மறைவல்லுநர்
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
திரு அவை ஓர் மறைவல்லுநரை இழந்துள்ளது. இதுதான் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மறைவு செய்தி வெளிவந்ததும் பலர் வெளிப்படுத்திய எண்ணவோட்டமாக இருந்தது. ஈராக்கின் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ, “திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இறையியல் தளத்தில் கத்தோலிக்கத் திரு அவைக்கு விட்டுச்சென்றுள்ள அனைத்தையும் பார்க்கையில் ஒருநாள் திரு அவையின் வல்லுநராக அறிவிக்கப்படுவார்” என்று சான்றும் உரைத்துள்ளார்.
ஆம், ஓர் இறையியல் பேராசிரியராக தனது குருத்துவப்பணியைத் தொடங்கி, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பங்கேற்று மகத்துவமான பங்களிப்பை நல்கி, பன்னாட்டு இறையியல் கழக தலைவர் பொறுப்பை வகித்து, ஆழமான இறையியல் கருத்தாக்கச் சிந்தனைகளை எழுத்துகளாக வடித்து, தலைமைப்பொறுப்பு பணிக்காலங்களில் திரு அவையின் நம்பிக்கைக் கோட்பாடுகளை வளர்ப்பதில் அக்கறைக்காட்டி, இறைமக்களின் நம்பிக்கை வாழ்வை ஆழப்படுத்தியவர் மறைந்த நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட். எனவே, இவர் என்றும் ஓர் மறைவல்லுநர் என்பதில் ஐயமில்லை. இத்தகு மாபெரும் நூற்றாண்டு காவியம் இன்று துயில் கொண்டிருக்கிறது. இக்காவியத்தின் மறைவல்லுநர் போதனைகள் சிலவற்றை இரத்தினச் சுருக்கமாக தெரிந்து கொள்வது நமது நம்பிக்கை வாழ்வை நிச்சயம் ஆழப்படுத்தும், வலுப்படுத்தும், உறுதிபடுத்தும்.
திரு அவையில் மறை வல்லுநர்கள்
தங்கள் இறையியல் போதனைகளாலும், விலைமதிப்பற்ற பிறரன்பு சேவைகளாலும் கத்தோலிக்கத் திரு அவைக்கு ஒருவர் ஆற்றும் மிகப்பெரிய பங்களிப்பை பெருமிதப்படுத்தும் விதமாய் கொடுக்கப்படும் உயர்நிலையே ‘மறைவல்லுநர்’. இச்சிறப்பு பட்டத்தின் வழியாக இரண்டு காரியங்கள் நிகழ்கிறது. ஒன்று, குறிப்பிட்ட அந்நபர் திரு அவைக்கு ஆற்றும் பங்களிப்பை உலகிற்கு பiசாற்றுகிறோம். குறிப்பாக, அவரது இறையியல் சித்தாந்தங்கள், போதனைகள் வெளிச்சமிடப்படுகின்றன. மற்றொன்று, அந்நபரின் இறையியல் பங்களிப்பு மூலம் நமது நம்பிக்கை வாழ்வை வலுப்படுத்தி சான்று வாழ்விற்கு நம்மை அர்ப்பணிக்கிறோம்.
ஏற்கனவே மாபெரும் மறைவல்லுநர்களை தாய்த்திரு அவை நமக்கு தந்திருக்கிறது. திருத்தந்தை முதலாம் கிரகோரி முதல் புனித அம்புரோசியார், புனித அகஸ்டீன், புனித ஜெரோம், புனித யோவான் கிறிஸ்சோஸ்தம், புனித அத்தனாசியார், புனித தாமஸ் அக்குவினாஸ், புனித பொனவெந்தர், புனித அன்சலேம், அவிலாவின் புனித தெரேசா, சியன்னா நகர் புனித கத்ரீன், லிசியோ நகரின் புனித தெரேசா என இரு பால்மறை வல்லுநர்களின் பட்டியல் நீள்கிறது. 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் தேதி, திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களும் பின் ஜென் நகர் ஹில்டெகார்டு மற்றும் அவிலாநகர் யோவான் ஆகிய இருவரையும் திரு அவையின் 34 ஆவது, 35 ஆவது மறைவல்லுனர்களாக அறிவித்தார்.
மறைவல்லுநர்களின் மகத்துவம் என்ன? என்பதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்தாண்டு (2022) மகளிர் தினச் செய்தியில் வழங்கிய கூற்று மிகவும் பொருந்தி நிற்கிறது. அந்நாளில் அவர் மகளிர் மறைவல்லுநர்களான அவிலா தெரேசா, சியன்னா காத்ரீன், லிசியத் தெரஸ், பிங்கென் ஹில்டர்கார்டு, சுவீடன் நாட்டு பிரிஜிட், திருச்சிலுவையின் தெரேசா பெனடிக்டா ஆகியவர்களை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். போரினால் துன்புறும் இன்றைய நம் உலகிற்கு ஒளியையும், நம்பிக்கையையும் இவர்கள் வழங்குகின்றார்கள் என்றும்; துன்பங்களை எதிர்கொள்வதற்குத் துணிவு, எதார்த்தத்தை ஏற்பதற்குரிய திறன், கடவுளின் திட்டத்திற்கேற்ப மிகவும் அழகானது மற்றும் மனிதம் மிக்கது ஆகியவற்றை ஊக்குவிக்கும் இயல்பான ஆவல்,உலகம் மற்றும் வரலாறு குறித்த தொலைநோக்கு கண்ணோட்டம் ஆகிய இன்றைய உலகிற்குத் தேவையான பண்புகளை இம்மறைவல்லுநர் புனிதர்களின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம் என்றார்.இப்பரிணாமங்களை உள்ளடக்கி பார்க்கையில் மறைந்த நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் திருமறை பணிவாழ்வுச்செயல்பாடுகளும் விரைவில் அவரை மறைவல்லுநர் பட்டியலில் இடம் பெறச் செய்யும் என்பது திண்ணம்.
மறைவல்லுநர் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
திருப்பணியாளர்களின் பணியும், வாழ்வும் பற்றி பேசும் இரண்டாம் வத்திக்கான் ஏடு, முப்பணிகளில் போதிக்கும் பணியை முதன்மைப்படுத்துகிறது. காரணம், திருப்பணியாளர்களின் முதன்மையான பணியே போதிக்கும் பணிதான். திருவிவிலியத்தை, அதன் மதிப்பீடுகளை, திரு அவையின் கோட்பாடுகளை, இறையியல் நம்பிக்கைகளை நெறிபிறழாமல் ஒருவரின் கத்தோலிக்க விசுவாசத்தை உறுதிப்படுத்தும் விதமாய் போதித்தல் அவசியம். தனது எழுத்து மற்றும் போதித்தல் பணி வழியாக இதனை கடைப்பிடித்து திரு அவையை விசுவாச ஒளியில் வழிநடத்தியவர்தான் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.
Deus caritas est அதாவது, “கடவுளே அன்பு” என்பது அவரது முதல் திருமடல். இது திரு அவையின் வரலாறு முழுவதையும் திரும்பிப் பார்ப்பதற்கு நமக்கு உதவுகின்றது. கடவுளின் திருமுகத்தையும், பிறரன்பையும் திரு அவையின் வாழ்வில் அதிகமதிகமாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றது. திரு அவையில் உள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு நிறுவனமும் தமது நடவடிக்கைகளில் கடவுள் மனிதரை அன்பு கூர்கிறார் என்பதை நிரூபிக்க அழைப்பு விடுக்கிறது. சுருங்கக்கூறின், கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள மனிதரால் கடவுளுக்குத் தன்னை வழங்கவும், மற்றவரை அன்பு செய்யவும் இயலும் என்பதனை மையங்கொண்டு இம்மடல் எழுதப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு, நவம்பர் 30 ஆம் தேதி Spe Salvi அதாவது, “எதிர்நோக்கால் மீட்கப்பட்டுள்ளோம்” என்ற தனது இரண்டாவது திருமடலை வெளியிட்டார். நாம் எப்படி நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியும்? என்பதற்கான கேள்வியை இம்மடல் நமக்குள் எழுப்புகிறது. இறைவேண்டல்களாலும், நற்செயல்களாலும், ஏன் துன்பங்களினாலும் நமது நம்பிக்கை வாழ்வை வலுப்படுத்த முடியும் என்கிறார் திருத்தந்தை. சமுதாய நீதி குறித்த திரு அவையின் போதனைகளை கருப்பொருளாகக் கொண்டு, 2009 ஆம் ஆண்டு, ஜூலை 7 ஆம் தேதி வெளிவந்த Caritas inveritate அதாவது, “உண்மையில் பிறரன்பு” என்பது மூன்றாவது திருமடல். இது பிறரன்பிலும், உண்மையிலும் ஏற்படும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் பற்றி பேசுகிறது. புனித திருத்தந்தை 6 ஆம் பவுல், ‘மக்களின் முன்னேற்றம் (Populorum progressio)’ என்ற திருமடலை வெளியிட்டு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்த இம்மடலில் திருத்தந்தை மனிதச் சூழலியல் பற்றி மட்டுமின்றி, உண்மையான மனித முன்னேற்றம், ஒவ்வொரு சூழலிலும் முழுமனிதரைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு, திருத்தந்தையாக அவர் எழுதிய மூன்று திருமடல்களும் இறைமக்களில் உண்மையான நம்பிக்கை வாழ்வை ஊட்டும் விதமாகவும், நம்பிக்கை வாழ்விற்குசெயல்வடிவம் கொடுக்கும் காரியங்களில் ஈடுபட தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளன.
சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி குறிப்பிடுவது போல, “திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தனது ஞானத்தால் அனைவரையும் தூண்டி இழுக்கக்கூடிய இறையியலாளர் மற்றும் துணிச்சலான நல்லாயன். தனது வாழ்வில் விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு - இம்மூன்றிற்கும் வலிமையோடு சான்று பகர்ந்தார். தனது ‘நம்பிக்கையின் வாசல்’ (Porta Fidei) என்ற அறிவுரை மடல் வழியாக நம்பிக்கை ஆண்டைகொண்டாட அழைப்பு விடுத்து, அவ்வாண்டில் எல்லா கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு மற்றும் கத்தோலிக்க மறைக்கல்வியை வாசிக்க வாய்ப்பை நல்கினார். இங்ஙனம், மக்கள் தங்கள் விசுவாச அறிவை ஆழப்படுத்த உதவினார்”.
ஓர் இறையியல் அறிஞராய், மறைக்கல்வி போதனாவின் நல் ஆசானாய், திரு அவை அறநெறிக் கோட்பாடுகளின் காவலனாய், தனது சிந்தையாலும், செயலாலும் வாழ்ந்து, மறைந்த, நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இறுதியாக விட்டுச்சென்ற செய்தி : “ஆண்டவரே, நான் உம்மை அன்பு கூர்கிறேன்!”. அன்பான கடவுளை அன்றாடம் அன்பு செய்வோம். எப்படி? அன்றாட அயலானில் அன்பான கடவுளைக் கண்டு கொள்வோம். திருத்தந்தையின் வாழ்வும், படிப்பினையும் கற்றுக்கொடுக்கும் மதிப்பீடுகளை, திரு அவையிலிருந்து அன்றாடம் நாம் கற்றுக்கொள்ளும் படிப்பினைகளோடு வாழ்வாக்கி கிறிஸ்தவ நம்பிக்கையில் திடம் பெறுவோம்.
Comment