No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

நம்பிக்கையின் விதைகள் நீங்கள்

பிப்ரவரி 4, சனியன்று, தென்சூடானின் தலைநகர் ஜூபாவிலுள்ள சுதந்திர அரங்கில் அனைத்துலகப் புலம்பெயர்ந்தோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, உங்களை முகத்திற்கு முகம் பார்க்க வேண்டும், கைகுலுக்கி உங்களை அணைத்துக்கொள்ள வேண்டும் என்ற பேராவலில் இந்த சந்திப்பிற்காக வெகு நாட்களாக நான் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தேன்.

மனித வன்முறை மற்றும் பெருவெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவுகளால், உங்களைப் போன்ற இலட்சக் கணக்கான சகோதரர் சகோதரிகள், குழந்தைகளுடன் கூடிய பல அன்னையர்கள் உட்பட பலர் தங்கள் கிராமங்களையும், வீடுகளையும், நிலங்களையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்பதை நான் நன்கு அறிவேன்.

இதன் காரணமாகத்தான் அனைத்து மோதலையும் வன்முறையையும் முடிவுக்குக் கொண்டு வரவும், அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் தீவிரமான முறையில் மீண்டும் தொடங்கவும், மக்கள் மாண்புடன் வாழவும் எனது வலிமையான மற்றும் இதயப்பூர்வமான வேண்டுகோளை புதுப்பிக்க விரும்புகிறேன்.

நாட்டை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்வதற்குப் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்று நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பெண்களுக்குச் சரியான வாய்ப்புகள் வழங்கப்பட்டால்அவர்களின் உழைப்பு மற்றும் உயிரைப் பாதுகாக்கும் இயற்கை வளங்கள் வழியாக, அவர்கள் தென்சூடானின் முகத்தை மாற்றி, அதற்கு அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் கொடுக்கும் திறனைப் பெறுவார்கள்!

ஆகவே, பெண்கள் பாதுகாக்கப்படுவதையும், மதிக்கப்படுவதையும், மாண்புடன் நடத்தப்படுவதையும், கௌரவப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்துமாறு, இந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். தயவுகூர்ந்து, ஒவ்வொரு பெண்ணையும், ஒவ்வொரு இளம் பெண்ணையும்தாய் மற்றும் பாட்டியையும் பாதுகாக்கவும், மதிக்கவும், பாராட்டவும், உற்சாகப்படுத்தவும் வேண்டும். இல்லையெனில், நாட்டிற்கு எதிர்காலம் இருக்காது.

அன்புச் சகோதரர் சகோதரிகளே உங்கள் கண்களை நான் உற்றுப்பார்க்கின்றேன். அவைகள் சோர்வடைந்திருக்கின்றன ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. செபிக்கவும் பாடவும் முடியாத உங்களின் வாய்களைப் பார்க்கின்றேன். வெறுமையான கரங்களையும் ஆனால் அதேவேளையில், இறைநம்பிக்கை நிறைந்த உங்கள் இதயங்களைப் பார்க்கின்றேன். வலிமிகுந்த கடந்த காலத்தின் துயரங்களின் சுமையை நீங்கள் சுமக்கிறீர்கள், ஆனால், ஒரு சிறந்த எதிர்காலத்தை கனவு காண்பதை நீங்கள் நிறுத்தவே இல்லை.

நீங்கள் புதிய தெற்கு சூடானின் நம்பிக்கை விதைகள். இந்த நாட்டின் வளமான மற்றும் பசுமையான வளர்ச்சிக்கான விதைகள் ஆகவே, இவ்விதை மரமாகி  நிச்சயம் எதிர்காலத்தில் நிறைந்த பலனை தரும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் அனைவரும் நம்பிக்கையின் விதைகளாக இருங்கள். ஆம், பல ஆண்டுகால வன்முறையின் மாசுபாட்டை உறிஞ்சி, சகோதரத்துவத்தின் ஆக்ஸிஜனை மீட்டெடுக்கும் மரங்களாக நீங்கள் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் சகோதரர் சகோதரிகள், விண்ணகத் தந்தையின் மண்ணகக் குழந்தைகள்நம் அனைவருக்கும் இறைவன் ஒருவரே தந்தை என்பதை உணரும் பொருட்டு, இங்கிருந்தே நீங்கள் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க வேண்டும்.

நீங்கள் புதியதொரு அத்தியாயத்தை எழுதுங்கள். இது உரையாடலின் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கட்டும், இது கடந்தகால துன்பங்களை மறக்காது, ஆனால் சகோதரத்துவத்தின் மகிழ்ச்சிக்கான ஒளியைப் பரப்பக் கூடியதாக இருக்கட்டும். வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த உங்கள் இளையோர் இந்த அத்தியாயத்தின் முதல் பக்கத்தை எழுதட்டும்.

இம்மக்களின் துயரங்களின்போதும் அவசரகாலத்தின்போதும் இவர்களுக்கு உதவிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன். தென்சூடானுக்கு உதவுவோம்; அதன் மக்களை நாம் கைவிடக்கூடாது. அவர்கள் அதிகமான துயரங்களை அனுபவித்திருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மிகவும் துன்புற்று வருகின்றனர்.

நாட்டிற்கு வெளியே வாழும் பல தென்சூடான் புலம்பெயர்ந்தோரையும் இந்நேரத்தில் நான் நினைவு கூறுகின்றேன். அவர்களுடனும் நான் உடனிருக்கின்றேன். இந்நாட்டை அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் கொண்டுசெல்வதில் அவர்களும் பங்களிக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

Comment