புனித பிரான்சிஸ் சலேசியாரின் ஆன்மீகம்
இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கான அம்சங்கள்
புனித பிரான்சிஸ் சலேசியார், “அன்பை அடித்தளமாகக் கொண்ட மென்மையான, ஆனாலும், தீவிரமான பக்தி வாழ்வைக் கற்பித்தார்.” மேய்ப்புப்பணி ஆற்றுபவர்களும், விசுவாசிகளும் இவருடைய உதாரணத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய எழுத்துக்கள் கால முழுமைக்கும் பொருத்தமானவைகளாக உள்ளன.
அன்றாட வாழ்விற்கு வழிகாட்டி
திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர், புனித பிரான்சிஸ் சலேசியார் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட நான்காம் நூற்றாண்டின் போது வெளியிட்ட செய்தி இதோ:
"புனிதமே நல்வாழ்வு". இது எல்லாருக்கும் பொருந்தும். அன்றாட வாழ்வின் சூழ்நிலைகளுக்கு நடுவில் ஒவ்வொரு மனிதனும், தன் அன்புக் கடவுளின் மீது தாகம் கொண்டிருக்க வேண்டும் என்பது புனித பிரான்சிஸ் சலேசியாரின் தாரக மந்திரமாக இருந்தது. பரபரப்பான அன்றாட வாழ்விற்கு நடுவே, ஒரு தீவிர முயற்சி கொண்டு செயல்படுவது எப்படி என்றும், கடவுளின் அன்பின் அனுபவத்தால் வழிநடத்தப்பட்டு, ஒரு மனிதன் தன்னுடைய சுதந்திரத்தை எவ்வாறு முனைப்போடு அனுபவித்து வாழ்ந்திட முடியும் என்பதையும் தெளிவாக புனித பிரான்சிஸ் சலேசியார் எடுத்துரைத்தார்.
வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடவுளின் அன்பையும் மற்றும் பாசப்பிணைப்பையும் அனுபவிக்கலாம். தூய ஆவியிலும் மற்றும் அன்பிலும் ஊன்றியவராய் இருக்கின்ற ஒருவர், ஆழ்ந்த மகிழ்ச்சியும், பலம் கொண்ட சாந்தமும் உடையவராக தன்னுடைய வாழ்க்கையை வாழ்வார். பிறரன்புச் செயல்களில் மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் மற்றும் தாழ்ச்சி கொண்ட மனத்திடத்தோடும் தன்னையே ஈடுபடுத்தி திருப்தியடைவார்.
ஆன்மீக வழிகாட்டி
அன்றாட வாழ்வின் சூழ்நிலைகளுக்கு நடுவில் உண்மையான மற்றும் தனித்துவமான கிறிஸ்தவ வாழ்வினை வாழ்ந்திட விளைந்திட்ட பெண்களுக்காக எழுதப்பட்ட புத்தகம்தான் ஆன்மீக வாழ்வின் தொடக்கவுரை (Introduction to Devout Life).
இறையன்பு (Love of God) என்கின்ற அரிய புத்தகமானது, தான் ஏராளமான ஆயர்களோடும், குருக்களோடும், விசுவாசமுள்ள இறைமக்களோடும் கொண்டிருந்த உறவு மற்றும் உரையாடல்களின் விளைவாக உண்டாக்கப்பட்டது. தான் பெற்ற இறைஞானத்தை பிற மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று அவர் எடுத்த முயற்சிகள்தான் இந்த ஆன்மீகப் பொக்கிஷங்கள். சலேசியாரின் ஆன்மீகக் கோட்பாடுகள் எல்லாக் காலத்திற்கும் தேவைப்படுகின்றவைகள் தான்.
தாழ்ச்சியும் அறிவும்
"தாழ்ச்சி என்கின்ற சங்கிலியில் ஒருவர் தன்னையே பிணைத்துக்கொண்டு, அறிவாற்றல் என்கின்ற மதிப்புமிக்க அணிகலனை அணிந்துகொண்டு, இந்த உலகை கற்றுத் தெரிந்திட வேண்டும் என்கின்ற சலேசியாரின் படிப்பினை இன்றைய வாழ்வியல் சூழ்நிலைகளுக்கும் மிகவும் பொருத்தமான ஒன்று. தன்னுடைய இளமைப்பருவத்தில் அவர் பெற்ற பன்முகத் தன்மைகொண்ட கல்வி, திறமைகள் மற்றும் நட்பு வட்டாரங்கள் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தன. பெற்றுள்ள அறிவையும் மற்றும் அனுபவத்தையும் கடவுளின் அதிமிகு மகிமைக்காகப் பயன்படுத்திட்டார். தாழ்ச்சியை அடித்தளமாகவும் மற்றும் பிறரன்பை மகுடமாகவும் கொண்டிராத அறிவு, பல வேளைகளில் ஆபத்தானதாக முடிகின்றது. அது அழிவுப்பாதைக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றது.
கற்றதனால் ஆன பயன்?
“உண்மையான மகத்துவத்தை அறிவது என்பது பரிமளத் தைலத்தின் தரத்தை அறிவது போன்றதாகும். தண்ணீரில் தைலத்தை ஊற்றுவதன் மூலம் அதைச் சோதிக்கலாம். அது கீழே சென்று மிகவும் அடிமட்டத்தை எடுக்குமானால் அதை மிகச்சிறந்தது எனவும், இன்னும் மிகவும் விலையுயர்ந்தது எனவும் முடிவு செய்கிறோம். இதேபோல, ஒரு மனிதன் உண்மையிலே அறிவாளியா, கற்றவரா, தாராளமானவரா மற்றும் மேன்மையானவரா என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவருடைய நல்ல குணங்கள் தாழ்ச்சிக்கும், அடக்கத்துக்கும், சமர்ப்பணத்துக்கும் செல்ல முனைகிறதா என்று பார்க்க வேண்டியது அவசியம். அப்படியானால், அவைகள் உண்மையிலே நல்லவைகள்தான். ஆனால், அவர்கள் மேல்மட்டத்திலேயே மிதந்து, தங்களை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பினால், அவர்கள் எவ்வளவு பகட்டாக இருப்பார்களோ, அவ்வளவு குறைவான நேர்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.
காற்றிலும், இடிச்சத்தத்திலும் உருவாகி, ஊட்டம் பெறும் முத்துக்கள் பொருளற்ற ஓடுகளாகவே இருக்கும். அதேபோல, ஆணவத்திலும், தற்பெருமையிலும் மற்றும் வீண்பேச்சுகளிலும் உருவம் பெற்று, ஊட்டமடைகின்ற மனிதர்களின் நற்குணங்களும், நல்ல பழக்கங்களும் நல்ல தோற்றமுடையவைகளாக இருக்கும். ஆனால், சாரம் இல்லாதவைகளாகவும், ஊன் இல்லாமலும், மேலும் உறுதி இல்லாமலும் இருக்கும்.”
ஆணவம் அறுமின்
“மயில் தன்னுடைய பின்னழகின் அழகான தோகைகளை விரித்துக் காட்சி தரும்பொழுது, தன் உடலின் மற்ற பாகங்களைச் சுருக்கிக் கொள்வதன்மூலம், தன் உடலின் அழகற்ற பகுதிகளையும் காட்டுகிறது. மண்ணில் மலர்கின்ற அழகான மலர்கள் கைபட்டவுடன் எளிதில் வாடிவிடுகின்றன. மயக்கும் மந்திரச்செடி தூரத்திலிருந்து சற்றுநேரம் வாசனை செய்வோருக்கு இனிய நறுமணத்தையும், மிக அருகிலிருந்து வெகுநேரம் வாசனை செய்வோருக்கு மயக்கத்தையும் மற்றும் நோயையும் தருகிறது. அதுபோலவே, கௌரவங்களின் மேல் ஆர்வம் கொண்டு, அவைகளையே சுற்றிக் கொண்டிராமல் தூரத்திலிருந்து அவைகளை சுலபமாக நுகர்ந்திடுவோருக்கு, அவைகள் ஒரு மென்மையான சுகத்தை கொடுத்திருக்கின்றன. ஆனால், அவைகளோடு பிணைப்புற்றும், ஒருங்கிணைந்தும் கிடப்போர் மிக இழிவானவர்கள் மற்றும் கண்டனத்துக்குரியவர்கள்.” (IDL Part 3, Chapter 4).
நல்ல ஆயன்
புனித பிரான்சிஸ், ஓர் ஆற்றல்மிகு கல்வியாளர் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தான் பெற்ற அறிவாற்றலையும் மற்றும் திறமைகளையும் அவர் இறைவனின் புகழுக்காகவும் மற்றும் ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காகவும் முழுமையாகக் கொடுத்தார். எல்லாற்றிற்கும் மேலாக, அளப்பரிய பொறுமையையும் மற்றும் கனிவையும் அவர் காட்டுகின்றார். மேய்ப்புப் பணிகளையும் மற்றும் கல்விப் பணிகளையும் செய்கின்ற குருக்களும் மற்றும் துறவியரும் இந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும். ஏராளமான மக்கள் இருந்தால்தான், ஒருவருடைய பணி சிறந்ததாக இருந்திடும் என்று எண்ணுகின்ற மனநிலையிலிருந்து இது மாறுபடுகின்றது.
ஓர் ஆன்மா முன்னேற்றமடைவது என்பது, ஒரு மறைமாவட்டமே முன்னேற்றம் அடைந்திடுவதற்குச் சமம் என்று சலேசியார் எடுத்துரைக்கிறார். தன்னுடைய போதனைகளாலும் மற்றும் எழுத்துகளாலும் பாமர மக்களையும் கத்தோலிக்க கிறிஸ்தவ மறையுண்மைகளை புரிந்துகொள்ளச் செய்திட்டார். துண்டு பிரசுரங்களை கைப்பட எழுதி வீடுகளின் முற்றத்தில் வைத்து மக்களை வாசித்திட செய்தது என்பது மிகப்பெரிய காரியம். இறையன்பு என்கின்ற மாபெரும் அறிவுப் புதையலை இந்த உலகிற்குக் கொடுத்தவர், இவ்வாறான எளிமையான எழுத்துகளையும் கொடுத்தார் என்பது நமக்கு ஒரு நல்ல பாடமே.
இயற்கையின் காதலன்
இயற்கை மீது அளப்பரிய ஆர்வம் கொண்டிருந்தார் சலேசியார். இயற்கையின் அபரிமிதமான வளங்களை மேலோட்டமாக மட்டும் பார்த்திடாமல், அவைகளின் பயன்களை உள்ளுற ஆராய்கிறார். அந்த உதாரணங்களைப் பயன்படுத்தி, புரிந்துகொள்வதற்கு கடினமான மறையுண்மைகளையும் எளிதாக விளக்கினார். சலேசியாரின் புத்தகங்களை வாசிக்கும்போது, நமக்கு இந்த உண்மைகள் தெளிவாக விளங்குகின்றன. இவைகள் தான் இன்றியமையாத செயல்கருவிகள். தேனீக்களின் இயல்பையும் மற்றும் அவைகளின் ஆற்றல்மிகு செயல்களையும் துல்லியமாக விவரிவிக்கின்ற நேர்த்தி நமக்கு ஆச்சர்யமூட்டுகின்றது. புனித பிரான்சிஸ் சலேசியாரை, ஒரு ’தாவரவியல் வல்லுநர்’ என்று அழைப்பதும் பொருத்தமானதே. இயற்கையைப் பேணிக் காப்பதும் மற்றும் அதன்
மூலமாக இறைவனைப் போற்றுவதும் நம்மால் மேலும் மெருகூட்டப்பட வேண்டும்.
செல்வம்?
புனித பிரான்சிஸ் சலேசியாரின் புனிதம் (தூய வாழ்வு) ஆழமான எளிமையையும், சாந்த குணத்தையும் மற்றும் இயல்பான பரிவன்பையும் கொண்டிருந்தது. “நஞ்சை உடன் வைத்திருப்பதற்கும் நஞ்சை உண்டிருப்பதற்கும் நிறைய வேற்றுமை உண்டு. மருந்து விற்பவர்கள் பல்வேறு தருணங்களில் பயன்படுத்துவதற்காக, தங்களோடு நஞ்சை வைத்திருப்பார்கள். அவர்கள் விஷமடைவதில்லை. ஏனெனில் நஞ்சை அவர்கள் உடலில் இல்லாமல், கடைகளில் வைத்துள்ளார்கள். அதேபோல உன் உள்ளத்தை நஞ்சாக்க விடாமல், செல்வங்களை நீ கொண்டிருக்கலாம். அவைகளை நீ உன் வீட்டில் வைத்திருக்கலாம். கைப்பையில் வைத்திருக்கலாம். ஆனால், இதயத்தில் மட்டும் கூடாது. செல்வங்கள் இருந்தும், அவைகள் மேல் பற்றுக்கொள்ளாமல் வாழ்பவன் நல்ல கிறிஸ்தவனுக்குரிய மகிழ்வைப் பெறுகிறான். அவனிடம் இவ்வுலக வாழ்வுக்காக செல்வமும் மற்றும் அடுத்த உலக வாழ்க்கைக்கான ஏழ்மையும் விளங்கும்.” (IDL Part 3, Ch.14).
நட்பின் இலக்கணம்
நட்பு, உண்மையான நட்பு, தீமையான நட்பு மற்றும் அற்பத்தனமான நட்புகள் என்று புனித பிரான்சிஸ் சலேசியார் விவரித்து எழுதினார். இவை நமக்கு அன்றாட வாழ்வியல் படிப்பினைகளாக அமைகின்றன. மிகவும் ஆழமான மற்றும் பயனுள்ள கருத்துகளும், அறிவுரைகளும் இதில் உள்ளன. நட்பின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஆன்மீக வாழ்வின் தொடக்கவுரை (IDL Part 3, Ch. 17-22) வாசித்திட வேண்டும்.
மறைவல்லுநர்
திரு அவையின் மதிப்புமிக்க மறைவல்லுநராகவும், இறையியலாளராகவும் மற்றும் ஆன்மீக வழிகாட்டியாகவும் உள்ளார். “தெய்வீக அன்பின் பிறப்பின் வரலாற்றை, அதன் வளர்ச்சியை, அதன் சிதைவை, செயல்பாடுகளை, உட்பொருட்களை, அனுகூலத்தை மற்றும் மேன்மையை மிகவும் எளிமையான விதத்தில், இயல்பாகவும் மற்றும் வெளிப்படையாகவும் விவரிக்க வேண்டுமென்று தான் நான் நினைத்துள்ளேன்” (LG preface). சில முத்துக்குளிப்பவர்கள் கடலின் ஆழத்துக்குச் சென்று, அங்கே முத்துக்களையும் மற்றும் விலையுயர்ந்த கற்களையும் சேகரிக்க விரும்புகின்றனர். இந்த எழுத்தில் மூழ்க வேண்டுமென்ற தைரியம் உனக்கு இருந்தால், அந்த முத்துக்குளிப்பவர்களுக்கு ஏற்பட்டதைப் போல உனக்கும் ஏற்படும். பிலினி சொல்கிறார், “கடலின் ஆழத்தில் உள்ள குகைகளில் இருக்கும்போது, அவர்கள் அங்கே சூரியனின் ஒளியைத் தெளிவாகக் காண்கிறார்கள்”.
நமது குருத்துவ, துறவற மற்றும் கிறிஸ்தவ வாழ்வானது, நம்மிடம் அதிகப்படியான பொறுமையையும் மற்றும் கனிவையும் அத்தியாவசியமாக்குகின்றது. உனக்கு எதிராக இழைக்கப்பட்ட தவறுகளைப் பற்றி எவ்வளவு குறைவாக புகார் செய்யமுடியுமோ அவ்வளவு குறைவாக செய்ய வேண்டும். பொதுவாக, புகார் தெரிவிப்பவர், தன்னலத்தின் காரணமாக தன் குற்றங்களை, இருப்பதைவிட மிகைப்படுத்திக் காட்டும்போது, பாவம் செய்கிறார். அதைவிட மேலாக, வெறுப்பும் சீற்றமும் கொண்டவர்களிடமும் மற்றும் முரட்டுத்தனமாக சிந்திப்பவர்களிடமும் உன்னுடைய புகார்களைத் தெரிவிக்கக்கூடாது. ஒரு குறையைச் சரி செய்வதற்கோ அல்லது உன்னுடைய மன அமைதியை திரும்பப் பெறுவதற்கோ ஒருவரிடம் நீ புகார்களைக் கூறவேண்டியது அவசியம் என்று விரும்பினால், கடவுளை அன்பு செய்கின்ற அமைதியான நபர்களிடம் அதை தெரிவிக்கலாம். இல்லையெனில், உன்னுடைய இதயத்தை அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக அவர்கள் அதிகமான கவலைகளை தூண்டிவிடுவார்கள்; உன்னைக் குத்துகின்ற முள்ளை பிடுங்க விரும்பினாலும், அவர்கள் இன்னும் ஆழமாக உன் காலில் அழுத்திவிடுவார்கள்.
ஆன்மாக்களின் காவலன்
புனித பிரான்சிஸ் வாழ்க்கை, கல்விப்பணிக்கு மிகவும் பெரிய உந்துதலாக உள்ளது. அவர் ஓர் அறிவாளி, ஓர் எழுத்தாளர் மற்றும் ஓர் இறையிலாளர். ஆனாலும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சவால்கள் மிகுந்த குருத்துவத்தை வாழ்ந்து ஆயர் நிலைக்கு உயர்த்தப்பட்டவர். பன்முகத் திறமைகளைக் கொண்டிருந்தார். தன்னுடைய பணிகளுக்காக, முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனக்கு கொடுக்கப்பட்ட எல்லாக் கௌரவங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக உழைத்து பாடுபட்டவர்.
1602 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று, ஆயராக உயர்த்தப்பட்டார். தன்னுடைய 450 பங்குத்தளங்களை பார்வையிடுவதிலும், குருக்களை ஒருமுகப்படுத்தி, ஊக்கமளிப்பதிலும் மிகவும் முனைப்புடன் செயல்பட்டார்.
கற்க கசடற
"கற்றல் தான் ஒரு குருவானவருக்கான எட்டாவது திருவருட்சாதனம்" என்று பிரகடனம் செய்தார். ஒப்புரவு அருட்சாதனம் வழங்குவதிலும், பிரிவினையாளர்களுடன் உரையாடுவதிலும், மறையுரைகளைக் கொடுப்பதிலும் நிறைய நேரத்தை செலவழித்தார். தன்னுடைய குருத்துவ மற்றும் ஆயர் பொறுப்பின் மூலமாகக் கிடைத்திட்ட அனுபவங்ளை மூலதனமாக வைத்து, புத்தகங்களை எழுதினார்.
அவர் மிகவும் தைரியமான பேச்சாளர் மற்றும் பொறுமையுடன் விவாதங்களைக் கையாள்பவராகவும் இருந்தார். செப வாழ்வுதான் மிகவும் சவாலான பணிகளில் அவருக்கு உறுதுணையாக இருந்தது.
ஏராளமான பணிகளுக்கு மத்தியிலும், "ஆன்மீக வாழ்வின் தொடக்கவுரை" மற்றும் "இறையன்பு" ஆகிய இரு புத்தகங்களை எழுதி வெளியிட்டார். ஆழமான சிந்தனையும் மற்றும் ஓய்வில்லாத உழைப்பும் அவருடைய வாழ்வின் மகுடங்கள்.
Comment