No icon

“மக்கள் போப்” திருத்தந்தை பிரான்சிஸ்

தலைமைப்பணியில் பத்தாம் ஆண்டு சிறப்பிதழ்

மார்ச் 13, 2013! ஒட்டுமொத்த உலகின் கவனம் முழுவதும் வத்திக்கானிலிருந்து வெண்புகை வெளியேற்றும் சிமிழியை நோக்கி இருந்தது. அண்ட சராசரத்தில் மேலெழும்பும் வெண்புகையை வான்வெளியில் பரப்புவதற்காக அன்று பூமியே சற்று நிதானமாக சுற்றிக்கொண்டிருந்தது. இறைமக்கள் அணி திரண்டு வத்திக்கானின் வளாகங்களில் திரண்டிருந்தனர். எல்லாருடைய இதயத்துடிப்பும் இரண்டு மடங்கு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

115 கர்தினால்கள் குழுமியிருந்த சிஸ்டைன் சிற்றாலயம் முழுமையும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது! இதற்கு முன்பு ஐந்து சுற்று முடிவிலும் ஐந்து முறை கரும்புகை வந்திருந்தது! அதுவும் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு முறை கரும்புகை வந்திருந்தது! கரும்புகை இன்னும் புதிய திருத்தந்தைத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதன் அடையாளம்! ஆனால் உலகமோ வெண்புகைக்காகக் காத்திருந்தது!

அன்று மாலை 7 மணி! இருள் மெல்ல மெல்ல படர்ந்திருந்தது! வெண்புகை விண்ணை நோக்கி சிமிழி வழியாக விரைந்தது!

மக்கள் அனைவரும்இறைவா! உமக்கு நன்றி!” என்று ஆர்ப்பரித்தனர்! ஆலய மணிகளின் நாவுகள் ஆர்ப்பரித்து முழங்கின. வெண்புகை வானில் விரைந்து பரவ பரவ, விண்ணைத் தொட புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியானது!

தம் உடல் நிலையைக் காரணம் காட்டி திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் விருப்பு ஓய்வுப் பெற்று ஒரு மாதம் இரண்டு நாட்கள் கடந்திருந்தன. அவருக்குப் பின் 266-வது திருத்தந்தை யார்?

ஓர் அர்ஜென்டினியர் திருத்தந்தை ஆவார் என்பதை அங்கிருந்தவர்கள் கிஞ்சித்தும் நினைக்கவில்லை: அதுவும் ஒரு சேசு சபையாளர். 76 வயது நிரம்பியவர். அர்ஜென்டினிய தலைநகரமான பெயோனஸ் ஏரஸின் பேராயர். அவருடைய மூதாதையர்களோ இத்தாலியைச் சேர்ந்தவர்கள். இவரும் பழகுவதற்கு எளிமையானவர். எப்போதும் மக்களோடு மக்களாக பேருந்தில் தான் பயணம் செய்வார். வசதி குறைந்த ஒரு சின்னஞ்சிறிய வீட்டில்தான் வசிக்கிறார்: சமையலுக்கு ஒரு சமையல்காரரை வேலைக்கு அமர்த்தாமல் தனக்குத்தானே சமைத்துக்கொள்வார். ஏழைகள் வாழும் சேரிகளுக்கு அடிக்கடி செல்வார். ஏழைகளின் தோழனாக வாழ்ந்தவர்.

ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ!

ஆயர் பொறுப்பிலிருந்து ஓய்வுப் பெறும் வயது. இந்தக் கர்தினால் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே எல்லாரும் கருதினர்.

பிப்ரவரி 27 ஆம் தேதி பணி நிறைவுப்பெற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களுக்கு இறுதி நாள். அன்று பிரிவு உபச்சார விழா. அதில் பங்கேற்க கர்தினால்கள் வத்திக்கான் வந்து கொண்டிருந்தனர். அர்ஜென்டினியரான கர்தினால் ஜார்ஜ் பெர்கோக்லியோவும் பெயோனஸ் ஏரஸிருந்து கிளம்பிய அல்இத்தாலியா - 681 விமானத்தில் வசதிமிக்க முதல் வகுப்பில் பயணிக்கும் சலுகைப் பெற்றிருந்தும், நன்றியுணர்வோடு வேண்டாம் என்று மறுத்து, குறைந்த பயண உடைமையோடு, சுற்றுலாவாசிகள் பயணிக்கும் சாதாரணப் பயண வகுப்பில் பயணித்து உரோமை விமான நிலையமான லியோனர்டோ டாவின்சியில் வந்திறங்கினார்.

வெண்பட்டுப் போன்ற அவர்தம் தலைமுடி வாரப்படாமல், ஒரு கறுப்புக் குடையோடு, அவரை ஓர் ஆயர் என்று அடையாளப்படுத்தும் வெள்ளியால் செய்யப்படாத ஒரு சிலுவையை கழுத்தில் அணிந்துக்கொண்டு அந்த விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அவர் காலில் அணிந்திருந்த கறுப்பு நிறத்திலான காலணிகூட, அவர்தம் சகோதரி அவருக்குப் உரோமைக்குப் பயணிப்பதற்கு முன்பு அண்மையில்தான் பரிசளித்திருந்தார். அவர் நீண்டவிமானப் பயணத்திற்குப் பிறகு கொஞ்சம் களைப்புடன் காணப்பட்டார். அவர் தம் 21 வயதில் நுரையீரலில் வலது பாகத்தில் ஒரு சிறு பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு இருந்ததால், அவருக்கு விமானப் பயணத்தில் மூச்சு விடுவதில் சற்றே சிரமம் இருந்தது. தனது பயண உடைமையை தாமே இழுத்துக்கொண்டு கருப்பு நிறத்தாலான தம் தோற்பையை சுமந்துக் கொண்டு விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தார். குருத்து ஞாயிறன்று தம் உயர்மறைமாவட்டத்தில் திருப்பலிக் கொண்டாடும் பொருட்டு, மார்ச் மாதம் 23 ஆம் தேதி மீண்டும் அர்ஜென்டினா திரும்புவதற்கான விமானப் பயணச்சீட்டை அவர் வைத்திருந்தார். உயிர்ப்பு ஞாயிறுக்கான மறையுரையும் அவரிடம் ஏற்கனவே தயாராக இருந்தது.

வத்திக்கானிலிருந்து விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட வாகனம் அவரைக் கொண்டுபோய் டோமுஸ் இன்டர்நேஷனலிஸ் பவுலுஸ் VI  ஹோட்டலில் சேர்த்தது.

சிஸ்டையின் தேவாலயத்தில் நடந்தது என்ன?

கான்கிளேவ் என்றழைக்கப்படும் கர்தினால் பேரவை ஆற அமர இறைவனின் திருவுளம் அறிய பொது அமர்வை இம்முறை நடத்த தீர்மானித்தனர். திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க ஒன்றுகூடுவதற்கு முன்பு, தங்களையே இத்தேர்தலுக்காகத் தயாரிக்கும்விதமாக, அதற்கு முன்பாக ஒன்றுகூடி திரு அவையின் எதிர்காலம் குறித்து விரிவாக ஒருவர் மற்றவரோடு ஒன்றுகூடி தம் கருத்துகளைப் பகிர்ந்துக்கொண்டனர்: ஒருவர் மற்றவரோடு தம் கருத்துகளை முன்வைத்து பேசி ஆலோசித்தனர்.

அதன்படி ஒவ்வொரு கர்தினாலுக்கும் ஐந்து நிமிடங்கள் தம் கருத்தை முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டது. தற்சமயம் திரு அவை முன்பு உள்ள சவால்களைப் பற்றி விவாதித்தனர். புதிய திருத்தந்தை சிக்கலில் உள்ள வத்திக்கான் வங்கியைப் புனரமைக்க வேண்டும்: க்யூரியா எனப்படும் வத்திக்கான் மைய கர்தினால் அவையை ஒழுங்குபடுத்தி, உலகமெங்கும் உள்ள ஆயர்களோடு ஒத்திசைந்து செல்லத்தக்கதாக மாற்றியமைக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை அலசி ஆராய்ந்தனர். அவர்கள் ஒரு கண்டிப்புள்ள குருமட பேராசிரியரைப் போன்றவரையோ (தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆயர்கள் குருமடப் பேராசிரியர்கள்தான்) அல்லது பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியைப் போன்றவரையோ திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்க யாரும் விரும்பவில்லை என்பது ஊர்ஜிதமானது.

மார்ச் மாதம் 7 ஆம் தேதி ஜார்ஜ் பெர்கோக்லியோ இம்மன்றத்தில்புதிய முறையில் நற்செய்தி அறிவித்தல்என்பதைப் பற்றி தம் கருத்தைப் பதிவுச் செய்வதற்காகத் தம் பெயரைப் பதிவுச் செய்தார். பெர்கோக்லியோவின் கருத்தில் ஒரு தெளிவு இருந்தது: திரு அவையின் எதிர்காலம் அடங்கியிருந்தது. தாம் தாய்மொழியாம் ஸ்பானிய மொழியில் அவர் அதனை எழுதியிருந்தார். ஆனால் எல்லா கர்தினால்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் இத்தாலிய மொழியில் பேசினார். அவருக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து நிமிடங்களில் வெறும் மூன்றரை நிமிடங்களில் தம் கருத்தைப் பளிச்சென்று முன்வைத்தார். அவர் இதயத்திலிருந்து உணர்வுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பேசியதாக எல்லா கர்தினால்களுமே உணர்ந்தனர்.

மார்ச் மாதம் 12  ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை 7.41 மணிக்கு புகைப்போக்கி சிமிழி வழியாக வெளியேறிய கரும்புகை, திருத்தந்தை இன்னும் தேர்ந்தெடுக்கப்படாததை உலகுக்கு அறிவித்தது.

மார்ச் 13 ஆம் தேதி! முற்பகலில் நடைபெற்ற வாக்குச் சுற்றுகளில் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. கரும்புகை வெளியேறியது.

மூன்றாவது சுற்று முடிந்து முற்பகல் 11.38 மணிக்கு மீண்டும் கரும்புகை வெளியேறியது.

நான்காவது சுற்று தேர்தல் வாக்கு பதிவாகி மாலை 5 மணிக்கு கரும்புகை வெளியேறியது. ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் கழித்து, ஐந்தாவது தேர்தல் வாக்குச்சுற்று நடைபெற்றபோது 20 கூடுதலான வாக்குகளை அதாவது 90 வாக்குகளைப் பெற்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு அருகில் அவர்தம் நீண்டகால நண்பரும் பிரேசில் நாட்டின் சாவோ பவுலோ (Sao Paulo) கர்தினாலுமான எழுபத்தெட்டு வயது கிளாவுடியோ ஹூம்மஸ், பெர்கோக்லியோவைக் கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொன்ன  ஹூம்மஸ் காதோடு காது வைத்தவாறுஏழைகளை மறவாதே என்றுசொன்னார். “ஏழைகள் என்று அவர் சொன்னவுடனே பெர்கோக்லியோவின் மனதில் வந்து போனவர் புனித பிரான்சிஸ் அசிசியார்.

கர்தினால் ஜார்ஜ் பெர்கோக்லியோ போதுமான வாக்குகளைப் பெற்றவுடன் அவரை கர்தினால்களின் திருத்தொண்டர் அணுகி, ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு, என்ன பெயரைத் தேர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்? என்றவுடன் கர்தினால் ஜார்ஜ் பெர்கோக்லியோநான் பிரான்சிஸ்என்று அழைக்கப்படுவேன் என்று பதிலுரைத்தார்.

சரியாக மாலை 7.06 மணிக்கு சிமிழியிலிருந்து வெண்புகை விண்ணைக் கிழித்துக்கொண்டு மேலே எழும்பியது.

திருத்தந்தை பிரான்சிஸ்

மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்: ஆலய மணிகளின் நாவுகள் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. ஒரு மணிநேரம் 6 நிமிடங்கள் கடந்து, 8.22 மணிக்கு கர்தினால்களின் முதன்மைத் திருத்தொண்டரான கர்தினால் ஜீன் லூயிஸ் தவுரான் பார்வையாளர் மேல் மாடத்தில் தோன்றிநாம் ஒரு திருத்தந்தையைப் பெற்றுள்ளோம்என்று பின்வருமாறு அறிவித்தார்.

ஆரம்பமே அமர்க்களம்!

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, புதிய திருத்தந்தைக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் நாற்காலியில் சென்று அமராமல் திருத்தந்தை பிரான்சிஸோ, அதற்கு முன் நின்ற வண்ணம், தம் உடன்தோழர்களான கர்தினால்களின் வணக்கத்தையும் கீழ்ப்படிதலையும் பெற்றுக்கொண்டார். அவர் பழகுவதற்கு இனியவராக, பண்பில் சிறந்தவராக, இயல்பான மனிதத்தன்மை நிறைந்தவராக தம்மை அடையாளப்படுத்தியது அனைவரிடையேயும் மீண்டும் ஒருதாக்கத்தை ஏற்படுத்தியது.

புதிய திருத்தந்தைக்கான உடை தயாராக இருந்தது: பார்வையாளர் மாடத்திற்குச் செல்லும் வழியில், நற்கருணை ஆண்டவர் பேழை உள்ள சிற்றாலயத்திற்குச் சென்று, சில நிமிடங்கள் அமைதியாக அவரை உற்று நோக்கி மன்றாடி எழுந்தார். அங்கிருக்கும்போதுதான் கர்தினால் தவுரான்நமக்குத் திருத்தந்தைக் கிடைத்துள்ளார் என்ற செய்தியை அறிவித்தார். இரவு 8.22 மணிக்கு திருச்சிலுவை ஏந்தியவர் முன் செல்ல திரை விலக்கி பார்வையாளர் மாடத்தில் தோன்றினார். தன் வலது கையை உயர்த்தி, அசைத்தவாறே மலர்ந்த முகத்தோடு மக்கள் முன் முதன்முறையாகத் தோன்றினார். Fratelli e sorelle, buonasera! என்று வாழ்த்தினார்.

1272 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு சிரியாவைச் சேர்ந்த மூன்றாம் கிரகோரி (731-741) திருத்தந்தையாக விளங்கினார். சேசு சபையைச் சேர்ந்த முதல் திருத்தந்தையும் இவரே! புனித பிரான்சிஸ் அசிசியாருடைய பெயரைத் தேர்ந்த முதல் திருத்தந்தையும் இவரே!

புனித பிரான்சிஸ் ஏழைகளின் பங்காளன்! எளிமையின் பிரதிநிதி! சாக்குடை உடுத்தி ஒரு சாமானியனாய் வாழ்ந்தவர். இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் தம் உடலில் சுமந்த உன்னத மனிதர்! பறவைகளின் உரையாடலையும், நதியின் உயிர்ப்பையும், சூரியனின் கதகதப்பையும் நேசித்து இயற்கையில் இறைவனோடு ஒன்றித்த ஒரு கர்மயோகி இவர்! குழந்தையுள்ளத்தோடு குதுகலித்து, இறைவனில் முழுமையாக சங்கமித்து, இயற்கையில் தன்னையே ஐக்கியப்படுத்தி, ஒரு நாடோடியாய் வாழ்ந்தவர். அவர் பெயரைத் தாங்கி ஒரு திருத்தந்தை நமக்கு வழங்கப்பட்டுள்ளார்.

மக்கள் மொழி பேசிய நல்லாயன்..

மாலை 8.22 மணிக்கு புனித பேதுரு மாளிகையின் நடுமாடத்தில் வலது கையை மக்களுக்கு அசைத்து மகிழ்ந்தவாறே திருத்தந்தை மக்கள் முன்பு தோன்றினார். மிகவும் எளிமையாக வெள்ளை நிறத்திலான பாப்பிறை ஆடையை அணிந்திருந்தார். ஆடம்பரமான ஆடையும் தொப்பியும் அவர் அணியவில்லை. “இயேசு ஒரு நல்லாயன்என்ற விளக்கப்படம் இடம்பெற்றிருந்த வெறும் இரும்பாலான சிலுவை அவர் தம் மார்பின் முன்புறமாக தவழ்ந்திருந்தது. அவர்தம் தோள்பட்டையை வட்ட வடிவிலான அரைமார்பளவு தோள் ஆடை சூழ்ந்திருந்தது. இது நற்செய்தியில் இயேசு குறிப்பிடும் தொலைந்துப்போன ஆடுகளைத் தேடி மீண்டும் மந்தைக்கு கொண்டுவரும் நல்லாயன் உவமையின் அடையாளமாக விளங்குகிறது. அமைதியும் கருணையும் மகிழ்ச்சியும் தவழும் முகம், கொஞ்சம் அகலமான சற்றே பெரிதான காதுகள், கொஞ்சம் பழைய கண்ணாடி. “பிரான்சிஸ்.. பிரான்சிஸ்...” என்று ஒரே ஆரவாரம்..ஒரு நொடியில் ஒன்றரை லட்சம் பேரும் அமைதியாகினர்.

இரண்டு கரங்களையும் மேலே உயர்த்தி, தம் கண்களை, மந்தையை நோக்கி ஏறெடுத்து, திருத்தந்தைப் புன்னகைப் பூத்தார். “அன்பு மிக்க சகோதர சகோதரிகளே! மாலை வணக்கம்!” என்று இத்தாலிய மொழியில் வாழ்த்தினார். திருத்தந்தையின்மாலை வணக்கம்ஆயனுக்கும் மந்தைக்குமான நெருக்கமானத் தொடர்பை வெளிப்படுத்தியது.

உங்களுக்குத் தெரியும், உரோமைக்கு ஓர் ஆயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்என்ற கடமை கர்தினால் குழாமுக்கு இருந்தது. “என் உடன் சகோதரர்களான கர்தினால்கள், உலகின் கடையெல்லை வரைக்கும் சென்று என்னைத் தேர்ந்துள்ளதாகத் தெரிகிறது. நாம் அனைவரும் இங்கே ஒன்று கூடியிருக்கிறோம். உங்களின் வரவேற்புக்கு நன்றி கூறுகிறேன். தற்போது உரோமை மறைமாவட்டம் தனது ஆயரைப் பெற்றுள்ளது. நன்றி!” என்று மக்கள் மொழிப் பேசினார்.

மாலை வணக்கம்!” என்று அன்பொழுக வாழ்த்தி அவர்களைப் பார்த்து தோழமையோடு கையசைத்தது அவர் எவ்வளவு எளிமையான மனிதர் என்பதை உலகிற்கு உணர்த்தியது. அவர்தம் உரையில் மிக மிகத் தெளிவாக, அவர் தன்னைத் திருத்தந்தை என்று அவர் அடையாளப்படுத்தாமல், “உரோமையின் ஆயர்என்று அடையாளப்படுத்தியது அவர்தம் மாற்றுச் சிந்தனையை இறை மக்களுக்கும் உலகிற்கும் முன் வைத்தது.

இயேசு கற்பித்த செபத்தையும், மங்கள வார்த்தை செபத்தையும் செபித்தபோது திருத்தந்தை பிரான்சிஸ் தன் இயல்பான மக்கள்சார் எளிய பக்தியை வெளிப்படுத்தினார். திருத்தந்தை பிரான்சிஸ் (சில பத்திரிகைகள் முதலாம் பிரான்சிஸ் என்று தவறாக குறிப்பிட்டுள்ளன) சீர்திருத்தத்தை, தன் வார்த்தைகளில் அறிவிக்கவில்லை: செயலில் வெளிக்காட்டவில்லை, மாறாக செபத்தில் வெளிக்காட்டினார். “இப்போது ஆயரும் மக்களும் சேர்ந்து நடக்கும் பயணத்தில், உரோமைத் திரு அவையின் பயணத்தில் பிறரன்பிலும் சகோதரத்துவத்திலும் எல்லா திரு அவையினரோடும் இணைந்து நடப்போம். ஒருவர் மற்றவருக்காக எப்பொழுதும் செபிப்போம்.நான் உங்களுக்கு ஆசீர் கொடுக்க விரும்புகிறேன். அதற்கு முன்னதாக, இன்று உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். முதலில் ஆயராகிய நான் உங்களை ஆசீர்வதிக்கும் முன்பு, ஆண்டவர் என்னை ஆசீர்வதிக்குமாறு நீங்கள் எனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்என்றார்.

ஆசீரளிப்பதற்காக அணிவிக்கப்படும் ஸ்டோலா எனப்படும் தோள் துகிலுக்காகத் திரும்பினார். இறைமக்களை ஆசீர்வதிக்க, அவருக்கு ஸ்டோலோ எனப்படும் தோள்துகில் வழக்கம்போல் கொடுக்கப்பட்டது. அந்தத் தோள்துகில் வெண்பட்டால் நெய்யப்பட்டு சற்றே ஆடம்பரமாக இருந்தது. அதனைவேண்டாம்என்று அவர் மறுத்தார். பின்னர் மக்களிடம், “இப்போது உங்களுக்கும் உலகினர் அனைவருக்கும் நன்மனங்கொண்ட அனைவருக்கும் எனது ஆசீரை அளிக்கிறேன்என்று ஊருக்கும் உலகுக்குமான ஆசீரை அளித்தார்.

ஆரவாரமில்லாத வாழ்க்கை முறையும், அன்பு நிறைந்த அணுகுமுறையும் முதல் நாளிலேயே ஒருமக்கள் திருத்தந்தையாகஅவரை அடையாளப்படுத்தியது.

மார்ச் 19 ஆம் தேதி! செவ்வாய்க்கிழமை! பணியேற்கும் விழா! மார்ச் மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை புனித சூசையப்பரின் (யோசேப்பு) பெருவிழாவன்று உரோம் மறைமாவட்டத்தின் ஆயராக, அதாவது கத்தோலிக்கத் திரு அவையின் தலைவராக-திருத்தந்தையாக-பொறுப்பேற்றுக்கொண்டார்.

Comment