது. நல்ல ஆயனைப் போல தன் மந்தையை சுமந்து வழி நடத்தி, பராமரிக்க உதவுகின்றது. போராட்டமான சூழல்களில் மந்தையின் மாண்பு பாதிக்கப்படும் சூழலில் பாதுகாப்பளிக்க உதவுகின்றது. தவறான புரிதல்கள் இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், நம்பிக்கையுடன் தயாராக இருக்கும் அமைதியின் ஆவியை இறைவன் மேய்ப்பர்களுக்கு வழங்குகிறார். மந்தைகளுக்கு உணவளித்தல் என்பது அதன் மீது கொண்டுள்ள அன்பையும் அம்மந்தைகளுக்காக துன்பப்படத் தயார் என்பதையும் குறிக்கின்றது. ஆடுகளை அன்பு செய்தல் என்பது உண்மையிலேயே அவைகளுக்கு நல்லதைக் கொடுப்பது, இறைவார்த்தையின் உண்மையையும், உடனிருப்பையும், ஊட்டத்தையும் அளிப்பது.

சிலுவை அடியில் நின்ற மரியா

நற்செய்தியின் அழகு மற்றும் மகிழ்ச்சியைத் தொடர்ந்து பின்பற்றுவதில் சிலுவை அடியில் நின்ற மரியா நம் அனைவருக்கும் பலனளிக்கும் சாட்சியாகத் திகழ்கின்றார். துன்பம் நிறைந்த சூழலில் நின்ற மரியா, அமைதியான மற்றும் பொறுமையான நம்பிக்கையோடு கடவுள் தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற உறுதியுடன் நிலைத்திருந்தார். இறைவனின் இறுதி வார்த்தைகளையும், அவருடைய வாழ்நாள் முழுமையின் சாட்சியையும் உறுதியாகப் பற்றிக் கொண்டு, ஒன்றிணைந்த திரு அவையாக, இறைவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிய, நம் முன்னாள் திருத்தந்தையைத் தந்தையின் கரங்களில் ஒப்புக்கொடுக்கக் கூடியுள்ளோம். அந்த இரக்கமுள்ள கரங்கள் நற்செய்தியின் ஒளியில் சுடர்விட்ட அவரது வாழ்வைக் காணட்டும். ஆன்மீகத் துணையை வழங்குமாறு வலியுறுத்திய நண்பருக்கு புனித பெரிய கிரகோரி கூறிய வரிகளான, “வாழ்க்கை என்னும் படகு விபத்துக்கு உள்ளாகும் நேரத்தில் செபத்தின் துணை கொண்டு என்னைத் தாங்க வேண்டும் என்று மன்றாடுகிறேன். எனது எடை என்னை வீழ்த்தினாலும், உமது மேன்மையுள்ள கரம் என்னை உயர்த்தும்." என்பவை ஒரு தலைவரால் தனியாக எதையும் செய்ய முடியாது. இறைத்துணை அவசியம் என்ற விழிப்புணர்வுடன் செயல்பட்டதைக் காண முடிகின்றது.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை, அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி, இளைப்பாறும் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களை இறைத்தந்தையின் கைகளில் ஒப்படைக்கக் கூடியுள்ளோம். உயிர்ப்பு நாள் அன்று கல்லறை சென்ற பெண்களைப் போல நாமும் நன்றியின் நறுமணத்தோடும், நம்பிக்கையின் தைலத்தோடும், இறைவனின் அழியாத அன்பை அவர் பெற செபிக்க வந்திருக்கிறோம். பல ஆண்டுகளாக அவர் நமக்கு அருளிய அதே ஞானம், மென்மை, மற்றும் பக்தியுடனும் இதைச் செய்ய விரும்புகிறோம். எனவே, ஒன்றாக இணைந்து கூறுவோம், ‘அப்பா, தந்தையே! உம் கைகளில் அவருடைய ஆவியை நாங்கள் ஒப்புக்கொடுக்கிறோம்’.

மணமகனாம் இயேசுவின் உண்மையுள்ள நண்பராம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களே, இறைவனின் குரலை நீங்கள் கேட்கும்போது, இப்போதும் எப்போதும் உங்கள் மகிழ்ச்சி அவரில் நிறைவடையட்டும்!

இறுதிச் சடங்கு நிகழ்வுகள்

திருத்தந்தையின் மறையுரைக்குப்பின் வாசிக்கப்பட்ட நம்பிக்கையாளர் மன்றாட்டுகளுள், மறைந்த திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களுக்காக முதல் மன்றாட்டு ஜெர்மன் மொழியிலும் அதன்பின் பிரெஞ்சு, அரபு, போர்த்துகீசியம் மற்றும் இத்தாலிய மொழிகளிலும் செபிக்கப்பட்டன.

திருப்பலி நிறைவில் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை ஆசீர்வதித்த பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வணக்கம் செலுத்தினார். பின்னர் புனித பேதுரு பெருங்கோவில் அடி நிலக் கல்லறையில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் முதலில் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் உடல் நன்முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

Comment