No icon

“இந்தியா : மோடி மீதான கேள்வி”

தடைகள் தரும் விடைகள்

ஒன்றின் தடையே மற்றொன்றிற்கான மடையைத் திறக்கும் என்பதுபோல குஜராத் கலவரம் தொடர்பாக உலகளாவிய ஆங்கில ஊடகமான பிபிசி வெளியிட்ட மோடி மீதான கேள்விக் குறித்த ஆவணப்பட விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஆவணப்படம் வெளிவந்த சில நாட்கள், ஊடகங்கள் மட்டுமே அதுகுறித்துப் பேசின. ஆனால், எப்போது ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டதோ, அப்பொழுதிலிருந்து பரவலாக, எல்லாராலும் பேசப்பட்டும், பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் பகுதிகளில் பல மாணவர் அமைப்புகள் ஆவணப்படத்தைத் திரையிட்டு வருகின்றன.

தடையை உடை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆவணப்பட திரையிடலுக்கு முன் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆவணப்படத்தை பார்க்கக் கூடியிருந்த மாணவர்களிடையே அலைபேசி வெளிச்சத்தில் பேசிய ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் அய்ஷே கோஷ், “உண்மை வெளியே வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். நீங்கள் மின்சாரத்தை தடை செய்யலாம், எங்களிடமிருந்து திரையை, மடிக்கணினியைப் பறித்துக் கொள்ளலாம். ஆனால், எங்களது கண்களையும், உத்வேகத்தையும் உங்களால் பறிக்கவே முடியாது” என்றார்.

சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில், இந்திய மாணவர் சங்க மாணவர்கள் தங்களது மடிக்கணினியில் திரையிட்டனர். சென்னை மாநிலக் கல்லூரியில் விக்டோரியா விடுதியில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பார்த்தனர். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் திரையிட முயன்றனர். ஆனால், நிர்வாக எதிர்ப்பால் திரையிடல் தடைப்பட்டது.

சென்னை பெரியார் திடலில் “பிபிசியின் ஆவணப் படத்தைக் கண்டு பா.ஜ.க. அரசு பதறுவது ஏன்?” என்கிற கலந்துரையாடல் நடைபெற்றது. அதில், பேராசிரியர் அ. மார்க்ஸ், ஓவியர் மருது, சுபகுணராஜன், பத்திரிகையாளர் ஜெயராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பாஜகவின் முகத்திரையை தோலுரித்துள்ளனர்.

இடது சாரிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்புகள் கேரளாவின் பல பகுதிகளில் திரையிட்டுள்ளனர். திருவனந்தபுரம் சங்குமுகம் கடற்கரையில் பொதுமக்களுக்கு இதனை கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி திரையிட்டது. இதற்கு யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் இறங்கியதும், மோதல் ஏற்பட்டதும், காவல்துறை தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்ததும், சிலர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் நடந்துள்ளது. தற்போது, நாடாளுமன்றத்தில் பிரதமர் தன்னிலை விளக்கம் தரவேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

உண்மையைச் சொல்கிறதா ஆவணப்படம்?

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து, மோடியை பிரிட்டிஷ் அரசாங்கம் அக்டோபர் 2012 வரை, இராஜதந்திர புறக்கணிப்பு (diplomatic boycott) செய்திருந்ததும், அந்நேரம் ஐரோப்பிய ஒன்றியம் அமைத்திருந்த விசாரணைக் குழுவும், குஜராத் அமைச்சர்களே நேரடியாக வன்முறையில் பங்கேற்றத்தையும், காவல்துறை அதற்கு உடந்தையாக இருந்ததையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

தற்பொழுது பிபிசியால் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட வெளியிடப்படாத அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் பாகம் கடந்த ஜனவரி 17 அன்று, பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டது. உடனே, இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருக்கிறது என்று குற்றம் சுமத்தி, ஆவணப்படத்தை திரையிடவும், பகிரும் வலைத்தளங்களை முடக்கவும் இந்திய அரசாங்கம் ஆணைப் பிறப்பித்தது.

கருத்துச் சுதந்திரம் பேசும் இந்த தேசத்தில் குரல்கள் முடக்கப்படுவது தொடர்ந்து அரங்கேறும் அநீதி என்றாலும், பாஜக விதித்தத் தடையே வீதியெங்கும் இன்று ஆவணப்படத்தை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது என்பது நேர்மறை தாக்கமே!

முதல் பகுதி, மோடியின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கை துவங்கி, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, அவர் குஜராத்தின் முதலமைச்சர் பதவி பெற்றது வரையுள்ள நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. குறிப்பாக, 2002 இல், குஜராத்தில் கலவரச்சூழலை ஏற்படுத்தியதற்கு மோடிதான் நேரடிப் பொறுப்பு என்பதே அறிக்கையின் குற்றச்சாட்டு. இம்முதல் பாகத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் சாட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இரண்டாம் பகுதியில், மோடிக்கு எதிராக சாட்சி சொல்லிய அமைச்சர்கள், அதிகாரிகளின் காட்சிகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக, கலவரத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்த அமைச்சரின் மர்ம மரணம், ஐ.ஏ.எஸ் அதிகாரி சிறையில் அடைப்பு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

கூடுதலாக, குஜராத் வன்முறையில் குறைந்தது 2000 பேர் இறந்தது குறித்து இந்த ஆவணப்படம் கேள்வி எழுப்புகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மோடி தொடங்கி, அதிகாரிகள் வரை அனைவரையும் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்து விட்டது.

ஆனால், அப்பொழுது மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடி, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்பில்லையா? என்கிற அடிப்படையான அறக்கேள்வியையே தற்பொழுது ஆவணப்படம் எழுப்புகிறது.

தடைகள் தரும் விடைகள்

வேலியே பயிரை மேயும் கதையாக தொடர்கிறது பாஜக ஆட்சியின் காட்சிகள். எது எப்படியோ, மீண்டும் மதவெறி பாஜக அரசின் மீது மக்கள் கொண்டிருக்க வேண்டிய எச்சரிக்கையை அம்பலப்படுத்துவதாகவே ஆவணப்படம் களம் காண்கிறது. அவ்வகையில் இந்த ஆவணப்படம் பன்முகத்தன்மை கொண்ட இந்திய இறையாண்மையின் பல்வேறு கேள்விகளுக்கு விடையாகவே அமைந்துள்ளது.

சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளலாமே?

இன்றைய ஆளும் அரசின் கைப்பாவையாக மாறிவிட்ட அரசின் அனைத்து தளங்களிலும் உண்மையை, நீதியை எதிர்பார்க்க முடியுமா? இதற்கு உச்ச நீதிமன்றமும் விலக்கல்ல. வன்முறைக்கு தான் காரணமில்லை என்கிற குற்றச்சாட்டினைத் தொடர்ந்து மோடியும், அவரது சகாக்களும் மறுத்துவரும் நிலையில், பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகத்திற்காக அறிக்கை எழுதிய பிரிட்டிஷ் தூதாண்மை அதிகாரி தனது அறிக்கை உண்மைத் தன்மையானது என்கிற நிலைப்பாட்டிலே தொடர்ந்து உறுதியாக நிற்கிறார்.

பொய்க்குற்றம் தன்மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்றால் சட்டப்படியான நடவடிக்கையை தனது பண பலம், அதிகாரப்பலம் மற்றும் பதவி பலத்தைக் கொண்டு மோடி சகாக்கள் முன்னெடுக்கலாமே?

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பதில் எள்ளளவும் சமரசமில்லை. சமீபத்திய சிறுபான்மையினர் கல்வித் தொகை ரத்து, குறைப்பு மீண்டும் இதனை உறுதி செய்திருந்த வேளையில் இந்த ஆவணப்படம் பெருவெளியில் இதனை பெரியளவில் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் வன்முறைச் சம்பவங்கள் உண்மை என்பது உலகறிந்த உண்மை. யாராலும் மறுக்க முடியாது. ‘இந்து’ என்கிற போர்வையில் வலம் வரும் மத வெறியர்களுக்கு நிச்சயம் இந்த ஆவணப்படம் மிகப்பெரிய சவுக்கடி.

கடந்த 2019 ஆம் ஆண்டு, தேர்தலில் 20 விழுக்காடு இஸ்லாமியர்கள் மட்டுமே பாஜக-வுக்கு வாக்களித்ததாக பியூ ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது. இந்நிலையில் இந்த ஆவணப்படத்தின் சர்ச்சை அடுத்த தேர்தலில் பாஜக-வுக்கு இஸ்லாமியர்களின் வாக்கு மேலும் சரியும் என்பதே அரசியல் ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது. எனவேதான், மோடி அரசு படத்தைக் கண்டு படபடக்கிறது.

ஜனநாயக சட்டங்களை சட்டையாக பயன்படுத்துவதா?

மத்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (2021) அவசரக்கால அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்திருக்கிறது ஒன்றிய அரசு. ஆனால், இது கருத்துரிமை சுதந்திரத்துக்கு எதிரானது. ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளை பாஜக அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. இந்நிலையில்தான், மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் உணர்வோடு இந்த ஆவணப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

எப்பொழுதும் வரலாறு முக்கியம்

மூத்த பத்திரிகையாளர் ராதா கிருஷ்ணன் சொல்வது போன்று, “2002 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வை ஏன் மறுவிசாரணை செய்து, வெளியிட வேண்டும். அதற்கு என்ன தேவை இருக்கிறது... என்னும் கேள்வியைப் பலர் கேட்கிறார்கள். ஆனால், சுதந்திரப் போராட்ட மரணங்கள் தொடங்கி, 1984 இல், நடந்த சீக்கியர்கள் படுகொலை என அனைத்தையும் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்படி அரசியல் சூழலில் நடந்த முக்கிய நிகழ்வாகத்தான் இந்த குஜராத் கலவரமும் இருந்தது. அதை அனைவரும் தெரிந்து கொள்வது தற்போது தேவையானது”.

உண்மை உறங்குவதில்லை

இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்ற பின், அவர் மீதான மற்றும் அமித்ஷா வகையறாக்கள் மீதான கறைகள் அனைத்தும் பணம்-பதவி-அதிகாரம் போன்றவற்றால் நன்கு கழுவப்பட்டு, புனிதத்துவம் போர்த்தும் படலம் தொடர்கிறது. அதன் வெளிப்பாடே, தங்கள் சொந்த நலன் கருதி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மோடிமீது விதித்திருந்த தடையை நீக்கியது. தனது விசாரணை அறிக்கையைக்கூட பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிடவில்லை.

ஆனால், உண்மையை எதற்கு அடியிலும் புதைத்து விடமுடியாது. ஒருநாள் உயிர்த்தெழும். இரத்தக் கறைப் படிந்த கரங்களிலிருந்து நிச்சயம் அழுகுரல்கள் ஒலிக்கும்.

மந்தமான செவிடுகளில் மரண ஓலங்கள் கேட்கும். இதனை மக்கள் நன்குஉணர்வர்.

எனவே, மோடியும், அவரது சகாக்களும் குஜராத்தில் சிறுபான்மை இஸ்லாமியர் மீது நடத்திய படுகொலைக்கு தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மறுக்கலாம், தாங்கள் வளைத்த சட்டத்தால் நிரபராதி என்று கொக்கரிக்கலாம். ஆனால், உண்மை ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன, இருக்கும்.

பதவி, பணம், அதிகாரம் கொண்டு உண்மையை, நீதியை, ஜனநாயக உரிமையை களவாடும் கூட்டம் நீடித்து நிலைத்து நிற்க இயலாது என்பதே வரலாறு நமக்கு புகட்டும் பாடம்.

இதனை மக்கள் விரைவில் பாசிச வெறியர்களுக்கு நன்கு உணர்த்துவர் என்பது திண்ணம்.

Comment