No icon

266ஆவது திருத்தந்தை

திருஅவையில் கடந்த பத்தாண்டுகளின் நல்மாற்றங்கள்

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி திருஅவையின் 266ஆவது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பத்தாண்டு தலைமைத்துவ வழிகாட்டுதல் பணியை நிறைவுச் செய்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி தான் தெர்ந்தெடுக்கப்பட்டவுடன், புனித பேதுரு பெருங்கோவிலின் வெளி மேல்மாடத்தில் தோன்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் மற்றவர்களுக்கு ஆசீர் வழங்குவதற்கு முன்னர் தன்னை ஆசீர்வதிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், தனக்காக அனைவரும் செபிக்குமாறும் விண்ணப்பம் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

அநீதிகளாலும், வன்முறையாலும், போராலும் பிளவுபட்டு நிற்கும் இவ்வுலகில் படைப்பை அன்புகூர்ந்து, அன்பின் மற்றும் ஏழ்மையின் மனிதனாக வாழ்ந்த அசிசியின் புனித பிரான்சிஸின் பெயரை எடுத்துக்கொண்டு, எழைகளுக்காக வாழும் ஓர் ஏழைத் திருஅவையைக் கனவு கண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் நோக்கத்தில் எவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளார் என்பதை சிந்திக்க இந்த பத்தாண்டு நிறைவு உதவும் என பலர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே, அதாவது தான் தெர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களிலேயே  Evangelii Gaudium  என்ற திருமடலை வெளியிட்டு நற்செய்தியின் மகிழ்வுக்கு ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்கள் வாழ்வில் சான்று பகரவேண்டும், குறிப்பாக மன்னிக்கும், வரவேற்கும் மற்றும் அரவணைக்கும் கடவுளின் அருகாமையையும் கனிவையும் துன்புறும் மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என திருத்தந்தை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இயேசு சபையின் முதல் திருத்தந்தையும், தென்அமெரிக்கக் கண்டத்தின் முதல் திருத்தந்தையுமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், திருஅவையை கடந்த 10 ஆண்டுகளாக வழிநடத்திவந்த வேளையில், 111 புதிய கர்தினால்களை உருவாக்கியுள்ளார், 60க்கும் மெற்பட்ட நாடுகளுக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இது தவிர, இத்தாலிக்குள் 35க்கும் மேற்பட்ட திருப்பயணங்களையும், உரோம் நகரின் ஆயர் என்ற முறையில் தன் மறைமாவட்டத்திற்குள் ஏறக்குறைய 150 மேய்ப்புப்பணி சந்திப்புக்களையும் மேற்கொண்டுள்ளார்.

1480 ஆம் ஆண்டு திருமறைக்காக கொல்லப்பட்ட ஏறக்குறைய 800 மறைசாட்சிகள் உட்பட ஏறக்குறைய 900 இறையடியார்களை திருத்தந்தை பிரான்சிஸ் புனிதர்களாக அறிவித்துள்ளார். இப்புதிய புனிதர்களுள் திருத்தந்தையர் இரண்டாம் ஜான் பால், 23ஆம் யோவான், ஆறாம் பால், அன்னை தெரேசா, பேராயர் ஆஸ்கார் ரொமேரோ, தேவ சகாயம் பிள்ளை ஆகியோரும் அடங்குவர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த 10 ஆண்டுகளில் வெளியிட்ட திருத்தூது ஏடுகளுள் " Laudato Siஎன்னும் இறைவா உமக்கே புகழ் என்ற ஏடும், Fratelli Tutti என்னும் நாமனைவரும் உடன்பிறந்தோர் என்ற திருமடலும் முக்கியம் வாய்ந்தவை.

2015 ஆம் ஆண்டின் இறுதியில் கருணையின் ஆண்டை துவக்கிவைத்த திருத்தந்தை, 2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று பல்வேறு மோதல்களையும் துயர்களையும் சந்தித்துவந்த தென் சூடான் தலைவர்களை 2019 ஆம் ஆண்டு திருப்பீடத்திற்கு வரவழைத்து நாட்டின் அமைதிக்காக அவர்களின் கால்களை முத்தமிட்டு வேண்டிக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்காவின் அமேசான் பகுதியையும் அதன் பூர்வீக இன மக்களையும் காக்க உலக ஆயர்கள் மாமன்றக்கூட்டத்தைக் கூட்டியது, பெருந்தொற்றுக் காலத்தில் கொட்டும் மழையில் தூய பேதுரு வளாகத்தில் தனியே நின்று செபித்து ஊர்பி எத் ஓர்பி ஆசீரை வழங்கியது, திருப்பீட தலைமையக நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தது, திருப்பீடத்தின் துறை ஒன்றிற்கு தலைவராக முதன் முறையாக, அதாவது சமூகத் தொடர்புத் துறைக்கு பொதுநிலையினர் ஒருவரை நியமித்தது, அருள்பணியாளர்கள் திருஅவையில் சிறார்களை தவறாக நடத்தியதற்கு மன்னிப்புக் கேட்டது, முதன் முறையாக இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்களைச் சந்தித்தது, ஆயர்களை நியமிப்பதில் சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே ஒப்பந்தத்தை உருவாக்கியது, உடன்பிறந்த உணர்வுநிலை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஏட்டில் இஸ்லாமிய தலைவர் Sheikh Ahmed al-Tayeblன் கையெழுத்திட்டது, உக்ரைனுக்கு எதிரான போரை இரஷ்யா துவக்கியபோது உரோம் நகரின் இரஷ்ய தூதரகத்திற்கு திடீரெனச் சென்று, இப்போர் குறித்த தன் கவலையை வெளியிட்டது, பெண்களின் பங்கேற்பை திருப்பீட நிர்வாகத்தில் அதிகரித்தது போன்றவைகளை திருத்தந்தையின் கடந்த 10 ஆண்டு பாதையின் வெற்றிகளாகக் குறிப்பிடலாம்.

Comment