No icon

புனித தெரேசா பேராலயம்

திருத்தந்தையின் தென்சூடான் இரண்டாம் நாள் பயண நிகழ்வுகள்

பிப்ரவரி 4 சனிக்கிழமை தென்சூடானில் தனது இரண்டாம் நாளைத்  திருப்பீடத்தூதரகத்தில் தனியாக திருப்பலி நிறைவேற்றித் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன் பின் திருப்பீடத்தூதரகத்தில் இருந்து 2 கி. மீட்டர் தூரம் பயணித்து உள்ளூர் நேரம் காலை 9.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 12.30 மணிக்கு ஜூபாவில் உள்ள புனித தெரேசா பேராலயத்தில் தென்சூடானின் ஆயர்கள், அருள்பணியாளர்கள் அருள்சகோதரிகள் திருத்தொண்டர்கள், அருள்பணித்துவ மாணவர்கள் ஆகியோரை திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தார்.

ஜூபாவின் புனித தெரேசா பேராலயம்

தென்சூடானின் ஜூபாவில் உள்ள புனித தெரேசா பேராலயம் 1952 ஆம் ஆண்டு கட்டத்தொடங்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் ஜூபா, தென்சூடானின் பெருநகர உயர்மறைமாவட்டமாக தொடங்கிவைக்கப்பட்டது. இப்பேராலயத்தில் கூடியிருந்த அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து நிலையினருக்குமான கூட்டம், வழிபாட்டுப் பாடல்களுடன் ஆரம்பமானது. ஓர் அருள்பணியாளர், ஓர் அருள்சகோதரி ஆகிய இருவரும் தங்களது அனுபவத்தை திருத்தந்தையின் முன்னிலையில் பகிர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆப்பிரிக்காவிற்காக துன்பப்பட்டு இறக்கத் தயாராக இருக்கும் தைரியமான, மற்றும் தாராள மனப்பான்மை நமக்குத் தேவை என்று வலியுறுத்திப் பேசி இறுதியாக தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அவர்களுக்கு வழங்கினார்.

திருத்தந்தையின் தென் சூடானின் இரண்டாவது நாளின் முதல் நிகழ்வு முடிந்தவுடன் அங்கிருந்து திருப்பீடத்தூதரகத்திற்குத் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின் திருப்பீடத்தூதரகத்தில் இயேசு சபை அருள்பணியாளர்களைச் சந்தித்து உரையாற்றினார்.

பிப்ரவரி 4ஆம் தேதி சனிக்கிழமை மாலை  4.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8.00 மணிக்கு குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஜூபா சுதந்திர மாளிகையிலும், உள்ளூர் நேரம் மாலை 6.00 மணிக்கு இந்திய இலங்கை நேரம் இரவு 9.30 மணிக்கு  மவுசோலியோ “ஜான் கராங்” பகுதியில் நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டிலும் கலந்து கொண்டு தனது இரண்டாம் நாள் தென்சூடான் பயணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவு செய்வார்.

Comment