No icon

புனித பிரான்சிஸ் சலேசியார்

நானூறு ஆண்டுகளாய் எம் நாடித் துடிப்பு

புனித பிரான்சிஸ் சலேசியார், பிரான்ஸ் நாட்டில் ஆனேசி நகருக்கு அருகிலுள்ள தோரன்ஸ் என்னுமிடத்தில், 1567 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 21 ஆம் நாள் பிரான்சிஸ் திபாய்சி மற்றும் பிராங்கோயிஸ் சியோன்னாஸ் தம்பதியினருக்கு 13 பிள்ளைகளில் மூத்தமகனாக பிறந்தார். அவரின் பிறப்பால் அவருடைய பெற்றோர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சலேசியார் மாளிகையே கொண்டாடி மகிழ்ந்தது. ஆனால், அதே சமயம் பிறந்த இக் குழந்தை ஏழாம் மாதத்திலேயே பிறந்ததால், பயமும், பதற்றமும் அவரது பெற்றோரை ஆட்கொண்டது. கொண்டாட்டம் ஒருபுறம். துக்கம் மறுபுறம்.

பெற்றோர்

இவரது தந்தை "பிரான்சிஸ் திநொவெல்லஸ்" ஒரு மிகச்சிறந்த கத்தோலிக்க கிறிஸ்தவர். ஒழுக்கமும் திறமையும், துணிச்சலும் நிறைந்த இராணுவ சிப்பாய். போரில் பல வெற்றிகளைக் கண்டவர்.

சலேசியாரின் தாயார் "பிராங்கோயிஸ் சியோன்னாஸ்". கடவுள்மீது ஆழ்ந்த பக்தி கொண்ட, எளிமையான, வெகுளியான, சாந்தமான பெண். சலேசியார் பிறப்பதற்கு முன்பே, அவரின் தாயார் பேறுகாலத்தில் தன் உயிருக்கும், குழந்தையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதை உள்ளுற உணர்ந்தார். எனவே, சாம்பேரியில் உள்ள ஆலயத்திற்குச் சென்று, அங்கு பொதுவழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் திருஆடை முன் குறைமாதத்தில் பிறந்த இந்தக் குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணித்து, காப்பாற்றும்படி வேண்டினார். பிற்காலத்தில், இதனை நினைவுகூரும் வகையில் நம் புனிதர் அவருடைய தனியறையிலும், சிற்றாலயத்திலும், ஆண்டவரின் திரு ஆடையின் படத்தை பதாகையில் வரைந்து வணங்கியதாக அவரே எழுதியுள்ளார்.

திருமுழுக்கு

சலேசியார் குறைமாதத்தில் பிறந்ததால், உடல் நலிவுற்று இருந்தார். குழந்தையைப் பராமரிக்க தோரன்ஸ் ஊரை சேர்ந்த பீட்டர் மாண்டேலோம்பார்ட் என்னும் செவிலித்தாயை நியமித்தனர். அவருடைய பராமரிப்பில் குழந்தை படிப்படியாக உடல் வலிமை பெற்றதால், 1567 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28 ஆம் நாள், திருமுழுக்கு கொடுத்து, "பிரான்சிஸ் பொனவெஞ்சர் சலேசியார்" என்று பெயர் சூட்டப்பெற்றார்.

மகிழ்ச்சிநிறை குடும்பம்

குழந்தை பருவத்தில் சலேசியார் நற்பண்புகளைக் கற்றுகொள்வதிலும், கடைப்பிடிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். சலேசியாரின் தந்தையின் மூத்த சகோதரர் (பெரியப்பா) லூயிஸ் சலேசியாருக்கு, ஏமி, லூயிஸ், கஸ்பார்ட் என்னும் மூன்று மகன்கள். இதில் லூயிஸ் என்பவர் பின்னாளில் குருத்துவத்தைத் தேர்ந்து கொண்டு, சலேசியாரோடு சாப்ளாய்ஸ் பகுதியில் மறைபணியாற்றினார். இந்த இரண்டு குடும்பங்களும் அருகருகே வசித்ததால், குழந்தைகள் அனைவரும் இணைந்து, சலேசியார் மாளிகையை மகிழ்வித்தனர். சலேசியாரின் தாயார் ஒரு புனிதமான பெண். அவர் தன் தாயின் பாசத்திலிருந்து இறைவனின் இரக்கமிகுந்த அன்பை உணர்ந்தார். சலேசியார் தன் குழந்தை பருவத்தில் குடும்பத்தில் பெற்ற இறையனுபவத்தை பின்னாளில் மக்களை ஆன்மீக வழியில் வழிநடத்த பயன்படுத்தி கொண்டார். சலேசியாரின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இறையன்பிலும், பிறரன்பிலும், விசுவாசத்திலும் சிறந்து விளங்கச்செய்தனர்.

அச்சத்திலிருந்து அஞ்சாமைக்கு

குழந்தையாக இருந்த போது, சலேசியார் இருளை கண்டு மிகுந்த அச்சமடைந்தார். இருள், தீய ஆவியால் நிறைந்துள்ளதாக எண்ணினார். அப்போது, இவரின் தந்தை ஒரு இளம்பிரபு இருளைக் கண்டு அஞ்சாமல் தைரியமிக்கவராக இருக்ககற்றுக் கொடுத்தார். 1619 இல் இதே பிரச்சனையுடன், இருந்த ஒரு இளம் அருட்சகோதரிக்கு தன் வாழ்க்கையில் நிகழ்ந்ததை நினைவுகூர்ந்து, “நான் சிறுவனாக இருந்தபோது, இருள் பயம் என்னை வாட்டியது. இருள் பயத்தை போக்க, நான் அடிக்கடி  இரவு நேரத்தில் நீண்ட தூரம் தனியாக நடக்கத் தொடங்கினேன். அவ்வாறு, நான் செல்லும்போதுஇறைவா நீர் எங்கும் நிறைந்திருக்கிறீர்என்று, கடவுளை நம்பி கடவுளின் துணையை தேடினேன்என்று பாங்குற எழுதினார்.

கல்வியில் கரை கண்டவர்

காலச்சுவடுகள் அழிந்துவிடும், கல்விச்சுவடுகள் அழியாது. காலத்தால் கரைக்க முடியாத கல்வியை தனது ஏழாவது வயதில் தொடங்கினார். 1573 ஆம் ஆண்டு முதல் 1575 ஆம் ஆண்டு வரை லாரோச்சிலும், 1575 ஆம் ஆண்டு முதல் 1578 ஆம் ஆண்டு வரை ஆனேசியிலும் பயின்றார். சலேசியாரின் குடும்பம் ஒரு உறுதியான கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பம். 1575 ஆம் ஆண்டு, திருவருகைக் காலத்தில் முதல் திருவிருந்து மற்றும் உறுதிபூசுதல் திருவருட்சாதனங்களைப் பெற்றுக்கொண்டார்.

இளமை பருவத்தில் கல்வி பயில்வதோடு, செப-தப வழியிலும் தன்னை செதுக்கிக்கொண்டார். கடவுளுக்கு தன்னை முழுவதும் அர்ப்பணிக்க ஆர்வம் கொண்டு, அக்கால வழக்கப்படி தலைமுடி வழித்தல் (Tonsure) பட்டம் பெற்றுக்கொண்டார். இது, சலேசியார் கடவுள்மீது கொண்ட ஆழமான அன்பையும், குருவாக வேண்டும் என்ற தீவிர எண்ணத்தையும் நமக்கு காட்டுகின்றது.

பல சிந்தனையாளர்களையும், அறிஞர்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்தி, கல்வி நகரம் என்று அழைக்கப்பட்ட பாரிஸ் மாநகரில் 1578 ஆம் ஆண்டு, முதல் 1588 ஆம் ஆண்டு வரை இலக்கணம், மனித நேயம், கிரேக்கம் முதலிய படிப்புகளை வெற்றிகரமாக முடித்தார். 1584 இல், இளங்கலை பட்டம் பெற்றார். 1588 இல், தத்துவயியலில் 1588 ஆம் ஆண்டு முதுகலை பட்டமும் பெற்றார். கல்வி தாகத்தோடு மேலும் அந்நாள்களில் சட்டப்படிப்புக்கு மிகவும் பிரபலமான இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகருக்கு, 1588 ஆம் ஆண்டு, சட்டம் பயிலசென்றார். அங்கு இயேசுசபை குருவான அந்தோனிபோஸ்ஸவின் என்பவரை தன் ஆன்மீக குருவாக தேர்ந்து கொண்டார். அவருடைய வழிகாட்டுதலில் சட்டம் பயில்வதோடு, இறையியல் படிப்பையும் படித்தார். அவருடைய நண்பரிடம்என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற சட்டம் படித்தேன், என் மகிழ்ச்சிக்காக இறையியல் படித்தேன்என்று கூறியிருந்தார்.

திரு அவையின் முதுபெரும் தந்தையர்களான புனித அகுஸ்தினார், புனித தாமஸ் அக்குவினாஸ், புனித யோவான் கிறிஸ்சோஸ்தம் மற்றும் புனித ஜெரோம் எழுதிய புத்தகங்களை தீவிரமாக படித்து இறையியல் ஞானத்தை வளர்த்துக்கொண்டார்.

சாவின் விளிம்பிலிருந்து

1590 ஆம் ஆண்டின் இறுதியில் தீவிரமாக உடல் வருத்தி, படித்ததினால் உடல் மிகவும் நலிவுற்று, தீராத காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். 1591 ஆம் ஆண்டு, ஜனவரி 15 ஆம் நாள் மருத்துவர்கள் பரிசோதித்தபின் சலேசியார் உயிர் பிழைக்க மாட்டார் என்று கைவிரித்து விட்டனர். அவர் தனது இறுதி உயிலை, “நான் என் ஆன்மாவை கடவுளிடம் ஒப்படைக்கிறேன்என்றும், “தனது உடலை மருத்துவ மாணவர்களின் பரிசோதனைக்காக ஒப்படைக்க வேண்டும்என்றும் எழுதினார். தனது ஆன்மீக தந்தை போஸ்ஸவினிடமிருந்து நோயில் பூசுதல் அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டார்.

கடவுளின் அருளால் சலேசியார் முழு சுகம் பெற்று, மீண்டும் தன் படிப்பைத் தொடர்ந்தார். 1591 ஆம் ஆண்டு, தனது 24 ஆம் வயதில் முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.

மரியின் மகனாக

பதுவையில் நோய்வாய்பட்டிருந்த வேளையில் லொரேட்டோ நகர் அன்னை மரியாவின் திருத்தலத்திற்கு திருயாத்திரையாக செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். எனவே, தந்தை டியாஜ், காலோயிஸ் மற்றும் சலேசியார் மூவரும் அக்டோபர் 18 ஆம் நாள், 1591 ஆம் ஆண்டு, லொரேட்டோ நகருக்கு திருயாத்திரையாக பயணமானார்கள். அன்னையை தரிசிக்கும்போது, சலேசியார் பக்தி பரவசத்தில் இருந்ததையும், அவர் முகம் சிவந்து பிரகாசமாய் ஒளிர்ந்ததையும் உடன் சென்ற தந்தை டியாஜ் பார்த்து கண்ணீர் விட்டார். இறைவனின் அருளுக்கும், அன்னையின் ஆசீருக்கும் நன்றி கூறி, திருயாத்திரையை முடித்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.

வழக்கறிஞரா? குருவா?

சலேசியாரின் தந்தையோ, தன் மகன் மிகச்சிறந்த வழக்கறிஞராக வேண்டும் என்றும், சாவோய் மாகாண பிரபுவின் சட்ட ஆலோசகரின் மகளை திருமணம் செய்து கொண்டு, இல்லறத்தில் ஈடுபட வேண்டும் என்றும் ஆசைப்பட்டார். தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, 1592 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் நாள் சாம்பேரி வழக்கறிஞர் கழகத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால், இல்லற வாழ்க்கையைத் தவிர்த்து, குருவாக வேண்டும் என்ற திண்ணமான எண்ணத்தை வளர்த்துக்கொண்டார். அதேபோல், சாவோய் மாகாணத்தின் மேல்சபை உறுப்பினராகும் வாய்ப்பையும் நிராகரித்தார்.

குருவாக

தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, இல்லறத்தை விரும்பாமல், குருவாக வேண்டும் என்ற தன் ஆவலை தந்தையிடம் வெளிப்படுத்தியபோது, தந்தை மிகுந்த வேதனைப்பட்டு அழுதார். இறுதியில், அவர் தம் மகனிடம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்று என்று அன்பொழுக வாழ்த்தினார். இறையருளும், இடைவிடாத செபமுமே சலேசியாரை குருத்துவ நிலைக்கு உயர்த்தியது. 1593 ஆம் ஆண்டு, டிசம்பர் 18 ஆம் நாள், ஜெனிவா ஆயர் கிளாதே தி கிரானியர் என்பவரால் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

சலேசியார் குருத்துவத்தின் மாண்பையும், மகத்துவத்தையும் உணர்ந்திருந்தார். அருட்சாதனங்களை நிறைவேற்றுவதிலும், அறிவை வளர்த்துக்கொள்வதிலும் முழுநேரத்தையும் செலவிட்டார். “அறிவு குருக்களின் எட்டாவது திருவருட்சாதனம்என்றார். ஏழை-எளிய மக்களிடம் மிகுந்த அன்பும், பரிவும் காட்டினார். அருளுரை வழங்குவதில் வல்லவராக திகழ்ந்தார். குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே தலைமை குருவாக உயர்த்தப்பட்டார். இது அவருடைய திறமைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பிரிவினைவாதத்திற்கு எதிராக

ஜெனிவா மறைமாவட்டம் முழுவதும் புராட்டஸ்டாண்டின் பிடியில் சிக்கியிருந்தது. இதை எப்படியாவது மீட்க வேண்டும் என்று, ஜெனிவா நகர் ஆயரும், தலைமை குருவாக இருந்த சலேசியாரும் தீவிரமாக ஆலோசித்தனர். சாப்ளாய்ஸ் மறைப்பணித்தளமானது கத்தோலிக்க திரு அவையிலிருந்து பிரிந்து புராட்டஸ்டாண்ட் மற்றும் கால்வினிய கொள்கையால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சீர்திருத்த சபையில் சேர்ந்தனர். பிரிவினை சபை, கத்தோலிக்க திரு அவைக்கு பெறும் சவாலாக இருந்தது. ஜெனிவா மறைமாவட்டத்தின் குருக்கள் சபை, ஆயர் தலைமையில் கூடியபோது, எல்லார் முன்னிலையிலும் சலேசியார் தாமாக முன்வந்து சாப்ளாய்ஸ்க்கு செல்லும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அப்பகுதி மக்களை மீண்டும் கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கைக்குள் கொண்டு வரும் மாபெரும் சவால் நிறைந்த பணியை ஏற்றுக்கொண்டார்.

1594 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள், திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாளன்று தனது உறவினரான, லூயிஸ் என்ற குருவானவரோடு சாப்ளாய்ஸ் நோக்கி பயணமானார்.

சாப்ளாய்ஸ் மறைப்பணித் தளம்

சாப்ளாய்ஸ் மறைப்பணித் தளம் மிகவும் அபாயகரமானதும், சவால் நிறைந்ததுமாகும். அங்கு நிலையற்ற அரசியல் சூழ்நிலை நிலவியது. கத்தோலிக்க கிறிஸ்தவ குருவானவர்களை சூனியக்காரர்கள் என்றும், பேய் பிடித்தவர்கள் என்றும் சொல்லுமளவிற்கு குருக்களையும், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தையும், மக்கள் வெறுத்தனர்.

தோனோனில் செப்டம்பர் 18 ஆம் நாள், புனித ஹிப்போலிட்டஸ் ஆலயத்தில் தனது முதல் மறையுரையை ஆற்றினார். சில கத்தோலிக்கர்களும், சில கால்வினிஸ்ட்களும் அவருடைய மறையுரையை கேட்டனர். மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றி மறையுரையாற்றினார்.

தந்தையின் உறுதுணை

சலேசியாரின் வயதான தந்தை தன் மகன் இவ்வளவு சவால் நிறைந்த, உயிருக்கு ஆபத்தான பணியாற்றுகிறார் என்று அறிந்து, அவரை திரும்பி வரவழைக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றது. ஏனெனில், சலேசியார் தான் தேர்ந்துகொண்ட பணியை தொடர வேண்டும் என்று உறுதியாக இருந்தார். பின்னர், சலேசியாரின் பணியை முழுமனதுடன் ஏற்ற தந்தை பணி சிறக்க நிதியுதவியும் வழங்கினார்.

கொலை முயற்சி

ஒரு முறை சலேசியாரும் அவருக்கு உதவி செய்ய தந்தையால் அனுப்பிவைக்கப்பட்ட ஜார்ஜ் ரோலண்ட் என்பவரும், லெஸ் அலிஞ்சஸ் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். திடீரென ஒரு புதருக்குப் பின்னாலிருந்து இரண்டு பேர் வாளை சுழற்றியபடி சலேசியாரை தாக்க முற்பட்டார்கள். ஆனால், சலேசியார் அவர்களை நோக்கி, நிதானமாக சென்று அவர்களை அருள்கூர்ந்து உற்று நோக்கினார். அவர்கள் சலேசியாரை கொல்வதற்காக பணம் கொடுத்து அனுப்பப்பட்டவர்கள் என்று கூறி, தங்கள் தவறை உணர்ந்து, அவரிடம் மன்னிப்பு வேண்டினர்.

எழுத்தாயுதம்

புனிதரின் மறையுரையைக் கேட்கக்கூடாது என்று கால்வினிஸ்ட் தலைவர்கள் தீர்மானித்தனர். சலேசியார் அவர்களுடைய இல்லங்களுக்கு சென்றபோது, கதவுகளை அடைத்துக் கொண்டனர். ஆனாலும், இறைவன்மீது முழுநம்பிக்கை வைத்து தொடர்ந்து முழு ஆர்வத்தோடு கத்தோலிக்க விரோதிகளின் உள்ளங்களைத் தொடுவது எப்படி என்று ஓயாமல் யோசித்தார். மக்கள் அவருடைய மறையுரையைக் கேட்க தடுக்கப்பட்டபோது, கால்வின் தப்பறையை எதிர்த்தும், கத்தோலிக்க விசுவாசத்தை விளக்கியும், சிற்றேடுகளை எழுதி வழங்கினார்.

துண்டுப் பிரசுரங்களை கதவுகளின் அடிப்பகுதி வழியாக மக்களுக்கு கொடுத்தார். நம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியுடன் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்த கால்வினிஸ் கோட்பாட்டின் தவறுகளை சுட்டிக்காட்டினார். புனிதரின் அளப்பரிய பணியை விரும்பாத எதிரிகள் அவரை பலமுறை தாக்கினர். 1595 ஆம் ஆண்டு, மாதாவின் சிற்றாலயத்தை சீரமைக்க சென்றபோது, எதிரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

தாய்த் திரு அவையிடம்

கால்வினுக்கு பிறகு, ஜெனிவா நகர் புராட்டஸ்டாண்ட் சபையின் தலைவராக இருந்த தியோடர்திபெஸ்ஸை தனியாக சந்திக்க பல முறை முயற்சித்தார். 1597 ஆம் ஆண்டு, ஏப்ரல் 9 ஆம் நாள் அந்த வாய்ப்பு கிடைத்தது. அவரை கால்வின் வாழ்ந்த அதே அறையில் சந்தித்தபோது, இருவரும் பல கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இச்சந்திப்பைப் பற்றி சலேசியார் திருத்தந்தை எட்டாம் கிளமென்ட்டிற்கும், பிரான்சு நாட்டின் அரசர் நான்காம் ஹென்றிக்கும் கடிதம் எழுதியிருந்தார். திருத்தந்தை இவரது முயற்சியை பாராட்டி, ஆசிவழங்கினார். மீண்டும் இரண்டு முறை சலேசியார் தியோடர்திபெஸ்ஸைச் சந்தித்தார். இச்சந்திப்புகள் அவரது பணி வெற்றியடையவும், மக்கள் கத்தோலிக்க விசுவாசத்திற்கு திரும்பி வரவும் மிகவும் உதவியாக அமைந்தது.

இவ்வாறு, புனிதரின் சவால் நிறைந்த பணிக்கு மிகுந்த பலன் கிடைத்தது. கால்வின் தப்பறை கொள்கையால் கத்தோலிக்க விசுவாசத்தை மறுதலித்திருந்த எழுபத்தி ரெண்டாயிரம் மக்களை மீண்டும் கத்தோலிக்க விசுவாசத்திற்குள் கொண்டு வந்தார்.

ஆயராக..

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, புனிதரின் மாபெரும் தியாகப்பணியை பார்வையிட ஆயர் கிளாதேதி கிரானியர்தோனோன் சென்றார். சலேசியாரின் மகத்தான பணியை பார்த்த ஆயர், அவரை பாராட்டி தனக்கு துணை ஆயராகவும், தனக்குப் பின் ஜெனிவா நகர் ஆயராகவும் நியமிக்க விரும்பி, திருத்தந்தைக்கு பரிந்துரைத்தார்.

சலேசியாரின் ஆற்றல், திறமை, புனித தன்மையை நன்கு உணர்ந்திருந்த திருத்தந்தை, சலேசியாரை ஜெனிவா நகர் ஆயராக நியமித்தார். 1602 ஆம் ஆண்டு, டிசம்பர் 8 ஆம் நாள், அமலோற்பவ அன்னை பெருவிழா நாளில் வியன்னேளபிரான்ஸ் நகர் பேராயரால் ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டார். ஆலய பீடத்தை சலேசியாரின் தாயாரே அலங்கரித்திருந்தார். தன் மகன் ஆயராக திருப்பொழிவு செய்யப்படுவதை கண்டு கடவுளை போற்றினார்.

தந்தையின் மறைவு

இதற்கிடையில், 1601 ஆம் ஆண்டு, ஏப்ரல் 6 ஆம் நாள், தவக்காலத்தில் நான்காம் ஞாயிறன்று சலேசியாரின் தந்தையின் இறப்புச் செய்தியை அறிந்தார். ஞாயிறு வழிபாட்டை முடித்து விட்டு, தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிற்காக ஜெபிக்க மக்களிடம் கேட்டுக்கொண்டு, தந்தையின் இறுதிச்சடங்கை நிறைவேற்ற சென்றார். குடும்பத்தின் மூத்தமகனாகவும், தந்தையால் மிகவும் நேசிக்கப்பட்டவராகவும் இருந்ததால் அவருடைய தந்தையின் பிரிவு இவரை வெகுவாக பாதித்தது.

ஆயருக்கெல்லாம் முன்மாதிரி

முப்பத்தைந்து வயதில் ஆயராக நியமிக்கப்பட்டபோது, சலேசியார் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மக்களின் மேய்ப்புபணிக்காக அர்ப்பணித்தார். ஆயரின் மேலான கடமையை நிறைவேற்றுவதிலும், பிறரன்பு பணிகளிலும், ஏழை எளியோரைப் பேணிக்காப்பதிலும், தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். மறைமாவட்டம் முழுவதும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கவும், மறைக்கல்வி போதிக்கவும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அறியாமை ஆட்சி செய்யுமிடத்தில் தீமை செழித்தோங்கும்; மத அலட்சியம் பெருகும்; மதங்களுக்கு எதிரான கொள்கைகள் தோன்றும் என்று எண்ணினார். எனவே, திரிதெந்து பொதுச்சங்க படிப்பினைகளை நன்குபுரிந்து கொண்டு, அதை மக்களுக்குப் போதித்து, அறியாமையை நீக்கி, மத நம்பிக்கை வளரச்செய்தார்.

சலேசியார் கடும் சவால்களுக்கு மத்தியில் மறைமாவட்டத்தில் இருந்த அனைத்து பங்குகளையும் சந்திக்க விரும்பினார். மலைகளில் வாழ்ந்த ஏழை விவசாயிகள் பல காரணங்களால் பெரும்பாலும் அணுக முடியாதவர்களாகவும், மிகவும் அறியப்படாதவர்களாகவும் இருந்தனர்.

மக்களின் ஆயன்

சலேசியாரின் இதயத்தை தொட்ட பல நிகழ்வுகள் உண்டு. ஒருமுறை சலேசியார் கால்நடையாக சென்று கொண்டிருக்கையில் ஒரு விவசாயினுடைய பசு தொலைந்து விட்டது. அந்த ஏழை விவசாயி பசுவைத்தேடி அலைந்து, பனிப்பாறையில் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு பள்ளத்தில் விழுந்து கடும்பனியில் உறைந்து விட்டார். இதை பார்த்த சலேசியார், "கடவுளே, இந்த ஏழை விவசாய மேய்ப்பன் தனது பசுவைத் தேடுவதில் இவ்வளவு தீவிரமும், வைராக்கியமுமாக இருக்கிறார். கடும் குளிரும், பனிப்பாறையும் கூட இவரை தடுக்க முடியவில்லையே. ஆனால், நான், என் ஆடுகளை, என் மக்களை தேடுவதிலிருந்து எது தடுக்கிறது, என்று எண்ணினார். இன்னும் தீவிரமாக நான் என் மக்களைத் தேட வேண்டும்" என்று தீர்மானித்தார்.

புனிதர் இயல்பாகவே கோபமிகுந்தவராய் இருந்த போதிலும், பதினெட்டு ஆண்டுகள் கடினமாக உழைத்து சாந்தமே உருவானவர் போலானார். தன்னலமற்ற அன்பு, தாழ்ச்சி, தயவு, பரிவு ஆகிய குணங்களில் மிகச்சிறந்து விளங்கினார். ‘இறையன்பு மற்றும் பிறரன்புகுறித்து மிகவும் அழுத்தமாக அடிக்கடிபோதித்தார்.

ஆன்மீகப் புதையல்

பாமர மக்களை உருவாக்குவதிலும், அவர்களின் ஆன்மீக வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவர்களுக்கு பல நல்ல அறிவுரைகளையும், ஆன்மீக வழிகாட்டுதலையும் தொடர்ந்து செய்து வந்தார். இவ்வாறு, அவர் செய்த மகத்தான பணிதான் 1608 ஆம் ஆண்டு, “ஆன்மீக வாழ்வின் முகவுரை. “Introduction to Devote Lifeஎன்னும் அரியதொரு நூலை வெளியிட தூண்டியது. இந்நூல் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆன்மீக புதையலாகும்.

துறவறச் சபை நிறுவுனர்

புனித ஜான் பிரான்சிஸ் தி சந்தால் என்னும் அம்மையாருக்கும் மற்றும் பல அருட்சகோதரிகளுக்கும் ஏராளமான கடிதங்கள் வழியாக ஆன்மீக வழிகாட்டியுள்ளார். சலேசியார் இந்த அம்மையாருடன் இணைந்து 1610 ஆம் ஆண்டு, “தூய மரியாளின் மினவுதல் சபை, (Visitation Order) என்னும் துறவற சபையை நிறுவினார். புனிதரின் வழிகாட்டுதலின்படி அருட்சகோதரிகள் அன்னை மரியா மீதும் இயேசுவின் திருஇதயத்தின் மீதும் சிறப்பு பக்தி கொண்டிருந்தனர். இதற்கிடையில் 1610 ஆம் ஆண்டு, அவருடைய தாயாரின் மறைவு இவரை மீளாத்துயரில் ஆழ்த்தியது.

மறைவல்லுநர்

சலேசியார் எழுதியஇறையன்பு பற்றிய ஆய்வுக்கட்டுரை Treatise on the Love of God 1616 ஆம் ஆண்டு, வெளியிடப்பட்டது. இந்நூல் உன்னதமான ஆன்மீக அனுபவத்தையும், தத்துவத்தையும், இறையியல் மற்றும் இறைஞானம் நிறைந்த சிந்தனைகளையும் உள்ளடக்கியதாகும். “உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. (இச 6:5) என்ற இறைவார்த்தையை வாழ்ந்து காட்ட இந்நூல் உதவுகிறது.

மனமாற்றத்திற்கு உதவிய மறையுரை

சலேசியாருடைய மறையுரையும், போதனையும் பல மனங்களை மனமாற செய்தது. 1617 ஆம் ஆண்டு, ஒருமுறை கிரெநோபில் என்னுமிடத்தில் தவக்கால தியானம் வழங்கிக்கொண்டிருக்கும்போது, கிளாதே பவுகார்ட் என்னும் துறவியும் தியானத்தில் கலந்து கொண்டார். இவர் தனது 23 ஆவது வயதில் சலேசியார் படித்த கிளெர்மாண்ட் கல்லூரியில் தத்துவவியல் துறையின் தலைவரானார். பின்னர், பிரான்சின் மற்றொரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அவருக்கு கிடைத்த பெயரும், புகழும் அவரை ஆணவத்தின் உச்சத்திற்கு அழைத்துச்சென்றது. அவர் சபைத் தலைவர் உரோமைக்கு திரும்பிவர அழைத்தார். ஆனால், அவர் தன் துறவறச் சபையை விட்டு கால்வினிஸ்ட் சபையில் சேர்ந்தார். பின்னர், சலேசியாரோடு நிகழ்ந்த சந்திப்பினால் அவர் திரு அவைக்கும், கத்தோலிக்க விசுவாசத்திற்கும் எதிராக செய்த துரோகத்தை நினைத்து வருந்தினார். கிரெநோபிலில் சலேசியார் ஆற்றிய தவக்கால மறையுரையைக் கேட்டு, திரு அவைக்கு எதிரான கொள்கைகளை கைவிட்டு, நெடுநேரம் அழுது, புனிதரிடம் பாவ மன்னிப்பு பெற்றார். இவ்வாறு, புனிதர் தன்னுடைய வாழ்க்கையாலும், போதனையாலும் பல தரப்பட்ட மக்களை கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்தார்.

இறுதிநாட்கள்

தனது வாழ்வு முழுவதையும் தன் மக்களுக்காகவே அர்ப்பணித்தார். 1619 ஆம் ஆண்டு, இறுதியில் கடினமாக உழைத்து உடல் சோர்ந்து காணப்பட்டார். 1622 இல் திருத்தந்தை 15 ஆம் கிரகோரியாரின் வேண்டுதலின்படி, பெயிலாண்ட்ஸ் மாநாட்டில் பிரதிநிதியாக கலந்துகொண்டார். 1622 ஆம் ஆண்டு, சாவோய் பிரபு, பிரான்ஸ் நாட்டு மன்னரைச் சந்திக்க செல்லும்போது நம் புனிதரையும் உடன்வருமாறு அழைத்தார். உடல் நலிவுற்ற நிலையிலும், மறுக்காமல் பயணமானார். அவிஞ்ஞோன் நகரில் மன்னரைச் சந்தித்தபின், தன் சொந்த நகருக்கு திரும்பினார்.

திருவருகைக் காலத்திலும், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நாட்களிலும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், கடினமாக ஜெபத்தில் ஈடுபட்டு உழைத்தார். மரணவேளை நெருங்கி இருந்ததை உணர்ந்த புனிதர் இறுதி அருட்சாதனங்களைப் பெற்றுக்கொண்டார். தலையில் ஏற்பட்டிருந்த இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்டு, 1622 ஆம் ஆண்டு, மாசில்லா குழந்தைகள் விழாவான டிசம்பர் 28 ஆம் நாள் இயேசு என்னும் திருப்பெயரை உச்சரித்துக் கொண்டே அமைதியாக உயிர் துறந்தார்.

பத்திரிகையாளரின் பாதுகாவலர்

1665 இல் திருத்தந்தை 7 ஆம் அலெக்சாண்டர் பிரான்சிஸ் சலேசியாருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். 1877 இல், திருத்தந்தை 9 ஆம் பத்திநாதர் திரு அவை பேரறிஞர் பட்டம் வழங்கினார். திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர் புனிதரை பத்திரிகை ஆசிரியர்களுக்கு பாதுகாவலராக நியமித்தார். புனித சலேசியார் ஆண்டில் அவர்தம் ஆன்மீகத்தை நம்மில் விதைப்போம். திரு அவைக்குள் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம்

Comment