No icon

புனித பிரான்சிஸ் சலேசியார்

பொதுநிலையினருக்கான ஒரு புனிதர்

இல்லறத்தையும் துறவறத்தையும் இருபெரும்  துருவங்களாகக் காண்பதும் திரு அவையிலுள்ள பல்வேறு வாழ்வு நிலைகளில் பொதுநிலையினருக்கு தகுந்த அங்கீகாரம் தரமறுப்பதும், திருமண வாழ்வு என்றால் மிகவும் எளிதான வாழ்வு என்று எண்ணுவதும் திரு அவையின் வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்துவருகிறது. இத்தகைய தவறான எண்ணங்களை, மனப்பாங்கையும் உடைக்க நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுக்கும் அளப்பரிய முயற்சிகள் பாராட்டுக்குரியவை. எனினும், பொதுநிலையினர் இன்னும் அதிகமான அளவில் திரு அவையின் வாழ்விலும், கட்டமைப்பிலும் பங்கேற்க வேண்டும். இத்தகைய மகத்தான சிந்தனைகளை பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பிரான்சிஸ் சலேசியார் கொண்டிருந்தார்; நிகழ்த்தி காட்டினார்.

இல்லறத்திற்கான சலேசிய ஆன்மீகம்

குடும்ப வாழ்வில் முழுமையாக ஈடுபட்டுக்கொண்டே, ஆன்மீக வாழ்வில் வளர்வதற்கான வழிகளை பொதுநிலையினருக்கு அப்போதே கற்றுக்கொடுத்தார். திருமண வாழ்வு ஒரு கடினமான பாதைதான் என்பதை ஏற்றுக்கொண்ட நமது புனிதர், பொறுமையோடு இவ்வாழ்வு நிலையை அரவணைத்தால் நிறைவாழ்வை அடையலாம் என கற்பித்தார். நிறைவாழ்வு பெற  துறவியாக மாறவேண்டிய தேவையில்லை. மாறாக, நற்பண்புகளும், தியாக உள்ளமும் கொண்டிருந்தால் பொதுநிலையினரும் புனிதராகலாம் என அறிவுறுத்தினார்.

தன்னுடைய கருத்தினை விளக்கதைம்என்கிற தாவரத்தை உதாரணமாகக் காட்டுகின்றார். இத்தாவரத்தின் சாறு மிகவும் கசப்பானதாகும். இருப்பினும், தேனீக்கள் அதிலிருந்து சுவைமிக்க தேனை உருவாக்குகிறது. அதேபோன்றுதான், சவால்கள் நிறைந்த திருமண வாழ்வு மூலமாகவும், தூய வாழ்வினை வாழ இயலும்.

நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்களோ அதே வாழ்வு நிலையில் இருந்த வண்ணமே கடவுளை அன்பு செய்யுங்கள். தந்தையாக, தாயாக, மகனாக, மகளாக, கணவனாக, மனைவியாக - எந்நிலையில் இருந்தாலும் அதை முழுமையாக வாழ்ந்தால் அது நிறைவாழ்வுக்கு அழைத்துச் செல்லும்என்று போதித்தார்.

தன்னுடைய புத்தகங்களானஆன்மீக வாழ்வின் முகவுரை (Introduction to Devote Life) “இறையன்பு பற்றிய ஆய்வுக்கட்டுரை" (Treatise on the Love of God) மற்றும் மறையுரை வாயிலாக பொதுநிலையினரை ஊக்குவித்து வந்தார்.

குடும்ப வாழ்வு தூய வாழ்வுக்கானப் பாதை

புனித சலேசியார் தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சரிவர பயன்படுத்தி, திருமணமானவர்களை வழிநடத்தி வந்தார். அவர்களுக்கு திருமண வாழ்வு, "தூய வாழ்வுக்கானப் பாதை" என்று, அறிவுறுத்தி வந்தார்.

திருவருட்சாதனத்தின் இயல்புகள் திருமண வாழ்வை தூய்மையை நோக்கி அழைத்து செல்கிறது. கணவனும், மனைவியும் இறைமகன் இயேசுவோடு ஒன்றித்து வாழ இத்திருவருட்சாதனம் உதவுகிறது. திருமண உடன்படிக்கையால் உருவாகும் திருமண உறவு நிலையானதாக அமைகிறது. இந்த உறவு தூய வாழ்விற்கும், கறைபடியா ஆன்மீக வாழ்விற்கும் இன்றியமையாததாகும்.

தன்னலமற்ற அன்பை திருமண உறவில் இணைந்த தம்பதியினர் தங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இது அன்றாட வாழ்வில் மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. சில  வேளைகளில்  இது துறவற வாழ்வில் எழும் சவால்களைவிட கடினமானது. எனினும், திருமண உறவு நம் குடும்பத்தை இறையன்பை நோக்கி பயணிக்க உதவும் கருவியாக இருப்பதால், திருமணமானவர்கள் மனந்தளராது தங்கள் குடும்ப வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இதனால் திருமண அருட்சாதனம் வழங்கும்ஒன்றிப்புஎன்கிற பண்பை திருமணத்தால் இணைக்கப்பட்டவர்கள் இறுதிவரை காக்கவேண்டும். இந்த உன்னத முயற்சியில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தால் குடும்ப வாழ்வில் தத்தம் அழைப்பினை உணர்ந்து, முழுமையாக வாழ ஏதுவாக இருக்கும். அதற்கான அழைப்பினை புனித சலேசியார் விடுக்கிறார். ‘ஒருவர் எவ்வித வாழ்வியல் சூழலில் இருந்தாலும், தனது வாழ்நிலை சார்ந்த கடமைகளை நிறைவேற்றி இறைவனை அன்பு செய்து அனைத்தும் நன்மையாக மாறும்எனும் நம்பிக்கை கொண்டிருந்தால் குடும்ப வாழ்வில் தனது அழைத்தலை முழுமையாக வாழ இயலும்என கற்றுக்கொடுக்கிறார்.

சோதனைகளை வெல்ல

சோதனைகளிலிருந்து குறிப்பாக ஆறாவது மற்றும் பத்தாவது கட்டளைகள் சார்ந்த சோதனைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள திருமணமானவர்கள் இறைவனால் புனிதப்படுத்தப்பட்ட திருமண உறவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தூய உள்ளம் கொண்டவர்களாக பயணிக்க உதவும். கறைபடாத கரங்களும், மாசற்ற மனமும் கொண்டவர்கள் ஆண்டவரின் மலையில் ஏற

தகுதியுள்ளவர்கள். திருப்பாடல்கள் 24:4 இல் திருமணம் உயர்வாக மதிக்கப்பட வேண்டும் என்றும், மண உறவு மாசுபடாமலிருக்க வேண்டுமென்றும் - எபி 13:4 இல் திருவிவிலியம் நமக்கு எடுத்துக்கூறுகிறது.

மண வாழ்வில் தூய்மை ஓர் எளிதான காரியமல்ல; பல வேளைகளில் இந்த தூய வாழ்வு, திருமணமானவர்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் கட்டுப்படுத்தும் எதிர்மறைப் பண்பாக பார்க்கப்படுகிறது. உண்மையில் இது, முழு மனதோடு தாராளமாக தனது துணையை அன்பு செய்யும் நேர்மறைப் பண்பாகும்.

சலேசியார், மணவாழ்வில் தூய உள்ளத்தை சிப்பிக்குள் இருக்கும் முத்தோடு ஒப்பிடுகிறார். இவ்வகை சிப்பிகள் வானத்திலிருந்து விழுகின்ற துளியை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது. வேறெந்த துளி நீரையும் இவை பெற்றுக்கொள்வதில்லை. தூய்மை வாழ்வும், இந்த சிப்பியை போன்றது. திருமண உடன்படிக்கைக்கு அப்பாற்பட்ட எந்தவித உடல் இன்பத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, மண உறவு கணவன்-மனைவி இடையே மட்டும் இருக்க வேண்டிய தனித்துவமான உறவேயாகும்.

தூய்மை வாழ்வினை கறைபடுத்தும் சொற்களையும், செயல்களையும் தவிர்த்து வாழ வேண்டுமென்று, நமது புனிதர் வலியுறுத்துகின்றார். இத்தகைய மேன்மை ஒருவரின் குடும்பத்தாரின் துணையின்றி கிடைப்பது கடினமானது.

பிரான்ஸ்  நாட்டு அரசர் லூயி-யின் தாயை நல்லதொரு முன்மாதிரிகையாக நமது புனிதர் காட்டுகின்றார். அவர் தனது மகனிடம், ‘நீ பாவத்தில் வீழ்வதைவிட இறப்பதே மேல்என்று கூறி பாவத்தில் விழாமலிருக்க அறிவுறுத்தியிருக்கிறார். மண உறவுக்கு எதிரான பாவங்களில் வீழ்ந்தவர்கள் எழ இயலாமல், அதை ஒரு பழக்க வழக்கமாய் மாற்றி அழிந்து போகும் அவலநிலை இருப்பதையும் நமது புனிதர் சுட்டிக்காட்டுகின்றார்.

திருமணமான ஆண்களின் கடமைகளை கவனமாக விளக்குகிறார் புனித சலேசியார். ஒவ்வொரு கணவனுக்குரிய முக்கிய பண்பு "அன்பே" ஆகும். தனித்துவ அன்புதான் திருமண உறவிற்கும், குடும்ப வாழ்விற்கும் ஊன்றுகோலாக இருக்கிறது. இந்த அன்பு கறைபடியாததாகவும், அர்ப்பணமிக்கதாகவும், தியாகம் செய்ய துணிந்ததாகவும் இருக்க வேண்டும்.

புனிதர் வாழ்ந்த காலத்தில் குடும்ப கௌரவத்தினை காப்பது ஆண்களின் தலையாய கடமைகளில் ஒன்றாக கருதப்பட்டது. அதற்காக சிலர் பிறரின் உயிரைப் பறிக்கவும் அஞ்சவில்லை. நோக்கு சரியாக இருந்தாலும், தவறான வழிகளை நியாயப்படுத்த முடியாது என்பதில் நமது புனிதர் உறுதியாக இருந்தார். தவறான வழிமுறைகளை ஆண்கள் கைவிட வேண்டுமென்றும், சலேசியார் அறிவுறுத்துகிறார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர் ஆன்மீகத்திலும் ஆழமாக வளரவேண்டும் என்று சலேசியார் விரும்பியபோதிலும், அவர்கள் தங்கள் குடும்பத்திலுள்ள கடமைகளை கைவிட்டு ஆன்மீக வாழ்வில் நாட்டம் காண்பதை அவர் விரும்பவில்லை. இல்லற வாழ்வும், ஆன்மீக வாழ்வும் ஒன்றை மற்றொன்று பாதிக்காமல் சமநிலையில் பயணிக்க வேண்டுமென்பதையே அவர் விரும்பினார்.

நீதி - சமூக நீதியில் பொதுநிலையினரின் பங்கு

கிறிஸ்துவின் வழியை பின்பற்றுபவர்கள் அனைத்து நற்குணங்களையும் ஒருசேர கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சில பண்புகளை மட்டும் தேர்வு செய்து, அதன்படி வாழ்வோமேயானால் மனித வாழ்வு முழுமையடையாது. உதாரணமாக, செப வாழ்வில் கவனம் செலுத்திவிட்டு ஏழைகளுக்கு ஈகை செய்வதில் ஆர்வமற்றவர்கள் நிறைவாழ்வை பெறமுடியாது. நிறைவாழ்வைப் பெற வேண்டுமென்றால் உடைமைகளை விற்று, ஏழைகளுக்கு பகிர்ந்து கொடு (மத் 19:21) என்னும் இயேசுவின் வாக்கு அனைவருக்கும் பொருந்தும். அதைபோன்று நீதியும், சமூகநீதியும் அனைவராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நற்பண்புகளாகும் பிறருக்குரியதை பிறரிடம் கொடுப்பது, அதுவும் மனமுவந்து தாராள எண்ணத்தோடு கொடுப்பதே நீதியாகும். அத்தோடு, நமக்குரியதை நமது தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்தி, ஆடம்பரத்தை தவிர்ப்பதும் நீதி தான். சலேசியார் "நீதி"என்னும் நற்பண்பை அனைவருக்கும் பொதுவானதாகவும் பகிர்ந்தளிக்கக்கூடியதாகவும் தவறு செய்தவர் திருந்தி வாழ அழைக்கும் தண்டனையாகவும், கருவியாகவும் பார்க்கிறார்.

நீதி அனைவருக்கும் உரியது, ஏனென்றால், நீதியின் பிறப்பிடம் இறையன்புதான். இறைவனை அன்பு செய்கிறவர்கள் பிறருக்குரியதை அவர்களிடமே கொடுப்பார்கள். அந்த வகையில், நீதியும், இறையன்பும் வெவ்வேறு பண்புகளல்ல; இறையன்பில் நிலைத்திருப்பவர்கள் பிறரன்பில் வாழ்வார்கள். அவர்கள் நீதியை நிலைநாட்டுவார்கள். அதுவே, இறைப்பணியாகிறது. அவ்வகையில் இறையன்பு, பிறரன்பு மற்றும் நீதி ஆகியவை ஒன்றோடொன்று பிரிக்க முடியாத தொடர்புடையவை ஆகும்.

அன்பும், நீதியும் ஒருசேர செயல்படுத்தப்படும்போது, பிற நற்குணங்களும் அதனோடு சேர்ந்து வளரும் என்று சலேசியார் நம்புகிறார். உதாரணமாக, நீதியை கடைப்பிடிக்க வேண்டுமென்றால், மன வலிமை தேவைப்படுகிறது. மன வலிமையற்றவரிடம் நீதியும், அநீதியாக மாறும் அபாயமுள்ளது. அதே போன்று, நன்மைக்கும், தீமைக்கும் இடையேயுள்ள பாகுபாட்டினை அறியாதோரிடமிருந்து நீதியினை எதிர்பார்க்க முடியாது.

புனித யோசேப்புவை நீதியின் அடையாளமாக சலேசியார் எடுத்துரைக்கிறார். பொதுநிலையினருக்கு இவர் ஓர் முன்மாதிரிகையான வாழ்வை வாழ்ந்துள்ளார். மனிதனின் அகமும், புறமும் நீதியினால் நிரப்பப்பட வேண்டுமென்று விரும்புகிறார் நமது புனிதர். நமது செயல்கள் நீதியின் வெளிப்பாடுகளாக அமைய வேண்டுமென அறிவுறுத்துகிறார். ஏனென்றால், அத்தகைய சூழலில்தான் ஒரு நீதிமான் அநீதிக்கு எதிரான எண்ணத்தை பதிவுசெய்ய முடியும். பிறருக்கு நீதி கிடைக்க உதவ முடியும்.

சமூகநீதி என்னும் பண்பு, நீதி என்னும் பண்பைவிட, ஒருபடி மேலே செல்கிறது. பிறருக்குரியதை மட்டுமல்லாமல், பிறருக்கு தேவையானதை அவர்களிடமே கொடுப்பது இதைச் சேர்ந்ததே. ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் தேவையான பொருளாதாரமும், உயர்மதிப்பும் அவர்களுக்குரியதே என்றுணர்ந்து, அவற்றை அவர்களுக்கு கொடுப்பதும் இதிலடங்கும்.

புனித சலேசியார் ஏழைகள் மீது சிறப்பான அக்கறை கொண்டிருந்தார்.

இறைவனை அன்பு செய்பவர்கள் ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்குவார்கள் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார் சலேசியார். ஏழைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று, தனது நண்பர் ஆன்டோய்னோ ஃபாவ்ரே மூலமாக முயற்சிகளை மேற்கொண்டார். ஒடுக்கப்பட்ட மனிதர்கள் அனைத்து விதமான ஒடுக்குமுறை களிலிருந்தும், விடுவிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

ஒரு இறுதிச்சடங்கின்போது, அவர் ஆற்றிய மறையுரையில், "யார் நல்ல பொதுநிலையினர்?" என்பதை வரையறுக்கிறார். பொறுமை, நீதி மற்றும் பக்தி போன்ற நற்பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்; அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்து நடத்தல் வேண்டும்; குடும்பத்தாரோடு அன்போடும், அமைதியோடும் பழக வேண்டும்; தாழ்நிலையிலுள்ளோருக்கு பரிவுகாட்டல் வேண்டும்; ஆன்மீக காரியங்களில் நாட்டமிருக்க வேண்டும். ஏழைகளுக்குரிய பங்கீடு உரிய முறையில் வழங்கப்பட வேண்டும். சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பொதுநிலையினர் பாடுபட வேண்டும் என்று சலேசியார் அவர்களை ஊக்கப்படுத்தினார். நமது ஈகையும், பிற நற்செயல்களும் ஏழ்மையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் வேரறுக்க பயன்பட வேண்டும்.

புனித சலேசியார் குருவாக இருந்த போதும், பின்னர் ஆயர் நிலையை அடைந்த போதும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தனது கையிலெடுக்கவில்லை. மாறாக, பொதுநிலையினர் அவற்றை ஏற்று நடத்த வேண்டுமென விரும்பினார்.

திரு அவையில் பொதுநிலையினரின் பங்கு

கிறிஸ்துவின் குருத்துவ, இறைவாக்கு மற்றும் அரசாட்சி பணிகளில் பொதுநிலையினர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதன் மூலம் திரு அவையிலும், சமுதாயத்திலும் இவர்களுடைய இடம் இன்றியமையாதது. திருமுழுக்கு எனும் திருவருட்சாதனத்தின் வழியாக இந்த முப்பெரும் பணிகள் பொதுநிலையினருக்கு வழங்கப்படுகிறது.

புனித சலேசியார் இந்த உண்மையை நன்கு உணர்ந்தவராய் பொதுநிலையினரை திரு அவையின் அனைத்து துறைகளிலும் ஈடுபட ஊக்குவித்தார். வத்திக்கான் சங்கம் பொதுநிலையினரின் பங்கேற்பினை வெகுவாக ஊக்குவிக்கின்றது. இறைமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள் (1பேது 2:9) என்னும் இறைவாக்கு பொதுநிலையினரின் பங்கேற்பை ஊக்குவிக்கிறது.

திரு அவை அனைத்து மக்களையும் கிறிஸ்துவில் ஒன்றுபட்டவர்களாகவும், சமநிலையில் உள்ளவர்களாகவும் தான் பார்க்கிறது. எனினும், வரலாற்றின் கால நிகழ்வுகளும் தவறான புரிதலின் தாக்கமும் திரு அவையில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்தன.

குருத்துவ மற்றும் துறவற அழைப்பினை ஏற்றுக்கொண்டவர்கள் மேல்நிலையிலும், பொதுநிலையினர் தாழ்நிலையிலும் இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவியது. இதன் தாக்கம் இன்றும் இருந்து வருகிறது.

ஆயர்களும், குருக்களும் ஏனைய தலைவர்களும் வழிகாட்டிகளாகவும் பொதுநிலையினர் வழி நடத்தப்பட வேண்டியவர்களாகவும் பார்க்கப்பட்டார்கள். இந்த கருத்தியலுக்கு மாற்றாக வத்திக்கான் சங்கத்தின் கருத்துகள் திரு அவையில் புத்தொளி பாய்ச்சியது.

பொதுநிலையினர் தூய வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் என்றும்ஆவியாரால் புனிதப்படுத்தப்பட்டவர்கள் என்றும் கோடிட்டு காட்டியது. இவர்கள் அனைவருமே பொதுக்குருத்துவத்தில் பங்கு பெறுகிறார்கள். திரு அவையின் நிர்வாக கட்டமைப்பிலும், பங்கு பெறுகிறார்கள்.

பணிக்குருத்துவம் இதிலிருந்து சற்று மாறுபட்டிருந்தாலும், நமது தலைமைக் குரு கிறிஸ்து என்னும் மையப்புள்ளியில் இணைந்து ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையதாகவும், ஒருங்கிணைந்து பணியாற்ற அழைக்கபட்டதாகவும் அமைகிறது.

திருத்தந்தையின் கூட்டியக்க திரு அவைக்கான சமீபத்திய அழைப்பு இந்த பங்கேற்பினையும் ஒருங்கிணைந்த பணியாற்றுதலையும் பலப்படுத்தும் நோக்கு கொண்டதுதான்.

சலேசியார் பொதுநிலையினரின் இத்தகைய உடனுழைப்பையும் பங்கேற்பையும் அவரது காலச்சூழலிலேயே ஊக்கப்படுத்தி வந்தார். பொதுநிலையினர் தமது சாட்சியம் பகரும் வாழ்வாலும், உடனுழைப்பாலும் ஆழ்ந்த தாக்கத்தையும், மாற்றத்தையும் உருவாக்க முடியும் என்று நம்பினார்.

புளோரிமோட் கல்விச்சாலை பொதுநிலையினரை ஆற்றல் மிக்கோராய் மாற்றும் நோக்கோடு துவங்கப்பட்டது.

ஓவியர்கள், சிற்பிகள், மரவேலை செய்வோர் கட்டிடப் பணியாளர்கள் போன்றோருக்கு உதவ வேண்டும் என்பதே சலேசியார் எண்ணமாக இருந்தது. நமது புனிதரின் முயற்சியால் மறைக்கல்வி கூட்டமைப்பு பல நகரங்களில் துவக்கப்பட்டது. இங்கு பல பொதுநிலையினர் பொறுப்பாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியமர்த்தப்பட்டார்கள். பல்வேறு வகையான இறைபணியில் பொதுநிலையினர் பங்கேற்க சலேசியார் ஆவன செய்து, அவரோடு பணியாற்ற அழைப்புவிடுத்தார்.

முடிவுரை

பொதுநிலையினரின் ஆன்மீக வாழ்வை பலப்படுத்தவும், திரு அவையில் அவர்களின் பங்கேற்பை தீவிரப்படுத்தவும், புனித பிரான்சிஸ் சலேசியார் எடுத்த முயற்சிகள் இன்றும் நமக்கு பயனுள்ளதாக இருக்கின்றன. பொதுநிலையினரின் குடும்ப வாழ்வும், இறையழைத்தலே என்பதை நாம் ஆழமாக உணர வேண்டும். சலேசியாரின் கட்டுரைகளும், மறையுரைகளும் ஆன்மீக வாழ்வின் மறுமலர்ச்சியை எதிர்நோக்கியதாகும்.

திரு அவையின் பொது வாழ்விலும், ஆன்மீக வாழ்விலும் பொதுநிலையினரின் பங்கு இன்னும் ஊக்குவிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. இறைவனை மையப்படுத்திய மனிதகுல விடுதலைக்காக உழைக்கவும், பல்வேறு அடிமைதனத்திலிருந்து நம்மையும், பிறரையும் விடுவிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் பொதுநிலையினர் வழியாக செயல்படுத்தபடவும், திரு அவையின் வாழ்வில் அவர்கள் முக்கிய பங்கேற்கவும் ஆவன செய்ய வேண்டும்.

வத்திக்கான் சங்க ஏடுகளும், திருத்தந்தையின் கூட்டியக்க திரு அவைக்கான அழைப்பு நடைமுறைப்படுத்தப்படும்போது, திரு அவையிலும், சமுதாயத்திலும் பொதுநிலையினரின் பங்கேற்பும், பங்களிப்பும் இன்னும் அதிகமாகும்.

Comment