No icon

திருத்தந்தை

உள்மன அமைதியுடன் இருக்கின்றேன்

கடினமான தருணங்களிலும், சிரமங்களிலும் கூட, தனது பணியில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், உள்மன அமைதியைத் தன்னிடம் இருந்து யாராலும் அகற்றிவிட முடியவில்லை என்றும் நேர்காணல் ஒன்றிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் பதிலளித்துள்ளார்.

இன்போபெ (INFOBAE) என்னும் அர்ஜெண்டினா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் இவ்வாறு பதிலளித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் இரஷ்யா - உக்ரேன் போர் வரையிலான தன்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அர்ஜெண்டினாவின் போனஸ் ஐரைஸ் தெருக்களில் தான் நடந்து சென்று பணியாற்றிய நேரங்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் எப்போதும் போல மகிழ்வுடன் இருப்பதாகவும், தனக்குள் இருக்கும் உள்மன அமைதி, மகிழ்ச்சி போன்றவற்றை எப்படி அளவிடுவது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

வத்திக்கானில் உள்ள சாந்தா மார்த்தா இல்லத்தில் தங்கியிருக்கும் திருத்தந்தை, தனது உடல் நலன், இரஷ்யா - உக்ரேன் போர், அருள்பணித்துவம், குடும்பம், திருமணம், விவாகரத்து, திருஅவையில் மாற்றங்களை ஊக்குவிக்கும் போது எதிர்கொண்ட எதிர்ப்பு, கையால் எழுதும் பழக்கம், தொலைபேசி,தொலைக்காட்சி பயன்படுத்தாத காரணம், பொருளாதார முதலாளித்துவம், போன்ற கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும், இலத்தீன் அமெரிக்காவின் பிரச்சனைகள் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குவெனிசுலா ஆட்சிமுறை உரையாடலின் வழியாக மாற்றியமைக்கப்பட வழி இருப்பதாகவும், நிக்கராகுவா ஆயருக்கு சிறைத்தண்டனை வழங்கிய ஆட்சிமுறை கொடுங்கோல் ஆட்சிமுறை போன்றது மற்றும் கண்டிக்கத்தக்கது என்றும், மெக்சிகோ போதைப்பொருள் விநியோகம் மனநிலை அழிவையும் சுய அழிவையும் ஏற்படுத்துகின்றது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்துள்ளார்.

தன்னுடைய தனிப்பட்ட அன்றாட அலுவல்கள், காலைசெபம், திருப்பலி போன்றவை பற்றி பகிர்ந்து கொண்ட திருத்தந்தை அவர்கள், வத்திக்கானில் பெண்களின் பங்கு சிறப்பானது என்றும், குடும்பங்களில் தாய்மார்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பது போல பணித்தளங்களில் பெண்கள் செயல்படுகின்றார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான மன உறுதி, நேரம்பொறுமையுடன் காத்திருத்தல் பெண்களுக்கு அதிகம் என்றும் சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் பெண்கள் என்றும்  திருத்தந்தை பிரான்சிஸ் அந்நேர்காணலில் எடுத்துரைத்துள்ளார்.

Comment