No icon

நோவாவைப் பற்றிய கதை

இந்தத் தவக்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்தத் தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை யோனா நூல் 3 ஆவது இயல் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. இன்றைய ஈரான் நாட்டின் தலைநகரான பாக்தாத் நகரிலிருந்து, சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் நினிவே நகர் இருப்பதாகக் கூறுகின்றார்கள். அங்கே அநியாயமும், அக்கிரமும் தலைவிரித்தாடின. அங்கே நீதி இல்லை! அமைதி இல்லை! மகிழ்ச்சி இல்லை! இளையோர் தொடங்கி, முதியோர் வரை எல்லாரும் பாவத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்! எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், அவன் அல்லது அவள் திருந்த அவனுக்கு அல்லது அவளுக்கு ஓர் சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும்.

யாவே இறைவன் ‘யோனா’ என்ற இறைவாக்கினரின் வழியாக நினிவே நகரில் வாழ்ந்த பாவிகளை மனம் திரும்ப அழைத்தார். கடவுள் அழைப்பை ஏற்று, அரசன் முதல் அனைவரும் சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல்மீது அமர்ந்தார்கள். இரண்டாவதாக, கடவுளை நோக்கி இரவும், பகலும் பாவ மன்னிப்பு கேட்டு மன்றாடினார்கள். மூன்றாவதாக, 40 நாட்கள் அவர்கள் உண்ணவும் இல்லை, குடிக்கவும் இல்லை. நான்காவதாக அவர்களது பழைய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டார்கள். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ததால், எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்ததால் கடவுள் அவர்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டார்.

இந்தக் காலத்தில், நினிவே நகர் மக்களைப்போல நாமும் இதுவரை நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சபை உரையாளர் நூல் 3:1-8 முடிய உள்ள பகுதியில் இவ்வாறு நாம் படிக்கின்றோம்.

சிரிப்பதற்கு ஒரு காலம் உண்டு;

அழுவதற்கு ஒரு காலம் உண்டு;

இடிப்பதற்கு ஒரு காலம் உண்டு;

கட்டுவதற்கு ஒரு காலம் உண்டு;

பிறப்பதற்கு ஒரு காலம் உண்டு;

இறப்பதற்கு ஒரு காலம் உண்டு.

அதைப்போல நமது பாவங்களுக்காக மனம் வருந்தி, கடவுளிடம் பாவமன்னிப்புப் பெறுவதற்கும் ஒரு காலம் உண்டு. அதுதான் இந்தத் தவக்காலம்.

பாவங்களிலெல்லாம் பெரிய பாவம் எது? இதற்குப் பதிலை நாம் மத்தேயு 5:23-24 இல் காணலாம். அது ஓர் அழகான மலையடிவாரம். அன்று அங்கே இயேசு அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி அவருடைய சீடர்களும், மக்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர் திருவாய் மலர்ந்து அவரது சீடர்களையும், மக்களையும் பார்த்து, உங்கள் மனத்தில் பகை இருந்தால் என் பக்கத்தில் வராதீர்கள் என்றார்.

உங்களோடு யாராவது பேசாமல் இருந்தால், நீங்கள் போய் அவர்களோடு பேசுங்கள்; அவர்களோடு சமாதானம் செய்து கொள்ளுங்கள். பிறகு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் என்கிறார் இயேசு. ஆக, பாவங்களிலெல்லாம் பெரிய பாவம் மற்றவர்களோடு பேசாமல் இருப்பது; மற்றவர்களைத் திட்டுவது; மற்றவர்களைச் சபிப்பது.

எல்லாருடனும் சமாதானமாக வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசுவைப் பொறுத்தவரையில் சண்டை, சச்சரவுகள் அனைத்திற்கும் தலையாயக் காரணமாக விளங்குவது கோபமும், கொலையும். மத்தேயு 5: 21-22 இல் இயேசு கொலையும், கோபமும் ஒன்றே என்கிறார். கொலை எப்படி ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கிறதோ, அதுபோல கோபம் உறவைப் பறித்துவிடும். ஒரு மனிதனின் வாழ்க்கையைச் சிதைக்க ஒரு தவறான வார்த்தை போதும்.

இதோ முதுபெரும் தந்தை நோவாவைப் பற்றிய கதை ஒன்று!

கடவுள் நோவாவைப் பார்த்து, "பெரும் வெள்ளத்தால் உலகம் அழியப்போகிறது (தொநூ 6:7) ஒரு பெட்டகம் செய்து, அதற்குள் ஜோடி, ஜோடியாக விலங்குகளை அனுப்பு" என்று சொன்னார். எல்லா விலங்குகளும் பேழைக்குள் சென்றுவிட்டன. ஓர் இணையில் ஒரு கழுதை மட்டும் உள்ளே போக மறுத்தது. அதைப் பார்த்து நோவா, ‘உள்ளே போ ராசா’ என்றார். கழுதை போக மறுத்துவிட்டது. நோவா அதட்டினார். கழுதை உள்ளே போக மறுத்துவிட்டது. பிறகு, நோவா அதை அடித்தார். அது உள்ளே போக மறுத்துவிட்டது. நோவாவின் கோபம் தலைக்கேறியது. ‘சாத்தானே உள்ளே போ’ என்றார். ‘சாத்தானே’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அந்தக் கழுதை பயந்துவிட்டது. உள்ளே சென்றுவிட்டது. வெள்ளம் வந்தது, எல்லாப் பெட்டகமும் தண்ணீரின்மீது மிதந்தது. உள்ளே எல்லா இணைகளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறதா என்பதைப் பார்க்க பெட்டகத்தை நோவா வலம் வந்தார். அப்போது சாத்தான் பேழைக்குள் நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘உனக்கு இங்கே என்ன வேலை?’ என்றார். அதற்கு சாத்தான், ‘நீதானே என்னை உள்ளே போ என்றாய்’ என்றது. நோவா, ‘நான் கழுதையை அல்லவா உள்ளே போகச் சொன்னேன்’ என்றார். அதற்குச் சாத்தான், ‘அது எப்படி எனக்குத் தெரியும்? நீ என்னைத்தான் உள்ளே போகச் சொன்னாய் என்று நினைத்து, நான் உள்ளே வந்துவிட்டேன்’ என்றது. அதற்கு நோவா, ‘நீ இங்கே இருக்கக் கூடாது. நீ உறவுகளை முறிப்பாய். கடவுளிடமிருந்து ஆதாமையும், ஏவாளையும் பிரித்தவன் நீ. வெளியே போ’ என்றார். அதற்கு சாத்தான் ‘ஓ! நீங்க உள்ளே போகணும்னா போகணும்! வெளியே போகணும்னா போகணும்! நீ வச்ச வேலைக்காரன்னு நெனச்சியா! அதெல்லாம் போக முடியாது’ என்றது. ஒரே ஒரு முறை கோபப்பட்டதால் நோவா, வாழ்நாள் முழுவதும் சாத்தானோடு போராட வேண்டியிருந்தது.

கோபம் என்பது, தீப்பொறி போன்றது. ஒரு தீப்பொறியினால் ஒரு காட்டையே அழிக்க முடியும். கோபம் இருக்கும் இடத்தில் பகை கொடிகட்டிப் பறக்கும். இந்தத் தவக்காலத்தில் நாம் என்னதான் செபத்திலும், தவத்திலும் ஈடுபட்டாலும் நமது மனத்தில் கர்வமும், வைராக்கியமும், பகையும், பிடிவாத குணமும் இருந்தால் நமது செபத்தையும், தவத்தையும் கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டார்.

இந்த உண்மையை மனத்தில் நிறுத்தி, இந்தத் தவக்காலத்தில் இதுவரை பேசாமல் இருப்பவர்களோடு பேசுவோம்; முறிந்த உறவுகளுக்கெல்லாம் ஒட்டுப்போடுவோம். மனத்திலே சமாதானம் நிலவ நாம் யாருக்கு எதிராக குற்றம் செய்தோமோ அவர்களைப் பார்த்து, “சரி” என்று சொல்லுவோம். கடவுளுக்கு எதிராகக் குற்றங்கள் செய்திருந்தால், அவற்றிற்காக ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவோம்.

Comment