No icon

சிரியா மற்றும் துருக்கி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக வேண்டுவோம்

சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவேண்டல் செய்வதிலும் அவர்களுக்கு உறுதியான ஆதரவு அளிப்பதிலும்  நாம் தொடர்ந்து இணைந்திருப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 பிப்ரவரி 12,  ஞாயிறன்று, தான் வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களை நாம் மறந்துவிடவேண்டாம் என்றும், அவர்களுக்கு நாம் எவ்விதங்களில் இன்னும் உதவலாம் என்பது குறித்தும் சிந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பேரழிவு மற்றும் மக்களின் துயர வலிகளை வெளிப்படுத்தும் படங்களை தான் பார்த்து வருவதாகவும், நல்லெண்ணம் கொண்ட அனைவரும் அவர்களுக்காக இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் அம்மக்களுக்கு அமைதிக்கான பாதைகளைத் திறக்கவும், அவர்களுக்குப் பணியாற்றும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவர்களுடன் இணைந்து நடக்கும் துணிவை வழங்கட்டும் என்றும் கூறியுள்ளார்.

துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,000- கடந்துள்ளது. மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Comment