No icon

தலையங்கம்

அரசியல் பழகு

ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கென்று கொள்கைகளைக் கொண்டிருக்கவும் கொள்கைகளைப் பரப்பவும் பிரச்சாரம் செய்யவும் அனைத்து உரிமைகளையும் கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளின் உரிமைகளை மதிக்கிற அதே வேளை தவறான வழிமுறைகளில் ஈனத்தனமான அரசியலை முன்னெடுப்பதை யாரும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இன அரசியல் செய்யும்நாம் தமிழர்உள்ளிட்ட கட்சிகளும், மத அரசியல் செய்யும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும், சாதி அரசியல் செய்யும் பாமக உள்ளிட்ட கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு சமூகத்தை வரையறைக்கு வெளியே கட்டமைக்கவே முற்படுகின்றன. ‘அனைவரையும் உள்ளடக்கிய அரசியல்என்பது அவர்களிடம் இல்லை. ஆகையால்தான் தங்கள் கட்சியின் கொள்கை என்ற பெயரில் சமூகத்தின் முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் வெறுப்புப் பிரச்சாரத்தையும் விதைக்கின்றனர். வந்தேறிகள் என்ற அருந்ததியருக்கு எதிராக பேசிய நாம் தமிழர் சீமானும் இராணுவ வீரர் பிரபு கொலை வழக்கில் திமுகவுக்கு எதிராக தேசிய அளவில் தவறான பரப்புரை மேற்கொள்ளும் அண்ணாமலையும் அரசியல் களத்தில் வட தென் துருவங்களாக விலகி நிற்கின்றனர். அயலாரை அந்நியப்படுத்தும் எவரும் அரசியலில் அந்நியப்படுத்தப்பட்டேயிருப்பர்.

 யாரோ ஒருவரை எதிரியாக கட்டமைப்பதில்தான் இவர்கள் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிடுகிறார்களேயொழிய நண்பர்களைச் சம்பாதிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. யாரேனும் எதிர் கேள்விகள் கேட்டாலே கோபம் கொப்பளிக்க, நரம்புகள் முறுக்கேற, கண்கள் சிவக்க கேள்வியின் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் கேள்வி கேட்டவரை கட்டம் கட்டுவதில் கவனம் செலுத்துவார்களேயொழிய பொறுப்பான பதில்களை ஒருபோதும் தரமாட்டார்கள். மேற்சொன்ன எந்த அரசியல்வாதியும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசியல் செய்யுங்கள்; அதற்காக அனைத்திலும் கீழ்த்தரமான அரசியலை செய்யாதீர்கள்.

மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை விவகாரம் முதல் கிருஷ்ணகிரி போச்சாம்பள்ளி தாலுகா எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த இராணுவ வீரர் பிரபாகர் கொலை வரை ஒரு சிறிய விஷயத்தை ஊதி பெரிதாக்குவதில் அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலை மட்டுமே. மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை விவகாரத்தில் மரணப் படுக்கையில் இருந்த மாணவியை மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோவை வெட்டியும் ஒட்டியும் துணிச்சலாக பெயருடன் எவ்வித அடையாள மறைப்பையும் செய்யாமல், மதமாற்றத்திற்கான முகாந்திரமே இல்லாத நிலையில், மரணப்படுக்கையில் இருந்தவரை காப்பாற்ற கொஞ்சமும் சிரத்தையெடுக்காமல், பிணமான பிறகு, கண் இமைக்கும்நேரத்தில் தேசிய அளவில் செய்தியாக்கி, தேசிய மகளிர் ஆணையம் முதல் மத்திய அரசின் அனைத்து நிர்வாக அமைப்புகளையும் முழுமையாக ஈடுபடுத்தி, பிணத்தை வைத்து அரசியல் செய்தவர்கள் பாஜகவினர்.

சிறுபான்மையினருடைய கல்வி நிறுவனம், ஊர்மைக்கேல்பட்டி ஆகிய இரு காரணங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, இந்தச் சம்பவத்தினுடைய எந்த உண்மைத்தன்மையையும் ஆராய்ந்திடாமல், எதிர்த்தரப்புகளின் எந்த நியாயத்தையும் கேட்காமல், எல்லா நிலையிலும் தங்களுக்குச் சாதகமான அம்சங்களில் மட்டுமே அரசியல் செய்தவர்கள் - கீழ்த்தரமான அரசியல் செய்தவர்கள் தமிழக பாரதீய ஜனதா கட்சியினர். இவர்கள் ஒருபோதும் தங்களுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்பாதவர்கள். அதிமேதாவிகள்.

உண்மையைத் திரித்து, தங்கள் கட்சிக் கொள்கைக்கு சாதகமான புள்ளிகளில் மட்டுமே பூதாகரமாக அரசியல் செய்ய துணிகின்றவர்கள். எவரேனும் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக பொதுநலன் கருதி ஏதேனும் தெரிவித்துவிட்டால் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று தப்பித்துக்கொள்ளும் விலாங்குமீன்கள். இந்து அறநிலையத்துறையின் தீமைகளைப் பற்றி மட்டுமே பேசும் இவர்கள், வானளாவ உயர்ந்துள்ள அதன் நன்மைத்தனங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் பரிசேயர்கள். அரசியல் செய்வது அவர்கள் இயல்பு என்று எடுத்துக்கொண்டாலும் அதற்கென்று நியாய எல்லைகள் உள்ளன என்பதே உண்மை.

போச்சாம்பள்ளி வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த இராணுவ வீரர் பிரபாகரனுக்கும் திமுக கவுன்சிலர் சின்னசாமிக்கும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்த மோதலில் பிரபாகரன், அவரது தம்பி பிரபு உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். பிப்ரவரி 14 ஆம் தேதி இராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இருதரப்புமே நெருங்கிய உறவினர்கள் என்பதை பாஜகவினர் மறைக்கின்றனர்.

கொல்லப்பட்ட பிரபு, சொந்த அக்கா மகன் என்பதை யாரிடமும் சொல்லவில்லை.

இரு குடும்பத்தாருக்கிடையே ஏற்கனவே உள்ள முன்பகையை மூடி மறைக்கின்றனர். இது திட்டமிட்ட கொலை என்று அரசியல் கண்ணோட்டத்தோடு பரப்புரை செய்கின்றனர்.

உறவினர்கள் என்பதை மறைத்து திமுக குண்டர்களால் இராணுவ வீரர் கொல்லப்பட்டார் என்கின்றனர். திமுக இந்தியாவிற்கு எதிரான கட்சி, திமுக இராணுவத்திற்கு எதிரான கட்சி, திமுக தேச விரோத கட்சி என்று தேசிய அளவில் தங்களுக்கு சாதகமான ஊடகங்களைக் கொண்டு பிரச்சாரம் செய்கின்றனர்.

அன்றாடம் எத்தனையோ கொலைக் குற்றங்கள் நடந்தாலும் எதற்கும் குரல் கொடுக்காத இவர்கள், இந்த ஒரு கொலை சம்பவத்திற்காக பிப்ரவரி 21 ஆம் தேதி மெழுகுவர்த்தி பேரணி நடத்தி கவர்னரிடம் மனு கொடுக்கின்றனர். கர்னல் பாண்டியன் தன்னிலை மறந்து, "மேடையில் இருக்கும் அத்தனை இராணுவ வீரர்களுக்கும் மிக நன்றாகவே குண்டுவைக்கத் தெரியும் துப்பாக்கிச் சுட தெரியும்" என்று பிதற்றுகிறார், எச்சரிக்கிறார்.

மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை விவகாரத்தைப் போலவே வேலம்பட்டி இராணுவ வீரர் கொலையை தேசிய அளவில் விவாதப் பொருளாக்கி, திராவிடத்திற்கு எதிராக ஊடகப்பாய்ச்சல் செய்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கவே பார்க்கிறார். கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவினர் தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கிடையேயான ஒரு பிரச்சனையை, வார் ரூமில் கண் கை காது மூக்கு வைத்து கதை திரைக்கதை வசனம் எழுதி ஒட்டுமொத்த இராணுவ வீரர்களுக்கு எதிரான பிரச்சனை என்று சிண்டு முடிப்பது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு அழகல்ல. அரசியல் தர்மத்தை அவர் கடைப்பிடிக்க வேண்டும்.

அதிகார போதையில் அரசியல் செய்வது அபத்தமானது. உண்மை ஒருபோதும் உறங்காது. மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை விவகாரத்தில் நூற்றுக்கணக்கான விசாரணை முடிந்த பிறகும் மதமாற்றம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் எவருக்கும் கிடைக்கவில்லை. தற்காலிக நெருக்கடிகளை மட்டுமே உங்களால் ஏற்படுத்த முடியுமேதவிர வேறொன்றும் செய்ய இயலாது. அறம் செய்ய விரும்புங்கள். அரசியல் பழகுங்கள். ஜனநாயகத்தில் எவரையாவது அந்நியப்படுத்தினால் நீங்கள் அரசியலில் அந்நியப்படுத்தப்படுவீர்கள்.

Comment