No icon

துறவறத்தின் ஊன்றுகோல்

புனித பிரான்சிஸ் சலேசியார்

உலகிற்கெல்லாம் சென்று நற்செய்தியை அறிவியுங்கள். நீங்கள் என் சாட்சிகள்என்ற இயேசுவின் அழைப்பை ஆர்வத்தோடு ஏற்று, தங்கள் வாழ்வை கடவுளின் பணிக்கு முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்து, தாங்கள் பணி செய்த மக்களிடத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, தங்களுடைய புனித வாழ்வின் பயணத்தில் இறுதிவரை உறுதியோடு கடவுளுக்கும், தங்களின் அழைத்தலுக்கும், திரு அவைக்கும் விசுவாசமாக இருந்தவர்கள்தான் நாம் கொண்டாடும் புனிதர்கள். இந்த புனிதர்களின் வரிசையில் புனித பிரான்சிஸ் சலேசியாரும் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளார்.

ஒர் இளங்குருவாக புனித சலேசியார் தனது மறைபரப்புப் பணியைத் தொடங்கிய பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீர்திருத்த சபைகள் மிகவும் வேகமாக வளர்ச்சிப் பெற்றிருந்தன. இந்தச் சூழல்தான் சலேசியாரின் மறைபரப்பு பணியில் மிகவும் சவாலாக இருந்தது. இருப்பினும், இத்தகைய கடினமான சவால் நிறைந்த சூழலிலும், அவரது மறைபரப்புப் பணியின் வேகமும், விவேகம் நிறைந்த அணுகுமுறையும், அர்ப்பணிப்பும், வாழ்வியல் ஆன்மீகமும், அவரது இறைநம்பிக்கையின் சாட்சிய வாழ்வும், பக்தி வாழ்வில் வளர்வதற்கு அவர் வாழ்ந்து காட்டிய எளிய நற்குணங்களும், சாதாரண மக்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைச் சூழலில் பக்தியில் வளர்ந்து, நம்பிக்கை வாழ்வில் சிறந்து, கடவுளுக்கு பிரமாணிக்கத்தோடு செயல்படவும், வாழ்வின் சவால்களை நேர்மறைப் பார்வையோடுச் சந்தித்து, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்திட புனித சலேசியாரின் ஆன்மீக அணுகுமுறையும், அவர் கற்றுத்தந்த வாழ்வின் உயர் மதிப்பீடுகளும் மிகவும் உதவியாகவும், கிரியா ஊக்கியாகவும் இருந்தது. முக்கியமாக, துறவியர் வாழ்வில் ஆழமான தாக்கத்தை, பற்றுறுதியை ஏற்படுத்தி, துறவற வாழ்வை சிறப்புடன் வாழ்வதற்கு முன்மாதிரியான வழிகாட்டியாக சலேசியாரின் வாழ்வும், ஆன்மீகப் பார்வையும் இருந்தது.

எனவே, துறவற வாழ்விற்கு தூண்டுகோலாக இருந்த சலேசியாரின் ஆன்மீகச் சிந்தனைகளையும், அவற்றை அடிப்படை வழிகாட்டியாகக் கொண்டு தொடங்கப்பட்ட சில துறவற சபைகளைப் பற்றியும் இந்த கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

. புனித பிரான்சிஸ் சலேசியாரின் ஆன்மீகப் பாதை

1. சாந்தமான அணுகுமுறை

மிகவும் கடுமையான கண்டிப்புத் தன்மையை விட்டுவிட்டு, தனிமனித குறைகளையெல்லாம் தாண்டி, ஒருவரின் தனித்துவத்தையும், கண்ணியத்தையும், கொடையையும் முழுமையாக மதித்து போற்ற வேண்டும். இதனால், மனிதத்தன்மையும், அன்பும், நட்புமாகிய கயிற்றால் கடவுள் நமது இதயத்தை அவரின் அன்பின்பால் ஈர்த்துக் கொள்கிறார் என்பது புனித சலேசியாரின் ஆன்மீக வாழ்வின் அணுகுமுறை என்று நமது திருத்தந்தை பிரான்சிஸ் சொல்கிறார்.

பிறரிடத்தில் அவர்களின் நன்மைதனத்தையும், இறைவனின் சாயலையும் காணக்கூடிய சாந்த குணம், பொறுமை, இரக்க மனப்பான்மை போன்ற புனித சலேசியாரின் குணமும், அணுகுமுறையும், புனித தொன் போஸ்கோ போன்ற புனிதர்களின் பணிவாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால், சமுதாயத்தில் விளிம்பு நிலையில் தள்ளப்பட்டு, வாழ்வில் குறிக்கோளின்றி தெருக்களில் சுற்றித்திரிந்த இளையோரை நல்வழிப்படுத்துவதில் புனித போஸ்கோவை உந்தித் தள்ளும் கிரியா ஊக்கியாக செயல்பட்டது சலேசியாரின் இந்த சாந்தகுணமும், பொறுமையும், இரக்கம் நிறைந்த மனிதநேய அணுகுமுறையும் என்று புனித தொன் போஸ்கோவே சொல்லியிருக்கிறார்.

ஆகவே, ஒவ்வொருவரும் தங்களின் அன்றாட வாழ்வில், முக்கியமாக துறவுவாழ்வில் இறைத்திட்டத்தை தெளிந்து தேர்ந்து செயல்படவும், அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்திடவும் புனித சலேசியாரின் இந்த சாந்தமுள்ள, இரக்கம் நிறைந்த மனிதநேய அணுகுமுறை அவசியமான தேவையாக இருக்கிறது.

2. இறைத்திட்டத்தைப் பின்பற்றுதல்

இறைநம்பிக்கை உள்ள அனைவரும் தங்களின் வாழ்வியல் நிலைக்கேற்ப, பக்தி வாழ்வில் பங்கேற்று, புனித நிலையை அடைய முடியும் என்று ஆன்மீகப் புரட்சியை அறிமுகம் செய்து, தனது வாழ்வில் அதை வாழ்ந்து காட்டி, மக்களையும் அத்தகைய பக்தி வாழ்வில் வளர்ந்திட கற்றுக்கொடுத்து, ஊக்கப்படுத்தி வழிநடத்தியவர் புனித பிரான்சிஸ் சலேசியார்.

இந்த பக்தி வாழ்வின் பயணத்தில், துறவறத்தார், பொதுநிலையினர் என்று எல்லாரும் பின்பற்ற வேண்டிய அளவுகோல் இறைத்திட்டத்தை அவரவர் வாழ்க்கைச் சூழலில் அறிந்து, தெரிந்து, புரிந்து செயல்படுத்துவதாகும். தாங்கள் செய்கின்ற செயல்கள், சந்திக்கின்ற நிகழ்வுகள், தங்களுக்கு ஏற்படுகின்ற அனுபவங்கள் அனைத்திலும் இறை திட்டத்தின்படியே செயல்படும்போது, அனைத்தும் அர்த்தம் பெறுகிறது, பலன் தருகிறது.

எனவே, நமது அன்றாட வாழ்வில் நமது சித்தம் இறை சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமே ஒழிய, இறை சித்தம் நமது சித்தத்தை எப்போதும் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. நம்மை முதன்மைப்படுத்தி, நமது சித்தப்படி, நாம் எதிர்பார்ப்பதுபோல, நமது விருப்பத்தின்படி கடவுள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும்போது, அது தோல்வியில் முடிகிறது. காரணம், சில நேரங்களில் நமது சித்தத்திற்கு மாறாக, கடவுளின் சித்தம் செயல்படுகிறது. அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

ஆகவே, கடவுளை மையப்படுத்தி, அவரது திட்டத்தை தெரிந்து செயல்படுவது, மனித வாழ்விற்கு, மிகவும் சிறப்பாக, துறவு வாழ்விற்கு மேன்மைத் தருவதாக, புகழ் சேர்ப்பதாக இருக்கிறது. தோல்விகள், துன்பங்களும்கூட அர்த்தம் பெறுகிறது.

3. இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்தல்

மனித வாழ்வில் நிகழும் எல்லாவற்றிக்கும், மனிதர்களின் செயலுக்கும், கடவுளின் செயலுக்கும் கடவுளின் அன்புதான் அடித்தளமும், ஆக்கமுமாக இருக்கிறது. ஆகவேதான், கடவுளுக்கான மனிதருடைய அன்பின் தொடக்கம், வளர்ச்சி, நிறைவு எல்லாமே, கடவுள் மனிதர்மீது கொண்டுள்ள அளவில்லா அன்பில் ஊன்றியதுதான். அதனால், கல்வாரி மலை "அன்பு செய்கிறவர்களின் மலை" என்று புனித பிரான்சிஸ் சலேசியார் உறுதிப்படக் கூறுகின்றார். எல்லாவற்றிலும் கடவுளையே அன்பு செய்தல், அவரையே மையப்படுத்தி செயல்படுதல், அவருக்காகவே ஏங்குதல், அவர் விருப்பத்தையே தேடுதல் என்பது கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பில் ஊன்றியதுதான்.

இந்த அணுகுமுறைதான் துறவு வாழ்விற்கு மிகவும் அவசியமும், அடித்தளமாகவும் இருக்கிறது என்பதை துறவறத்தார் புனித சலேசியாரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய கடவுள் அன்பு, அவரது சாயாலாகப் படைக்கப்பட்ட சக மனிதரிடம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், புனித சலேசியார் அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொடுத்தார். எனவேதான், “நமது அயலாரைப் பாசத்தோடு அன்பு செய்வது, கடவுளை மனிதரில் அன்பு செய்வது அல்லது மனிதரில் கடவுளை அன்பு செய்வதாகும்; தயவுசெய்து, உனது அயலாரைக் காயப்படுத்தக்கூடிய தீமையானது எதையும் செய்யாதே. சிறியதே ஆனாலும் இழிவானது எதையும் சொல்லாதே; உன்னைவிட உன் அயலாரை அதிகம் அன்பு செய்ய வேண்டும்என்று கடவுள் அன்பை பிறர் அன்பில் வெளிப்படுத்தும் வாழ்வியல் தத்துவத்தை ஒரு கலையாக புனித சலேசியார் கற்றுக்கொடுத்தார்.

இவ்வாறு, செபத்தின் வழியாகக் கடவுள் அன்பை அனுபவித்து, இறை உறவில் வளர்ந்து, அதை அறப்பணியில் ஊன்றிய பிறரன்புப் பணியில் வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் நம் சலேசியார். ஆகவே, கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் அவர்களின் குறைகளையும் தாண்டி, அன்பு செய்யப்பட வேண்டும், மதிக்கப்படவேண்டும், அவர்களின் தனித்துவம் போற்றப்பட வேண்டும் என்பதையும் புனித சலேசியார் வலியுறுத்தினார்.

வெவ்வேறு தனித்தன்மைக் கொண்ட நபர்கள் ஒன்று சேர்ந்து ஒரே குழுமமாக வாழும் துறவறக்குழும சூழலில், புனித சலேசியார் கற்றுக் கொடுத்த கடல் அன்பும், அயலார் அன்பும் துறவறத்தாருக்கு மிகவும் அவசியமான தேவையாயிருக்கிறது.

4. நல்லார்வ நலம் தரும் நேர்மறைப் பார்வை

"சலேசிய ஆன்மீகம்" இறைநம்பிக்கையில் ஊன்றிய நேர்மறைப் பார்வையை மையமாகக் கொண்டது. அதாவது, ஒருவர் தனது வாழ்வில் எவ்வளவு கடுமையான வீழ்ச்சியை, தோல்வியை, துன்பத்தை, பலவீனத்தை, இகழ்ச்சியை, பாவநிலையைச் சந்தித்தாலும், மனம் தளர்ந்துவிடாமல், விரக்தியற்ற நிலையினால் தாக்கப்படாமல், மனஉறுதியோடு, கடவுளின் அன்பிலும், அவரது இரக்கத்திலும் ஆழமான நம்பிக்கைக் கொண்டு, தொடர்ந்து முயற்சித்து, கடவுளின் கரம்பிடித்து விழவிழ எழுந்திட வேண்டும். மனிதம் காப்பாற்றப்பட வேண்டும். மனிதர்கள் சாவையும் வென்றிட வேண்டும் என்ற நல்லார்வ நலந்தரும் நேர்மறை வாழ்வியல் பார்வைதான் "சலேசிய ஆன்மீகம்".

எனவேதான், “உன் பலவீனத்தை, பாவநிலையை, வீழ்ச்சியை முன்னிட்டு நீ பயப்படாதே! தைரியமாயிரு. கலங்காதே, கடவுளையே உறுதியாய் நம்பிடு. அவர் உன்னைக் காத்திடுவார். ஒரு நாளைக்கு ஆயிரம் முறை நீ வீழ்ந்தாலும், இறைவனின் இரக்கத்தின் மீது நம்பிக்கைக்கொண்டு, அவர் கரம்பிடித்து விழுகின்ற ஒவ்வொரு முறையும் நம்பிக்கையோடு மீண்டும் எழுந்திட வேண்டும். ஏனெனில், இன்றுவரை உன்னைக்காத்த இறைத்தந்தை இனிமேலும் காப்பார். இல்லையெனில், நீ சந்திக்கும் தீமையை, துன்பத்தை எதிர்கொள்ளவும், வெற்றிக்கொள்ளவும் தேவையான அருளையும், ஆற்றலையும் தருவார். ஆகவே, உனக்கு நிகழவிருக்கும் தீமையைக்கண்டு நீ பயப்படாதே. தைரியமாயிரு. ஒருவேளை, அத்தீமை நிகழாமல் போகலாம். அதேப்போல, ஒருவர் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், எவ்வளவு கடுமையான தவற்றை செய்திருந்தாலும், நாம் அவரை இழிவுப்படுத்தவோ, நியாயமற்ற முறையில் தீர்ப்பிடவோ கூடாது. ஏனெனில், இறப்பின் கடைசி நிமிடத்தில் கூட பாவம் செய்தவர் உண்மையாக மனம் திரும்பி கடவுளைத்தேடும் போது, கடவுள் தனது அளவில்லா இரக்கத்தைக் காண்பித்து, அவரை மன்னித்து அவருக்கு மீட்பளிப்பார்என்பது புனித சலேசியாரின் அசைக்க முடியாத ஆழமான நம்பிக்கையும், படிப்பினையுமாகும். இத்தகைய நல்லார்வ நலம் தரும் நேர்மறைப் பார்வைதான், சலேசிய ஆன்மீகப் பாதையை பின்பற்றி வெவ்வேறான சமூகச்சூழலின் தேவைக்கேற்ப துறவு வாழ்வில் ஈடுபட்ட இருபால் ஆன்மீக ஆசான்களுக்கு ஊக்கம் தரும் உந்து சக்தியாக இருந்தது. இன்றைய வாழ்வியல் சூழலில் துறவறத்தாருக்கும், பொதுநிலையினருக்கும் தேவை இத்தகைய நல்லார்வ நலம் தரும் நேர்மறை வாழ்வியல் ஆன்மீகப் பார்வைதான் என்பது சந்தேகமில்லை.

5. எளிய நற்குணங்களில் வளர்தல்

பக்தி வாழ்வின் நிறைவை நோக்கிப் பயணிக்கவும், புனித வாழ்வில் தினம் வளர்ந்திடவும், புனித சலேசியார் காட்டிய பாதை கடினமான, நமது வலிமைக்கு இயலாத பாதை அல்ல; கடினமான, புரிதலுக்கு அப்பாற்பட்ட ஆழமான இறையியல் சார்ந்த உயர்குணங்களும் அல்ல; மாறாக, சாதாரண மக்களும் புரிந்து செயல்படுத்தக்கூடிய, எளிய நற்குணங்களைத்தான் புனித சலேசியார் பரிந்துரைத்தார். ஏனென்றால், இந்த எளிய நற்குணங்களை செயல்படுத்துவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அன்றாட வாழ்வில் அதிகம் நிகழ்கிறது. அந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, இந்த எளிய நற்குணங்களை பின்பற்றுவதால், நாம் சுலபமாக உயர் குணங்களில் வளர முடியும். அதன் வழியாக, பக்தியில் ஊன்றிய புனித வாழ்வில் நாளும் முன்னேற முடியும் என்பது புனித சலேசியாரின் ஆழமான நம்பிக்கை. அதையே அவர் தன் வாழ்வில் கடைப்பிடித்தார். மற்றவர்களும் தங்களது வாழ்வில் பின்பற்ற கற்றுக்கொடுத்தார். இந்த சலேசிய ஆன்மீக அணுகுமுறை, துறவற வாழ்வை அர்த்தமுள்ள முறையில் வாழ்ந்திட அடித்தளமாகிறது. இவ்வாறு, பக்தி வாழ்விற்கும், துறவற வாழ்விற்கும் முன்மாதிரியாக புனித சலேசியார் தனது வாழ்வில் வாழ்ந்து காட்டி, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்த எளிய நற்குணங்களாகிய எதிர்நோக்கு, எளிமைப்பண்பு, சாந்த குணம், தன்னடக்கம், தாழ்ச்சி, நம்பிக்கை, பொறுமை, மன உறுதி, விடாமுயற்சி அவசியமான தேவையாயிருக்கிறது.

இந்த எளிய நற்குணங்கள் எல்லாரும் தங்களுடைய வாழ்விலும் அடிக்கடி அனுபவித்து பின்பற்றக்கூடியவை. ஆகவே, துறவற வாழ்வின் அருள்நிலையை அடைவதற்கும், இருபால் துறவியரின் பக்தி வாழ்விற்கும், அர்ப்பண வாழ்வில் அர்த்தம் காண்பதற்கும், பணி வாழ்வில் மேன்மை அடைவதற்கும், புனித சலேசியார் காட்டிய இந்த எளிய நற்குணங்கள் மிகவும் பேருதவியாக இருக்கிறது.

. சலேசிய ஆன்மீகப் பாதையைப் பின்பற்றும் துறவற சபைகள்

புனித சலேசியார் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் ஆன்மீகம், துறவற வாழ்வின் புனிதத்தை அடைந்திடவும், அதற்கு ஊன்றுகோலாகவும், உந்துதலாகவும் இருந்தது. ஆகவே, புனித சலேசியாருக்குப் பின்வந்த பல இருபால் ஆன்மீக ஆசான்கள், இந்த சலேசிய ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் ஏற்படுத்திய துறவற சபையின் அடிப்படை ஆன்மீக வழிகாட்டியாக புனித பிரான்சிஸ் சலேசியாரின் ஆன்மீக நெறியைத் தேர்ந்துகொண்டார்கள். அத்தகைய துறவற சபைகள் பின்வருமாறு:

1. புனித மரியாவின் சந்திப்பு சபை (Order of the Visitation of Holy Mary)

2. புனித பிரான்சிஸ் சலேசியார் மறைபரப்பு சபை (Missionaries of St. Francis de Sales – MSFS)

3. புனித தொன்போஸ்கோவின் சலேசிய சபை (Salesians of St. Don Bosco)

4. புனித தொன்போஸ்கோவின் சலேசிய சகோதரிகள் சபை (Salesian Sisters of St. Don Bosco)

5. புனித பிரான்சிஸ் சலேசியாரின் புதல்வியர் சபை (Daughters of St. Francis de Sales)

6. சாவ்னோ புனித திருச்சிலுவை சகோதரிகள் (Sisters of the Cross of Chavanod)

7. அமல அன்னையின் சலேசிய மறைப்பரப்பு சபை (Salesian Missionaries of Mary Immaculate)

8. புனித பிரான்சிஸ் சலேசியாரின் அர்ப்பணிப்பாளர்கள் சபை (Oblates of St. Francis de Sales)

9. புனித பிரான்சிஸ் சலேசியாரின் அர்ப்பணிப்பாளர்கள் சகோதரிகள் சபை (Oblate Sisters of St. Francis de Sales)

முடிவாக,…

இவ்வாறு, தனது முன்மாதிரியான நம்பிக்கை வாழ்வாலும், ஆழமான நற்செய்தி மதிப்பீடுகளில் ஊன்றிய படிப்பினையாலும், தனது வாழ்வில் கடைப்பிடித்த கடவுள் அன்பிலும், நம்பிக்கையிலும் ஊன்றிய நல்லார்வ நலம் தரும் நேர்மறைப் பார்வையாலும், மனம் தளராத நற்செய்தி அறிவிப்பின் அணுகு முறையாலும், ஆர்வத்தாலும், இறை இரக்கத்தில் ஊன்றிய வாழ்வியல் ஆன்மீகத்தாலும் தன்னைத் தேடிவந்த, தான் பணி செய்த பல்வேறு நிலையில் உள்ள மக்களின் வாழ்வில், குறிப்பாக, துறவறத்தாரின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார் புனித சலேசியார்.

பல தலைமுறையினரையும் தாண்டி, இன்றும் துறவறத்தாரை கடவுளின்பால் ஈர்த்து, தங்களின் அர்ப்பண வாழ்வின் கடமைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, சக மனிதரிடம் அன்போடும், இரக்கத்தோடும் அணுகி, அவர்களின் மீட்பிற்கு முழுமையாக உழைத்திடத் தேவையான உள்மன ஏக்கத்தையும், முழுமனித விடுதலை செயல்பாடுகளை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்ல அவர்களை உசுப்பிவிடும் அக்கினித் தீயாக நம் புனிதர் காட்டிய இந்த சலேசிய ஆன்மீக மதிப்பீடுகள் செயல்படுகிறது.

நாமும் புனித பிரான்சிஸ் சலேசியார் காட்டிய ஆன்மீக மதிப்பீடுகளை உள்வாங்கி, கொள்கையில் ஊன்றிய இலட்சிய வாழ்வில் புதியப் பார்வையோடு, நேர்மறை அணுகுமுறையோடு இணைத்திடுவோம், கடவுளையே என்றும் எதிலும் தேடிடுவோம். அவர் சித்தம் ஒன்றையே நாடிடுவோம். அவரின் உயிருள்ள சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம். எல்லாருக்கும் இறையாசீர்.

Comment