No icon

“ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண முடியும்”

தந்தை லெவே சாமியின் வியக்கத்தக்க வாழ்வியல் மதிப்பீடுகள்

2016 ஆம் ஆண்டு மதுரையிலே லென்ஸ் ஊடக மையத்தை ஆரம்பித்து அதன் முதல் இயக்குனராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது தந்தை லெவே சாமி குறித்த ஒரு ஆவண படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். சிவகங்கை மறை மாவட்டமும், லென்ஸ் ஊடகமையமும் இணைந்து தயாரித்த அந்த ஆவணப்படத்தைத் தயாரிக்கும் பயணத்தில் தகவல் சேகரிப்பதற்காகப் பல கிராமங்களுக்கு சென்றேன். குறிப்பாக, தந்தை லெவே பணியாற்றிய ஆண்டாவூரணி, இராமநாதபுரம் மற்றும் கடைசி நாட்களில் ஆன்மீக தந்தையாகிய இருந்து செயல்பட்ட சருகணி பங்கு தளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சென்றேன். அங்குள்ள 60 வயது முதல் 90 வயது வரை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வயது முதிர்ந்த தாத்தா பாட்டிகளை நேரடியாக சந்தித்து அவர்களோடு உரையாடினேன்.

இவர்கள் எல்லாரும் தந்தை லெவே சாமி நினைவு குறித்த ஞாபகங்களை, நினைவுகளை தாங்கியவர்களாக  இருந்தார்கள். எனவே, அவரிடம் நேரடியாக பேசியதிலிருந்து கிடைத்த தகவல்களைச் சேகரித்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. அப்படி நான் சேகரித்த தகவல்களிலிருந்து தந்தை லெவே சாமியின் வாழ்விலே வெளிப்பட்ட உயரிய நெறிமுறைகளையும், மதிப்பீடுகளையும் நம்பிக்கை சார்ந்த அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய ஆழமான விசுவாசமும், எளிய வாழ்வும், தாழ்ச்சியும் பங்குப் பணியில் அவர் செயல்படுத்திய யுக்திகளும் அவர் இறந்து 50 ஆண்டுகள் கடந்தும் குருக்களுக்கும், இருபால் துறவிகளுக்கும் மாபெரும் வழிகாட்டியாக அமைகின்றன என்றால் மிகையில்லை.

1. தந்தை லெவே ஒரு மனிதநேயமிக்க அருட்பணியாளர்

பிரான்ஸ் நாட்டிலிருந்து இளம் வயதிலேயே இந்தியாவிற்கு மறைபரப்புப் பணி செய்ய வேண்டும் என்ற ஆவலோடு தந்தை லெவே சாமி தமிழகத்துக்கு வந்தார். தன்னுடைய பணியிடை பயிற்சி, இறையியல் படிப்பை முடித்த பிறகு முழுக்க முழுக்க பங்குப் பணியை ஏற்று செய்ய வேண்டும் என்பதிலே ஆர்வமாக இருந்தார். மொழி தெரியாத பின்னணி, புதிய பண்பாடு, உணவு பழக்க வழக்கங்கள் என்று எல்லாவற்றையும் எளிதாக ஏற்றுக்கொண்டார். தன்னுடைய பணி வாழ்விலே மிகுந்த மனிதநேயமிக்க அருட்பணியாளராக விளங்கினார் என்று பலரும் கூறுகின்றார்கள். ஓர் அருட்பணியாளராகத் திருப்பலி நிறைவேற்றுவது, அருட்சாதனங்களை நிறைவேற்றுவது, செபம் செய்வது என்பது மட்டும் அவர் தன்னுடைய பணிகளைச் சுருக்கி விடவில்லை. மாறாக, பங்கில் உள்ள மக்களுக்கு என்ன தேவை இருக்கின்றது? என்ன பிரச்சனை இருக்கிறது? என்பதை எல்லாம் நேரடியாக சென்று ஆய்வு செய்து அதற்கேற்ற வகையில் தன்னுடைய பணிகளை அமைத்துக் கொண்டார். உதாரணமாக, ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் படிக்க வசதி இல்லாத பொழுது அவர்களை வெளியூர்களுக்கு சென்று படிக்க வைப்பது, குறிப்பாக ஆசிரியர் பயிற்சி பள்ளி, தொழில் பயிற்சி, செவிலியர் பயிற்சி என்று வேலை வாய்ப்பு கிடைக்கின்ற வகையிலே கல்வி பெறுவதற்கு உதவி செய்தார்.

அதோடு தான் இருந்த பங்குத்தலங்களிலே பள்ளிக்கூடங்கள் ஆரம்பிப்பதற்கும், அங்கு ஆசிரியர்களை நியமித்து பள்ளிகள் சிறப்பாக இயங்குவதற்கும் வழிவகை செய்திருக்கின்றார். இராமநாதபுரத்தில் இருக்கின்ற பொழுது இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று எல்லா மதத்தவரோடும் சிறப்பான வகையிலே நல்லுறவை ஏற்படுத்தி பணி செய்திருக்கின்றார். ஒருமுறை தேவிபட்டினத்தில் மழை அதிகமாக பெய்து, சவேரியார் ஆலயம் இடிகின்ற தருவாயில் இருந்தது. மழை நீரும் ஆலயத்திற்குள் நுழைந்தது. எனவே அங்குள்ள சவேரியார் ரூபத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆலயம் புதுப்பிக்கப்பட வேண்டிய சூழலில் சுரூபங்களை இஸ்லாமியர்கள் வழிபடுகின்ற பள்ளிவாசலில் வைத்திருக்கின்றார். அங்குள்ள இஸ்லாமிய தலைவர்களும் இவரை அன்போடு வரவேற்று அந்த சுரூபங்களைப் பத்திரமாக பள்ளிவாசலில் வைத்து பாதுகாப்பதற்கு இடம் கொடுத்தனர். அதேபோல ஜாதி மத வேற்றுமை பாராமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வந்தாலும் அவர்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அதை நிறைவேற்றியிருக்கின்றார். எனவே தந்தையிடம் ஒரு மத நல்லிணக்க சூழலை உருவாக்குவதற்கான ஆசை இருந்தது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏறக்குறைய 22 ஆண்டுகள் பணியாற்றிய ஆண்டாவூரணி பங்கில் எந்த ஒரு வசதிகளும் இல்லாமல் இருந்தது. மக்களுக்கு அடிப்படையாக என்ன தேவை இருக்கிறது என்பதை அறிந்து கோவில் கட்டுவது, தபால் நிலையம் கொண்டு வருவது, பள்ளிக்கூடம் அமைப்பது என்று அனைத்தையும் திட்டமிட்டு செய்திருக்கின்றார். அதே பங்கில் ஒரு முறை காலரா நோய் மக்களைத் தொற்றிக்கொண்டது. எல்லாரும் காலரா நோயால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கு மயக்கத்திலும் பசியிலும் விழுந்து கிடந்தார்கள். அப்பொழுது ஒருவர் ஒருவரை கூட பார்ப்பதற்கும் தொடுவதற்கும் மக்கள் தயங்கினார்கள். ஆனால் அந்த சமயத்தில் தனக்கு காலரா வந்து விடும் என்று பயம் இல்லாமல் மக்களை தொட்டு தூக்கி மருத்துவ சிகிச்சை கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். இதெல்லாம் அவர் மிகுந்த மனித நேயமிக்க ஒரு அருட்பணியாளராக பணியாற்றினார் என்பதற்கு சான்றுகளாக அமைகின்றன.

2. பங்குப்பணியில் மக்களோடு கொண்டிருந்த உறவு

ஒரு பங்கு பணியாளர் மக்களோடு நெருக்கமான உறவு கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு தந்தை லெவே சாமியின் வாழ்வு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கின்றது. அவரைப் பொறுத்தவரை பெரிய ராஜாவும் அடிமட்டத்தில் வாழும் சாமானியனும் ஒன்றுதான். அவர் எல்லாரையும் சமமாக மதிக்கின்றவராக இருந்திருக்கின்றார். எனவே தான் ஒவ்வொருவரையும் அவர் பெயர் சொல்லி அழைப்பதிலே மகிழ்ச்சி அடைந்தார். பங்கில் உள்ள மக்கள் ஒவ்வொருவரையும் அறிந்து வைத்திருந்தார்.அதனால்தான் அவர்களுடைய பெயரைச் சொல்லி அழைக்க முடிந்தது. வார நாட்களில் கிளை கிராமங்களுக்கு செல்லுகின்ற பொழுது அங்குள்ள மக்களுடைய பிரச்சனைகளையும் அறிந்து பல்வேறு உதவிகளை செய்து அந்த மக்களை மேம்படுத்துவதற்கு பெரிதும் பங்காற்றியிருக்கின்றார். குறிப்பாக தண்ணீர் வசதி இல்லை என்றால் அவர்களுக்கு கிணறு வெட்டுவது, வாய்க்கால் அமைத்துக் கொடுப்பது பிள்ளைகளை வெளியூர்களுக்குச் சென்று படிக்க வைப்பது, திருமணங்களுக்கு தயார் செய்வது, விசுவாசத்தை வளர்த்தெடுப்பது என்று பல்வேறு பணிகளை கிளைக் கிராமங்களிலும் சிறப்பாக செய்திருக்கின்றார்.

வீடுகளுக்குச் செல்லுகின்ற பொழுது மக்கள் எதைக் கொடுக்கின்றார்களோ அதை அப்படியே வாங்கி சாப்பிடுகின்ற பழக்கத்தைக் கொண்டிருந்தார். “நீங்க சாப்பிடுவதை எனக்கு கொடுங்க. வீட்டில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் கொடுங்கஎன்பதுதான் அவருடைய கூற்றாக இருந்தது. தனக்கென்று எதுவும் சிறப்பான உணவை தயார் செய்ய வேண்டாம் என்பதிலேயே அவர் கவனம் செலுத்தினார். ஏனென்றால் மக்கள் கஷ்டப்படுகின்ற பொழுது அவர்களுடைய கஷ்டத்திலே பங்கேற்க வேண்டும் என்கின்ற எண்ணத்தைக் கொண்டவராக அவர் பணி செய்திருக்கின்றார்.

அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இங்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக் கொண்டதால், பீடச்சிறுவன் முதல் வயது முதிர்ந்த பெரியவர் வரை எல்லாரையும்போங்க, வாங்கஎன்று தான் பேசுவார். யாரையும் கடுஞ்சொல்லால் திட்டுவதற்கு அவர் ஒரு போதும் முன்வந்ததில்லை. அன்போடும், பணிவோடும், பாசத்தோடும் மக்களோடு உரையாடியதை பலரும் பாராட்டுகின்றனர். மக்களுக்கு சண்டை வருகின்ற பொழுது அங்கு சென்று ஏன் இப்படி சண்டை இடுகிறீர்கள். “நீங்கள் கிறிஸ்தவர்களாஎன்று மட்டும் கேள்வி கேட்பார். ஒருவேளை அவர்கள் சமாதானமாகவில்லை என்றால் மீண்டும் அமைதியாக அறைக்கு வந்து தனியாக இருக்கின்றபொழுது, சாட்டையை எடுத்து முதுகிலேயே அடித்துக் கொண்டார் என்பதையும் மக்கள் பதிவு செய்கிறார்கள். தன்னுடைய ஒருத்தல் முயற்சிகளால் மக்கள் மனம் மாறுவார்கள் என்கிற சிந்தனையிலே தன்னுடைய உடலை வருத்திக் கொண்டார் என்பதைப் பார்க்கின்றோம்.

3. ஏழைகளை அதிகம் நேசித்தவர்

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண முடியும்என்ற கூற்றுக்கேற்ப  லெவே சாமி அவர்கள் ஏழை மக்களை அதிகமாக நேசிப்பவராக இருந்திருக்கின்றார். இதை நான் சந்தித்த எல்லாருமே பதிவு செய்திருக்கின்றார்கள். அதாவது பங்குத்தளத்தில் இருக்கின்ற பொழுது யாரிடம் வசதி இருக்கின்றது, யாரிடம் வசதி இல்லை என்பதை அறிந்து ஏழைகளுக்கு மட்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதிலே தெள்ளத் தெளிவாக செயல்பட்டிருக்கின்றார். குறிப்பாக அவர் ஆண்டாவூரணியில் இருந்த பொழுது பல சமயங்களில் மழை பொய்த்து போனதால் பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது. மக்களெல்லாம் ஒருவேளை சாப்பிட்டும் சாப்பிடாமலும் இருப்பதை பார்த்து அவர்கள் மீது இரக்கம் கொண்டவராக இருந்திருக்கின்றார். எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு கடிதம் எழுதி கோதுமை, பால் பவுடர், இன்னும் பல்வேறு உணவுப் பொருட்களை வரவழைத்து மக்களின் பசியை போக்குவதற்கு அரும்பாடுபட்டிருக்கின்றார்.

இராமநாதபுரத்தில் இவர் இருக்கின்ற பொழுது தலித் மக்கள் வாழுகின்ற பகுதிக்கு அடிக்கடி சென்று அவர்களோடு உரையாடுவது, பேசுவது, சிரித்து மகிழ்வது என்று நேரத்தை செலவழித்து இருக்கின்றார். அங்குள்ள சிறுவர் சிறுமிகளிடம் பேசுகின்ற பொழுது அவர்கள் கிழிந்த உடையை அணிந்திருப்பதைப் பார்த்து மனதிற்குள் வருத்தப்பட்டிருக்கின்றனர். எனவே நண்பர்களிடம் பணம் சேகரித்து புதிய துணிகள் வாங்கி அவர்களுக்கு கொடுத்திருக்கின்றார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் அவர்களுக்கு உணவும் மற்றும் இனிப்பும் வாங்கித் தந்திருக்கின்றார். அங்கு இருக்கின்ற பொழுது கப்பலிலே பணி செய்கின்ற பல பெரிய பணக்காரர்களைத் தெரிந்து வைத்திருக்கின்றார். அவர்களோடு உள்ள உறவில் கப்பலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய துணிகள், உணவுப் பொருட்கள், நோட்டு புத்தகங்கள் இவற்றையெல்லாம் அவர் பெறுகின்ற பொழுது அதை எடுத்துக் கொண்டு உடனே தலித் மக்கள் வாழுகின்ற பகுதிக்கு தான் முதலில் சென்றிருக்கின்றார். அங்குள்ள மக்களுக்கு அதை கொடுத்திருக்கின்றார். இவர்கள்என் மக்கள்என்கின்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்திருக்கின்றார். அதாவது இறைவன் தேர்ந்து கொள்கின்ற மக்களைஎன் மக்கள்என்று சொல்லியிருக்கின்றார். இதுதான் செயல்பாட்டு ஆன்மீகம் என்று சொல்லலாம்.

மழைக்காலத்தில் மக்கள் வீடு இன்றி தவித்த பொழுது அவர்கள் எல்லாரையும் வரவழைத்து ஆலயத்துக்கு அருகிலேயே குடிசை போட்டு, நீங்கள் இங்கு தங்குங்கள் என்று தைரியமாக சொல்லி இருக்கின்றார். மக்களும் உடனடியாக அங்கு வந்து ஆலய வளாகத்திற்கு அருகிலேயே குடிசை போட்டு ஒரு சில மாதங்கள், ஆண்டுகள்கூட அங்கேயே தங்கியிருக்கிறார்கள். அதாவது ஆலயத்திற்கு சொந்தமான இடத்தை ஏழைகள் பயன்படுத்துவதற்கு எப்போதும் அவர் தயாராக இருந்தார். இதன் மூலம் அவர் எவ்வளவு தூரம் ஏழைகளை நேசித்தார் என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

சருகணியில் அவர் பங்கு பணியாளராக இல்லாவிட்டாலும் ஓர் ஆன்மீக குருவாக இருந்து எல்லாரையும் சிறப்பாக வழிநடத்தியிருக்கின்றார். அப்பொழுது அங்கு மக்கள் அவர்களை பார்க்க வந்தார்கள். குறிப்பாக அவர் பணி, செய்த ஆண்டாவூரணி மற்றும் இராமநாதபுரம் பகுதிகளிலிருந்து ஏழை எளிய மக்கள் அவரை வந்து பார்த்து விட்டு செல்வார்கள். அப்படித் தன்னை வந்து பார்க்க வரும்பொழுது அவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைப்பார். எனவே தூரத்திலிருந்து வந்திருக்கின்ற ஏழை மக்களுக்கு பணம், தானியம் அல்லது உணவுப் பொருட்கள் ஏதாவது கொடுத்துதான் அனுப்புவார். ஒருவேளை கொடுக்க முடியவில்லை என்றால், கொஞ்சம் பணம் கொடுத்து நீங்கள் சாப்பிட்டு விட்டுப் போங்கள் என்று சொல்லி அனுப்புவார்.

4. அவரிடம் வெளிப்பட்ட எளிமையும் தாழ்ச்சியும்

தந்தை லெவே சாமி வாழ்க்கையைப் பார்க்கின்ற பொழுது அவரிடம் எளிமையும் தாழ்ச்சியும் எப்போதும் சிறந்த பண்புகளாக வெளிபட்டன. ஆண்டாவூரணி, இராமநாதபுரம் மற்றும் சருகணிக்கு அருகில் இருக்கின்ற பல்வேறு கிராமங்களில் ஆன்மீகப் பணி செய்திருக்கின்றார். ஆயிரக்கணக்கான குடும்பங்களை அறிந்தவராக இருந்தார். அவர்களுக்கு வேண்டிய சமூக பொருளாதார ஆன்மீகப் பணிகளை சிறப்பாக செய்தாலும் ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை. “நான் கடவுளின் கருவியாக இருந்து செயல்படுகிறேன்என்பதன் வெளிப்பாடாகவே தாழ்ச்சியோடும் எளிமையோடும் பணி செய்திருக்கின்றார் என்பதை சாதாரண மக்கள் நினைவு கூறுகிறார்கள்.

அவர் பணி செய்த காலங்களில் சரியான சாலை வசதியோ, வாகன வசதியோ இல்லாமல் இருந்தது. அதையெல்லாம் அவர் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. மாறாக கிளைக் கிராமங்களுக்கு பல நேரங்களில் நடந்தே சென்றிருக்கின்றார். ஒரு சில நேரம் சைக்கிளைப் பயன்படுத்தி இருக்கின்றார். இன்னும் பல நேரங்களில் மாட்டு வண்டியிலே பயணம் செய்திருக்கின்றார். இரவு நேரங்களில் மாட்டுவண்டியில் நீண்ட தூரம் சென்று, அதிகாலையிலே திருப்பலி நிறைவேற்றுவது, அதன் பிறகு உடல் நலம் குன்றியிருப்போரை மந்திரிப்பது என்று பல பணிகளை சோர்வின்றி செய்திருக்கின்றார். இவை அவருடைய எளிமைக்கும் தாழ்ச்சிக்கும் உதாரணமாக இருக்கின்றன.

அவர் யாரையும் சந்தேகப்பட்டதாகத் தெரியவில்லை. அனைவரையும் ஆழமாக நம்பியவராக இருந்தார். ஒருமுறை அவர் அரிசி மூட்டை எல்லாம் அடுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து ஒரு பெண் ஒரு மூட்டை அரிசியை எடுத்துச் சென்று விட்டார். அதை லெவே சாமியிடம் முறையிட்டனர். அதற்கு அவர், “பசியோடு இருந்ததால் தான் அந்தப் பெண் எடுத்துச் சென்றிருப்பார். எனவே அவரை திட்டாதீர்கள் என்று சொல்லியிருக்கின்றார். தன்னுடைய நலனை முன்னிறுத்தாமல் பிற நலனில் மட்டுமே அக்கறை கொண்டவராக மட்டுமே வாழ்ந்திருக்கின்றார். அவர் இலவசமாக பெற்றதையெல்லாம் இலவசமாகத் தேவைப்படுவோருக்கு கொடுக்க வேண்டும் என்பதிலே கண்ணும் கருத்துமாக செயல்பட்டார். தனக்கென்று அவர் எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை. எனவே அவர் ஒரு பற்றற்ற மனிதராக வாழ்ந்தார் என்பதை மக்கள் ஆழமாக வெளிப்படுத்துகிறார்கள்.

மக்களிடம் பேசுகின்ற பொழுது குறைவாகவே பேசினார். அதேபோல மக்களின் நலனுக்காக அரசு அதிகாரிகளைச் சென்று சந்திக்கின்ற போதெல்லாம் மிகவும் தாழ்ச்சியோடு மக்களுக்கு வேண்டியதை பெற்று தந்திருக்கின்றார். யாரிடமும் கடுமையாக பேசியதைப் பார்த்ததில்லை. அதேபோல அவர் கோபப்பட்டு பேசியதையும் மக்கள் பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு வராத போது மட்டுமே கொஞ்சம் கடிந்து பேசியிருக்கின்றார். அது கூட மற்றவர்களை புண்படுத்தாத வகையில் அக்கறையோடு கூறி இருக்கின்றார். யாராவது தவறு செய்தால்ஏன் இப்படி செய்தீர்கள்?” “நீங்கள் இப்படி செய்வது நியாயமா?” என்று எளிமையான முறையில் கேள்வி தான் கேட்டிருக்கின்றார். ஆனால் அவர்களைக் கடிந்து கொண்டதாக தெரியவில்லை. இது அவருடைய எளிமையான வாழ்வுக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது.

5. ஆழமான விசுவாச வாழ்வு வாழ்ந்தவர்

அவர் பணி செய்த காலங்களில் அவரிடம் பெரிய பொருளாதார வசதியோ பண வசதிகளோ இல்லை. ஆனால் எப்படி அவரால் மக்கள் போற்றத்தக்க வகையிலே பணி செய்ய முடிந்தது? என்று நாம் யோசிக்கின்ற பொழுது, அவரிடம் இருந்த ஆழமான விசுவாசம் என்ற ஒற்றை ஆயுதம் தான் அவருக்கு பக்கபலமாக இருந்தது என்பதை எளிய மக்களின் எடுத்துச் சொல்கிறார்கள். நான் நம்பிய கடவுள் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார் என்கின்ற ஆழமான விசுவாசம் அவருடைய சொல்லிலும் செயலிலும் எப்போதும் வெளிப்பட்டிருக்கின்றது.

தான் செய்த எல்லா பணிகளுக்கும் அவருக்கு உதவியது அவர் கொண்டிருந்த செப வாழ்வு தான். சமூக தளத்திலே அவர் பல்வேறு பணிகளை எடுத்து செய்தாலும் ஆன்மீக வாழ்விலே ஆழமான விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார். பல மணி நேரம் செபத்திலே ஈடுபட்டிருக்கின்றார். குறிப்பாக நற்கருணை முன்பு அமர்ந்தும், முழங்கால் படியிட்டும் பல மணி நேரம் செபித்திருக்கின்றார். அதேபோல அன்னை மரியாவின் கெபிக்கு முன்பாக பல மணி நேரம் கையை விரித்து செபித்திருக்கின்றார். குறிப்பாக இரவு நேரத்தில் அவர் செபிக்கின்ற பொழுது எவ்வளவு மணி நேரம் செவித்தார், எவ்வளவு மணி நேரம் உறங்கினார் என்பது கூட தெரியாத அளவுக்கு, செபித்துக் கொண்டே உறங்குவதும், உறங்கிக் கொண்டே செபிப்பதும் என்று நேரத்தை செலவழித்தார். ஆழமான செப வாழ்வு பல புதுமைகளைச் செய்வதற்கு உதவி இருக்கின்றது.

இவர் வாழ்கின்ற போதே தன்னுடைய செபத்தால் பல்வேறு புதுமைகள் நடந்திருக்கின்றன. அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. மக்கள் மழையின்றி தவித்த போதும், பயிர்கள் எல்லாம் வாடிய போதும் மழை வேண்டும் என்று நண்பகலில் கையை விரித்து செபித்து இருக்கின்றார். மழை வரும் வரை செபித்தார். மழை வந்த பிறகு நனைந்தபடியே அவரை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றார்கள் என்பதை மக்கள் இன்றைக்கும் நினைவு கூறுகிறார்கள். அதேபோல தீராத நோயோடு வருகின்ற மக்களுக்கு செபம் செய்திருக்கின்றார். குழந்தை வரம் இல்லை என்று வருகின்ற தம்பதியருக்கு அடுத்த வருடம் நீங்கள் குழந்தையோடு வந்து என்னைப் பார்ப்பீர்கள் என்று உறுதியாக சொல்லியிருக்கின்றார். அதன்படி நடந்திருக்கின்றன. இதற்கெல்லாம் அடித்தளமாக இருந்தது அவர் கொண்டிருந்த விசுவாசம். அவருடைய செப வாழ்விற்கு உந்து சக்தியாக இருந்தது, இயேசுவே! அன்பின் அரசை உன் அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்என்கின்ற இந்த எளிய வார்த்தைகள் தான்.

மேலும் இஞ்ஞாசியாரின் ஆன்மீகப் பயிற்சிகள் இவருக்கு பெரும் பக்கபலமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால், எல்லாவற்றிலும் கடவுளைப் பார்க்கின்ற மதிப்பீடு, எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும், கடவுளின் மாட்சிக்காகஇன்னும் அதிகமாகசெய்ய வேண்டும் என்கின்ற பண்புகள் எல்லாம் ஆன்மீகப் பயிற்சியிலிருந்து கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

எனவே, தந்தை லெவே சாமி அவர்கள் சேசு சபைக்குக் கிடைத்த மிகப்பெரிய ஒரு சொத்து என்று சொன்னால் மிகையில்லை. அதே போல இறை ஊழியர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கின்ற இவர், திரு அவைக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்று சொன்னால் அதுவும் பொருத்தமாக இருக்கும். ஆகவே, அவர் வாழ்ந்த முன்னுதாரணமான வாழ்க்கை, அவர் கொண்டிருந்த ஆழமான விசுவாசம் அவர் செய்த புதுமைகள், அவர் இறந்தபிறகு அவரின் பரிந்துரையால் நடந்த புதுமைகள் அனைத்தும் இவரை ஒரு புனித நிலைக்கு உயர்த்தும் என்கின்ற நம்பிக்கை எல்லாரும் இருக்கின்றது. விரைவிலே அவரைப் புனிதராக பார்க்கின்ற நாளை எதிர்நோக்கி காத்திருப்போம்.

Comment