No icon

புனித பிரான்சிஸ் சலேசியார்

இந்தியாவில் புனித பிரான்சிஸ் சலேசியாரின் மறைபரப்புச் சபை (MSFS)

புனித பிரான்சிஸ் சலேசியாரின் வேத போதக சபை (MSFS) 1838 ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 24 ஆம் நாள், இறையடியார் பீட்டர் மேரி மெர்மியர் என்பவரால் பிரான்ஸ் நாட்டில் ஆனேசி என்னுமிடத்தில் தோற்றுவிக்கப்பட்டது. பங்குப்பணி, அயல்நாடுகளில் மறைப்பணி மற்றும் இளைஞர்களுக்கு கல்விப்பணி என்ற முப்பணி நோக்கங்களுடன் சபை தோற்றுவிக்கப்பட்டது. தந்தை மெர்மியரின் விருப்பத்திற்கும், வேண்டுகோளுக்கிணங்க, ஏழு ஆண்டுகள் பிரான்சில் பணிசெய்த பின், அப்போதைய திருத்தந்தை இப்புதிய சபையை இந்தியாவிற்கு சென்று பணி செய்யுமாறு அழைப்பு விடுத்தார். இந்தச் சவால் நிறைந்த அழைப்பை ஏற்று தந்தை மெர்மியர், ஆறு பேர் கொண்ட குழுவை தயார் செய்து, இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

இந்தியா - விசாகப்பட்டினத்தில்

1845 ஆம் ஆண்டு, MSFS சபை குருக்களிடம் விசாகப்பட்டினம் மறைமாகாணம் ஒப்படைக்கப்பட்டது. அதில் இன்றைய ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பகுதிகள் அடங்கும். இதற்கிடையில், 1887 இல் விசாகப்பட்டினம் மறைத்தளமானது, இரண்டாக பிரிக்கப்பட்டு நாக்பூர் மறைமாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. பரந்து விரிந்த விசாகப்பட்டினம் மறைத்தளமானது, காலப்போக்கில் பல வளர்ச்சிகளைக் கண்டது. இதிலிருந்து பல மறைமாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பல்வேறு சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்று இந்தியாவில் மட்டும் விசாகப்பட்டினம், வடகிழக்கு இந்தியாவில் இரண்டு கௌகாத்தி, திப்ருகார், தென்மேற்கு இந்தியா, தென்கிழக்கு இந்தியா, நாக்பூர் மற்றும் பூனே என ஏழு மாகாணங்கள் உள்ளன.

உலக நாடுகளில்

MSFS சபை உலகின் பல்வேறு நாடுகளில் பரவத்தொடங்கியது. 1861 இல் இங்கிலாந்திலும், 1926 இல் பிரேசில் நாட்டிலும், 1927 இல், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் சபை மறைப்பரப்புப் பணியைத் தொடங்கி, இறைப்பணி ஆற்றி வருகின்றது.

ஆப்பிரிக்க கண்டத்தில் மறைபரப்புப் பணியாற்ற வேண்டும் என்ற நிறுவுனர் தந்தையின் கனவை நிறைவேற்ற 1988 ஆம் ஆண்டு, தான்சானியா நாட்டில் பணி தொடங்கப்பட்டது. இன்று ஆப்பிரிக்க நாடுகளில் தான்சானியா, கென்யா, உகாண்டா, மொசாம்பிக், நமீபியா, தென் ஆப்பிரிக்கா, சாட், காமரூன், சாம்பியா மற்றும் மலாவி நாடுகள் அடங்கும். மேலும், எம் சபையினர் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரியா, மேற்கிந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து என மொத்தம் 32 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

தமிழகத்தில்  MSFS

1838 இல், பிரான்ஸ் நாட்டில் தொடங்கப்பட்ட MSFS சபை 1845 இல் இந்தியாவை வந்தடைந்தாலும், ஏறக்குறைய 130 ஆண்டுகளுக்குப் பின்தான் தமிழகத்தில் கால்தடம் பதித்தனர். அருள்தந்தை பீட்டர் சக்குளிக்கல் மற்றும் அருள்தந்தை ஜோஸ் புதிய பரம்பில் இவர்களின் அயராத முயற்சியினால், 1982 ஆம் ஆண்டு, இவர்கள் தஞ்சை மறைமாவட்டம் புதுக்கோட்டையில்அன்பு இல்லம் எனும் இளங்குருமடம் (பின்நாளில் எஸ்.எப்.எஸ் இளங்குரு மடம்) தொடங்கப்பட்டது. இவர்கள் இருவருமே கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நன்கு தமிழ்மொழி கற்று பணி செய்து, MSFS சபை தமிழகத்தில் வளர்ச்சியடைய பேருதவி செய்தனர். இதன் பலனாக தமிழகத்தில் MSFS சபை வேரூன்ற தொடங்கியது.

1985 ஆம் ஆண்டு, வேலூர் மறைமாவட்டம், வாணியம்பாடியில் உள்ள சகாய அன்னை பங்கு MSFS சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பங்கின் இரண்டாவது பங்குத்தந்தை அருட்பணி. ஜார்ஜ் புரயிடம் அவர்களால் 1988 ஆம் ஆண்டு, ஆலங்காயம் ஊரில் SFS மெட்ரிக் பள்ளி தொடங்கப்பட்டது. இவ்வாறு, தொடங்கிய பங்குப்பணி கல்விப்பணிகள் மிகப்பெரிய அளவில் வளரத் தொடங்கின.

இக்காலகட்டத்தில், தமிழக MSFS சபையினர் விசாகப்பட்டினம் மறைமாகாணத்தின் பகுதியாக செயல்பட்டு கொண்டு இருந்தனர். இம்மறைமாகாணத்தின் தலைவர்கள் தமிழகத்தில் MSFS சபை பரவ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். 1993 இல் கோட்டாறு மறைமாவட்டத்தில் கடையல்மோடு பங்கும், 1995 இல் புதுக்கோட்டையிலும் மற்றும் வாணியம்பாடியிலும் பள்ளிகள் துவங்கப்பட்டன.

அருட்தந்தை. மாணிபந்தலானி, மாகாணத் தலைவர், தன்னுடைய தொலைநோக்கு பார்வை கொண்ட மறைபரப்புப் பணி வழியாக தமிழகத்தில் MSFS சபை வளர அயராது உழைத்தார். இவரது பணி கால கட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய பங்குத்தளங்களும், புதிய பள்ளிகளும் உருவாக்கப்பட்டன. 1996 இல், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் (தற்போதைய செங்கல்பட்டு மறைமாவட்டம்) கேளம்பாக்கம் பங்கும், தஞ்சை மறைமாவட்டத்தில் திருக்கோகர்ணம் பங்கும், பாண்டிச்சேரி - கடலூர் உயர்மறை மாவட்டத்தில் காணாங்காடு பங்கும் MSFS சபையினரிடம் மறைபரப்புப் பணிக்காக ஒப்படைக்கப்பட்டன.

இன்று MSFS சபை குருக்கள் தமிழகத்தில் 13 மறைமாவட்டங்களில் 20 பங்குகளில் இறைபணியாற்றுகின்றனர். மேலும், 8 மெட்ரிக் பள்ளிகளும், 1 MSFS பள்ளி, 4 மாணவர் இல்லங்களும், தொழிற்பயிற்சி பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. மேலும், கலை, ஊடகம் மற்றும் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கும் ஒருங்கிணைந்த மையமும் இயங்குகின்றது. தமிழகத்தை மையமாகக் கொண்ட தென் கிழக்கு மாநிலத்தில் 140 குருக்கள் உள்ளனர். அவர்களில் பல குருக்கள், ஆப்பிரிக்கா கண்டம், மலாவி, பிரேசில், மேற்கிந்திய தீவுகள், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் மறைபரப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

புனித தோமையார் மலையில்

குடும்ப செப சிகர மையம்

புனித தோமையார் மலையில் தற்போது இயங்கக்கூடிய "MSFS

 இல்லம் மற்றும் குடும்ப செப சிகர மையம்" 1996 இல் அன்றைய சென்னை மயிலை பேராயர் மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்களால் MSFS சபையினருக்கு வழங்கப்பட்டது. அப்பொழுது கேளம்பாக்கம் பங்கில் பணிபுரிந்த அருட்தந்தை ஜோசப் பிரிட்டோ பிரான்சிஸ் MSFS அவர்கள் இந்த நிலத்தை பராமரிக்கின்ற பணியை மேற்கொண்டார். அதன்பின், அருட்தந்தை . லூக்காஸ் MSFS அவர்கள் நிலத்தை பராமரிக்கவும், குருக்கள் தங்குவதற்கான இல்லத்தைக் கட்டியெழுப்பவும் நியமிக்கப்பட்டார். MSFS இல்லமானது நவம்பர் 14, 2001 இல் பேராயர் மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்களால், ஆசீர்வதிக்கப்பட்டு, MSFS சபையின் மாகாணத் தலைவர் அருட்தந்தை மாணிபந்தலானி MSFS அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அச்சமயத்தில் இங்கிருந்த குருக்கள் தோமையார் மலைப் பகுதியிலும் மற்றும் அருகாமையில் இருந்த பங்குகளில் பல்வேறு ஆன்மீகப் பணிகளுக்கு உதவி புரிந்தார்கள். மேலும், படித்துக் கொண்டிருக்கும் குருக்களும் மற்றும் மறைப்பரப்புப் பணிக்காக வெளிநாடுகளில் பணிபுரியும் குருக்களும் தங்கும் இல்லமாக இந்த இடம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

இப்பகுதியில் வாழக்கூடிய கிறிஸ்தவக் குடும்பங்களை ஆன்மீக வழியில் வழி நடத்தவும், ஆறுதல்படுத்தவும், தியானங்களை வழி நடத்தவும் தேவையான அனுமதியானது மே 11, 2007 இல் மேயர் அவர்களால் வழங்கப்பட்டது. அதன் பிறகு, குடும்பங்களுக்கான சிறப்பு ஒரு நாள் தியானங்கள் மாதத்திற்கு இருமுறை MSFS அருட்தந்தையர்களால் நடத்தப்பட்டது. அந்நாட்களில் ஆன்மீக ஆலோசனைகள், குணப்படுத்தும் வழிபாட்டு நிகழ்வுகள், சிறப்பு மறையுரைகள், நற்கருணை ஆராதனை மற்றும் பாவமன்னிப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இன்று இந்த "குடும்ப சிகர மைய"மானது வளர்ச்சியடைந்து, சுமார் 300 பேர் அமர்ந்து பங்கேற்கும் ஜெப அரங்கமாக கட்டப்பட்டுள்ளது. அருட்தந்தை . ஜெயகுமார் MSFS, அருட்தந்தை . மோட்ச ரிச்சர்ட் MSFS மற்றும் MSFS அருட்தந்தையர்களால் மிகச் சிறப்பாக வழிநடத்தப்படுகிறது. குறிப்பாக, மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் தமிழிலும், நான்காவது சனிக்கிழமைகளில் ஆங்கிலத்திலும் ஒருநாள் தியானங்கள் நடத்தப்படுகின்றன.

கலை உலகம்

கலை உலகம் என்பது நடனம், இசை மற்றும் கலாச்சாரத்திற்கான பிரான்சேலியன் தொடர்பு மையம். இந்த அமைப்பானது ஆகஸ்ட் 10, 2009 இல் அன்றைய மாகாணத் தலைவர் தந்தை . லாரன்ஸ் அவர்களால் அர்ச்சித்து தொடங்கப்பட்டது. தந்தை A. ஜெயசீலன் அவர்கள் இதன் இயக்குநராக பொறுப்பேற்று, நுண்கலைகள் மூலம் சமுதாயத்தின் மூலை முடுக்கெல்லாம் இறை செய்தியைப் பரப்பும் பணியை சிறப்பாக செய்து வருகின்றார்.

கலை உலகத்தின் சிறப்பு அம்சங்கள்

1. நடனம், பரத நாட்டியம், இசை, யோகா, கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய வகுப்புகள் புனித தோமையார் மலை, MSFS, குடும்ப ஆன்மீக இல்லத்தில் நடைபெறுகிறது

2. விவிலிய கருப்பொருள், சமூக விழிப்புணர்வு அடங்கிய நாட்டிய நாடகங்கள், பரத நாட்டியம், இசைக் கச்சேரி, நாட்டுப்புற நடனம், நாடகம் மற்றும் ஒளி, ஒலி நிகழ்ச்சிகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பங்குத்தளங்களிலும், அனாதை இல்லங்கள் மற்றும் அருட்கன்னியர் இல்லங்களிலும் நடத்தப்படுகின்றன.

Fransalian இளைஞர் இயக்கம்

அருட்தந்தை A. கிறிஸ்துராஜ் அவர்கள், Fransalian இளைஞர் இயக்கத்தின் இயக்குநராக பொறுப்பேற்று, MSFS சபையின் பங்குதள இளைஞர்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பல்வேறு கருத்தரங்கு மற்றும் இளையோரை வழிநடத்தும் நிகழ்வுகள் வழியாக சிறப்பாகப் பணியாற்றி வருகின்றார்.

சட்ட ஆலோசனைப் பணி

MSFS தென்கிழக்கு மாகாணத்தின் சட்டப்பிரிவு ஆலோசனை பணிக்கு அருட்தந்தை K. இஞ்ஞாசிமுத்து நியமனம் செய்யப்பட்டார். இவர், அவரின் இந்த பணியால் பல்வேறு கத்தோலிக்க நிறுவனங்கள், துறவற சபைகள், தமிழக ஆயர்களின் சட்ட பிரிவுக் குழு மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். இதைத்தவிர சட்டம் சார்ந்த கருத்தரங்குகளை திறம்பட நடத்தி வருகின்றார். இவ்வாறு, புனித தோமையார் மலையில் அமைந்துள்ள MSFS இல்ல குருக்கள் குடும்ப ஆன்மீக வளர்ச்சி பணிகளிலும், இளையோர் மற்றும் தனிமனித வளர்ச்சி பணிகளிலும், கலைப் பணிகளிலும் மற்றும் சட்ட ஆலோசனை பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்த தலத் திரு அவையைக் கட்டியெழுப்பும் பணிகளை மிகச்சிறப்பாக செய்து வருகின்றார்கள்.

வளரும் மறைப்பணி

1997 இல் மதுரை உயர் மறைமாவட்டத்தில் அம்மாபட்டி பங்கும், சென்னையில் கடப்பாக்கம், பாண்டிச்சேரியில் ஆதனூர் பங்கும் MSFS

சபையினரால் மறைப்பணிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இவர்களின் அயராத உழைப்பும், பணி சிறப்பையும் கண்டு, சென்னையில், எலப்பாக்கம், பெருங்கோழி, செங்காடு, வேடந்தாங்கல் பங்குகளும், மதுரையில் ஒத்தையால், விருது நகர் பங்குகளும், பாண்டிச்சேரியில் கொடுங்கால் பங்கும், கானாங்காடு பங்கும் ஒப்படைக்கப்பட்டன. இச்சபையில் இளங்குருக்களும் பல்வேறு மறை மாவட்டங்களில் உதவி குருக்களாக பணியாற்ற தொடங்கினர்.

சென்னை மாகாணம்

தமிழகத்தின் MSFS சபையின் வளர்ச்சியை கண்டு சபையின் தலைவர் பேரருட்திரு. ஆக்னலோ பெர்னான்டஸ் அவர்களால் தமிழகம் முதலில் 2005 இல் மறைமாவட்டமாகவும் 2008 இல் மறைமாகாணமாகவும் உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக அருட்தந்தை . லாரன்ஸ் அடிகளும் பிறகு, அருட்தந்தை தர்மராஜ் அவர்களும் மற்றும் மூன்றாவது தலைவராக அருட்தந்தை இஞ்ஞாசிமுத்து அவர்களும் MSFS சபை தமிழகத்தில் வளர பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர்.

ஒரு விதையாக விசாகாவில் விழுந்த எம் சபையானது இந்தியாவில் வேரூன்றி புனித சலேசியாரின் ஆன்மீகத்தில் பூத்து குலுங்கி, காய்த்து கனிகளைத் தந்துகொண்டேயிருக்கிறது.

Comment