காங்கோ மற்றும் தெற்கு சூடானுக்கு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 40வது திருத்தூதுப் பயணம்
- Author குடந்தை ஞானி --
- Saturday, 11 Feb, 2023
முதல் பகுதி : காங்கோ
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள காங்கோ மற்றும் தென்சூடான் ஆகிய நாடுகளுக்கு நாற்பதாவது திருத்தூதுப் பயணத்தை ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி வரை மேற்கொண்டார். திருத்தந்தை அவர்களின் திருத்தூதுப் பயணத்தை விலாவாரியாக நம் வாழ்வு வார இதழ் ஒவ்வொரு முறையும் சிறப்பான முறையில் தொகுத்தளிக்கிறது. அவ்வகையில் இக்கட்டுரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காங்கோவில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தை சுவாரசியம் குறையாமல் விவரிக்கிறது.
காங்கோ குடியரசுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது திருத்தந்தையும், தென்சூடான் நாட்டிற்கு திருப்பயணம் செய்யும் முதல் திருத்தந்தையும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் ஆவார்.
ஜனவரி 30
தாம் திருப்பயணம் மேற்கொள்வதற்கு முந்தைய நாள் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை உரோமையின் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் உள்ள அன்னை மரி திருச்சுருபத்திற்கு முன்பு செபித்தார்.
திருத்தந்தை புறப்படுவதற்கு முன்னர் இரு நாட்டு மக்களுக்கும் எழுதிய கடிதத்தில், காங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதிகள் ஆயுத மோதல்கள் மற்றும் சுரண்டல்களால் பாதிக்கப்படுகிறது என்றும், தென்சூடான் பல ஆண்டுகாலப் போரினால் சிதைந்துள்ளது என்றும், பல மக்களை குடிபெயர வைத்து பெரும் கஷ்டமான சூழ்நிலையில் வாழத் தூண்டும் தொடர்ச்சியான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க தென்சூடான் ஏங்குகிறது என்றும் குறிப்பிட்டார்.
6 நாட்கள் மேற்கொண்ட கொண்ட இந்த 40வது திருத்தூதுப் பயணத்தில் 10 உரைகளையும் 2 மறையுரைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆற்றினார்.
முதல் நாள் - ஜனவரி 31
சனவரி 31, செவ்வாய்க்கிழமை காலை தனது 40வது திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக, சேசு சபையினர் நடத்தும் அஸ்டாலி புலம்பெயர்ந்தோர் மையத்தில் உள்ள காங்கோ குடியரசு மற்றும் தென்சூடான் ஆகிய இரு நாடுகளைச் சார்ந்த புலம்பெயர்ந்தோரை அவர்கள் தம் குடும்பத்தினருடன் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி அவர்களுடன் திருத்தந்தை சந்தித்தார். அதன் பிறகு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து பியுமிச்சினோ விமான நிலையம் சென்றார்.
விமான நிலையத்தில் உள்ள, காங்கோவில் 1961 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி கொல்லப்பட்ட 13 இத்தாலிய விமானப்படையினர்க்கான நினைவுச்சின்னமான காடுட்டி டி கின்டு-க்கு முன்பு திருத்தந்தை சிறிது நேரம் செபித்தார். அதன் பிறகு, A 359 த்தாலிய விமானத்தில் தனது பயணத்தை உரோம் உள்ளூர் நேரம் காலை 8.10மணிக்கு காங்கோவிற்குப் புறப்பட்டார்.
தனது இந்த பயணத்தில் 12 நாடுகளைச் சார்ந்த 75 பத்திரிக்கை மற்றும் ஊடக பணியாளர்களை உடன் அழைத்துச்சென்ற திருத்தந்தை, அவர்களது சிறப்பான பணிக்காக அவர்களைப் பாராட்டினார்.
5,420 கிலோமீட்டர் பயணத்தை 6 மணி 50 நிமிடங்கள் பயணித்து காங்கோ நேரம் பிற்பகல் 3.00 மணிக்கு காங்கோ குடியரசின் தலைநகரான கின்சாசா வந்தடைந்தார்.
காங்கோ குடியரசு திருப்பீடத்தூதரும் விட்டோரியா உயர் மறைமாவட்டப் பேராயருமான எட்டோரே பாலெஸ்ட்ரேரோ அவர்களும் காங்கே அரசுத் தூதர் ஜீன் பியர்ரே ஹமுல்லி முப்பெண்டா ஆகியோர் திருத்தந்தையை விமானநிலையத்தில் வரவேற்றனர்.
காங்கோ குடியரசின் அரசுத்தலைவர் பெலிக்ஸ் ஷிசேக்கேடி அவர்களும், பாரம்பரிய உடையணிந்த இரண்டு சிறார்களும் திருத்தந்தையை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கான இடத்தை அரசுத்தலைவருடன் அடைந்த திருத்தந்தைக்கு அரசுஅதிகாரிகள், மற்றும் திருஅவைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்கு காரில் புறப்பட்டார். காங்கோ ஆற்றின் கரையில் கின்ஷாசாவின் வடக்கே உள்ள லா கோம்பேவில் அமைந்துள்ள அரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமாபேலஸ் டி லா நேஷன் என அழைக்கப்படும் மாளிகையை திருத்தந்தை மாலை 4.30 மணிக்கு வந்தடைந்தார். அரசு அதிகாரிகள், சமுதாயத் தலைவர்கள், அரசியல் தூதுவர்கள் அடங்கிய குழுவைச் சந்தித்த திருத்தந்தைக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து திருத்தந்தை அரசுத்தலைவருடன் உரையாடினார். அரசுத்தலைவரின் குடும்பத்தார் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பின்னர் திருத்தந்தை அவர்கள் நினைவுப் பதக்கம் ஒன்றினை அன்பளிப்பாக அரசுத்தலைவருக்கு அளித்தார்.
அரசுத்தலைவர் சந்திப்பிற்குப் பின் மாலை 5.30 மணிக்கு மாளிகை தோட்டப்பகுதியில் அரசு அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், அரசியல் தூதுவர்கள், தொழில்முனைவோர், என ஏறக்குறைய 1,000 பேரை திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தார். அரசுத்தலைவரின் உரைக்குப் பின் திருத்தந்தை தனது 40 வது திருத்தூதுப் பயணத்தின் முதல் உரையை ஆற்றினார்.
அரசுத்தலைவர்களுடனான சந்திப்பை முடித்த பின்னர் திருத்தந்தை அங்கிருந்து 750 மீட்டர் தொலைவிலுள்ள திருப்பீடத்தூதரகத்திற்கு காரில் சென்றார். மாலை 6.00 மணிக்கு திருப்பீடத்தூதரகம் வந்தடைந்த திருத்தந்தையை இளையோர் காங்கோ குடியரசுப் பாடல்களை இசைத்தும் பாடியும் மகிழ்ந்து வரவேற்றனர். இரவு உணவை முடித்து இத்துடன் தன்னுடைய முதல் நாள் பயணத்தை நிறைவு செய்தார்.
இரண்டாம் நாள் - பிப்ரவரி 01
பிப்ரவரி 1 புதனன்று காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவிலுள்ள என்டோலோ விமானத்தள திறந்தவெளி அரங்கில் 8.15 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்காக புறப்பட்டு 8.40 மணிக்கு வந்தடைந்தார். இவ்விமான நிலைய திறந்த வெளியில் திருப்பலிக்காக 10 இலட்சம் மக்கள் காத்திருந்தனர். கின்சாசாவின் பேராயருடன் திறந்தகாரில் வலம் வந்து ஆசிர்வதித்தார். காலை 9.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புக்கொடுத்த நீதி மற்றும் அமைதிக்கான இத்திருப்பலியில் எண்ணற்ற மக்கள் பக்தியுடன் பங்கேற்றனர். பிரெஞ்சு மற்றும் உள்ளூர் மொழியான லிங்காலாவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருத்தந்தை இத்தாலியத்தில் மறையுரையாற்றினார்.
திருப்பலியின் இறுதியில் கின்சாசாவின் பேராயர் கர்தினால் ஃபிரிடோலின் ஆம்பொங்கோ பெசுங்கு திருத்தந்தைக்கு தன் நன்றியினைத்தெரிவித்தார். இறுதியில் திருத்தந்தை தனது அப்போஸ்தலிக்க ஆசீரைக் கூடியிருந்த மக்களுக்கு அளித்து திருப்பலியை நிறைவு செய்தார். அதன் பின் 11.45 மணிக்கு மீண்டும் திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்த திருத்தந்தை, மதிய உணவுக்குப் பின் சற்று இளைப்பாறினார்.
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களோடு திருத்தந்தை
மாலை 4.30 மணிக்கு கின்சாசா திருப்பீடத் தூதரகத்தில் கிழக்குப்பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கை அனுபவங்களுக்கு செவிமடுத்தார். உள்ளூர் தலத்திருஅவைகளின் உதவியுடன் மீண்டும் தங்களது வாழ்வை வாழத் தொடங்கியிருக்கும் சிறார், பெண்கள் மற்றும் இளையோர் தங்களது வாழ்க்கையில் நடந்த மிகவும் கொடூரமான நிகழ்வுகளை திருத்தந்தையிடம் பகிர்ந்து கொண்டனர். மிகவும் கொடூரமான மற்றும் கற்பனை செய்ய முடியாத வன்முறையின் சாட்சியங்களான அவர்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்த அவர்கள் அனைவரும், நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம், எங்கள் நாட்டில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக துன்புறுத்துபவர்களை மன்னிக்கவும், உடன்பிறந்த உறவு மற்றும் நல்லிணக்க உணர்வில் வாழவும் உறுதியளிக்கின்றொம் என்று கூறிய வார்த்தைகள கேட்போர் உள்ளத்தை நெகிழச் செய்தது.
பல்வேறு ஆயுதக்குழுக்களின் கைகளில் முடிவில்லாத வன்முறையால் பேரழிவிற்கு உள்ளான காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புட்டெம்போ-பெனி, கோமா, புனியா, புகாவு மற்றும் உவிரா ஆகிய இடங்களிலிருந்து ஏராளமான மக்கள் திருத்தந்தையை சந்திக்க வந்திருந்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட அவர்களில் 4 பேர் மட்டும் கின்ஷாசாவில் உள்ள திருப்பீடத்தூதரகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னிலையில் தங்கள் சாட்சியத்தை வழங்கி தங்களது துன்பத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களான கத்தி அரிவாள், ஈட்டி பாய் என்பன போன்றவற்றை திருச்சிலுவையின் முன் அர்ப்பணித்து செபித்தனர்.
"வன்முறை மற்றும் பிற பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் இப்பகுதிக்கு பயணத்தை மேற்கொள்ள விரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டு அம்மக்களுக்கு உரையாற்றத் தொடங்கினார்.
இருண்ட கடந்த காலத்தை விட்டுவிட்டு அழகான எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் நாம், நீதியையும் அமைதியையும் கேட்போம், நம்மை துன்பத்திற்கு உள்ளாக்கியவர்கள் செய்த அனைத்தையும் மன்னிப்போம், அமைதியான, மனிதாபிமான மற்றும் சகோதர சகவாழ்வுக்கான அருளை இறைவனிடம் வேண்டுவோம் என்று கூறி தனது ஆசீரை வழங்கிய திருத்தந்தை அனுபவங்களைப் பகிர்ந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து ஆசீர்வதித்து ஆறுதலளித்தார்.
திருத்தந்தையின் உரைக்குப் பின்னர் தங்கள் வாழ்க்கை அனுபவத்தை சாட்சியங்களாகப் பகிர்ந்து கொண்ட மக்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் நாட்டிற்கான அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இருக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த விரும்பி அர்ப்பணிப்பு செபம் ஒன்றை இணைந்து செபித்தனர்.
மாலை 6.30 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் நாட்டின் தொண்டுப்பணிகளாற்றும் குழுக்களை சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் மகிழ்ந்தார்.
காங்கோ ஜனநாயகக் குடியரசிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளை திருத்தந்தை நிறைவு செய்தார்.
மூன்றாம் நாள் - பிப்ரவரி 2 ஆம் தேதி
ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணிக்கும் திருநாள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோரின் உலக நாளான பிப்ரவரி 2 வியாழன் அன்று காங்கோ குடியரசின் கின்சாசாவில் தனது 40 ஆவது திருத்தூதுப் பயணத்தின் மூன்றாவது நாளை திருத்தந்தை பிரான்சிஸ் தொடங்கினார்.
காலை 7 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் தனியாக திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, அங்கிருந்து 2.9 கீ மீட்டர் தூரம் காரில் பயணித்து காங்கோ குடியரசின் இளையோர்களைச் சந்திக்க பெந்தேகோஸ்து மறைசாட்சிகள் மைதானத்திற்கு வந்தார். காலை 9.15 மணிக்கு மைதானத்தை அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த எண்ணற்ற இளையோர் மத்தியில் திறந்த காரில் வலம் வந்து அவர்களைச் சந்தித்து மகிழ்ந்தார்.
பெந்தேகோஸ்து மறைசாட்சிகள் மைதானத்தில் நடைபெறும் இளையோர் மற்றும் மறைக்கல்வியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தை காங்கோ குடியரசு பொதுநிலையினருக்கான ஆயர் பணித்துறையின் தலைவர் பேரருள்திரு திமோத்தே போடிக்கா மான்ஷியா அவர்கள் திருத்தந்தையை வரவேற்று துவக்கி வைத்தார். இளைஞர் ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, பாரம்பரிய நடனமும், மறைக்கல்வியாளர் ஒருவரின் பகிர்வும் இருந்தது. அதன் பின் திருத்தந்தை இளைஞர்களுக்கு எழுச்சி உரையாற்றினார்.
திருத்தந்தையின் உரைக்குப் பின் அனைவரும் ஒன்றிணைந்து இயேசு கற்பித்த செபத்தை செபித்த பின் திருத்தந்தை தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார். இளையோர் சிலர் திருத்தந்தைக்கு பரிசுப் பொருட்களை வழங்க இறுதிப்பாடலுடன் கூட்டம் நிறைவுற்றது. அதன்பின் காரில் திருப்பீடத்தூதரம் வந்த திருத்தந்தை காங்கோ குடியரசின் முதல் அரசுத்தலைவர். திரு ஜீன்-மைக்கேல் சாமா லுகொண்டே அவர்களை குடும்பத்தாருடன் சந்தித்தார். பின்னர் அங்கு மதிய உணவு அருந்தி சற்று இளைப்பாறினார்.
2022 பிப்ரவரி 2ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கின்சாசாவில் உள்ள நோட்ர டாமே டு காங்கோ என்னும் பேராலயத்தில் காங்கோ குடியரசில் உள்ள அருள்பணியாளர்கள் அருள்சகோதரிகள் திருத்தொண்டர்கள் மற்றும் அருள்பணித்துவ மாணவர்களுடனான வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.
ஏறக்குறைய 5000க்கும் அதிகமான அர்ப்பணிக்கப்பட்டவர்கள் கின்சாசா பேராலயத்தின் உள்ளேயும் வெளியேயும் நிறைந்து இருக்க இவ்வழிபாட்டு நிகழ்வானது இன்சாசா பேராயர் கர்தினால் ஃப்ரிடோலின் அம்போங்கோ திருத்தந்தையை வரவேற்று வாழ்த்தி, நன்றி தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து அருள்பணியாளார், அருள்சகோதரி, திருத்தொண்டர் ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அருள்பணியாளார் பகிர்கையில் ஊழல் மற்றும் தன்னிச்சையான தண்டனைகளில் மூழ்கும் உலகில் நீதிக்கு சாட்சிகளாக இருப்பதன் சவாலைப் பற்றியும், அருள்சகோதரி தனது பகிர்வில் நாட்டின் நலனுக்காக தியாகங்கள் பல செய்து காயம்பட்ட மக்களின் காயங்களைக் குணப்படுத்த வந்த நல்ல சமாரியன் போல திருத்தந்தையைப் பார்ப்பதாகவும் எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து திருத்தொண்டர் ஒருவர், தலத்திருஅவைகள் புத்துயிர் பெற்று உருவாக ஏற்படக்கூடிய துன்பங்களையும் இடையுறுகளையும் நினைவுகூர்ந்தார். அதனைத்தொடர்ந்து திருத்தந்தை அர்ப்பணிக்கப்பட்ட மக்களுக்கான தன் உரையாற்றினார்.
அன்புப்பணி செய்ய ஆண்டவனிடமிருந்து வரும் அற்புத வாய்ப்பு அழைப்பு. ஒவ்வொருவரின் அழைப்பும் ஒராயிரம் அர்த்தம் சொல்லும் அவ்வகையில் நமது அழைப்பு மிக முக்கியமானது என்றும் நாம் அனைவரும் இறைவனுக்கு மிக முக்கியமானவர்கள் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை திருஅவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மக்களின் பணி மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது என்றும் வலியுறுத்தி தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
உலக துறவிகள் நாள் வழிபாட்டிற்குப் பின்னர் திருத்தந்தை 3.6 கிமீட்டர் காரில் பயணித்து மாலை 5.45 மணிக்கு திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார். அதன் பின் மாலை 6.30 மணிக்கு கின்சாசாவில் உள்ள இயேசு சபை அருள்பணியாளர்களைச் சந்தித்து மகிழ்ந்தார்.
நான்காம் நாள் - பிப்ரவரி 3 ஆம் தேதி
பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை அமைதிக்கான திருத்தூதுப் பயணத்தின் நான்காம் நாளினைத் தொடங்கிய திருத்தந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தூதரகத்தில் காலை 6.30 மணிக்கு தனியாக திருப்பலி நிறைவேற்றினார். அதன்பின் காலை 7.45 மணிக்கு கின்சாசா திருப்பீடத்தூதரகத்தார்க்கு தன் நன்றியினைத் தெரிவித்து 200 மீட்டர் தொலைவில் உள்ள சென்கோ (CENCO) சென்றார். காங்கோவின் ஆயர் பேரவையான CENCO நாட்டின் 48 தலத்திருஅவை மாவட்டங்களின் ஆயர்களை ஒன்றிணைக்கும் இடமாகும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடனான CENCO ஆயர்களின் சந்திப்பு காலை 8.30மணிக்கு தொடங்கியது. பேரவையின் தலைவர் திருத்தந்தையை வரவேற்று வாழ்த்தியதற்குப் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காங்கோ ஆயர் பேரவைக்கு உரையாற்றினார். இறுதி செபம் பாடல்கள் மற்றும் திருத்தந்தையின் இறுதி செபம் மற்றும் ஆசீருடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
தென்சூடானிற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ்
பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை கின்சாசாவிலிருந்து புறப்பட்டு தென்சூடானின் ஜூபாவை நோக்கிப் பயணமானத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் சூடானின் ஜூபா பன்னாட்டு விமான நிலையத்தை நண்பகல் 3.00 மணிக்கு வந்தடைந்தார். (அடுத்த இதழில் தொடரும்)
Comment