ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ
திருத்தந்தை பிரான்சிஸின் வாழ்க்கை வரலாறு
- Author குடந்தை ஞானி --
- Thursday, 09 Mar, 2023
பிறப்பும் வளர்ப்பும்
திருத்தந்தையின் இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ (Jorge Mario Bergoglio). இவர் தென் (இலத்தீன்) அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள பெயோனஸ் ஏரஸ் என்னும் சிறு நகரத்தில் 1936 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி மரியா ஜோஸ் பிரான்சிஸ்கோ - ரெஜினா சிவோரி தம்பதியினருக்கு மூத்த மகனாக ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார்.
இக்குடும்பத்தினர் ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான், அதாவது 1929 ஆம் ஆண்டு, இத்தாலியின் ஜெனோவாவிலிருந்து புறப்பட்ட ஜியுலியோ சீசர் என்னும் கப்பலில் பயணித்து இலத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் பெயோனஸ் ஏரஸ்க்கு புதிதாகக் குடிபெயர்ந்திருந்தனர்.
பெயோனஸ் ஏரஸில் உள்ள பியோரஸ் குடியிருப்பு வளாகத்தில் சின்னஞ்சிறிய வீட்டைத் தங்களுக்கெனத் தேர்ந்துக்கொண்ட இவர்தம் பெற்றோர் இங்கு மனநிறைவோடு வாழ்ந்து வந்தனர். ஜார்ஜ் மரியோ, மரிய எலனே, ஆல்பர்ட்டோ ஹோரசியோ, ஆஸ்கர் அடரியன், மார்த்தா ரெஜினா ஆகிய ஐந்து குழந்தைகளை இத்தம்பதியினர் பெற்றனர் (இவர்களில் மரிய எலனே மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார்). இவர்களில் மூத்தவர்தான் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ (நம் திருத்தந்தை) ஆவார்.
ஐந்து குழந்தைகளுக்குத் தாயான ரெஜினா சிவோரி வீட்டில் தம் பிள்ளைகளோடு சிறந்த இல்ல நிர்வாகியாக விளங்கினார்.
அவர்தம் தந்தைவழி பாட்டி ரோஸா மார்கரிட்டாவும் தாத்தா ஜுவான் பெர்கோக்லியோவும் அதே தெருவில் வீட்டிற்கருகே வாழ்ந்து இக்குடும்பத்திற்கு உதவினர். ஜார்ஜுக்கு பதிமூன்று மாதங்கள் நடக்கும்போது இரண்டாவதாக இன்னொரு மகள் இந்தப் பெற்றோருக்கு பிறந்தாள். எனவே தாய் ரெஜினா மிகவும் சிரமப்பட்டார். ஆகையால் இவர்தம் தாத்தா-பாட்டி இருவரும் பகல் முழுவதும் ஜார்ஜை தங்கள் வீட்டில் பராமரித்து வளர்த்தனர். இதனால் ஜார்ஜ் தன் தாத்தா பாட்டியிடமிருந்து பிட்மோன்டேசே எனப்படும் இத்தாலிய வட்டார மொழியைக் கொஞ்சம் கற்றுக்கொண்டார். அவர்தம் பாட்டி ரோஸாவுடனான உறவு மிகவும் சிறந்தது என்று அவரே பின்னாளில் வியந்துள்ளார். அவர்தம் பெற்றோரிடம் கற்றுக்கொண்டதைவிட தாத்தா பாட்டியிடம் நிறைய கற்றுக்கொண்டார். ஜார்ஜ் நன்றாக சமைக்க தம் தாயிடமிருந்து கற்றுக்கொண்டார். அவர்தம் தாய் ரெஜினா ஐந்தாவது குழந்தையைப் பெற்றெடுத்தபோது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டமையால் முன்புபோல் தற்போது வீட்டு வேலை செய்ய முடியாத நிலை. இவரது அம்மா பள்ளியிலிருந்து குழந்தைகள் வரும்போது சமையலறையில் ஒரு மூலையில் நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு, சமைக்கத் தேவையான காய்கறிகளை நறுக்கி, வெங்காயம் உரித்து, உருளைத்தோல் நீக்கி தயாராயிருப்பார். வந்தவுடன் எல்லாருக்கும் குடும்ப உணவை எப்படி சமைப்பது என்று தம் பிள்ளைகளுக்கு சொல்லித் தந்து செய்யச் சொல்வார். மூத்தப் பிள்ளையான ஜார்ஜ் தாய்ச் சொல் கேட்டு, கீழ்ப்படிதலில் சிறந்து விளங்கி, நன்கு சமைக்க கற்றுக்கொண்டார். ஆரம்பக்கல்விக்குப் பிறகு, ஆறாம் வகுப்பு முதல் தொன்போஸ்கோ சலேசிய சபையினர் ராமோஸ் மேய்யா என்னுமிடத்தில் உள்ள வில்பிரட் பாரோன் தே லாஸ் சாந்தோஸ் ஆங்கல்கஸ் பள்ளியில் பயின்றார்.
சகலகலா வல்லவன்
மேலும் ஜார்ஜ் தம் இளமைப் பருவத்தில் விளையாட்டில் ஆர்வமிக்கவராக விளங்கினார். கால்பந்தாட்டத்தை நேசித்தார். அருகிலுள்ள கால்பந்தாட்ட மைதானம் சென்று பல்வேறு கால்பந்தாட்ட சங்கங்களின் போட்டிகளைக் கண்டுகளித்தார். ஆனால் ஜார்ஜுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கூடைப்பந்தாட்டமாகும். அதனை அவ்வளவு ஆர்வத்தோடு விளையாடுவார். நன்கு நடனமாடுவார். அர்ஜென்டினாவில் புகழ்பெற்ற டாங்கோ நடனப் பயிற்சியில் சேர்ந்து அதனை முறைப்படி கற்றுக்கொண்டார். மேலும் அவர் வாழ்ந்த பெயோனஸ் ஏரஸ் பகுதியில் தனித்துவமிக்க அடையாளமாக விளங்கிய மிலாங்கோ நடனத்தை விரும்பி கொஞ்சம் கற்றுக்கொண்டார். இளமைப்பருவத்தில் அமைதியான பொழுதுபோக்கான தபால் தலை சேகரிப்பில், நாட்டமுள்ளவராக விளங்கினார்.
உயர்நிலைக் கல்வியை தம் பதின்மூன்றாம் வயதில் தொடங்கியபோது, அவர்தம் தந்தை குடும்பத்திற்கு உதவும் பொருட்டு வேலைக்குச் செல்லும்படி பணித்தார். தந்தையின் சொல்லுக்குச் செவிசாய்த்து, காலுறைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் பகுதிநேர வேலைக்குச் சேர்ந்து குடும்பத்திற்கு சிறிது காலம் உதவினார். மேல்நிலைக் கல்வி முடித்தவுடன், பெயோனஸ் ஏரஸ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்காக அடியெடுத்து வைத்தார். அங்குதான் உணவு வேதியியல் கற்றுக் கொண்டே முதுகலைப்பட்டம் பெற்றார்.
இறையழைத்தலின் விதை.. ஒப்புரவில்
ஜார்ஜ்க்கு 17 வயது ஆன பொழுது, மாணவர் தினத்தன்று தன் தோழர்களோடு இணைந்து வழக்கமாக மேற்கொள்ளும் ஓர் இன்பச் சுற்றுலாவில் கலந்துக்கொள்ள வேண்டுமென திட்டமிட்டிருந்தார். அது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி. (புனித மத்தேயு திருவிழா நாள்).அனைவரும் இரயில் நிலையத்தில் ஒன்றுகூட வேண்டுமென்று திட்டம். நல்ல கத்தோலிக்க இளைஞரான ஜார்ஜ், அங்குச் செல்வதற்கு முன்பு தன் பங்கு ஆலயமான சான் ஜோஸ் தே ஃபுளோரஸ் க்குச் சென்று, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து விட்டு, சுற்றுலாவுக்குச் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்திருந்தார். அவ்வாலயத்திற்கு சென்ற போது, இதற்கு முன்பு இதுவரை சந்தித்திராத ஒரு குருவானவரை எதிர்கொண்டார். அவரும் இவருக்கு பாவசங்கீர்த்தனம் என்னும் ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கு இசைவுத் தெரிவித்தார். அந்தக் குருவானவர் பாவசங்கீர்த்தனத்தின்போது இவருக்குள் ஆழமான ஆன்மீக உணர்வை விதைத்தார். இதுநாள் அவருக்குள் உறங்கிக் கொண்டிருந்த விசுவாசம், வீரியமிக்கதாக உயிர்த்தெழுந்தது. அவர் தம் இறையழைத்தலைத் தெளிவாக உணர்ந்தார். இறைவனுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்று உந்துதல் பெற்றார்.
அவ்வாலயத்தில் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்றவுடன், இரயில் நிலையத்திற்கும் செல்லக்கூடாது என்றும் இன்பச் சுற்றுலாவிலும் கலந்து கொள்ளக்கூடாது என முடிவெடுத்த ஜார்ஜ், நேராக தன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதுதான் அவர் வாழ்வில் முதல் திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வு ஆகும்.
எஸ்குவேலா தொழிட்நுட்பக் கல்லூரியில் வேதியியல் தொழில் நுட்பத்தில் பட்டயப் படிப்பு மேற்கொண்டார். வேதியியல் தொழில் நுட்பத்தை அறிந்திருந்ததால் ஹெக்தியர் பேக்மேன் என்னும் ஆய்வகத்தில் ஊட்டச்சத்தைப் பகுத்தாயும் பிரிவில் தன் வேலையை அவர் தொடர்ந்தார். தாம் குருவாகப் போகும் எண்ணத்தையும் அவர்தம் முடிவைக் குறித்தும் எவரிடம் வாய் திறக்கவில்லை. இக்காலக்கட்டத்தில், பள்ளிச் சென்றுக் கொண்டே வேலை செய்து வந்தார். காலை 7 மணிக்கு ஆய்வகத்திற்குள் செல்லும் அவர், மதியம் ஒரு மணிவரை கடுமையாக உழைப்பார். கிடைக்கும் இடைப்பட்ட நேரத்தில், அறக்கப் பறக்க மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு, தொழில்நுட்பப் பள்ளிக்குச் செல்வார். அங்கு இரவு 8 மணி வரை தங்கி பயில்வார். பள்ளிப் பருவம் அவர் வாழ்வில் மிக முக்கியமானப் பங்கை வகித்தது. பராகுவே நாட்டைச் சேர்ந்த ஆசிரியை எஸ்தர் பெலேஸ்டிரினோ தேகாரேகா-வின் பாசத்திற்குரிய தேர்ந்த மாணவராக ஜார்ஜ் விளங்கினார். அவ்வாசிரியைத்தான் அவருக்கு கடின உழைப்பு, செய்வதைத் திருந்தச் செய்வதற்கும் கற்றுக்கொடுத்தார். இவ்வாசிரியை பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு மிக்கவர்.
மரண அனுபவம் தந்த இறையழைத்தல்
ஜார்ஜ்க்கு 21 வயது இருக்கும்போது, அவருக்கு கடுமையான நிமோனியா தாக்குதல் ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவர்தம் நுரையீரலின் வலது பிரிவில் மூன்று கட்டிகளைக் கண்டுபிடித்து, அதனை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றினர். மருத்துவமனையில் ஒரு நடைப்பிணமாகக் கிடத்தப்பட்டு, மார்புப் பகுதியில் பல்வேறு மருந்துக் குழல்கள் பின்னியிருக்க, உடலுக்கு வலிமையூட்ட ஊட்டமருந்து ஒருபுறம் உடலுக்குள் சென்றுக் கொண்டிருக்க, வலியின் மிகுதியால் துடியாய்த் துடித்த அவர் தனக்கு நேர்ந்தததைக் குறித்து வியந்தார்: ஏன் இந்த நிலைமை என்று நொந்துக்கொண்டார். அவரை மருத்துவமனையில் சந்திக்க வந்தவர்களும் அவருடைய வேதனையைக் கண்டு பரிதாபப்பட்டு, இவரிடம் “கவலைப்படாதப்பா! எல்லாம் சரியாய்ப் போயிடும்! இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். நீ வீட்டில் இருந்தால் அவ்வளவு நன்றாயிருக்காது” என்று நேர்மறையாகச் சொல்லிச் சென்றனர். ஆனால் இந்த வலி மிகுந்த நாட்களைப் பொறுமையாகக் கடந்துச் செல்லவும், விசுவாசத்தை மிகுதியாக்கிக் கொள்ளவும் பெரிதும் துணைநின்றவர் அருட்சகோதரி டோலரஸ் ஆவார். இவர்தான் முதன் முதலாக புதுநன்மை அல்லது முதல் நற்கருணைப் பெறும் விழா என்று அழைக்கப்படும் ஆண்டவரின் திருவுடலைப் பெறுவதற்கு இவருக்கு வகுப்பு எடுத்து தயாரித்து உதவியவர். மருத்துவமனையில் இவரைச் சந்தித்த அச்சகோதரி இவரிடம் அவர்தம் வேதனையைக் கண்டுக்கொள்ளாமல் நிராகரிக்கச் சொல்லவில்லை: மாறாக அதனை வாழ்த்த முயற்சிக்கும்படி அறிவுரைக் கூறினார். வலியால் அவர் துடித்தபோது “நீ கிறிஸ்துவைச் பின் செல்கிறாய்” என்றார். ஏற்கனவே தாம் ஒரு குருவாக வேண்டும் என்ற விருப்பமும், இந்த மரண அனுபவமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எனவே சேசுசபையினர் பொறுப்பிலிருந்த மறைமாவட்ட குருமடத்தில் குருமாணவராகச் சேர்ந்தார். முதலில் மறைமாவட்ட குருவாக வேண்டும் என்ற விருப்பமே அவரிடம் மேலோங்கியிருந்தது. பின்னர் டோமினிக்கன் எனப்படும் சுவாமிநாதர் சபையில் சேர விரும்பினார். சேசு சபையின் மறைபரப்பு ஆர்வம், ஒழுக்கம், குழும வாழ்வு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட ஜார்ஜ், மார்ச் மாதம் 11 ஆம் தேதி 1958 ஆம் ஆண்டு வில்லா டிவோடோ என்னுமிடத்தில் குருமடத்தில் சேசு சபையின் நவத்துறவறத்தில் அடியெடுத்து வைத்தார். இவர் குருவாக தந்தை விருப்பம் தெரிவித்தார். தாயோ தொடர்ந்து வேலைக்குச் செல்லும்படியும், பல்கலைக்கழகப் படிப்பை முடிக்கும்படியும் அறிவுறுத்தினார்.
இன்னொருபுறம், குழந்தைப் பருவத்திலிருந்து இவர்தம் வளர்ப்பில் பெரிதும் துணைபுரிந்த அவர்தம் அன்பு பாட்டி ரோஸா, ஜார்ஜ் குருவாகும் விருப்பத்தைத் ஊக்கப்படுத்தி உறுதுணையாக இருந்தார்.
குருத்துவப் பயிற்சி
பெயோனஸ் ஏரஸில் உள்ள மறைமாவட்ட குருமடமான வில்லா டிவோடோவில் தொடங்கினார். ஆனால் மானுடவியல் (அருளிரக்கச் செயல்கள்) குறித்த படிப்பை சிலி நாட்டில் முடித்துவிட்டு, 1963 ஆம் ஆண்டு மீண்டும் அர்ஜென்டினா நாடு திரும்பி, சான் மிகுவேல் (San Miguel) என்னுமிடத்தில் கொலிஜியோ டி சான் ஜோஸ் (Colegio de San Jose) -இல் மெய்யியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
குருவாக....
டிசம்பர் மாதம் 13, 1969 ஜார்ஜ் பெர்கோக்லியோ சான் மிகுவேலில் உள்ள புனித ஜோசப் குருமடத்தில் இறையியல் படித்துக் கொண்டிருக்கும்போது அன்றுதான் குருவாக திருப்பொழிவுச் செய்யப்பட்டார்.
அவர் தம் அன்புத்தாய் ரெஜினாவும் தம் மகனின் குருத்துவ விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார். அதன் பின்னர் ஸ்பெயின் நாட்டில் உள்ள அல்காலா தே ஹேராரஸ் என்னுமிடத்தில் தமது இறுதி வார்த்தைப்பாட்டைக் கொடுத்த பிறகு, ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு, பெர்கோக்லியோ ஒரு முழுமையான இயேசுசபைக் குருவாக தமது நிரந்தர வார்த்தைப்பாட்டைக் கொடுத்தார்.
துறவற வாழ்வில் நிரந்தர வார்த்தைப்பாடு என்பது மிக முக்கியமான நிகழ்வு ஆகும். நீண்ட நெடிய பயிற்சிக்குப் பிறகு, கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் ஆகிய வார்த்தைப்பாடுகளோடு திருத்தந்தைக்கு கீழ்ப்படிதல் என்னும் கூடுதலான வார்த்தைப்பாட்டையும் சேசு சபை துறவிகள் மேற்கொள்வர். தாம் ஒரு சேசு சபைத் துறவி என்பதில் அவர் பெருமிதம் கொண்டார்.
செப மனிதர்!
எல்லா துறவிகளுமே செபவாழ்வில் திளைத்திருக்க வேண்டும் என்பது திரு அவையின் அவா. குருவான பெர்கோக்லியோவும் நன்கு செபிக்கக்கூடிய செப மனிதராக வாழ்வில் மிளிர்ந்தார். அவர் குருத்துவப் பயிற்சி காலத்திலிருந்தே அதிகாலை துயிலெழும் பழக்கம் கொண்டவர். தினமும் அதிகாலை 4.30 மணிக்கோ அல்லது 5.00 மணிக்கோ படுக்கையை விட்டு எழுந்து விடுவார். இன்றும்கூட அதே பழக்கம் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் தன்னுடைய அன்றாட வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பு குறைந்தப் பட்சம் இரண்டு மணிநேரம் நற்கருணை ஆண்டவர் சந்நிதியில் செபிப்பார். ஜார்ஜின் இறையனுபவம் அவர்தம் குருத்துவ வாழ்வில் அவருக்குப் பெருந்துணை புரிந்துள்ளது. அவர் இந்த ஆன்மீக அனுபவத்தைச் சுவைக்க முற்படுவது நற்கருணைப் பேழை முன்புதான். நற்கருணைமீது ஆழ்ந்த பக்தியும் திருப்பலி மீது தீராத தாகமும் கொண்ட சிறந்த ஆன்மீகவாதியாக அவர் விளங்கினார். துறவற வாழ்வில் செபத்தின் இன்றியமையாமையை அவர் முழுமையாக உணர்ந்திருந்தார். இந்த ஆன்மீக அனுபவம் என்பது சில சமயங்களில் நீண்ட நேரம் நீடிப்பதும் உண்டு. ஜார்ஜ் ஒரு சேசு சபைத் துறவியாக, சபையின் நிறுவனர் புனித லொயோலா இஞ்ஞாசியார் உருவாக்கிய ஆன்மீகப் பயிற்சிகளை அடிக்கடி மேற்கொள்வார். ஆன்மீகம் துறவறத்தை அழகுப்படுத்துகிறது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.
கொந்தளிப்பான காலக்கட்டம்
ஜார்ஜ் தன் குருத்துவப் பணியின் தொடக்க நிலையில் இந்த விடுதலை இறையியலையும், அதோடு தொடர்புடைய குருக்களையும் அருட்சகோதரிகளையும் பெரும்பாலும் விமர்சித்தார். அவர்களின் அணுகுமுறையில் குற்றங்கண்டார். ஜார்ஜ் பாரம்பரியத்தில் நாட்டமிக்க ஓர் உரோமைக் கத்தோலிக்கக் குருவாகவும், செய்த தவறுக்கு காரணங்காட்டாதவராகவும், திருத்தந்தைக்கும் தங்கள்மீது அதிகாரம் கொண்டவர்களுக்கும் எப்போதும் கீழ்ப்படிந்து நடக்கும் வாக்குறுதி தந்தவர்களுள் ஒருவராகவும் விளங்கினார் என்றே சொல்லலாம். நல்ல ஆளுமைமிக்கவராகவும், அறிவுத்திறனில் சிறந்தவராகவும் ஜார்ஜ் பெர்கோக்லியோ விளங்கிய காரணத்தினால், உயர் பதவிகளும், தலைமைத்தாங்கி வழிநடத்தும் பதவிகளும் தேடி வந்தன. குருவான பிறகு, நவத்துறவியர்களுக்கான வழிநடத்துநராக நியமிக்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, மாநில அளவில் பதவி வகித்தார்.
சான் மிகுவேல் என்னுமிடத்தில் உள்ள வில்லா வாரிலாரியில் 1972-1973 ஆகிய ஆண்டுகளில் நவத்துறவியர்களுக்கு வழிநடத்துநராக பெர்கோக்லியோ பணியாற்றினார். அங்கேதான் இறையியல் பேராசிரியராகவும் குருமட அதிபராகவும் விளங்கினார்.
இருப்பினும், 1973 ஆம் ஆண்டு 36 வயதில் சேசு சபையின் அர்ஜென்டினிய மாநிலத் தலைவர்! அருட்பணியாளர் ஜார்ஜ் பெர்கோக்லியோ அர்ஜென்டினாவின் சேசு சபையின் மாநிலத் தலைவராக, இரண்டு பருவங்கள் அதாவது, தொடர்ந்து ஆறு ஆண்டுகாலம் 1973 முதல் 1979 வரை பதவி வகித்தார். அதாவது பதவிக்காலமான மூன்று ஆண்டுகள் முடிந்து, மீண்டும் இரண்டாவது முறையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அது அர்ஜென்டினிய வரலாற்றில் அரசியல் மற்றும் சமூக தளத்தில் கொஞ்சம் கொந்தளிப்பான காலக்கட்டம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முற்றிலும் கட்டுக்கோப்பை இழந்திருந்த அர்ஜென்டினிய சேசு சபையைப் புனரமைக்க வேண்டிய கடமை அவருக்கு இருந்தது. கடமையின் பொருட்டு ஜார்ஜ் கொஞ்சம் கடுமையாக நடந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அவர்தம் தலைமையிலான நிர்வாகத்தில் ஒரு சில தவறுகள் நேர்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அவரே அதனை ஒப்புக்கொண்டுள்ளார்.
தவிர்ப்பும், தடுமாற்றமும்
சேசு சபையின் அர்ஜென்டினிய மாநிலத் தலைவராகப் பணியாற்றிய கொந்தளிப்புமிக்க ஆறு ஆண்டு காலத்திற்குப் பின்பு, ஜார்ஜ் பெர்கோக்லியோ மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்பினார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு வரை, கொலேஜியோ தே சான் ஜோஸ் கல்லூரியில் அவர் அதிபராகவும் இறையியல் பேராசிரியராகவும் பணியாற்றிக் கொண்டே, சான் மிகுவேல் ஆலயத்தில் பங்குத் தந்தையாகவும்பணியாற்றினார். மிக உயரிய பதவியை வகித்தப் பிறகு, ஒரு சாதாரண நிலையிலிருந்து தொண்டாற்றினார் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். பதவியைவிட பணிக்கே முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தினார்.
1985 ஆம் ஆண்டின் இறுதியில் இரண்டு மாதங்கள் ஜெர்மனியில் பொப்போர்டு நகரில் தங்கி ஜெர்மன் மொழியைப் பயின்றார். ஜெர்மன் மொழியை கொஞ்சம் கற்றப் பிறகு, ஃபிராங்க்பர்ட் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தத்துவ மற்றும் இறையியல் கல்லூரியில் ஒரு மாணவராக தம் இறையியல் படிப்பைத் தொடர்ந்தார்.
இடையில் ஆர்வமின்மையின் காரணமாக பட்டத்திற்கான ஆய்வைத் தொடர்ந்து தொடர முடியாமல் அதனை அப்படியே பாதியிலேயே விட்டுவிட்டார்.
1987-ன் தொடக்கத்தில் ஜெர்மனியிலிருந்து அர்ஜென்டினா திரும்பிய பிறகு, அவர் மாநிலத் தலைவர் பெயோனஸ் ஏரஸில் உள்ள கொலேஜியோ தெல் சால்வடோர் என்னும் கல்லூரிக்கு அனுப்பினர். அதன் பிறகு, கோர்டோபா என்னும் நகரத்தில் உள்ள பங்கில் ஆன்மீக இயக்குநராகவும், ஆன்ம ஆலோசகராகவும் பணிபுரிய அனுப்பப்பட்டார். இதற்கு முன்பு மிக உயரிய பதவிகளில் பணியாற்றிய பிறகு, இந்த ஆன்ம ஆலோசகர் பணி என்பது பெருத்த அதிகார பின்னடைவுதான்: ஓர் உள்ளார்ந்த புறக்கணிப்பு எனலாம்.
துணை ஆயராக நியமனம்
கோர்டோபாவில் பணியாற்றிய காலக்கட்டம் என்பது பெர்கோக்லியோவுக்குத் நாடுக்கடத்தல் போன்று தெரிந்தது. அர்ஜென்டினாவின் சேசு சபையினர் ஒவ்வொருவராலும் அவர் புறக்கணிக்கப்பட்டார். எவருமே அவரைக்கண்டுக்கொள்ளவில்லை. திருத்தந்தையின் பிரதிநிதி உபால்டோ காலாபிரேசி, ஜார்ஜ் பெர்கோக்லியோ மீது மிக உயரிய மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். பெயோனஸ் ஏரஸின் துணை ஆயராக ஜார்ஜ் பெர்கோக்லியோ தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி, திருத்தந்தை இரண்டாம் யோவான் பெர்கோக்லியோவை பெயோனஸ் ஏரஸின் துணை ஆயராக கர்தினால் அன்டோனியோ குவார்சினோவின் கீழ் பணிபுரிய நியமித்தார். அவர் மே மாதம் 27 ஆம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அவர் தம் ஆயர் திருநிலைப்பாட்டு விருதுவாக்காக மத்தேயுவின் அழைப்பின் அடிப்படையில் ‘கருணையால் என்னைத் தேர்ந்தார்’ என்பதை தேர்ந்துக்கொண்டு, அதற்கு இலச்சினையாக சேசு சபையின் IHS என்பதை இடம்பெறச் செய்தார்.துணை ஆயராக அவர்தம் நியமனம் அவர்தம் வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனையாகும்.
இப்படி எளிய ஆயராக, மக்களின் தோழராக, எந்தவித ஆடம்பரமுமின்றி மக்கள் பயணிக்கும் பேருந்திலும் இரயிலிலும் மக்களோடு மக்களாகப் பயணித்து, ஓர் எளிய இல்லத்தில் தனக்குத்தானே சமையல் செய்து, உண்டு, உடைகளைத் துவைத்து, மடித்து, நவத்துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இன்றைய ஆடம்பர பிரியர்களான ஆயர்களுக்கும் குருக்களுக்கும் துறவிகளுக்கும் சவால் விடுக்கிறவராக விளங்கினார்.
பெர்கோக்லியோ பெயோனஸ் ஏரஸ் உயர்மறைமாவட்ட துணை ஆயராக ஐந்து ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். அச்சமயங்களில், இறை மக்களுக்கு பாவச்சங்கீர்த்தனம் கேட்டு ஒப்புரவு அருட்சாதனம் வழங்குவதைத் தொடர்ந்தார். இதற்கு முன்பு தலைமைப் பதவியில் இருந்தபோது, தன்னிடம் இருந்த தன்முனைப்பு மிக்க தலைமைத்துவத்திற்கு மிகவும் வருந்திய அவர், தற்சமயம், எல்லாருக்கும் செவிசாய்த்து, பார்ப்பதற்கு எளியவராகவும் பழகுவதற்கு இனியவராகவும் விளங்கினார். பேராயரும் கர்தினாலுமான குவார்சினோவுக்கு துணை ஆயராக இருந்தபோது, மறைமாவட்ட முதன்மை குருவாகவும் பணியாற்றினார். ஆகையால் அர்ஜென்டினிய திரு அவையில் நடைபெறும் ஒவ்வொன்றையும் பெரும்பாலும் அறிந்திருந்தார்.
மக்கள் பேராயராக...
இதற்கிடையே கர்தினால் குவார்சினோ சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். அச்சமயத்தில் தனக்கு ஒரு வாரிசு ஆயரை நியமிக்கும்படி உரோமையைக் கேட்க முடிவெடுத்தார். ஜார்ஜ் பெர்கோக்லியோ தாம் பிறந்த தமது உயர்மறைமாவட்டமான பெயோனஸ் ஏரஸை மிகவும் நேசித்தார்: ஆகையால் வாரிசு ஆயராக வேறு எவராவது நியமனம் ஆவதை மனதார விரும்பவில்லை. தன் விருப்பத்தை கர்தினாலிடம் வெளிப்படுத்தினார்.
1997 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி பாப்பிறை பிரதிநிதி காலாபிரேசி அவர்களைச் சந்தித்தார். அவரும் திருத்தந்தையின் விருப்பத்தைத் தெரிவித்தார்.
பெயோனஸ் ஏரஸின் வாரிசு ஆயரானார். வாரிசு ஆயராக அந்தப் பதவியில் நீண்ட காலம் அவர் பணியாற்றவில்லை. ஏனெனில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, உடல் நலக்குறைவால் கர்தினால் குவார்சினோ மறைந்தார். பிப்ரவரி 28 ஆம் தேதி 1998 ஆம் ஆண்டு, ஜார்ஜ் மரியோ பேராயராகவும், அர்ஜென்டினாவின் முதன்மையாளராகவும் (Primate), அர்ஜென்டினாவின் கீழை வழிபாட்டு ரீதி இறை மக்களுக்கு நடுவராகவும் நியமிக்கப்பட்டார்.
ஏழைமக்களின் பிரியமுள்ள ஆயர்!
அப்படி என்ன தலைகீழ் மாற்றம் என்றால், ஆயரான பெர்கோக்லியோ தம் மறைமாவட்டத்தின் கருணை இல்லங்கள் உட்பட ஒவ்வொரு பகுதியையும் ஊரையும் நேரில் சந்தித்தார். ஏழைகளின் ஏழைகளோடு பல மணிநேரம் செலவு செய்தார். எந்த அளவுக்கு எனில், அவர் “சேரிகளின் ஆயர்” என்றே அழைக்கப்படலானார். ஆயராகவும் பேராயராகவும் அவர் இருந்த பதினெட்டு ஆண்டுகளில், ஒரு குரு அவர் தம் பணியெல்லைக்குட்பட்ட மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களைப் பற்றி தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொருவராக விசாரித்தார் என்று ஆச்சரியத்தோடு குறிப்பிடுகிறார். பாதசாரிகளின் சுரங்கப்பாதையில் நடப்பார். பேருந்தில் பயணம் செய்வார்: பல இடங்களில் சுற்றித்திரிந்து, அங்குள்ள மக்களைச் சந்திப்பார். அவர்தம் குழந்தைகளையும் இல்லங்களையும் ஆசீர்வதிப்பார். அவர்களோடு தேநீர் அருந்துவார்.
மேலும் அவர் மிகுந்த தாழ்ச்சி நிறைந்த மனிதராக, ஆயர் அலுவலகத்திற்கே உரிய ஆடம்பர அணியங்களை அவர் அறவே தவிர்த்தார். பேராயராக நியமிக்கப்பட்ட பின்பும் கூட, அவர் முதன்மை குருவாக இருந்தபோது பயன்படுத்திய கூடுதலான ஒரு படுக்கை அறை உள்ள இல்லத்தை விட்டு வெளியேறவில்லை. தொடர்ந்து அதனையே பயன்படுத்தினார். அந்தப் படுக்கையறையில் மரத்தாலான கட்டிலும், அதன் சுவரில் ஒரு பாடுபட்ட சுருபம் இருந்தது. இந்தப் பாடுபட்ட சுருபம் அவர்தம் தாத்தா பாட்டியான ஜுவான் - ரோஸா இவருக்குக் கொடுத்திருந்தனர். அந்த அறையில் மின்சாரத்தாலான வெப்பமாக்கும் கருவி ஒன்றிருந்தது. அக்கட்டடம் முழுவதும் ஒருங்கிணைந்து மையப்படுத்தப்பட்ட வெப்பமாக்கும் அமைப்பு நிலை இருந்தபோதிலும் அவரோ தன் அறையில் உள்ள அந்தக் கருவியை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. அக்கட்டடம் முழுவதும் உள்ள பெரும்பாலான அறைகளில் யாரேனும் தங்கி, அனைத்து அறைகளும் பயன்படுத்தப்பட்டால் அப்போது மட்டுமே அவர் பயன்படுத்துவார். அந்த நடைக்கூடத்தில் தன் படுக்கைறையை ஒட்டினாற் போல அமைந்த அந்தச் சிறு அறையே அவரது செபக்கூடமாக இருந்தது. அதேபோன்றுதான் தேவையற்ற பழையப் பொருட்களை கிடத்தும் அறையும் அருகே இருந்தது.
எளிமையான வாழ்க்கை முறை
அவரிடம் இருந்த ஒரே ஆடம்பரம் அதனையொட்டினாற்போல் அமைந்திருந்த அவரது நூலகம்தான். இங்குதான் அவரது நூல்களும், அன்றாடச்செய்தித்தாள்களும் இருக்கும். நன்கு அலங்கரிக்கப்பட்ட விசாலமான பேராயருடைய அலுவலகத்தை அவர் பயன்படுத்தவில்லை. மாறாக, அதே தளத்தில் தன் படுக்கை அறையைவிட சிறிதாக இருந்த ஒரு சிற்றறையைத்தான் தனது அலுவலகமாகப் பயன்படுத்தினார். இன்னும் சொல்லப்போனால், அந்தச் சிற்றறை அவருடைய செயலரின் அலுவலக அறையைவிட சின்னதாக இருந்தது. அவர்தம் செயலரிடம்கூட பேராயரின் சந்திப்புத் திட்டங்கள் இருக்காது. காரணம், அவரே தம் சந்திப்புத் திட்டங்களை, அன்றாட செயல்பாடுகளை தம் நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொள்வார்.
கவனம் ஈர்த்த கர்தினாலாக!
அர்ஜென்டினியாவின் பேராயராக நியமிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, 2001 ஆம் ஆண்டு, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் பெர்கோக்லியோவைக் கர்தினாலாக நியமனம் செய்தார். கர்தினாலுக்குரிய சிவப்புத் தொப்பிக் கொடுத்து, சான் ராபர்டோ பெல்லார்மினோ என்ற பட்டத்துடன் கர்தினால் குழாமில் இடமளித்தார். வத்திக்கானில் கர்தினாலுக்குரிய நியமன திருச்சடங்குகள் நடைபெறும்போது தங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் உரோமைக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்ட பெர்கோக்லியோ, அவர்களிடம் அதற்கு மாறாக, அப்பயணத்திற்கும் செலவிடும் தொகையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்தார். ஏழைகள்மீதான அக்கறையை விடுதலை இறையியலாளர்களைப்போல வாய்க்கிழிய பேசாமல் செயல்பாட்டில் அவர் கொணர்ந்தார்.
கர்தினாலான ஜார்ஜ் பெர்கோக்லியோ எல்லாரும் நன்கு அறிந்தவராக மட்டுமின்றி, எல்லார் மத்தியிலும் மதிப்பும் மரியாதையும் மிக்கவராகப் படிப்படியாக உலக அளவில் உயர்ந்தார். மேலும் தென் அமெரிக்கா முழுவதும் சக ஆயர்களின் நன்மதிப்பையும் பெற்று எல்லாராலும் நேசிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு அர்ஜென்டினிய ஆயர் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மூன்று ஆண்டுகள் கழித்து, தொடர்ந்து மீண்டும் அதன் தலைவராகவும், 2008 ஆம் ஆண்டு மறுபடியும் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆக 2005 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை அர்ஜென்டினிய ஆயர்பேரவையின் தலைவராகப் பணியாற்றினார்.
பெயோனஸ் ஏரஸின் பேராயராகப் பணியாற்றி சமயத்தில் ஜார்ஜ் பெர்கோக்லியோ அர்ஜென்டினிய திரு அவையின் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்தார். அதற்கு புதிய வடிவம் கொடுத்தார். தம் மறைமாவட்டத்திலுள்ள எண்ணற்ற குருக்களை ஏழைகள் வாழும் சேரிகளில் நியமனம் செய்து பணியாற்ற செய்து, மக்கள் பணியில் தீவிர ஆர்வம் காட்டினார். அவர்களோடு மக்கள் பிரச்சனைகளில் தாமும் பங்குக் கொண்டு போராடினார். சமூகப் பிரச்சனைகளில், வாழ்வாதாரப் பிரச்சனைகளில் அவரும் பங்குக் கொண்டார். குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்போதும், குழாயில் தண்ணீர் போதிய வேகத்தில் வரவில்லையென்றாலும் மக்களோடு தெருவுக்கு வந்துப் போராடினார். திருச்சபை தெருச்சபையாக இருக்க வேண்டும் என்று கூறி ஏழைகளின் குரலாக எதிரொலித்தார்.
ஏழைகளின் குரலாக
தம் மறைமாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள், அரசியல் சார்ந்த இயக்கங்கள், அமைப்புகளை அவர் ஆதரித்து ஊக்குவித்தார். உதாரணமாக, ஒவ்வொரு நாளும் நகரின் இரவு நேரங்களிலும் நகரக் குப்பைகளைச் சேகரித்து, அதில் கிடைக்கும் மறுசுழற்சிக்குள்ளாகும் பொருட்களை விற்று வரும் வருமானத்தைக் கொண்டு வாழும் பரம ஏழைகளை ஒருங்கிணைத்து, சங்கம் அமைத்து, அவர்களும் சமூக அந்தஸ்தோடு வாழ உதவி செய்யும் சேசு சபையினரை ஆதரித்து அவர்களின் பணிகளில் துணைநின்றார். கடந்த இருபது ஆண்டுகளாக அவர்கள் இந்த பரம ஏழைகளுக்காகச் செய்து வரும் பணி அளப்பரியது. அவர்களை வழிநடத்துவதிலும் ஒருங்கிணைப்பதிலும் ஜார்ஜ் மிகுந்த ஆர்வத்தோடு செயல்பட்டார்.
2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (ஜான் பவுல்) இறந்தார். அதனைத் தொடர்ந்து, புதியத் தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கும் தகுதியுடைய 115 கர்தினால்களும் வத்திக்கான் வந்தனர்: கர்தினால் ஜார்ஜ் பெர்கோக்லியோவும் அங்கு வந்தார்.
கான்கிளேவில் நான்குச் சுற்று தேர்வுக்குப் பிறகு, கர்தினால் ராட்சிங்கர் ஏப்ரல் 19 ஆம் தேதி மதியம் புதியதிருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதினாறாம் பெனடிக்ட் என்னும் பெயரைத் தேர்ந்தார்.
அர்ஜென்டினா திரும்பிய கர்தினால் ஜார்ஜ் பெர்கோக்லியோ மிகவும் சிக்கலான எட்டு ஆண்டுகளை எதிர்கொண்டார். பாலியல் குற்றச்சாட்டிற்கு குருக்கள் உள்ளானதால், பெரும்பாலான மறைமாவட்டங்கள் தங்களுடைய உடைமைகளை விற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருந்தொகையை நஷ்ட ஈடாகத் தந்தனர்: வத்திக்கானில் செயல்படும் வங்கியில் ஊழல், மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரைப் போல உலகின் கவனத்தை ஈர்க்க முடியாமல் திருத்தந்தை பெனடிக்டின் ஒருவித தடுமாற்றம், ஆடம்பரமான வாழ்க்கைமுறை என சோதனையான காலக்கட்டம்.
2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி, காலை 11 மணிக்கு வத்திக்கானில் உள்ள கான்சிஸ்டரி ஹாலில் சாட்சிய வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு முத்திப்பேறு பட்ட நிகழ்வு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தலைமையில் நடைபெற்றது. அந்தத் திருச்சடங்கு முடிந்த பிறகு, உலகமே எதிர்பார்க்காத அறிவிப்பு ஒன்றை பெனடிக்ட் வெளியிட்டார். அது கத்தோலிக்கத் திருச்சபைக்கு அதிர்ச்சியான செய்தி. ஆம். தம் வயது மற்றும் உடல் நிலையை காரணங்காட்டி, திருத்தந்தைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அவர் லத்தீன் மொழியில் அறிவித்தார். அவர் வாசித்தளித்த அறிக்கைத்தாளில் நேரம் பிப்ரவரி 10, 2013 என்று முந்தைய நாள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி, இரவு மணி முதல் புனித பேதுருவின் திருப்பீடம் காலியாகும்; ஆகையால் கான்கிளேவ் எனப்படும் கர்தினால் அவைக்குரிய கர்தினால்கள் அனைவரும் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வத்திக்கானுக்கு வரும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டது. நமக்கு ஒரு மக்கள் போப் கிடைத்துள்ளார்.
Comment