No icon

தலையங்கம்

நம் வாழ்வின் மெய்ப்பொருள்

‘எழுத்துகள் நம்மை எழுப்பட்டும்’ என்ற விருதுவாக்குடன், எழுச்சிமிகு எழுத்துகளால் ஏற்றமிகு உலகு சமைக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் ‘நம் வாழ்வு’ வார இதழின் எட்டாவது ஆசிரியராக ஜூன் 09, 2017 ஆம் ஆண்டு பொறுப்பேற்றேன் என்பது நீங்கள்அறிந்ததே.

நான் இளங்குருமடத்தில் பதினொன்றாம் வகுப்புக்கு சேரும்போது, தினந்தோறும் தினமணி மற்றும் த இந்து நாளிதழ்களை வாசிக்க வேண்டும்; குறிப்பாக தவறாமல் தினமணி நாளிதழில் இடம்பெறும் தலையங்கத்தை நுணுக்கமாக படிப்பேன். அப்போது கற்றுக்கொண்ட இந்தப் படிப்பினை என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகான புகுமுக வகுப்பிலிருந்து நோட்டுப் போட்டு குறிப்புகள் எடுக்கத் தொடங்கினேன். தினந்தோறும் நான் வாசிக்கும் செய்திகளின் தரவுகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினேன்.

1995 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, நான் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட வரை அனைத்து தகவல்களையும் தொகுத்து, தொகுத்து தகவல் களஞ்சியமாக அணிதிரட்டினேன். தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் இடம்பெறும் தலையங்கங்களையும் கட்டுரைப் பக்கங்களையும் நகல் எடுத்து தலைப்பு வாரியாக கோப்புகளாக்கினேன்.

ஜென்ராம், சுகதேவ், தமிழருவி மணியன், சோலை, ஆர்.முத்துக்குமார், ரவிக்குமார், குத்தூசி குருசாமி க.பழனிதுரை போன்ற ஆளுமைகளின் கட்டுரைகளையும் நூல்களையும் எண்ணற்ற விகடன், கிழக்குப் பதிப்பகம், நியுசென்ச்சுரி பதிப்பகம் உள்ளிட்ட நிறுவனங்களின் வெளியீட்டு நூல்களையும் வாங்கிப் படித்து படித்து எனக்குள் ஓர் எழுத்தாளனைப் பிரசவித்தேன். எழுத்துகளால் என்னையே செதுக்கினேன். என் பேச்சு மட்டுமல்ல, என் எழுத்தும் எனக்கு உயிர்மூச்சாகிப் போனது. பிறப்பிற்கு பிறகு நூல்களுடன் என் தொப்புள் இணைக்கப்பட்டது என்பதே உண்மை.

என்னைப்பொறுத்தவரை எழுத்து என்பது ஒரு வேள்வி, ஒரு தவம், ஒரு பிரளயம், ஒரு மாற்றுக்களம், ஒரு புரட்சியின் விதை. பாரதியின் வரியில் காட்டில் பொதிந்து வைக்கப்பட்ட அக்கினி குஞ்சு. இயேசுவின் பாணியில் அவரே எருசலேம் ஆலயத்தில் பின்னிய சாட்டை. ‘நம் வாழ்வு’ வார இதழில் இடம்பெறும் ஒவ்வொரு தலையங்கமும் நம் தாய்த் திரு அவையின் உயிரோவியம். ஒவ்வொரு தலையங்கத்திலும் உயிர் இருக்கும். எழுத்து நடை என்பது நம்மை எழுந்து ஓட வைக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு புதிய திசைக்குள் ஒருவரை இட்டுச் செல்லும் ஜிபிஎஸ்-ஆக இருக்க வேண்டும். ஒளிரும் கைவிளக்காக என் நிழல் பின் தள்ளி, என்னை முன்னோக்கி வெளிச்சத்தின் பாதையில் வழிநடத்த வேண்டும்.

பத்திரிகைப் பணி என்பது ஒப்பற்ற உன்னத அழைப்பு. என்னைப் பொறுத்தவரை, நான் முதலில் எழுத்தாளன்; பின்னர் அருள்பணியாளர். அருள்பணியாளராவதற்கு முன்பே எழுத்தாளனாகவே என்னை நானே திருநிலைப்படுத்திக்கொண்டேன். எண்ணங்களின் அலைவரிசையில், கணினி விசைப்பலகையில் என் பத்து கைவிரல்களின் பரபரப்பான இயக்கத்தில் வார்த்தைகள் கோர்வையாகி, கருத்துகள் களமாடும். வார்த்தைகள் பத்திரிகை தர்மத்திற்கு கட்டுப்பட்டு நிற்கும். ஆனால் கருத்துகள் கடுமையாக இருக்கும். வல்லினமும் மெல்லினமும் இடையினமும் நம் தமிழினத்திற்கான தலைவாசலாக நிலைவாசலாக என் எழுத்துகளில் நிமிர்ந்து நிற்கும். உயிரும் உயிர்மெய்யும் நிறைந்திருக்கும்; நிறைத்திருக்கும்.

கடந்த ஆறு ஆண்டுகளாக நம் வாழ்வு ஆசிரியராக நான் எழுதிய அனைத்து தலையங்கங்களின் தரத்தை நீங்கள் அறிவீர்கள். இதுகாறும் நம் வாழ்வில் இடம்பெற்ற வாசகர் கடிதங்களில் பெரும்பாலானவை தலையங்கங்களைப் பாராட்டியே அமைந்தது இதற்குச் சான்று. பல்வேறு புனைப் பெயர்களில் கட்டுரைகளைப் படைத்து நம் வாழ்வு வார இதழை நிரப்புவதற்கு என் மனம் ஒருபோதும் ஒப்பவில்லை. பாலேஸ்வரம் முதல் மைக்கேல்பட்டி வரை, குழுமூர் அனிதா முதல் சின்ன சேலம் வரை எல்லாநிலையிலும் ஒரு பத்திரிகையாளனாக களமாடி உண்மையை ஊருக்கு உரக்கச் சொல்லியுள்ளேன். திரு அவையின் சார்பாக, சிறுபான்மை மக்களின் ஆதரவாக, மதச்சார்பின்மையின் போர் முரசாக, கிறிஸ்தவத்தின் கிழக்கு திசையாகவே எல்லா நிலையிலும் என் கருத்துகளை என் தலையங்கங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், நானும் என் பெற்றோரும் உடன்பிறந்தோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணத்தின் வாயிலில் நின்று போராடி மீண்டு வந்த காலத்தைத் தவிர, தமிழக ஆயர் பேரவையின் சார்பில் அறிக்கைகள் வெளிவரும் காலத்தைத் தவிர, ஏனைய ஒவ்வொரு வாரமும் நம் வாழ்வின் ஒன்றரைப் பக்க தலையங்கம் பலரை உண்டு - இல்லை என்று ஆக்கியிருக்கும். பத்திரிகை வரலாற்றிலேயே முதல் முறையாக, முற்றுப்புள்ளியே இல்லாமல் 616 வார்த்தைகளைக் கொண்டு ஒற்றை வாக்கியத்தில் இடம்பெற்ற சௌக்கிதாரின் யோக்கியதை மிகவும் சிறப்பு வாய்ந்தது. சில போலி அரசியல் வாதிகளின் முகத்திரையைக் கிழித்தெறிந்த கிரிஸ் டப்பாக்கள், நமக்கு பகை முரண்கள், அரசியல் பழகு என்ற ஒவ்வொன்றும் சதைகளைக் கிழித்தெறிந்த சாட்டையடிகள். கருத்துப் பெட்டகங்கள்! காலக் கருவூலங்கள். நம் வாழ்வு வாசகர்களில் பெரும்பாலோனோர் நேரில் சந்திக்கிறபோதும், தொலைபேசியில் பேசுகிறபோதும், கடிதங்கள் எழுதுகிறபோதும் தலையங்கத்திற்கு தந்த உற்சாகம், என்னை இன்னும் தாழ்ச்சிமிக்கவனாகவே தலைநிமிரச் செய்தது. இவற்றைத் தொகுத்து நூலாக படைத்திடுங்கள் என்பதுதான் உங்களில் பெரும்பாலோனோரின் அவா.

24 செ.மீ X 18 செ.மீ நீள அகலத்தில், எடைக்குறைவான தரமான வெளிர் நிற தாளில், கடினமான அட்டையைக் கொண்ட கேஸ் பைண்டிங் முறையில், 800 பக்கங்களில் “நம் வாழ்வின் மெய்ப்பொருள்” என்னும் நூல் மே மாத வெளியீடாக, உழைப்பாளர் தினத்தில் வெளிவருகிறது. எவ்வித இலாப நோக்கமுமின்றி, முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில், அதாவது முன்பதிவு அடிப்படையில் ரூ.501 க்கு கிடைக்கும். ஏறக்குறைய ஒன்றரை கிலோ எடையுள்ள இந்த நூல், உங்களுக்கு இலவசமாகவே புரோபஷசனல் தூது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆகையால் மார்ச் மாதம் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வரை நீங்கள் ரூ.501 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மே மாதத்தின் முதல் வாரத்தில் இந்நூல் உங்கள் கைகளில் தவழும்.

என் பணி நிறைவுக்கு வரும் வேளையில், நூல்களை அச்சடித்து இருப்பில் வைக்க எனக்கு விருப்பமில்லை. இந்நூலால் நம் வாழ்வு இலாபம் அடையாவிட்டாலும் நஷ்டம் ஆகக்கூடாது. ஆகையால், முன் பதிவு அடிப்படையில் "நம் வாழ்வின் மெய்ப்பொருள்" என்னும் இந்நூல் விற்பனைக்கு வருகிறது. ஆகையால் இந்நூல் உங்கள் வீட்டு நூலகத்திற்கு திலகமாக திகழும் என்பது என் நம்பிக்கை.

ஆகையால், நம் வாழ்வு வார இதழில் ஆறு ஆண்டுகளாக எழுதிய 250க்கும் மேற்பட்ட தலையங்கங்களின் தொகுப்பான, ‘நம் வாழ்வின் மெய்ப்பொருள்’ என்னும் என் நூலுக்கு பேராதரவு தந்து ஊக்கப்படுத்தும்படி நம் வாழ்வு வாசகர்களாகிய உங்களை பணிவன்புடன் வேண்டுகிறேன்.

வாசகர்களாகிய உங்களுக்காகவும் ஏனைய பத்திரிகைகளுக்கும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் முன்னோடியாகவும் இந்நூல் பிரமாண்டமான முறையில் எவ்வித இலாப நோக்கமுமின்றி வெளிவருகிறது.

ரூ.501க்கு நம் வாழ்வு புக்ஸ் (Namvazhvu Books) என்ற பெயரில் காசோலையாகவோ, வரைவோலையாகவோ நீங்கள் அனுப்பலாம். அல்லது UPI முறையில் கீழ்க்கண்ட QR code ஐ Scan செய்து செலுத்தலாம். qr.namvazhvub@sib என்பதுதான் எங்களின் UPI ID ஆகும்.

இந்நூலை வாங்குபவர்களுக்கு ஒரு Surprise Gift காத்திருக்கிறது. உங்கள் முன்பதிவுக்கு இன்றிலிருந்து முந்துங்கள். (என்னோடு பேசலாம்: 91767 32244, 94438 58480 / frgnani@gmail.com)

உங்களின் பேராதரவை எதிர்பார்த்து..

குடந்தை ஞானி

Comment